வெள்ளி, 17 ஜூன், 2016

ஆவிகள் அமைத்துக் கொடுத்த அற்புத இசை!

"முடிக்கப்படாத சிம்பொனிகள்'  (Unfinished Symphonies) மற்றும் "காலத்தை வென்றவர்கள் என் முழங்கையில்' (immortals at my Elbow) போன்ற நூல்களை எழுதி 1970-களில் இங்கிலாந்தில் புகழ் பெற்றார் திருமதி. ரோஸ் மேரி பிரவுன் (Rose Mary Brown) என்ற பெண்மணி. ஆனால் அவருடைய புகழுக்குக் காரணம் அந்த நூல்கள் மட்டுமல்ல. இசை ஞானமே இல்லாத அந்தப் பெண்மணி இந்த உலகில் தோன்றி மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan), ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியவர்களால் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது காம்போசிஷன்களைக் கொண்ட இசைத் தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 1970ஆம் ஆண்டு மே மாதம் இந்த ஆவியுலக இசைத் தட்டுகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த போது, அறிவியல் உலகம் பிரமித்துப் போனது.

இசையுலக விற்பன்னராகத் திகழ்ந்த பேராசிரியர் இயன் பேரட் (Prof. Ian Parrot), இந்த இசை வடிவங்களைச் சோதித்துப் பார்த்துவிட்டுச் சொன்னார் ஒரு கைதேர்ந்த இசைக் கலைஞனால் கூட இம்மாதிரி இறந்து போன மேதைகளின் இசை வடிவங்களைக் காப்பி அடித்து வடித்திருக்க முடியாது.

ஆவியுலகத்திலிருந்து திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடித்துக் கொடுத்த காம்போசிஷன்களின் மெய்த்தன்மையைப் பரிசோதிக்க, இறுதியில் ஒரு மல்டி வேரியெட் அனலைசர் (Multi Varate Analyser) எனப்படும் கம்ப்யூட்டரின் உதவியை விஞ்ஞானிகள் நாடினர். மே மாதம் 1971-இல் கணித மேதையும் இசை மேதையுமான ஸ்டான் கெல்லி (Stankelly) என்பவர் இந்தப் பரிசோதனையை நடத்தினார். மறைந்த இசை மேதைகளான ஃப்ரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt), ப்ரெட்ரிக் சாபின் (Fredrick Chopin), லுட்விக் வான் பீதோவன் (Ludwig Van Beethovan), ஜோஹன் செபாஸ்டின் பக் (Johaan Sepastin Bach) ஆகியோரது இசை வடிவங்களையும், அவர்கள் பெயரால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் வடிவமைத்த இசையையும், அந்தக் கணினியில் பதிவு செய்து அவைகளுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இவைகளுக்குள் 60% ஒப்புமை (Correlation factors) இருந்தால் திருமதி ரோஸ் மேரி பிரவுன் கொடுத்த இசை ஆவியுலக இசையென்று ஒப்புக்கொள்ள விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் ஒப்புமைக் காரணிகள் 80% முதல் 90% வரை கணினியால் காட்டப்பட்டபோது, அறிவியல் உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்று வரை திருமதி ரோஸ் மேரி பிரவுன் எப்படி இப்படிப்பட்ட இசையை உருவாக்கினார் என்பது விஞ்ஞான உலகிற்குப் புரியாத புதிராகவே உள்ளது.

திருமதி ரோஸ் மேரி பிரவுன் தன்னுடைய நூலில், ஆவியுலகோடு தன்னுடைய முதற்தொடர்பு சிறு வயதில் ஏற்பட்டதாகவும் பின்னர் 1994இல் தன் தந்தை மரணப் படுக்கையில் இருந்தபோது, தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, தன் தந்தையின் ஆவி தன் அருகில் வந்து பேசியதாகவும், அவர் சொன்னவை அனைத்தையும் பின்னர் வீட்டில் இறந்திருந்த தந்தையின் சடலத்திற்கருகில் அமர்ந்திருந்த தன் தாய் உறுதிப் படுத்தியதாகவும் சொல்லியுள்ளார்.

1970களில் திருமதி ரோஸ் மேரி பிரவுன் பிபிசி தொலைக்காட்சியில் தோன்றி ஆவியுலகில் இருந்த தனக்களிக்கப்பட்ட இசை வடிவங்களைப் பற்றி விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து அவரது புகழ் உலகெங்கும் பரவியது.

1971இல் அவர் பாரீசுக்குப் போனார். அங்கே 1810 முதல் 1849 வரை வாழ்ந்து தன்னுடைய 39ஆவது வயதில் இறந்து போய் இசையுலகில் ஒரு சகாப்தமாகிப் போன போலந்து இசை மேதை ப்ரெட்ரிக் சாபினின் கல்லறைக்குப் போனார். பல முறை சாபினின் ஆவி, திருமதி ரோஸ் மேரி பிரவுனின் கைகளைப் பிடித்து தன் காம்போசிஷன்களை எழுதிக்கொடுத்த அனுபவத்தைப் பெற்றிருந்ததால், திருமதி ரோஸ் மேரி பிரவுனுக்கு சாபினின் மேல் அளவு கடந்த மரியாதை இருந்தது. எனவே, அக்கல்லறைக்கு அவர் போனார். அங்கே உணர்ச்சி மேலிட்டு, தன்னுடைய அற்புதமான இசையை முழுவதுமாக இவ்வுலகிற்கு அளிக்க முடியாமல், சிறு வயதிலேயே அற்பாயுளில் இறந்து விட்ட அம்மேதையை நினைத்து கண்ணீர் விட்டார். அந்த நிமிடத்தில் ஒரு மயிற்கூச்செரியும் நிகழ்ச்சி நடந்தது. அதை திருமதி ரோஸ் மேரி பிரவுன் பின் வருமாறு விவரிக்கின்றார்: என் அருகில் சோபின் தோன்றினார். என் வருத்தத்தை உணர்ந்து கொண்ட அவர், ஒரு புன்முறுவலோடு என்னை நோக்கி ஏன் வருந்துகிறாய் நான் அங்கு (கல்லறையில்) இல்லை. இதோ இங்கிருக்கிறேன் என்றார்.

இதே போல் ப்ரான்ஸ் லிட்ஸ் என்ற இசை மேதை ரோஸ் மேரியிடம் வாழ்க்கையின் இழை மரணத்துடன் முடிவதில்லை. அது இன்னொரு (நூற்) கண்டிற்கு மாற்றப்பட்டு விடுகிறது. அவ்வளவு தான் என்று கூறியதாக ரோஸ் மேரி குறிப்பிடுகிறார்.

எது எப்படியாயினும், திருமதி ரோஸ் மேரி பிரவுன் தொகுத்தளித்த இசை எங்கிருந்து வந்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.


 

தீர்க்க தரிசனம் :பூமியிலிருந்து நிலவுக்கு (From the earth to the moon)

அபோல்லோ-11 விண்கலம் 1969-இல் நிலவில் தரையிறங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, அதைப் பற்றிய நுணுக்கங்களை ஒரு எழுத்தாளன் தன் படைப்பில் சொல்லிவிட்டான் என்றால் அதை இன்று நம்ப முடியுமா ஆனால் இது உண்மை.

ப்ரான்ஸ் (France) நாட்டில் 1828-ஆம் ஆண்டு பிறந்து, 1905-இல் தனது 77- ஆவது வயதில் உயிர் நீத்த அறிவியல் புதினப் படைப்பாளர் ஜூல்ச் வெர்னே (Jules Verne) ஒரு பலூனில் ஐந்து வாரங்கள் (5 weeks in an baloon) பூமியின் மையப் பகுதிக்கு ஒரு பயணம் (A Journey to thecentre of tje earth) பூமியில் இருந்து நிலவுக்கும் அதைச் சுற்றியும் ஒரு பயணம் (From the earth to the moon and trip around it), கடலுக்கடியில் 20,000 கூட்டமைப்புகள் (20000 leagues under the sea) 80 நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world 80 days) போன்ற நாவல்களை எழுதி உலகப் புகழ்பெற்றார் அவர்.

1989-இல் அவர் எழுதிய 2899-இல் ஓர் அமெரிக்கப் பத்திரிக்கையாளனின் ஒரு நாள்;"(A day of an American journalist in 2899)" என்ற நாவலில் அவர் தொலைக்காட்சி, கம்பியில்லாத் தகவல் தொடர்பு, சூரியசக்தியில் இருந்து மின்சாரம் எடுப்பது, தொலைக் காட்சியோடு கூடிய தொலைபேசி போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி எழுதினார்.

1865-இல் அவர் எழுதிய பூமியிலிருந்து நிலவுக்கு (From the earth to the moon) என்ற நாவலிலும், 1870 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நிலவைச் சுற்றி (Around the moon) என்ற நாவலிலும் ஜூல்ச் வெர்னே கொடுத்துள்ள மிக நுண்ணிய தகவல்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பின் உண்மையாகவே வடிவம் பெற்றன என்பதை எண்ணும் போது, நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்:

(1) ஜூல்ச் வெர்னே ப்ரெஞ்ச் நாட்டவர். ஆனால் நிலவுக்குப் போகும் விண்வெளிப் பயணம் ப்ரெஞ்ச் நாட்டிலிருந்தோ அல்லது அப்போது அகில உலகையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டிலிருந்தோ நடப்பதாக அவர் தன் நாவலில் எழுதவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் உலக அளவில் முன்னோடியாக இல்லாமல் இருந்த அமெரிக்காவிலிருந்தே விண்கலம் புறப்படுவதாக அவர் எழுதினார். அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப்டவுன் என்ற இடத்தில் இருந்து விண்கலம் புறப்படுவதாக அவர் எழுதினார். 1969 இல் அவரது தீர்க்க தரிசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப்கென்னடியிலிருந்து தான் விண்கலம் புறப்பட்டது.

(2) ஜூல்ச் வெர்னே நிலவுக்குப் போகும் விண்கலத்தைக் கோண வடிவத்தில் (Cone shape) கற்பனை செய்து அதற்குக் "கொலம்பியாட்' என்று பெயரிட்டார். அது அப்படியே உண்மையாகி, 1969 இல் அனுப்பப்பட்ட அப்போல்லோ - 11 விண்கலம் கோண வடிவில் அமைந்து அதற்கு "கொலம்பியா' என்று பெயரிடப்பட்டது.

(3) தன் நாவலில் அந்த விண்கலத்தில் 3 பயணிகள் இருப்பதாக ஜூல்ச் வெர்னே கற்பனை செய்தார். அதைப் போலவே அப்போல்லோ - 11 இல் 3 விஞ்ஞானிகள் பயணித்தனர்.

(4) ஜூல்ச் வெர்னேயின் நாவலில் வரும் விண்கலம் ஒரு விநாடிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, மணிக்கு 39,600 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு நாட்களில் சந்திரனை அடைவதாகக் கற்பனை செய்யப்பட்டது. அது அப்படியே உண்மையாகி, அப்போல்லோ - 11 விண்கலம் மணிக்கு 38,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நான்கு நாட்கள் 6 மணி நேரம் 46 நிமிடங்களில் சந்திரனை அடைந்தது.

(5) வெர்னேயின் நாவலில் வரும் விண்கலப் பயணிகள் தாங்கள் உண்ண வேண்டிய உணவு வகைகளை ஹைட்ராலிக் அழுத்த முறையில் எடுத்துச் சென்றனர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் விண்கலப் பயணிகள் உணவுப் பண்டங்களை மாத்திரைகளாக்கி எடுத்துச் சென்றனர்.

(6) ஏப்ரல் 1870 இல் ஜூல்ச் வெர்னே எழுதிய "நிலவைச் சுற்றி' நாவலில் கொலம்பியாட் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகிப் பின் பூமிக்குத் திரும்புவதாக கற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 1970 இல் (சரியாக 100 வருடங்களுக்குப் பின்) அப்போல்லோ - 13 தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகித் திரும்பியது.

இப்படி 1870-களில் ஒரு அறிவியல் எழுத்தாளனால் கற்பனையில் உருவாக்கப்பட்ட நிலவுப் பயணம், மிகச் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின், எப்படி அதே வடிவம் பெற்றது! ஒரு நூற்றாண்டுக்குப் பின் நடக்கவிருப்பதை முன் கூட்டியே துல்லியமாக அறியும் தீர்க்க தரிசனத்தை ஜூல்ச் வெர்னே பெற்றிருந்தாரா என்ற கேள்விக்கு அறிவியலால் பதில் கூற முடியுமா?

இன்றைய உளவியல் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள உண்மை என்னவென்றால், மனித மனத்தின் ஒரு பகுதி, இடம் (space) காலம் (time), வடிவம் (form), அண்ட சராசரங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறது. நேற்றைய மற்றும் இன்றைய நிகழ்வுகளாலேயே, நாளைய நடப்புகள் உருவாக்கப்படுகின்றன. நேற்று, இன்று, நாளை ஆகியவற்றுள் ஒருமுறை சார்ந்த தொடர்பு இருக்கிறது. டாக்டர் லையல் வாட்சன் (Lyall Watson) என்னும் தலைசிறந்த அறிவியல் அறிஞர் கூறினார் நான்காவது பரிமாணம் (Fourth dimension ) என்பது தொடர்ச்சி அல்லது தொடர் நிகழ்வை குறிக்கிறது. இடம் (space) என்னும் நான்காவது பரிமாணம் ஒரே இடத்தில் எப்படி எங்கும் வியாபித்து இருக்கிறதோ, அது போல் காலம் (time) என்பதும் எல்லா இடத்திலும் வியாபித்திருக்க வாய்ப்புள்ளது. நான்காவது பரிமாணமாகிய இடத்தில் (space) ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவது எப்படி சாத்தியமாகி உள்ளதோ அதே போல் ஐந்தாவது பரிமாணமாகிய (fifth dimension) காலத்திலும் முன்னும் பின்னும் போவது சாத்தியமே. ஆனால், அதற்கு மிகப் பெரிய மனப்பயிற்சி தேவை.

தீர்க்க தரிசனம் என்று நம் முன்னோர் கூறியதை இன்று உளவியல் விஞ்ஞானம் முன் அறிதல் (precognition) என்று அழைக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகளைக் காலம் மற்றும் இடம் இவற்றுக்கான சின்க்ரொனிசிட்டி (synchronicity) என்று 20 ஆம் நூற்றாண்டின் உளவியல் மேதை கார்ல் யுங் (carl jung) குறிப்பிட்டுள்ளார். எனவே, முக்காலும் உணர்தல் என்பது வெறும் கற்பனையா அல்லது சாதிக்கக் கூடியதா?


 

அறிவியல் உலகில் வரலாறு படைத்த கனவுகள்

வாழ்க்கை பொய்யாய் பழங்கனவாய்க் கதையாய் மெல்லப் போனதுவே என்று சொன்ன மகாகவி பாரதியே கனவு மெய்ப்பட வேண்டும் என்றும் உலகமெல்லாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் என்றும் பாடினான். இளைஞர்களை நோக்கிக் கனவு காணுங்கள் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இப்படிக் கனவுகளைப் பற்றிப் பலர் பல விதமாய் பேசினாலும், பல கனவுகள் அறிவியல் உலகில் வரலாறு படைத்ததுண்டு என்றால் நம்ப முடியுமா?

பென்சீனின் (Benzene) அணுக்கூற்றின் வடிவத்தை (molecule structure) கண்டுபிடிக்க முடியாமல் பல நாள் திண்டாடினார் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் ப்ரெட்ரிச் கெகுலெ வான் ச்ட்ரானிச் (Fredrich Kekule). ஒரு நாள் குதிரை பூட்டிய வண்டியில் இதைப் பற்றிய சிந்தனையிலேயே அவர் தூங்கிவிட்டார். அந்தத் தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு பாம்பு தன் வாலைத் தானே கடிப்பதாக அவர் கண்டார். அப்படி கடிக்கும் போது ஏற்பட்ட ஒரு வளையம், அணுக்கூட்டச் சங்கிலியாக மாறி ஒரு சுற்றும் வளையமாக (Rotating ring) உருமாறியது. உடனே, அந்த விஞ்ஞானி தூக்கிவாரிப் போட்டு எழுந்தார். பென்சீனின் அணுக்கூற்றின் வடிவம் கார்பன் அணுக்களின் அறுகோணம் (Hexagonal Shape) என்பதை அவர் உணர்ந்தார்.

நரம்பு அதிர்வுகள் (Nerve impulses) எப்படி இரசாயன முறையில் பயணிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓட்டோ லூயி (Otto Loewi) என்னும் விஞ்ஞானி படாத பாடுபட்டார். ஒரு நாள் கனவில் அவருக்கு விடை கிடைத்தது. உடனே, தூக்கக் கலக்கத்திலேயே அவர் அதை எழுதிவிட்டு மறுபடியும் உறங்கி விட்டார். துரதிருஷ்டவசமாக அவர் எழுந்ததும், அவர் எழுதியதை அவராலேயே படிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் அவர் தூங்கப் போனார். தூக்கத்தில் கனவு தொடர்ந்தது. இம்முறை கவனமாக கனவில் கண்டதை அவர் தனது ஏட்டில் குறித்துக் கொண்டார். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மை, அந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை அவருக்கு பெற்றுத் தந்தது.

இன்றைய நவீன தையல் இயந்திரத்தை அறியாதவர் இருக்க முடியாது. ஆனால், அதை கண்டு பிடித்தவரையும், அவர் அதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு கனவே காரணம் என்பதையும் எத்தனை பேர் அறிவார்கள் 1846 இல் இலியாஸ் ஹோ (Elias howe) தையல் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதற்கு மிகப் பாடுபட்டார். அவர் உருவாக்கிய இயந்திரம் முழுமை அடையாமல் அவரைக் கவலைக்குள்ளாக்கியது. அப்போது ஒரு நாள் அவர் ஓர் கனவு கண்டார். அந்தக் கனவில் சில காட்டுமிராண்டிகள் அவரை அவர்களது அரசனிடம் கொண்டு செல்கின்றனர். அந்த நர மாமிசிகளின் அரசன் ஒரு உத்தரவு இடுகிறான் - இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு தையல் இயந்திரத்தை இவன் உருவாக்கவில்லையானால், இவனை ஈட்டிகளால் கொன்று விடுங்கள். 24 மணி நேரத்திற்குள் அவரால் தையல் இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. எனவே, அரசனுடைய ஆணைப்படி அவர் கொலைக் களத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே அவரை கீழே தள்ளிக் காட்டு மிராண்டிகள் ஈட்டிகளைத் தூக்கி அவரை குத்த வருகின்றனர். படுத்த நிலையிலிருந்து தன்னை நோக்கி பாய்ந்து வரும் ஈட்டிகளையும், அந்த ஈட்டிகளின் முனையில் கண் போன்ற ஓட்டை அமைந்திருப்பதையும் பார்த்த அந்த விஞ்ஞானிக்குத் தெளிவு பிறந்து விடுகிறது. அவருக்கு தெளிவு பிறந்ததும், கனவும் தூக்கமும் கலைந்து தன் சோதனைச் சாலையை நோக்கி ஓடுகிறார். ஈட்டியின் முனையில் உள்ள கண் போன்ற ஓட்டையின் வடிவத்தில், தையல் இயந்திரத்தின் ஊசியில் ஒரு கண் போன்ற ஓட்டை வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அப்படி வடிவமைக்கும் போது துணியை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கி வரும் ஊசி தையல் வேலையை அழகாகச் செய்யும் என்றும் கண்டுபிடித்தார் அவர்.

நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் (James Watt) என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரே தான் துப்பாக்கி ரவைகளையும் எளிய முறையில் உருவாக்கினார். அது வரை துப்பாக்கி ரவைகளுக்கான ஈயக் குண்டுகள் வெட்டியும் தட்டியும் அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருந்தன. எளிய முறையில் குறைந்த பொருட்செலவில் இந்த ஈயக் குண்டுகளை எப்படி உருவாக்குவது என்று ஜேம்ஸ் வாட் கவலையில் இருந்த போது ஒரு நாள் தூக்கத்தில் அவர் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில், அவர் மழையில் நனைகிறார். திடீரென்று அவர் மேல் விழும் மழைத்துளிகள் ஈயக் குண்டுகளாக மாறுகின்றன. தன் மேல் தொடர்ச்சியாக வந்து விழும் ஈயக் குண்டு மழையில் நனைந்து கொண்டே வந்த ஜேம்ஸ் வாட் திடீரென்று கண் விழித்தார். உருக்கப் பட்ட ஈயம் மேலிருந்து கீழாக விழும் போது காற்றில் சூட்டை இழந்து இறுகிப் போய் குண்டுகளாக மாறும் என்று அவர் உணர்ந்தார். உடனடியாக அவர் அருகிலிருந்த சர்ச்சுக்குப் போய் உருக்கிய ஈயத்தை மணிக்கூண்டிலிருந்து கீழே ஊற்றினார். சர்ச்சை சுற்றி இருந்த அகழியில் உள்ள தண்ணீரில் சின்னஞ்சிறு துளிகளாக விழுந்த ஈயக் காய்ச்சல், இறுகிப் போய் குண்டுகளாக மாறின. இந்த கண்டுபிடிப்பு, துப்பாக்கி ரவைத் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.

கனவுகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே உதவியிருக்கின்றனவா என்று பார்த்தால், கலை, இலக்கியம் மற்றும் இசை இவற்றுக்கும் கனவுகள் உதவியிருக்கின்றன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் எகிப்திய தொல்பொருள் கூடத்தின் காப்பாளரும், கீழை நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் வல்லுநராகவும் விளங்கிய சர் எர்னஸ்ட் வால்லிஸ் பட்ஜ் (Sir Ernest Wallis Budge)  என்பவருடைய வாழ்க்கை திசை மாறியதும் அவர் உலகப் புகழ் பெறக் காரணமாக இருந்ததும், ஒரு கனவால் தான் என்றால் நம்ப முடியுமா?

கீழை நாட்டு மொழியியலில் (oriental languages) அடுத்த நாள் தேர்வு. அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எர்னஸ்ட் வால்லிஸ் பட்ஜ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகலாம். ஆனால், கடுமையான உழைப்புக்குப் பின் மனச்சோர்வடைந்து போய் தன்னால் இது சாத்தியமில்லை என்று பட்ஜ் அயர்ந்து தூங்கி விடுகிறார். தூக்கத்தில் ஒரு கனவு. அக்கனவில், அவர் தனியாக ஒரு கொட்டகையில் குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது ஓர் ஆசிரியர் உள்ளே வந்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை எடுத்து பட்ஜ்ஜிடம் கொடுக்கிறார். அதில் சில கேள்வித் தாள்கள் இருக்கின்றன. இதே கனவு மூன்று முறை அவருக்கு வருகிறது. எனவே கண் விழித்து அவர் கனவில் வந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டும் படித்துக் கொள்கிறார். அடுத்த நாள் தேர்வு அறைக்குள் நுழைகிறார். அங்கு இடமில்லை என்று சொல்லி, ஆசிரியர் அவரை ஒரு கொட்டகையில் கொண்டு போய் அமரச் செய்கின்றார். மங்கிய ஒளியில் அமைந்த அந்தக் கொட்டகை, கனவில் வந்த கொட்டகையைப் போலவே இருக்கிறது. ஆச்சரியப்பட்டுப் போய் அவர் கேள்வித்தாளைப் பிரிக்கிறார். கனவில் கண்ட அதே கேள்வித்தாள் தான் நனவிலும். தேர்வில் தேர்ச்சி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகி, பின்னர் எகிப்தியர்களின் அமரர் நூல் (Egyptian Book of the Dead) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், ஹீரோக்ளிபிகல் சொல்லகராதி (Hieroglyphical Dictionary)  என்னும் நூலை எழுதியும் உலகப் புகழ் பெற்றார்.

கனவுகளால் தூக்கம் கெட்டுப் போவதை நாம் அறிவோம். ஆனால், கனவுகளால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததையும், வாழ்க்கையின் போக்கு திசை மாறிப் போனதையும் நாம் என்னவென்பது!


 

பல நடப்புகளை முன் கூட்டியே மிகச் சரியாகக் கணித்த ஜீன் டிக்சன்

1952-ல் ஒரு நாள் சர்ச்சில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது ஜீன் டிக்சன்  என்ற பெண்மணிக்கு ஒரு காட்சி தோன்றுகிறது. அக்காட்சியில் 1960-இல் அமெரிக்காவின்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உயரமான, நீல நிறக் கண்களை உடைய ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே கொல்லப்படுவதாகத் தோன்றுகிறது.

1960-இல் ஜான் கென்னடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஜீன் டிக்சன் தன் கையிலுள்ள கண்ணாடி உருண்டையை (Crystal Ball) நோக்கும் போதெல்லாம், அதில் ஜனாதிபதியின்  வெள்ளை மாளிகையைக் கரு மேகங்கள் சூழ்வதாகக் கண்டார்.

1963-ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையைச் சூழ்ந்த கரு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்குவதைக் கவனித்து ஜீன் டிக்சன் கவலை கொண்டார். ஜான் கென்னடியின் நண்பரான சாமுவேல்  ஹேல் என்னும் க்ளீவ்லேண்ட் மாநில தனவந்தரின் மகள் கே ஹேல் என்பவரிடம் ஜீன் டிக்சன் மெதுவாகத் தன் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி ஜனாதிபதி தற்போது தென் மாவட்டங்களுக்குச்  செல்லவிருப்பதாக நான் அறிகிறேன். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். ஆனால், ஜான் கென்னடியின் குடும்பத்திற்கு இப்படிப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை  இல்லை என்பது கே ஹேலுக்குத் தெரியும். எனவே, அவரால் இவ்விஷயத்தை ஜனாதிபதியிடம் சொல்ல முடியவில்லை.

1963, நவம்பர் 22-ஆம் தேதி ஜனாதிபதியும், அவர் மனைவியும் டல்லாஸ் மாநிலத்திற்குப் போகின்றனர். அன்று வாஷிங்டனில் ஜீன் டிக்சன் ஒரு நண்பரோடு மதிய உணவுக்கு ஒரு ஓட்டலுக்குச்  செல்கிறார். சாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டு உணவு மேசையில் வைக்கப்படுகிறது. ஆனால், சாப்பிட முடியாமல், ஜீன் டிக்சன் காரணமே இல்லாத ஒரு வேதனைக்கு உள்ளாகிறார். அப்போது ஜான் கென்னடி  சுடப்பட்டார் என்ற செய்தி அந்த ஓட்டலில் காட்டுத் தீயாகப் பரவுகிறது. கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு ஜீன் டிக்சன் ஜனாதிபதி இறந்து விட்டார் என்று சொன்னதும் அங்கிருந்த அனைவரும்  அதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். ஜனாதிபதி சுடப்பட்டாரே தவிர அவர் இன்னும் இறக்கவில்லை என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே ஜனாதிபதியின் மரணச்  செய்தி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜான் கென்னடி இறந்த 3 மாதங்களுக்குள்ளாகவே அவர் குடும்பத்தை இன்னொரு சோகம் தாக்கவிருப்பதை ஜீன் டிக்சன் உணர்கிறார். தனி விமானங்களைத் தவிர்க்குமாறு செனட்டர் எட்வர்டு  கென்னடியைஅறிவுறுத்துமாறு அவர் பலரிடம் கெஞ்சுகிறார். ஆனால், அச்செய்தி அவரைச் சென்று அடையும் முன்பே எட்வர்டு கென்னடி விமான விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு ஆளாகிறார்.

அதே போல் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் அம்பாசடர் ஓட்டலில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு ஜீன் டிக்சன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு பார்வையாளர் ராபர்ட் கென்னடி அமெரிக்க  ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார். அப்போது ஒரு கருப்புத் திரை தனக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் திடீரென்று விழுவதைப் போல் உணர்ந்த அவர், தன் உள்ளுணர்வால்  உந்தப்பட்டு, பார்வையாளர்களை நோக்கிக் கூறினார் இல்லை, ராபர்ட் கென்னடியால் ஜனாதிபதியாக முடியாது. இங்கே இதே இடத்தில் நடைபெறும் ஒரு கோரச் சம்பவத்தால் அவர் ஜனாதிபதியாகும்  வாய்ப்பு இல்லாமல் போகும் என்றார். ஒரு வாரம் கழித்து அதே ஓட்டலில் ராபர்ட் கென்னடி ஒரு கொலையாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த ஜீன் டிக்சனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 1945-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தியாவின் ஏஜென்ட் ஜெனரல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஜீன் டிக்சன் கலந்து கொண்ட போது  நவாப் ஜாஃபா ஷெர் அலி என்பவர் ஜீன் டிக்சனிடம் தனிமையில் பேச விரும்பி ஒரு நாள் குறித்துக் கொண்டு அவரைச் சென்று பார்க்கிறார். அப்போது அவரிடம் ஜீன் டிக்சன் இந்தியா  பிரிவினைக்குள்ளாகும் என்று கூறினார். அதை ஷெர் அலி நம்ப மறுத்தபோது ஜீன் டிக்சன் பிப்ரவரி 20, 1947-இல் பிரிவினை நடக்கும் என்றார்.

1945-இல் வின்ச்டன் சர்ச்சிலை அவர் வாஷிங்டனில் சந்தித்தார். அப்போது அவரிடம் உலகப் போருக்குப்பின் நீங்கள் பதவியிலிருந்து வெளியேறி மீண்டும் 1952-இல் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்றார். அதை  நம்ப மறுத்த சர்ச்சில் நீங்கள் சொல்வது தவறு. பிரிட்டன் என்னை ஒரு போதும் கைவிடாது என்று கேலி செய்தார். ஆனால், ஜீன் டிக்சன் சொன்னது பலித்தது.

1948-இல் மகாத்மா காந்தியின் கொலை, அதன் பின்னர் எகிப்தில் அன்வர் சதத்தின் படுகொலை ஆகியவற்றையும் அவர் முன்கூட்டியே கணித்தார்.

இப்படிப் பல நடப்புகளை முன் கூட்டியே மிகச் சரியாகக் கணித்த ஜீன் டிக்சனின் கணிப்புகளில் பல நடக்காமல் போனதும் உண்டு. ஆனால், அவரால் கணிக்கப்பட்டு மெய்யாகிப் போன பல நிகழ்வுகளால்  அவர் 1960களில் உலகப் புகழ் பெற்றார். ஆனால் இன்றுவரை ஜீன் டிக்சனின் முன்னறியும் திறனின் இரகசியம் அறிவியலுக்கு அப்பாலேயே நிற்கிறது. அது ஏன்?

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்


 

மனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும்!


மனோ சக்தியால் மண்ணுலகை ஆட்டிப் படைக்க முடியும் என்பதை இவ்வுலகில் பலர் நிரூபித்திருக்கின்றனர். 1973-இல் தன் மனோ வலிமையால் கண்ணில் தோன்றும் உலோகப் பொருட்களை வளைக்கவும் உடைக்கவும் முடியும் என்பதை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் (Yuri Geller) என்ற ஓர் இளைஞர் தொலைக்காட்சியில் நிரூபித்துக்காட்டிய போது, இவ்வுலகம் திகைத்துப் போனது.

யூரி கெல்லர் தன்னால் உலோகப் பொருட்களை வெறும் பார்வையாலோ அல்லது தீண்டுவதன் மூலமோ வளைக்க முடியும் என்று கூறிய போது யாரும் அதை நம்பவில்லை. ஆனால், பிபிசி தொலைக்காட்சியில் 23.11.1973 அன்று அவர் தோன்றி, நேயர்களின் கண்ணெதிரிலேயே மேசையில் வைக்கப்படும் கரண்டி, ஃபோர்க் முதலியவைகளை வெறும் பார்வையாலேயும் ஸ்பரிசத்தாலேயும் வளைத்துக் காட்டிய போது அறிவியல் உலகம் அதிர்ச்சிக்குள்ளாகியது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்ததும் பிபிசி நிறுவனத்துக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் கணக்கில் அடங்காது. அப்படித் தொலைபேசியில் அழைத்தவர்களில் பலர் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியை நோக்கி வைக்கப்பட்டிருந்த சமையலறைக் கத்திகளும், சிறு கரண்டிகளும் நிகழ்ச்சி நடக்கும்போது தானாகவே உடைந்து போனதாகக் கூறினார்கள் . ஒருவர் வீட்டில் பல நாட்களாக ஓடாமல் இருந்த கடிகாரம் யாரும் எதுவும் செய்யாமலேயே தானாகவே ஓடத் தொடங்கியதாகக் கூறினார்.

பாரா சைக்காலஜி

 (Para psychology) எனப்படும் உளவியல் துறையின் ஒரு பிரிவில் வல்லுநரான டபிள்யூ ஈ காக்ச் என்பவர் யூரி கெல்லரின் திறமையைப் பரிசோதிக்க எண்ணி ஓடாத ஒரு கைக்கடிகாரத்தை யூரி கெல்லரிடம் கொடுத்தார். அலுமினியம் கம்பி ஒன்றின் உதவியால் காக்ச், அந்த கடிகாரத்தை ஓட விடாமல் அதனுள்ளே இருந்த பாகங்களைத் தாறுமாறாக முடுக்கி இருந்தார். ஆனால், யூரி கெல்லரின் ஒரு பார்வையிலேயே அந்த கடிகாரம் ஓடத் தொடங்கியது. மேக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிட்யூட் (Max Planck Institute) என்ற ஜெர்மானிய நாட்டு அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் யூரி கெல்லரை ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு, அவரது சக்தி விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவில் வி-2 ராக்கெட்டைக் கண்டுபிடித்த வெர்ன்ஹெர் ஃவான் ப்ரெüன் என்னும் விஞ்ஞானி யூரி கெல்லரை சோதனைக்குள்ளாக்கினார். அந்த விஞ்ஞானியின் கையில் இருந்த தங்க மோதிரத்தின் மேல் தன் கைகளை யூரி கெல்லர் தவழ விட்டபோது, மோதிரம் தட்டை வடிவம் பெற்றது. அவரை பல சோதனைகளுக்கு ஆளாக்கியபின், விஞ்ஞானிகள் யூரி கெல்லரால் மின் அலைகளை உருவாக்க முடிகிறது என்று கண்டறிந்தனர்.

யூரி கெல்லர் தன் பார்வையால் உலோகப் பொருட்களை வளைத்தாரென்றால் சோவியத் யூனியனின் மேடம் நீனா குலகினா (Madame NinaKulagina) தன் பார்வையால் பல பொருட்களை இடம் பெயரச் செய்தார். அறிவியலாளர்கள் அவரைச் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே நீனா குலகினா மேசையில் வைக்கப்பட்டிருந்த பிங் பாங் பந்தை மேலெழும்பச் செய்தார். அலமாரியில் இருந்த பல பொருட்களை இடம் விட்டு இடம் பெயரச் செய்தார். ரஷ்யாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அவர் பல பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். அப்பரிசோதனைகளின் போது அவர் தன் பார்வையாலேயே டேபிளில் வைக்கப்பட்டிருந்த பேனா, சிகரெட் பெட்டி, ப்ரெட் முதலியவைகளை இடம் பெயர வைத்தார். ஒரு கண்ணாடி உருண்டையின் மேல் அவர் கைகளை அசைத்தபோது, அதனுள் இருந்த சிகரெட் புகை இரு கூறாகப் பிரிந்தது. மருத்துவர்கள் நீனா குலகினாவை சோதனைக்குள்ளாக்கிய போது, அவர் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் அவருடைய நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 200 பதிவாகியது. அவருடைய பின் மூளையில் ஏற்பட்ட அதிர்வுகள் சாதாரணமாக ஏற்படக்கூடிய அதிர்வுகளை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. அவரைச் சுற்றி ஒரு காந்த வளையம் ஏற்படுவதாக ஒரு சில விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நீனா குலகினா தான் அற்புதங்களை நிகழ்த்தும் போதெல்லாம் தன்னுடைய முதுகுத்தண்டில் ஒரு மின்சக்தி உருவாகி மேல் நோக்கிக் கிளம்பி பிடரியில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகத் தான் உணர்வதாகக் கூறினார்.

ஆனால், உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டுக்கள் மற்றும் கை விலங்குகளை சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்தார் ஒருவர் என்றால் நம்ப முடியுமா? 1974-இல் ஒரு யூதப் பாதிரியாருக்கு ஹங்கேரி நாட்டில் புதாபெஸ்டில் மூத்த மகனாகப் பிறந்து வறுமையின் காரணமாக அமெரிக்காவிற்குக் குடியேறியவர் எஹ்ரிக் வீஸ் Ehrich Weiss). வறுமையின் காரணமாக மழைக்குக் கூட பள்ளிக்கூட வாசலை அவரால் மிதிக்க முடியவில்லை. தந்திரக் கலையில் (மாஜிக்) ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தன் பெயரை ஹார்ரி ஹொடினி (Harry Houdini) என்று மாற்றிக் கொண்ட அவர் முதல் முதலாக நியூயார்க் நகரில் ஒரு காலி பீர் குடுவையில் இருந்து தன் பூட்டுக்களை விடுவித்துக்கொண்டு 20 வினாடிகளில் வெளியே வந்த போது, அவரை யாரும் பெரிதாகக் கருதவில்லை. ஆனால், சிக்காகோ போலீஸ் தலைமையகத்தில் அவருக்குப் போடப்பட்டிருந்த கைவிலங்குகளில் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவந்ததும் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. 1899-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி சானஃப்ரான்சிஸ்கோ நகர போலீஸ் தலைமையகத்தில் அவருடைய சவாலையேற்று போலீஸ் அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி அவர் உடலில் ஏதாவது மறைக்கப் பட்டிருக்கிறதா என்று பரிசோதித்த பின் அவருடைய கைகளைப் பின்னால் இணைத்து 10 விலங்குகளால் அவரைப் பூட்டினர். கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகியவை பல சங்கிலிகளால் கோர்க்கப்பட்டு அவற்றின் மேல் பூட்டுக்கள் போடப்பட்டன. அதன் பிறகு ஹார்ரி ஹொடினி ஏற்கெனவே பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒரு சிறை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உள்ளே போனதும் சிறைக் கதவுகள் பூட்டப்பட்டன. பல்வேறு பத்திரிகை நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஹார்ரி ஹொடினி 10 நிமிடத்தில் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தார். சான் ஃப்ரான்சிஸ்கோ நகரமே இந்த நிகழ்ச்சியைக் கண்டு குலுங்கியது.

1900-ஆம் ஆண்டு மே மாதம் ஹார்ரி ஹொடினி இங்கிலாந்து பயணமானார். உலகப் புகழ் பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசிடம் அவரது கண்கட்டு வித்தை செல்லுமா என்று கேள்விக்குறி எழுப்பப்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைத் தலைமையகத்தில் கண்காணிப்பாளர் (Superintendent of Police) ஹொடினியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். அவரது கைகள் இரண்டையும் ஒரு தூணைச் சுற்றிக் கட்டச் சொன்னார். அப்படி கட்டப்பட்ட கைகளில் விலங்கைப் பூட்டிவிட்டு, மெல்வில் (Malville) என்ற அந்த கண்காணிப்பாளர் நீங்கள் சோர்வடைந்த பின் நான் திரும்புகிறேன் என்று இறுமாப்புடன் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் வாயிற்கதவை அடையும் போதே ஹொடினியின் குரல் கேட்டு திரும்பினார். விலங்குகள் கழற்றப்பட்ட நிலையில் சுதந்திர மனிதனாக ஹொடினி அங்கே நின்று கொண்டிருந்தார்.

ஜெர்மனியில் யாராலும் கழற்றப்பட முடியாதென்று கருதப்பட்ட மதில்தா காஸ் (Mathilda Gasse) சிறையிலிருந்து தருவிக்கப்பட்ட கைவிலங்குகளை ஹொடினி அவிழ்த்தெறிந்த போது அந்நாட்டின் மிகப் பெரிய சட்ட அமுலாக்க அதிகாரி திரு வான் விந்தேம் (Von Windhiem) அந்நிகழ்ச்சிக்குத் தன் கைப்பட அத்தாட்சியளித்தார்.

1903-ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்குப் பயணமான ஹொடினி, மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்ட கைதிகளை சைபீரியாவிற்குக் கொண்டு செல்லும் சிறை ஊர்தியில் (Siberian Transport Cell) தன் சாகசத்தை நடத்தக் கோரினார். அது உலகில் யாராலும் செய்ய முடியாத செயல் என்று அந்நாட்டுக் காவல் துறை சவால் விடுத்தது. ஆனால், அரை மணி நேரத்திற்குள் ஹொடினி அதிலிருந்து வெளியே வந்தார்.

1906-ஆம் ஆண்டில் வாஷிங்டன் கூட்டமைப்புச் சிறையிலிருந்தும், (Washingdon Federal Prison) பின்னர் (Boston) சிறையிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்ட போது, அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்றோ வில்சன் (Woodrow Wilson) வேடிக்கையாகக் கூறினார், "கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உங்கள் திறமையைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அத்திறமை எனக்கு இருக்கக் கூடாதா என்று சில சமயம் எண்ணுகிறேன்' என்றார்.

அப்படி உலகத்தையே தன் கண்கட்டு வித்தையால் கட்டிப் போட்ட ஹொடினி, மழைக்குக் கூட ஒரு பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. ஆனால், தன் கடின உழைப்பாலும், திறமையாலும் அவர் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வரலாற்றறிஞர் என்று பன்முகம் கொண்ட வல்லுனராகப் பரிணமித்தார். 1926-ஆம் ஆண்டில் தனது 52 வயதில் காலமான ஹொடினி, தன்னுடைய சாகசங்கள் வெறும் தந்திரங்களே தவிர இயற்கையை மீறிய சக்திகளால் அல்ல என்றும் அப்படி இயற்கையை மீறிய சக்தி படைத்திருப்பதாகச் சிலர் சொல்லுவது ஏமாற்று வேலையே தவிர வேறல்ல என்றும் அறை கூவினார். அப்படியானால், அவர் புரிந்த சாகசங்கள் எதில் அடங்கும்? 


 

புதன், 15 ஜூன், 2016

வீரமாமுனிவர்

தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர்.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த
பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி,
மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை
பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.

வ.வே.சு.ஐயர் (1881 -1925

தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர்
வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும்
சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும்
வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது,
கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார்.
44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.

மு.ராகவையங்கார்

ராகவையங்கார் (1878-1960) வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர். செந்தமிழ் எனும் இதழில் 'வீரத்தாய்மார்' என்று எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார். 'இருளிலேயே மூழ்கிக் கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்' என்று பாராட்டி எழுதினார். வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார்.

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1881-1953)

எந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலாமலேயே சிறந்த தமிழறிஞராக விளங்கியவர் பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் (1881-1953). இவர் தமது வட மொழியறிவைத் தமிழின் மேன்மைக்கு
பயன்படுத்தினார். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை தோன்றுவதற்கு காரணமாக இவரும் விளங்கினார்.
அக்காலத்தில் இந்த சன்மார்க்க சபையும், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமும் போட்டியிட்டுத்
தமிழையும், சைவத்தையும் வளர்த்தன. உரைநடைக் கோவை, நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழ்க்கை,
நாட்டுக்கோட்டை நகரத்தார் சீர்திருத்தம், பண்டிதமணி பாடல்கள், பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பண்டிதமணி சிறந்த நடையில் எழுதுபவர். மிக எளிய நடையில் எழுதுவதை அவர்
விரும்பியதில்லை. இவருடைய நடை சிறிது கடினமாயிருப்பினும் மீண்டும், மீண்டும் படித்தால் என்ன
சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். 'நடை வனப்பு' என்பது இவர் பெரிதும் போற்றிய ஒன்று.

வ.அய்.சுப்பிரமணியனார் (1926-2009)

இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய மொழி நூல் அறிஞர்களில் தலைமையானவர்
வ.அய்.சுப்பிரமணியனார் (1926-2009). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று, பின்னர்
அமெரிக்காவில் இன்டியானா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். இவர் தலைசிறந்த
தமிழறிஞர். மொழிநூற் புலமை பெற்றவர். தமிழின் பெருமையை அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி,
ஜப்பான், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய வெளிநாடுகளில் பரப்பியவர். உலகத் தமிழ் மாநாட்டில்
கலந்து கொண்டு அரிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். சுப்பிரமணியம் 180 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 14 நூல்களையும் படைத்து தமிழுக்கு அருந்தொண்டாற்றியுள்ளார். இவர் தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பணியாற்றிய பெருமையுடையவர்.

சி.வை.தாமோதரனார் (1832 - 1901)

தமிழ்த் தொண்டு ஆற்றுவதை தலையாய கடமையாக கொண்டு, பதிப்புத் துறையில் முன்னோடியாய்
திகழ்ந்தவர் சி.வை.தாமோதரனார் (1832 - 1901). இவர் நீதி நெறி விளக்கவுரை, வீரசேசாழியம்,
தணிகைப்புராணம், தொல்காப்பியம் பொருளதிகாரம், இலக்கண விளக்கம் ஆகிய நூல்களை
முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். தாமோதரம் பிள்ளை அவர்கள் நட்சசத்திர மாலை, ஆதியாகம
கீர்த்தனம், கட்டளைக் கலித்துறை, சூளாமணி வசசனம், சைசவ மகத்துவம் ஆகிய நூல்களை
எழுதியுள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகளைக் கண்டு அரசு அகம் மகிழ்ந்தது. செசன்னை அரசசாங்கம் இவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் என டில்லி அரசிடம் கேட்டுக்
கொண்டது. டில்லி அரசு இவருக்கு 'ராவ் பகதூர்' என்னும் மதிப்பு மிகுந்த பட்டம் வழங்கிப்
பாராட்டியது.

திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921)

திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921), தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக
பணியாற்றினார். தமிழுக்கு கதி இருவர்... என்று கூறினார். க என்பது கம்பரையும், தி என்பது
திருவள்ளுவரையும் குறிக்கின்றன. வியாகோவை, திருவள்ளுவர், தமிழ், கண்ணகி சரித்திரம் உள்ளிட்ட
நூல்களை எழுதியுள்ளார். சிறந்த நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதற்காக பல
துன்பங்களைத் தாங்கிக் கொண்டவர். தமிழறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவருடைய மாணவர்கள்.

கற்றல் திறனும் மனத்திரையின் காட்சிகளும்

எந்த ஒரு விஷயத்தையும் மனத்திரையில் பிம்பங்களாக ஓட்டிப்பார்க்கும் திறனை யாரும் குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம். காட்சிப்படுத்திக்கொள்ளும் திறனால், கற்றல் திறனும் மற்ற திறமைகளும் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு வீரர்களும் இசைக் கலைஞர்களும் அசைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பார்கள். உடல்ரீதியான பயிற்சியைப் போலவே இதுவும் மிகவும் பலனளிக்கக்கூடியது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப்போல செய்துபார்ப்பது செயலிழந்த அவர்களின் உடல் உறுப்புகளுக்கு மீண்டும் செயலூட்டம் தரும் என்றும் சொல்லப்படுகிறது.

பார்வை அற்ற மனம்

பெரும்பாலானோருக்கு நினைவு, பகல் கனவு, கற்பனை போன்றவற்றுக்குக் காட்சிப் படிமங்கள் (Visual imagery) மிகவும் முக்கியம். ஆனால், சிலருக்கு மனக்கண் என்ற திறனே இருக்காது. இதனால் அவர்களின் கற்றல் திறனும் கல்வியும் பெரிதும் பாதிக்கப்படும்.

மனதுக்குள் பார்வையற்று இருப்பது எப்படி இருக்கும் என்று ஃபயர்ஃபாக்ஸின் நிறுவனர்களில் ஒருவரான பிளேக் ரோஸ் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் விவரித்திருந்தார். மற்றவர்களெல்லாம் எப்படி மனக்கண்ணில் காட்சிகளை ஓட்டிப்பார்க்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது என்றும் அவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.

ஒளிப்படம் போலவா? மங்கலாகவா?

சர்ச்சைக்குள்ளான உளவியலாளர் ஃப்ரான்ஸிஸ் கால்ட்டன் இது குறித்து 1880-களில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சிலரால் மனக்கண்ணில் காட்சிப்படுத்த முடியாது என்ற உண்மையை அப்போதுதான் உலகம் முதன்முதலில் தெரிந்துகொண்டது. வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதத்தில் அன்றாட நிகழ்வுகளை மனக்காட்சிகளாக நினைவுகூர்வது குறித்து விவரிக்க கால்ட்டன் முயன்றார்.

அவருடைய அறிவியல் சகாக்களிடம் அவர்களின் வீட்டு உணவு மேசையை மனத்திரையில் கொண்டுவந்து அதைப் பற்றித் துல்லியமாக விவரிக்கச் சொன்னார். அப்போது சிலர் ஒளிப்படத் துல்லியத்துக்கு இணையாக விவரித்திருக்கிறார்கள். சிலரோ மங்கலான நினைவாக விவரித்திருக்கிறார்கள்.

மனத்திரையில் காட்சிகளை ஓட்டிப் பார்க்க முடியாத திறனை 'கான்ஜெனிட்டல் அஃபேண்டசியா' (congenital aphantasia) என்று இக்கால நரம்பியல் நிபுணர்கள் அழைக்கிறார்கள். 50 பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினை இருப்பவர்களின் கனவுகளில் காட்சிகள் வருகின்றன. ஆகவே, காட்சிகளாகக் கற்பனைசெய்து பார்க்கும் திறன் மட்டுமே அவர்களுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

எழுத்தறிவுக்கு மனக்காட்சி முக்கியம்

வகுப்பறையைப் பொறுத்தவரை படித்துப் புரிந்துகொள்வதிலும் சொற்களின் அர்த்தங்களைக் கற்றுக்கொள்வதிலும் மனக்காட்சிகள் மிகவும் முக்கியமானவை. எழுத்தறிவுக்கு இதுவே அடிப்படை என்றும் ஒரு கோட்பாடு சொல்கிறது.

வெஸ்டர்ன் ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தின் அல்லான் பைவியோ முன்வைத்த இந்தக் கோட்பாடு, சொற்கள் வழியாகச் சிந்தித்தல், சொற்கள் இல்லாமல் சிந்தித்தல் ஆகிய இரண்டு முறைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைச் சொல்கிறது.

சொற்களற்ற சிந்தனை முறைக்கு மனக்காட்சிகளே முதன்மையானவை என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. ஆகவே, சொற்கள், மனச்சித்திரங்கள் என்று இரு வகைகளில் தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன.

இவை இரண்டும் ஒன்றையொன்று சாராமலேயே செயல்படக் கூடியவை என்றாலும் கற்றல் திறனையும் நினைவுகூரும் திறனையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளவும் கூடியவை என்று அந்தக் கோட்பாடு கூறுகிறது.

பள்ளிக் குழந்தைகள் எழுத்தறிவுத் திறன் பெறுவதற்கு மனக்காட்சிகள் முக்கியமானவை என்று 1970-களிலிருந்து செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பல நிரூபிக்கின்றன.

அவர்கள் தவறில்லை

8 வயது குழந்தைகளைக் கொண்டு ஒரு ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குழந்தைகளின் மனதில் பதியவைப்பதைவிட மனக்காட்சிகளின் துணைகொண்டு சொற்களைப் பதியவைப்பது இரண்டரை மடங்கு பலன் அளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

பூடகமான கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதிலும் மனக்காட்சிப்படுத்தல் உதவுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், தொடக்கப் பள்ளி மாணவர்கள் மனதில் புதிய அறிவியல் சொற்களைப் பதியவைப்பதிலும் மனக்காட்சிப்படுத்தல் முறை பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கணிதம், கணினி அறிவியல் போன்ற துறைகளிலும் மனக்காட்சிப்படுத்தலின் பங்கு மிக முக்கியமானது.

தேர்வுகளின்போது படித்த பாடங்களைத் திரும்பவும் நினைவுகூர்வதை அஃபேண்டசியா அதாவது மனக்காட்சிப்படுத்தும் திறனின்மை பாதிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மனவரைபடங்கள் (mindmaps) மூலம் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும்.

அஃபேண்டசியா பிரச்சினை நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டாலும் அது குறித்த விரிவான ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை. "விவரணைரீதியிலான வாக்கியங்களைப் புரிந்துகொள்வதில் அஃபேண்டசியா பிரச்சினை கொண்ட குழந்தைகளுக்குச் சிக்கல் நிலவுகிறது.

இதனால் படித்துப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது" என்கிறார் நரம்பியலாளர் ஆடம் ஜிமான். "எனினும் கற்றல் குறைபாடுகளுக்கும் அஃபேண்டசியாவுக்கும் தொடர்பு இருப்பதற்கு நேரடியான ஆதாரங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.

ஆக, அஃபேண்டசியாவால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படுமென்றால் அதுபோன்ற குழந்தைகள் கல்வி கற்பதற்கான மாற்று வழிமுறைகளை நாம் தேடியாக வேண்டும்.

தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை


 

செவ்வாய், 14 ஜூன், 2016

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 1: வெற்றிக்கு அடிப்படை இலக்கு!


வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து கண்டறிந்தவர் எஸ்.இராஜேஷ் ஐ.பி.எஸ். உத்தரப் பிரதேசத்தின் 2011 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் ஆக்ரா, ஜான்சி, லக்னோ ஆகிய நகரங்களில் ஏ.எஸ்.பி.யாகவும், கான்பூர் நகர எஸ்.பி.யாகவும் இருந்தவர். தற்போது அலிகரில் உள்ள பி.ஏ.சி. (Provincial Armed Constabulary) சிறப்புப் படையின் கமாண்டராகப் பதவிவகிக்கிறார்.

இராஜேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர், "படித்து என்னவாகப் போகிறீர்கள்?" எனக் கேட்டார். எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்ல இராஜேஷ் மட்டும் ஐ.ஏ.எஸ். ஆக விரும்புவதாகச் சொன்னார். "இந்தக் கல்வியின் அர்த்தம் தெரியுமா உனக்கு?" எனக் கேட்க "தெரியாது!"

என்னும் பதில்தான் குட்டிப் பையனிடமிருந்து வந்தது. இந்தத் துறையில் வெற்றி பெறுவது கஷ்டம் என ஆசிரியர் சொல்லக் கேட்டுச் சோர்ந்துபோனது சிறுவனின் மனம். சரி, மருத்துவராகலாம் என முடிவெடுக்க அதுவும் நுழைவுத் தேர்வில் நூலிழையில் எட்டாமல் போனது. பிளஸ் டூ முடித்து கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தார்.

அறிவுக் கண் திறப்பு

"கல்லூரி நாட்களில் எனது சொந்த ஊரான கரடிக்குளம்,கோவில்பட்டிக்குச் சென்றபோது ஒரு நாள் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை எதேச்சையாக வாசித்தேன். கிராமப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்து எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள் சுயதொழில் செய்யத் தொடங்கினார்கள். ஒரு ஐ.ஏ.எஸ்.

அதிகாரியால் ஏற்படுத்த முடிகிற தாக்கத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்" என்கிறார் இராஜேஷ். பிறகு அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க இராஜேஷூக்கும் சமூக அக்கறை துளிர்த்தது. விடுமுறை நாட்களில் சொந்தக் கிராமத்து பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்தார். "அப்போதுதான் எங்க ஊரு பிள்ளைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பின்தங்கியிருப்பது கண்கூடாகத் தெரிந்தது. இந்த நிலையை மாற்ற நிச்சயமாக நானும் மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்" என்கிறார்.

ஆனால், கிராமம் வரும்போது மட்டுமே இந்த உணர்வு மேலெழுந்தது. கல்லூரி திரும்பியதும் நீர்த்துப்போனது. இதனிடையே,மதுரையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தனித்தொகுதியாக இருந்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இதை அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியரான உதயசந்திரன் தலையிட்டு வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்வு இராஜேஷின் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

என்ன படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம்

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார் இராஜேஷ். அப்போது தேசிய வங்கியின் முதன்மை மேலாளரான இராஜேஷின் அப்பா சுந்தரராஜ் இது அவருக்கான வேலை அல்ல என்பதைப் புரியவைத்தார்.

ஒரு கட்டத்தில் ஐ.டி. வேலையை ராஜினாமா செய்தார் ராஜேஷ். டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர ரயில் பயணச்சீட்டு முதற்கொண்டு எல்லா ஆயத்தப் பணிகளும் செய்த பின்னர் திடீரென சிக்குன் குனியா வந்துவிட்டது. இதனால் டெல்லி போக முடியாமல் சென்னையிலேயே ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார். ஆனால், முதல் தேர்வில் தோற்றதால் மிகுந்த சங்கடத்துக்கு ஆளானார்.

இரண்டாவது முறைக்குத் தயாரானபோது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வுக்கும் சேர்த்துப் பயின்றார். "ஆனால் இலக்கில்லாமல் படித்ததால், யூ.பி.எஸ்.சி-யில் கோட்டைவிட்டு டி.என்.பி.எஸ்.சி-யின் குருப்-1 மட்டும் பாஸ் செய்தேன்" என்கிறார். எனினும், விடாமல் 3 ஆவது முறை திட்டமிட்டுப் பயிற்சி எடுத்தார்.

"முதல் கட்டமாக சென்னையில் தங்கிய அறையை மாற்றிக்கொண்டு, என்னைப் போலவே தயாராகும் புதிய நண்பர்களுடன் இணைந்தேன். ஒரே அறையில் அனைவரது நோக்கமும் ஒன்றாக இருந்தது உத்வேகத்தை அளித்தது" என்கிறார். இம்முறை பிரிலிம்ஸ், மெயின்ஸ் இரண்டிலும் நல்ல மதிப்பெண் வாங்கினாலும் நேர்முகத் தேர்வில் பதற்றம் அடைய ஐ.ஏ.எஸ். பிரிவில் மீண்டும் தோற்று இராணுவ வருவாய்த் துறை பிரிவில் வேலை கிடைத்தது.

மறுவருடம் நான்காவது முறையாக எழுதியதில் ஐ.பி.எஸ். கிடைத்தது. இந்த நம்பிக்கையில் ஐ.பி.எஸ். பணியாற்றியபடியே மேலும் இருமுறை முயற்சி செய்தும் கைகூடவில்லை. "வேறு வழியின்றி ஐ.பி.எஸ்.ஸில் விருப்பம் இன்றி சேர்ந்தாலும் ஒரு கட்டத்தில் விருப்பம் உண்டானது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை ஐந்து முறை எழுதி இரண்டு முறை பாஸ் செய்தும், ஐ.ஏ.எஸ். கிடைக்காமல் போனதற்கான காரணங்களை எண்ணிப் பார்க்கிறேன். முதல் இரு முயற்சிகளில் உறுதியான இலக்கு இன்றி இருந்ததுதான் அடிப்படைக் காரணம். ஒரு இலக்கை முடிவுசெய்து அதை நோக்கிச் செல்வதுதான் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம் சொல்லும் பாடம் ஆகும்" என்கிறார் இராஜேஷ்.

இராஜேஷ் வெற்றியின் ரகசியம்

படிக்கும் வசதி இல்லாமல்கூடத் தேர்ச்சி பெறலாம். ஆனால், இலக்கின்றி திட்டமிடாமல் வெற்றி பெற முடியாது.

பி.இ. பட்டம் பெற்றது எனக்குப் பெரிய பலனை அளிக்கவில்லை. நான் யூ.பி.எஸ்.சி-யில் பொறியியல் பிரிவுப் பாடங்களையும் எடுக்காமல் பொதுக்கல்வி, ஆங்கிலம், கணிதம் ஆகிய கட்டாயப் பாடங்களுடன் பொது நிர்வாகம் மற்றும் தமிழ் இலக்கியம் எடுத்து எழுதினேன். இவற்றில், பி.இ. கல்வி எனக்குக் கணிதப் பாடத்தில் உதவியது. தமிழ் மொழி ஆர்வமும், பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. சின்னசேகர் சொல்லித்தந்த முறையும், நாகு ஐயாவிடம் பெற்ற திறமையான தமிழ்ப் பயிற்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தந்தன.

யூ.பி.எஸ்.சி.க்கான இலக்கை ஒருவர் மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்து கலைக் கல்லூரிப் பாடப்பிரிவுகள் படித்தால் எளிதாக வெல்லலாம்.

இதுபோன்ற போட்டித் தேர்வில் நாம் எந்த அளவுக்குப் படித்தோம் என்பதைக் காட்ட எழுதக் கூடாது. இந்தப் போட்டியில் வெல்வதற்காக எழுத வேண்டும். இதில் வெல்லும்படி உங்களுக்கு வசதியான பாடங்களைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

 
 

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் - 3: ஐ.ஏ.எஸ். ஆன கடைசி பெஞ்ச் மாணவர்


வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காரும் மாணவர்கள் என்றாலே, "படிப்பு வராத பசங்க" என்றுதான் முத்திரைக் குத்தப்படுகிறார்கள். ஆனால், அதில் அமர்ந்து படித்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2008-ம் வருட பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகிவிட்டார் கே.விஜயேந்திர பாண்டியன்.

இவர் எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியான பின் லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றினார். பிறகு மாநிலக் கூடுதல் தேர்தல் அதிகாரி மற்றும் உபி மாநிலப் போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் பதவி வகித்தவர். தற்போது உபியின் மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் ஆட்சியராக இருக்கிறார்.

சிவகங்கையைச் சேர்ந்த நீதிபதி எஸ்.கற்பூர சுந்தர பாண்டியனின் மகன் விஜயேந்திர பாண்டியன். 9-ம் வகுப்புவரை படிப்பைக் கண்டாலே விஜயேந்திரனுக்கு வெறுப்பு. நெடுநெடுவென வளர்ந்ததால் கடைசி பெஞ்ச் வேறு.

அப்பாவுக்கு குளித்தலையில் மாற்றலானபோது விஜயேந்திரனின் 'ஜஸ்ட் பாஸ்' மதிப்பெண்ணுக்கு எந்தப் பள்ளியிலும் இடம் கிடைக்கவில்லை. ஒரு வழியாக திருச்சி நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனுமதி கிடைத்தது.

"எனக்குப் பள்ளியில் இடம் கிடைக்காததால் அப்பா சந்தித்த அவமானத்தை மன வேதனையுடன் என்னிடம் சொன்னார். அப்போதுதான் என்னுடைய தவறு எனக்கு முதல் முறையாக உறைத்தது. இனி என்னால் அப்பா தலை குனியக் கூடாது என வைராக்கியமாக முடிவெடுத்தேன்" என்கிறார் விஜயேந்திரன்.

படிப்பில் முழு கவனம் செலுத்தவே 10-ம் வகுப்பில் 403 மதிப்பெண்கள் கிடைத்தது. முதல் குரூப்பில் சேர வாய்ப்பிருந்தும், விருப்பப் பாடமாக மூன்றாவது குரூப்பை தேர்ந்தெடுத்தார். மூன்று பாடங்களில் சென்டம் பெற்று திருச்சி மாவட்டத்தின் முதல் மாணவரானார்.

"குளித்தலையிலிருந்து திருச்சிக்கு தினந்தோறும் 90 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது, படித்த பாடங்களை அசைபோடுவேன். அதுதான் படிப்பில் சாதிக்க உதவியது'' என பெருமிதம் கொள்கிறார்.

நட்பால் அறிமுகமான லட்சியம்

பிறகு, புதுக்கோட்டையின் ஜே.ஜே.கல்லூரியில் பி.பி.ஏ சேர்ந்தார். இதை முடித்தவர் தன் குடும்ப வழக்கத்தால் எல்.எல்.பி பயில சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து சமூகத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஆசை வந்தது.

ஆனால் எப்படித் தயாராகுவது எனத் தெரியாத நிலையில் செந்தில் குமாரோடு (தற்போது அரசு நியமன ஐ.பி.எஸ். பெற்று பூக்கடை பகுதி துணை ஆணையராக உள்ளார்) நட்பு ஏற்பட்டது.

அவர் வழிகாட்டுதலில் எல்.எல்.பி.யுடன் சேர்த்து யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி-க்கும் பயிற்சி பெற ஆரம்பித்தார் விஜயேந்திரன். வகுப்புத் தோழர்களின் வழிகாட்டுதலில் சென்னையிலேயே யு.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.

முதல் முயற்சியிலேயே தேர்வில் வெல்ல வேண்டும் என்கிற கனவில் டெல்லி சென்று சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டார். ஆனால் டெல்லியில் தங்கிப் படிக்க அதிக பணம் செலவானதால் சென்னை திரும்பிவிட்டார்.

"எல்.எல்.பி. மூன்றாவது வருட இறுதித் தேர்வில் அரியர்ஸ் வைத்து யூ.பி.எஸ்.சி. முதல் முறையாக எழுதினேன். அதே நேரத்தில் மெயின்ஸ் எழுதும் முன்பே எல்.எல்.பி.யின் அரியர்ஸிலும் தேர்ச்சி பெற்றேன்.

மெயின்ஸில் உளவியல் மற்றும் புவியியல் விருப்பப் பாடமாக எடுத்தேன். ஆனால், நேர்முகத் தேர்வில் ஏழு மதிப்பெண்களில் தோல்வி ஏற்பட்டது. எந்தப் பணியும் கிடைக்காமல், இரண்டாவதாக முயற்சிக்க முடிவு செய்தேன்" என்கிறார்.

எல்.எல்.பி. முடித்தும் வழக்கறிஞராக பதிவு செய்தார். ஆனால் யு.பி.எஸ்.சி. பயிற்சியைத் தொடர பணம் இல்லை. தனியார் நிறுவனம் ஒன்றில் ஆளுமை பயிற்சியாளராக சேர்ந்தார். கிடைத்த சொற்பச் சம்பளத்தை சேமித்து மீண்டும் டெல்லிக்கு சென்றார்.

இரண்டாவது முயற்சியில் மெயின்ஸுக்கானப் பயிற்சியை அங்கு எடுத்தார். இதில் அவருக்கு ஐ.ஆர்.எஸ். கிடைத்து. இறுதியாக எடுத்த மூன்றாவது முயற்சியில் 67 ஆவது ரேங்குடன் விஜயேந்திரன் 2008-ல் ஐ.ஏ.எஸ். ஆனார்.

சட்டப்பிரிவில் யூ.பி.எஸ்.சி. எழுதாதது ஏன்?

யூ.பி.எஸ்.சி. எழுத நினைக்கும் பலருக்கு அதில் வெல்ல முடியுமா என்கிற பயம் இருக்கிறது. அச்சம் விடுத்து முழுமூச்சாக இறங்கி நம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பது விஜயேந்திரனின் அனுபவப் பாடம். "சட்டப் பிரிவு பாடங்களிலும் யூ.பி.எஸ்.சி. எழுத வாய்ப்புகள் இருந்து.

ஆனால் நான் அதை தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் போட்டித் தேர்வில் வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல் மற்றும் பொது நிர்வாகம் என பிரபலமான பாடங்களை எடுப்பதுதான் நல்லது. இவற்றுக்கான பயிற்சியும் புத்தகங்களும் கிடைப்பது சுலபம். ஆனால், சட்டம் போன்ற சிறப்புப் பாடங்களுக்கு அதன் பின்புலங்களை அறிந்திருப்பது அவசியம். எனினும், எனது எல்.எல்.பி. படிப்பும் அது தொடர்பான அனுபவங்களும் யூ.பி.எஸ்.சி.யின் நேர்முகத் தேர்வில் பதில் அளிக்க பெரிதும் கைகொடுத்தது" என்கிறார் விஜயேந்திரன்.

வெற்றி மந்திரம்

முதலாவதாகப் படிக்கும் நேரம் மிகவும் முக்கியம். விடியற்காலையில் படிக்க உட்கார்ந்தால் கடினமான பாடங்களையும் என்னால் சுலபமாக படிக்க முடியும். இதுபோல ஒவ்வொருவருக்கு ஒரு நேரம் சவுகரியமானதாக இருக்கும்.

பிரிலிம்ஸ் தேர்வுக்காக மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கேள்வி-பதிலை படித்திருப்பேன். மெயின்ஸ் கேள்விகளுக்கான பதில்களைப் பல நூல்களில் படித்துத் தொகுத்தேன். உதாரணமாக ஒரு நூலில் வரைபடம் நன்றாக இருக்கும் மற்றொன்றில் விளக்கம் சரியாக இருக்கும். இப்படி அனைத்தையும் தொகுத்து பதிலைத் தயார் செய்தேன்.

இந்தப் பயிற்சியில் முக்கியமாக நண்பர்களுடன் செய்த குழு கலந்துரையாடல் அதிகமாக உதவியது. எனக்கு அமைந்த நண்பர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது யூ.பி.எஸ்.சி. முடித்து பணியில் உள்ளனர். அமைந்தார்கள் என்பது மட்டுமல்லாமல் நான் லட்சியம்மிக்கவர்களோடு நட்பு வளர்த்தேன் எனவும் சொல்ல நினைக்கிறேன்.

- விஜயேந்திர பாண்டியனை, தொடர்பு கொள்ள : vijayias23@yahoo.co.in

 

வெள்ளி, 10 ஜூன், 2016

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர SET/NET தகுதித்தேர்வு கட்டாயம்.

அதற்குள் விழிப்போம்......


இது நடந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருக்கும். சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் கொஞ்சம் மக்கள் ஏறினார்கள். மத்திய வயதுடைய ஒரு பெண் எனது இருக்கை அருகே வந்து நின்றார். பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துனர் இவர் அருகே வந்தார்.

'எங்க போகணும்?'

'உளுந்தூர்பேட்டை'

'எத்தன?'

'வெறும் ஆயிரத்தி நூத்திப் பத்துதாம்பா'

'என்னம்மா, என்ன பேசற நீ. பிரவேட்காரன் திட்டுற அளவுக்கு ஏத்தினாலும் 110 டிக்கட் கூட ஏத்த முடியாது. அவ்ளோ ஏன், உங்க ஊருக்கான காசுக்கு ஏங்கிட்ட 200 டிக்கட்கூட தேறாது. நான் எப்படி ஆயிரத்தி நூத்திப் பத்து டிக்கட் தருவேன்.'

'அய்யோ, ஒரு டிக்கட்தாம்பா. அத்தனைய வாங்கிட்டு போய் நான் வென்ன வறுத்தா தின்னப் போறேன்,' என்று நிதானத்துக்கு வந்தார். 'லட்ச லட்சமா கொட்டி படிக்க வச்சா இந்த எடுபட்ட பயப்புள்ள ஒன்னுத்துக்கும் ஒதவாத ஆயிரத்தி நூத்தி பத்து மார்க்கு எடுத்திருக்கு' என்றவாறே கிட்டத்தட்ட உளுந்தூர்பேட்டை வரும்வரைக்கும் பிள்ளையை வறுத்துக் கொண்டே வந்தார்.

 
 

லட்ச லட்சமாய் செலவு செய்து ஏதோ ஒரு பெரிய பள்ளியில் தனது மகனை சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். அவன் அப்போது நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண் பெற்றிருக்கிறான். இந்தத் தாய் ஆயிரத்தி நூற்றி தொண்ணூறு மதிப்பெண்ணாவது தனது பிள்ளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பைவிட குறைந்து போகவே இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டாது என்பதை கேட்டறிந்திருக்கிறார். அதுதான் பேருந்தில் நடத்துனர் பயணச்சீட்டு எத்தனை என்று கேட்டாலும் பிள்ளை பெற்ற மதிப்பெண்ணை உளறுகிற நிலைக்கு வந்திருக்கிறார்.

இப்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

  1. முதலில் ஆயிரத்தி நூற்றி பத்து என்பது அந்தத் தாய் இந்த அளவிற்கு புலம்புமளவிற்கு குறைந்த மதிப்பெண்தானா?

  2. காசக் கொட்டி ஏதோ ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால் பிள்ளை தான் விரும்பும் மதிப்பெண் எடுத்துவிட வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு நியாயம்தானா?

  3. ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணே குறைவு என்பதாக ஏற்பட்டிருக்கக்கூடிய பொதுப்புத்தி எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண். ஆக, அந்தக் குழந்தை ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறான். ஆயிரத்தி நூற்றி பத்து என்பது 92.5 விழுக்காடு வருகிறது. அதுவும் கட் ஆஃப் பாடங்களில் அந்தக் குழந்தையின் மதிப்பெண் சதவிகிதம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.

நிச்சயமாக இது அந்தப் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டிய அளவிற்கு உரிய மதிப்பெண்தான். இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கும் பிள்ளையைக் கொண்டாட மறுப்பதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் இதை குறை சொல்லுவதை கண்டிப்பாக குற்றமாகக் கொள்ள வேண்டும். தொண்ணூற்றி மூன்று விழுக்காடு மதிப்பெண்ணை அவ்வளவாக படிக்காத ஒரு தாய் குறைவென்று பொதுவெளியில் சொல்லுமளவிற்கு பொதுநிலை வந்திருப்பது கல்வி சிறந்து செழித்து வளர்ந்திருப்பதன் அடையாளம் அல்ல.

