திங்கள், 12 மே, 2014

குமரியில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவு அவரது வீட்டில் இரவு ஒட்டப்பட்டது..

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணதாஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பளுகல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவுகள் தேர்வு முடிவு வெளியான 9ம் தேதி இரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணமான ஆசிரியர்கள் 12 பேர் மீதும் உங்கள் மீது ஏன் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் கணித பாட ஆசிரியர்கள் 2 பேரும், இயற்பியல், வரலாறு, கணக்குபதி வியல் ஆசிரியர்கள் தலா ஒருவரும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். இதனை போன்று பளுகல் அரசு மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கணக்குபதிவியல் பாடம் நடத்திய ஆசிரியர்கள் 2 பேர் வணிகவியல் மற்றும் எக்னாமிக்ஸ் ஆகிய பாடங்களை கூடுதலாக நடத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து சஸ்பென்ட் உத்தரவை வழங்க சென்றனர். முன்னதாக இது தொடர்பான தகவல் வெளியானதால் பலரையும் நேரில் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் வீடு தக்கலையில் உள்ளது. அவரது வீட்டிற்கு சென்ற அலுவலர்கள் இரவு 10 மணிக்கு அவர் வீட்டில் இல்லாததால் வீட்டு சுவரில் சஸ்பென்ட் உத்தரவை ஒட்டிவிட்டு திரும்பியுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு ஆசிரியர் கழகம், தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் பச்சைமாலை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக