புதன், 14 டிசம்பர், 2016

படிப்பது எப்படி?


மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர், பெற்றோர் எனச் சகல தரப்பிலும், நினைவாற்றல் திறன் தொடர்பான தவறான புரிதல்களும் ஐயங்களும் நிலவுகின்றன. பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் இருந்து மாணவர்களின் நினைவாற்றல் தகராறு தொடங்குகிறது. பாடக் கருத்துகளை உள்வாங்காமல், அவற்றை அப்படியே மனப்பாடம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது படிப்பது, நினைவில் இருத்துவது, தேர்வில் அவற்றை நினைவுகூர்வது என எல்லா இடங்களிலும் சிரமத்தையே உண்டாக்கும்.

சுலபமான வழி

'மைன்ட் மேப்பிங்' எனப்படும் 'மன வரைபட'த்தின் அடிப்படையில் படிப்பது நமது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் இருந்தாலும், அதனை மாணவர்கள் முறையாக பின்பற்றுவது இல்லை. 'சிலந்தி வலைப் படம்' என்ற பெயரில் நமது மூதாதையர்கள் பயன்படுத்திய நுட்பமே தற்போதைய மன வரைபடத்தின் அடிப்படை.

இம்முறையில் பாடப்பொருளைப் புரிந்துகொண்டு, முக்கிய வார்த்தைப் பிரயோகங்களை மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்ய வேண்டாம். தேர்வுத் தாளைத் திருத்துபர்களுக்கும் இந்தப் பிரதான வார்த்தைப் பிரயோகங்களே தேவை. இம்முறையினால் பாடப்பொருளினைப் புரிந்துகொள்வது முதல் திருப்புதல் மேற்கொள்வது வரை அனைத்தும் சுலபமாகவும், நேர விரயமின்றியும் சாத்தியமாகும்.

இன்றே இப்பொழுதே

பாடங்களைப் படிப்பதற்கு என்று தனியாக நாள் கிடையாது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்துவதற்கு முன்பிருந்தே மாணவர்கள் பாடப்பொருளை வாசிக்கத் தொடங்குவது நல்லது. அடுத்த நாள் நடத்தப்போகும் பாடத்தை முன்தினமே ஒரு முறை வாசிப்பது,

புரியாத இடங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுவது, முந்தைய வருடங்களில் அந்தப் பாடக் கருத்தினை ஒட்டிக் கற்றதை அசை போடுவது போன்றவை பிற்பாடு படிக்கும் சிரமத்தைப் பாதியாகக் குறைக்கும். தயார் நிலையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவருக்கு ஆசிரியர் நடத்தும் பாடக் கருத்துகள், மற்ற மாணவர்களைவிட அதிகமாகவும் விரைவாகவும் புரியும். ஐயங்களைப் போக்கிக்கொள்ளவும் இந்தத் தயார் நிலையே உதவும்.

ஆகவே, பாடங்களைப் படிப்பதற்கு எனத் தனியாக நேரத்தை ஒதுக்குவதோ ஒத்திப்போடுவதோ கூடாது. இன்றே இப்போதே என முழு தயார் நிலையில் கற்றல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நூற்றுக்கு நூறு எதிர்பார்க்கும் மாணவர்கள் மட்டுமன்றி, அனைவருமே உடலை வருத்தாமல், பரீட்சை பயமின்றிப் படிப்பதற்கு இம்முறையே கைகொடுக்கும்.

படிப்பது எப்படி?

பாடங்களை முதல் முறை மட்டுமே முழுமையாகப் படித்தால் போதும். அடுத்த தடவைகளில் 'கீ வேர்ட்ஸ்' எனப்படும் பாடப்பொருளின் பிரத்யேக வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு விரைவாகப் படிக்கலாம். படிக்கும் இடம் அதற்கென வழக்கமாக அமரும் இடமாக இருக்க வேண்டும், போதிய காற்றோட்டம், வெளிச்சம் ஆகிய வசதிகளுடன், தேவையான பாட உபகரணங்களை அருகில் வைத்துக்கொண்டு படிப்பைத் தொடங்கலாம்.

நினைவுத் திறன் அடிப்படையில் ஒரு பாடத் தலைப்பைப் படிப்பது என்பதை 5 நிலைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். பாடம் நடத்தும்போது கவனிப்பது, அவற்றை அன்றைய தினமோ, 24 மணி நேரத்திற்குள்ளாகவோ விரிவாகப் படித்துவிடுவது, அடுத்து வரும் 3 நாட்கள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதத்திற்குள் அதே பாடத்தைக் குறுகிய அவகாசத்தில் ஒருமுறை படிப்பது ஆகியவையே இந்த 5 நிலைகளாகும். மனிதரின் நினைவுத் திறன் மற்றும் மறதியின் வேகம் தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படிப் பாடங்களைப் படிப்பது, அவற்றைப் பிற்பாடு நினைவிலிருந்து மீட்கச் சிறப்பாக உதவுகிறது.

நிரந்தர நினைவுக்கு

இந்த 5 நிலைகளில் படிப்பதுடன் சரியான திருப்புதல்களை மேற்கொள்ளும்போது பாடப்பொருள் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவுக்குச் செல்லும். இதற்கு வார இறுதிகளில் அல்லது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மிகக் குறைவான அவகாசத்தில் அவற்றைத் திருப்புதல் மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, உறங்கச்செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு பாடத் தலைப்பினை 'கீ வேர்ட்' அடிப்படையில் நினைவிலிருந்து திருப்புதல் மேற்கொண்டால், மனதில் பாடக் கருத்துகள் ஆழமாகப் பதியும். நாம் உறங்கிய பிறகும் மூளையானது அப்பாடக் கருத்துகளையே ஆராயும் என்்பதால், கடினப் பகுதிகள் என கருதிய பாடங்கள்கூடப் பிறகு சுலபமானதாகத் தோன்றும்.

களைப்பின்றிப் படிக்க

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பதற்கு, படித்ததை எழுதிப் பார்ப்பதற்கு என நாளில் அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அடிக்கடி களைப்பாக உணர்வார்கள். சரியான உத்திகளைப் பின்பற்றினால் இந்தக் களைப்பினை எளிதாகக் களையலாம். ஒரு மணி நேரத்தில் சேர்ந்தாற்போல 50 நிமிடங்கள் மட்டுமே படிக்கலாம். அடுத்த 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். அல்லது பிற பணிகளைப் பார்க்கலாம். இதே போல 2 முறை எனத் தொடர்ந்தாற்போல 2 மணி நேரம் படிக்கலாம். இதன் பிறகு 30 நிமிட இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் சிற்றுணவு, சிறு நடை, மூச்சுப் பயிற்சி ஆகியவை ஆசுவாசம் தரும். 50 நிமிடங்கள் படிப்பதையும் இரண்டாகப் பிரித்துக்கொண்டு, அவற்றுக்குள் ஒன்றிரண்டு நிமிடங்கள் இடைவெளி தரலாம். இந்த இடைவெளியில் அதுவரை படித்ததைத் திருப்பிப் பார்ப்பது, வெளியிலிருக்கும் மரம் போன்ற பசுமையானவற்றைப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யலாம். இந்த நடைமுறைகள் அலுப்பு சலிப்பின்றி மாணவர்கள் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு உதவும்.


 

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – 1


16DFR_KANNAKI3_1894936g32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–


அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
"பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்"
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
"நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்" — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்'
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–

திங்கள், 12 டிசம்பர், 2016

யவனர் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:

யவனர் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:

1.இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற்கொளீஇ
(பதிற்றுப் பத்து பதிகம், இரண்டாம் பத்து, குமட்டூர்க் கண்ணனார்)

2.வன்சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்
(நடுநற்காதையில் மாடலன் சொன்னது, சிலப்பதிகாரம்)

3.கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
(அகநானூறு, 149: எருக்காட்டுத் தாயங்கண்ணனார்)

4.யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
(யவனர் கொணர்ந்த மதுபானம் பற்றி மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; புற நானூறு பாடல் 56)

5.கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறுமீனின் பையத் தோன்றும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும் பாணாற்றுப் படை, வரி 316—319)

6.மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புணை மான் நல் இல்
திருமணி விளக்கம் காட்டி
(நப்பூதனார் பாடிய முல்லைப் பாட்டு, வரி 61-64)

சாதனையால் கிண்டலுக்குப் பதிலடி!


பலர் கிண்டலடித்தபோது, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஐ.சி.எல்.எஸ். எனும் இந்தியப் பெருநிறுவனச் சட்டப்பணி (Indian Corporate Law Service) பெற்றுள்ளார் சி.எம்.கார்ல் மார்க்ஸ். 2009 பேட்ச் அதிகாரியான இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலப் பதிவாளராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன் சென்னையின் நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தின் உதவிப் பதிவாளராகவும் பிறகு துணைப் பதிவாளராகவும் பணி செய்தார். அப்போது புதுச்சேரி மாநிலப் பொறுப்பு பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

மதுரையைச் சேர்ந்த மார்க்ஸ் தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைப் படித்தார். இவருடைய தந்தை சி.மதிசேகரன், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேற்படிப்பில் ஜவுளிப் பிரிவில் பிடெக் தேர்ந்தெடுத்தார் மார்க்ஸ். இதன் இறுதி ஆண்டில் துறையின் தலைவர் ஒரு முறை வகுப்பில் மாணவர்களிடம் "அடுத்து என்ன படிக்க விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போது பலரும் கேட், எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ. என்றபோது, மார்க்ஸ் மட்டும் ஐ.ஏ.எஸ். எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்டு துறைத் தலைவர் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். தன்னைக் கிண்டலடித்தவர்களிடம் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதைச் சவாலாக எடுத்துக்கொண்ட மார்க்ஸ், யூ.பி.எஸ்.சி. தேர்வை வெல்வதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக 2003-ம் ஆண்டு முதல் எடுத்த ஆறு முயற்சிகளின் இறுதியில் ஐ.சி.எல்.எஸ். பெற்றிருக்கிறார்.

"எனக்கும் சில ஆசைகள் உண்டு என்பதை ஏற்காமல் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கிண்டலடித்தார்கள். இது உன்னால் முடியுமா என யாராவது கிண்டலடித்தால் அதைக் கண்டிப்பாகச் செய்து காட்டும் குணம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு. இதைப் பல விஷயங்களில் செய்து காட்டிய நான் யு.பி.எஸ்.சி.யிலும் வெற்றி பெற்றேன். எனது விருப்பத்தின்படி ஐ.சி.எல்.எஸ். அறிமுகப்படுத்தி அதன் முதல் பேட்ச் வெற்றியாளராகத் தேர்வு பெற்றேன். 2002-ல் பிடெக் முடித்தவுடன் யூ.பி.எஸ்.சி.க்கு எப்படித் தயாராவது என்பது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் முதல் முயற்சி செய்தேன்.

அடுத்த முயற்சியின்போது, யூ.பி.எஸ்.சி. எழுதி நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்த அன்பழகன் என் உறவினர் மூலம் அறிமுகமானார். தற்போது சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் 2003 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வழிகாட்டுதல் என் வெற்றிக்கு உதவியது. எனது விருப்பப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தையும் புவியியலையும் எடுத்திருந்தேன். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புவியியலுக்கு மட்டும் பயிற்சி பெற்றேன். இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் அளித்த ஆக்கமும், ஊக்கமும் எனது வெற்றிக்கு அடித்தளமிட்டன" என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

வெற்றிக்காக எடுத்த முயற்சிகள்

கார்ல் மார்க்ஸுக்கு முதல் முயற்சியில் முதல் நிலையும் அடுத்த மூன்று முயற்சிகளில் இரண்டாம் நிலைத் தேர்வும் வெல்ல முடியவில்லை. இதன் பிறகு, தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் குரூப் 1 எழுதியமையால் ஒரு வருடம் இடைவெளி விட்டிருக்கிறார். குரூப்-1-ல் தேற முடியாவிட்டாலும் வங்கித் தேர்வில் உதவியாளர் பணி கிடைத்துள்ளது. இதைச் செய்தவாறே, ஆறாவதாக யூ.பி.எஸ்.சி.க்கு 2009-ல் எடுத்த முயற்சி ஐ.சி.எல்.எஸ். பெற்றுத் தந்துள்ளது. இதற்கான பயிற்சி முடித்துப் பணி செய்தவாறே ஏழாவதாக ஒரு முயற்சி செய்துள்ளார்.

