வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

அழகான கையெழுத்து!

அழகிய கையெழுத்து நம் அனைவருக்கும் அமைவதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும் இணைந்த பயிற்சியை நாம் மேற்கொண்டால் அழகாய் எழுதுவது எளிதாகிவிடும்.

தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற அழகான கையெழுத்து அவசியம். மாணவர்கள் எழுதும் கையெழுத்து, விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கு எளிதில் புரியும்படி இருக்கவேண்டும். கிறுக்கலான கையெழுத்து திருத்துகின்ற ஆசிரியருக்கு எரிச்சலை உண்டுபண்ணும்.

அழகிய கையெழுத்தில் கடிதம் எழுதுபவர்கள் மீது மேலான எண்ணம் ஏற்படும். அலுவலத்தில் பணிபுரிவோர் அழகிய கையெழுத்து உள்ளவர்களிடம் ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். கோப்புகளை பார்வையிடும் உயர் அதிகாரிகளும் அழகான கையெழுத்துக்கு அடிமையாகி விடுகின்றார்கள்.

இன்றைய சூழலில் பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பம் கோரும்போது, விண்ணப்பதாரர் தன் சொந்தக் கையெழுத்தில் எழுதி அனுப்புமாறு கேட்கின்றார்கள். இதிலிருந்தே அழகிய கையெழுத்து எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வங்கி காசோலைகள், மணியார்டர் பாரங்கள், கடிதங்கள் என அனைத்தையும் அழகாகவும் தெளிவாகவும் எழுதினால் படிப்பவர்கள் அனைவருக்கும் புரியும்.

அழகிய கையெழுத்தின் அவசியத்தைப் பற்றி நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு சுயசரிதையில் எழுதியிருக்கிறார். சிறுவயதில் தனது மோசமான கையெழுத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாத அவர் பிற்காலத்தில் வருந்தி எழுதிய வார்த்தைகள் இதோ பின்வருமாறு,

''சிறுவயதில் என் மோசமான கையெழுத்தைப் பற்றி அதிகமாக கவலைப் படவில்லை. நான் மேல்படிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா செல்லும் வரை, இதைப் பற்றிய எவ்வித விழிப்புணர்வோ அக்கறையோ ஏற்படவில்லை. எனது சக மாணவர்கள் மிக அழகாகவும், தெளிவாகவும் எழுதுவதைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன். அப்போதுதான் எனக்கும் அவர்களைப் போல எழுத வேண்டும் என்கிற ஆசை வந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதைக் கற்றுக்கொள்வது என்பது மிகக் கடினமாகவே இருந்தது. எனது இந்த உதாரணத்தைக் கண்டாவது சிறு குழந்தைகள் அழகாய் எழுதிடப் பழகுங்கள். சிறு வயதிலிருந்து கையெழுத்தைப் பயில்வது எளிது.

கையெழுத்து எழுதப் பழகுவதற்கு முன் மலர்கள், பொருட்கள், பறவைகள், எனக் குழந்தைகள் சிறு சிறு ஓவியங்களைப் பார்த்து வரையக் கற்றுக்கொள்ளவேண்டும். பொருட்களைப் பார்த்து வரையக் கற்றுக்கொண்டபின் எழுத்துக்களின் வடிவங்களைப் பார்த்து எழுதிப்பழகினால் அழகாக கையெழுத்து அமையும். (மகாத்மாகாந்தியின் சுய சரிதையிலிருந்து)

''இளமையில் கற்கவும்'' என்கிற இனிய வரிகள் கையெழுத்துப் பயிற்சிக்கு கச்சிதமாக பொருந்தும். சிறுவயதில் எதையும் எளிதில் பயில இயலும். இத்தொடரில் சுட்டிகளுக்கு மட்டுமல்ல, வயது வித்தியாசமின்றி அனைவரின் கையெழுத்தும் அழகாய் மாறிட ஐடியாக்களை வாரி வழங்க இருக்கிறேன். விடா முயற்சியுடன் கூடிய பயிற்சியை மேற்கொண்டால் அனைவரும் அழகாய் எழுதி அசத்தலாம்.









Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக