ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழகான கையெழுத்து! (2)

எல்லா எழுத்துக்களும் ஓவியத்தில் இருந்து தொடங்கியவை. அதனால்தான் மகாத்மா காந்தியடிகள் தன் சுய சரிதையில் ஓவியம் வரைந்து பழகிய பின் எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்க வலியுறுத்தியிருந்ததை இங்கு மீண்டும் நினைவுகூர்கிறேன். 'எனக்கு சரியாக வரைய வராதே' என்று சிலர் வருத்தப்படக்கூடும். அவர்களுக்காகவே எழுத்து மூலம் படம் வரைய சில உதாரணங்களைக் கொடுத்து இருக்கிறேன்.

முதல் அத்தியாயத்தில் வட்டம், சதுரம், செவ்வகம், இணைகரம், முக்கோணம் ஆகிய வரைகணித உருவங்களை ஒன்று சேர்த்து வரையப்பட்ட வீடு உருவத்தைத் தந்திருந்தேன். இதன் அடிப்படையில் ஓவியத்தின் மூலம் எழுத்துக்களை உருவாக்கினால் அழகிய கையெழுத்து அமையும்.
மொழி ஒலிவடிவம் பெறுவதற்கு முன்பே வரிவடிவம் பெற்றிருந்தது. குகை மனிதன் முதன் முதலில் தகவல் பரிமாறிக்கொண்டது ஓவிய மொழியின் மூலம்தான். பார்த்த எருதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள பாறையில் அதை ஓவியமாக தீட்டினான். அந்த எருதின் தலை வடிவம் நூற்றாண்டுகளில் பல்வேறு வடிவங்களாக உருமாற்றம் பெற்றது. பின்னர் லத்தீன் மொழியின் உதவியால் ' OX ' எனும் ஒலி வடிவத்தையும் உள்வாங்கிக் கொண்டது. நான் இங்கே விளக்கமாக குறிப்பிடும் இந்த எருதின் தலை வடிவம்தான் நமது இன்றைய ஆங்கில அகரவரிசையின் A.

ஓவியங்கள் மூலம் நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உலகில் எந்த மொழி பேசுபவர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக...
'மீன்' தமிழ் மொழி தெரிந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ள முடியும்.
FISH ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ள முடியும்.
மொழி தெரியாத எந்த மனிதர்களும் புரிந்து கொள்ள முடியும்.
எந்த விஷயத்தையும் காட்சி வழியாகக் கூறும்போது எளிதில் நம் மனதில் பதியும். எனவே நிறைய வரையுங்கள். நிதானமும், பொறுமையும், ரசிப்புத்தன்மையும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.
ஓவியம் மூலம் எழுதிப் பழகினால் அதன் வடிவம் மாறாமல் அழகாக அனைவராலும் எழுத முடியும். குறிப்பாக மிகச் சிறிய குழந்தைகள் விளையாட்டுப் போல விரும்பிக் கற்றுக்கொள்ளும். நாம் எழுத்துப் பயிற்சி மேற்கொள்ளும்போதே படம் வரையவும் பயிற்சி செய்வதுடன் A- FOR ARROW , B- FOR BIRD... என பாடம் தொடர்பான விஷயங்களையும் சேர்த்தே கற்றுக் கொடுக்க முடியும்.
எனவே எழுத்துக்களைப் பயிற்சி செய்வதற்கு முன் அவற்றின் நெளிவு சுழிவுகளைப் புரிந்துகொண்டு எழுதுகிறோம் எனும் மனநிலையுடன் பயிற்சி செய்து வரவேண்டும். எல்லா மொழி எழுத்துக்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும். எல்லா விதமான மொழிகளின் வரி வடிவங்களிலும் ஏராளமான ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. வரையத் துடிக்கும் உங்கள் விரல்களுக்காக எப்போது காத்துக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்...)
Thanks to' THOORIGAI CHINNARASUSent from my iPad