 
 

பொதுவாகவே தனது குழந்தையை எந்தத் தாயும் இது விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் தனது மகன் பெற்ற மதிப்பெண்ணோடு கொஞ்சம் சேர்த்து சொல்வார். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்தான் பெற்றேன். ஆனால் என் அம்மா எங்கள் தெருவில் உள்ளவர்களிடம் நான் எழுநூற்றி ஐம்பது பெற்றதாக சொல்லி பெருமை பட்டுக் கொண்டார். அப்படியே சொல்ல வேண்டும் என்று என்னிடமும் அப்பாவிடமும் கூறினார். அப்பாவிற்கு அதில் எல்லாம் உடன்பாடில்லை. அதில் எனக்குத்தான் பெரிய சிக்கல். யாரேனும் என்னப்பா மார்க்கு என்றால் எதை சொல்வது என்று குழம்புவேன். அறுநூற்றி எழுபத்தி ஐந்து என்று உண்மையை சொன்னால் 'ஏம்பா அம்மா ஏதோ எழுநூற்றி ஐம்பதுன்னு சொல்லுது நீ அறுநூத்தி எழுபத்தஞ்சுங்கற' என்பார்கள். எழுநூற்றி ஐம்பது என்றால் சிலர் ,'ஏம்பா உங்கப்பா அறுநூத்தி எழுபத்தி அஞ்சுங்கறாரு, நீ என்னடான்னா எழுநூத்தி ஐம்பதுங்கற' என்பார்கள். ஒருகட்டத்தில் என் மதிப்பெண் எது என்பதில் எனக்கே குழப்பம் வந்துவிட்டது.

ஆனால் அறுநூத்தி எழுபத்தி ஐந்தே மிகக் கௌரவமான மதிப்பெண்ணாகவே கொள்ளப்பட்டது. ஏன் இந்தத் தாய் இப்படிப் புலம்புகிறார். நான் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்ணிற்கு அந்தக் காலத்தில் எளிதாக கல்லூரியில் இடம் கிடைத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆயிரத்து முப்பது மதிப்பெண் பெற்ற எனது மனைவியின் அக்கா பெண்ணிற்கு இளங்கலை ஆங்கில இலக்கியம் கிடைப்பதில் பெருமளவு சிரமம் இருந்தது.

இதை இப்படிப் பார்ப்போம். அந்தக் காலத்தில் 175 மதிப்பெண் கட் ஆஃப் இருந்தால் மருத்துவம் கிடைத்தது. இப்போது 198 ற்கு கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. ஆக, 175 கட் ஆஃப்பிற்கு கிடைத்த மருத்துவ படிப்பு இப்போது 199 ற்கு கிடைக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்த தங்கம் இப்போது இருபத்தி ஆறாயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலையும் ஏறியிருக்கிறது கல்லூரிக்கான கட் ஆஃப் கூடியிருக்கிறது. இதை இப்படியாக பொருத்திப் பார்க்கிற அளவிற்கு போயிருப்பதே கூட கல்வி சந்தை பட்டிருப்பதன் அடையாளம்தான்.

 
 

'லட்ச லட்சமா காசக் கொட்டி நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டோம்' என்கிற பொதுப் புலம்பல் 'எது இவர்கள் பள்ளியில் நல்ல பள்ளி?' என்ற ஒரு கேள்வியை நம் முன்னே வைக்கிறது.

'என் பள்ளி ஒருபோதும் என் கல்வியில் தலையிடாதவாறு நான் பார்த்துக் கொண்டேன்' என்று ஒரு முறை மார்க் ட்வைன் கூறினார். இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு அபத்தமான கூற்றாகத் தெரியும். கல்வியைக் கொடுப்பதே பள்ளிதானே? அது எப்படி ஒரு குழந்தையின் கல்வியில் தலையிடாமல் இருக்க முடியும்? என்று தோன்றும். உண்மையில் ஒரு நல்ல பள்ளி என்பது கல்வியைக் கொடுக்கக் கூடாது. மாறாக குழந்தை தனது கல்வியை எடுத்துக் கொள்வதற்குரிய சூழலை வாய்ப்புகளை அது அந்தக் குழந்தைக்கு கொடுக்கும்.

இந்த மோசமான மாற்றம் எப்படி தொடங்கியது எனில் பாடத் திட்டம்தான் கல்வி. அந்தப் பாடத் திட்டத்தில் தேறுவதான் தேர்ச்சி. இதை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்று எந்தப் புள்ளியில் தொடங்கியதோ அந்தப் புள்ளியில் மத்திப்பெண்ணே கல்வியின் அளவுகோளாக மாறியது.

நான் துவக்கப் பள்ளியில் படிக்கிறபோது பாடப் புத்தகங்கள் ஒரே மாதிரி இல்லை. தனியார் தயாரித்த பாடப் புத்தகங்கள் இருந்தன. அப்போது மாவட்டத்திற்கு மாவட்டம் புத்தகம் மாறும். உள்ளூர் குறித்த பாடங்கள் அவற்றில் நிறைந்திருந்தன. என் கிராமம் பற்றிய வரலாறு மற்றும் புவியியல் சார்ந்து என்னால் படிக்க முடிந்தது.

அந்தக் காலத்தில் கல்வியின் விளைவாக ஒழுக்கமும் பண்பாடும் எதிர்பார்க்கப்பட்டது. 'படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோன்னு போவான்' என்று பாரதி சொன்னான். பாவம் செய்யாமை படித்தவன் அடையாளமாக இருந்த காலம் மாறி காரும், நகையும், ஏசியோடு கூடிய பங்களாவும், மின்ணனு சாதனங்களுமே படித்தவனின் அடையாளமாகிப் போயின.

'சமச்சீர் கல்வி' என்பதுகூட ஒரே பாடப்புத்தகத்தை படிப்பது என்று சுருங்கிப் போனது. கல்வி பொதுப் படவேண்டும். அது சமப்பட வேண்டும். ஆனால் அது மண் சார்ந்தும் (NATIVITY) படைப்புத் திறன் (CREATIVITI) சார்ந்தும் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவிற்கான சமச்சீருக்கே இந்த அளவிற்கு போராட வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலில் எந்தப் பள்ளி பொதுத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறதோ அந்தப் பள்ளி நல்ல பள்ளியாக கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியை நோக்கி பெற்ரோர்கள் குவியத் தொடங்கினார்கள். இது ஒருவிதமான போட்டியை பள்ளிகளுக்கிடையே ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போட்டியானது நல்லதை சொல்லித் தருவதில் ஏற்படவில்லை. எதை சொல்லிக் கொடுத்தால் எல்லோரையும் தேர்ச்சிபெற வைக்க முடியும் என்று பள்ளிகள் யோசிக்க ஆரம்பித்தன. போட்டி அதிகரித்த பொழுது எதைமட்டும் சொல்லிக் கொடுத்தால் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் கல்வி தனது மேன்மையான சுயத்தை இழக்க ஆரம்பித்தது.

ஒருகட்டத்தில் ஏறத்தாழ எல்லாப் பள்ளிகளும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி விழுக்காடு கொடுக்க ஆரம்பித்தவுடன், அவர்களது கவனம் மதிப்பெண்ணில் விழுந்தது. இங்கும் அவர்களது சூத்திரம் ஒன்றாகவே இருந்தது. எவற்றை மட்டும் நடத்தினால் நூறு விழுக்காடு தேர்ச்சி சதவிகிதம் என்பது மாறி, எதை மட்டும் நடத்தினால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள்.

இப்போதுதான் ப்ளூப்ரிண்ட் (BLUE PRINT) மாணவர்களிடம் புழக்கத்திற்கு வந்தது. இப்போது அதை வகுப்பறை சுவர்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவே போடுகிறார்கள். இப்போது மதிப்பெண் இல்லாத பாடத்தை படிக்கிற மாணவர்களை 'ஏண்டா தேவையில்லாதத்யெல்லாம் படிக்கிற' என்று கோவைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதற்காக பிள்ளைகளை கடிந்து கொள்கிறார்கள். சிலர் தண்டனையே தருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் 'எங்கள் பள்ளியில் இருந்து இத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும், பொரியியல் படிப்பிற்கும் சேர்ந்திருக்கிறார்கள்' என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தினார்கள். இத்தகைய விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண் மீதிருந்த கவர்ச்சியை மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அப்புறப்படுத்தின. மருத்துவம் படிக்க ஆசைப்படுபவனுக்கு ஏன் கணிதத்தை படிக்க வைத்துக் கொண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் எண்பது மதிப்பெண் அளவிற்கு தயார் செய்துவிட்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் இருநூறுக்கு இருநூறு எடுக்குமாறு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ 900 மதிப்பெண்களுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற ஒரு குழந்தை முதல் கட்ட நேர்காணலிலேயே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க முடிந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவள் 600 மதிப்பெண் எடுத்திருந்தாள். மற்ற மூன்று பாடங்களிலும் அவள் 300 கும் குறைவாகவே எடுத்திருந்தாள்.

புத்திசாலித்தனமாகப் பார்க்கப்படும் இந்தப் போக்கு கல்வியை வெகுவாக சீரழிக்கும். கல்வியை வெகுவானதொரு சூதாட்டமாக கொண்டு சேர்க்கும். இது எதிர்கால சமூகத்தை பாழ்படுத்தும்.

அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தன. இப்போது அவர்களும் இந்த சூத்திரத்தை முடிந்த அளவு கைகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர்30 என்கிற பள்ளிகளை மாவட்ட ஆட்சியர்களே பல மாவட்டங்களில் ஆரம்பித்து விட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களுக்கு தனியாக வசதிகள் செய்து தந்து அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களிலிருந்து மதிப்பெண் பெருவதை மட்டுமே சொல்லித் தருகிறார்கள்.

ஒரு தவறுக்கு தீர்வாக அதே தவறு என்பது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.

ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணை குறைவென்று ஏசத் தொடங்கியிருக்கிறார்கள் பெற்றோர். இந்த நிலை தொடர்ந்தால் இந்த மதிப்பெண்ணிற்காக மாணவர்களை தண்டிக்கத் தொடங்குவார்கள்.

இப்போது வியப்பாகக் கூட இருக்கலாம். நடக்காது என்று சொல்வதிற்கில்லை. இதே சூழல் நீடிக்குமானால் ஒரு காலத்தில் ஆயிரத்தி நூற்றி எழுபது மதிப்பெண் எடுத்த தனது குழந்தையை மதிப்பெண் குறைவென்று அவனது தாயே கொலை செய்யக்கூடும்.

அதற்குள் விழிப்போம்.