இந்தக் கடைசி முயற்சியின்போது 2011-ல் மார்க்ஸுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மணமுடித்த பின் படிக்க முடியாது என்று சொன்ன தன் மனைவியிடம் சவால்விட்டு, மீதமிருந்த கடைசி முயற்சியை எடுத்து வென்றிருக்கிறார். இதில் ஐ.ஏ.ஏ.எஸ். (Indian Auditing and Accounts Service) கிடைத்துள்ளது. ஆனால், ஐ.சி.எல்.எஸ்.ஸில் இருவருடம் முடிந்துவிட்டதால் அதை மறுத்துத் தன் பணியில் தொடர்ந்திருக்கிறார்.

தோல்விக்கான காரணங்கள்

"ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைத்தால் மற்றொன்றில் குறைந்துவிடும். நான் ஒரே பாடத்தை அதிகமான ஆர்வத்துடன் படித்தது ஒரு குறை. நேர்முகத்தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்காகத் தேர்வாளர்களுடன் அநாவசியமாக விவாதிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளானது பெரிய தவறாகப் போனது. மற்றொன்றில் எனது அனுபவத்தில் இல்லாத கேள்விகளாக இருந்தமையால் பதில் அளிக்க முடியாமல் போனது. ஆங்கிலத்தில் பேசும் திறன் சற்றுக் குறைவாக இருந்ததும் காரணம்தான். இத்தனைக்கும் தொடக்கத்தில் பதிலளிக்கத் திணறிய எனக்குத் தேர்வாளர்களில் சிலர், நான் கூற விரும்புவதைப் புரிந்து கோடிகாட்டவும் செய்தார்கள்" எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் மார்க்ஸ்.

ஐ.சி.எல்.எஸ். பணியின் செயல்பாடு

யூ.பி.எஸ்.சி.யின் 24 பதவிகளில் ஒன்றாகக் கடந்த 2009 முதல் ஐ.சி.எல்.எஸ். புதிதாக இணைக்கப்பட்டது. மத்தியப் பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் நிறுவனங்கள் பதிவு அலுவலகம் (Registrer of Companies) செயல்படுகிறது. இவர்களின் அலுவலகத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்படும். இதைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும் ஐ.சி.எல்.எஸ். அதிகாரிகளின் பணியாகும்.

இதன் மீதான பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதும் இந்த அதிகாரிகள்தான். பெருநிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்படும்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கடன் தந்தவர்களுக்குச் சரிவிகிதமாகப் பிரித்தளிக்கும் பணியும் இவர்களுடையதே. மிகவும் நுணுக்கமான இந்தப் பணியில் செபி, சி.பி.ஐ., போலீஸ், ரிசர்வ் வங்கி ஆகிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இந்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸில் இருக்கும் அளவுக்குப் பணிச்சுமையும் அரசியல் தலையீடும் இல்லாதது ஐ.சி.எல்.எஸ். இதில், சுமார் 10 வருட அனுபவத்துக்குப் பின் ஒரு மாநிலத்தின் தலைமைப் பதவியைப் பெற்றுவிட முடியும்.

 - மார்க்ஸ்

புதியவர்களுக்கான யோசனை

"யூ.பி.எஸ்.சி. வெல்வது மிகவும் எளிது. இதற்காக முடிந்தால் கடினமாக உழைத்துப் படியுங்கள். இல்லை எனில், பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தாலே மூளையில் பதிந்துவிடும். இது என் சொந்த அனுபவம். நாம் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல லட்சியம் கொள்வது அவசியம். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற நாம் வாழும் சூழல், பணியாற்றும் சூழல் குறித்த முழுமையான அறிதல் அவசியம். ஏனெனில், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் தொடர்பானதாகவே நேர்முகத் தேர்வின் கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன." என யோசனை கூறுகிறார்.


ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!


சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநரான கல்லூரியில்…

விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, 'யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்' என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

பயிற்சி நிலையம் கட்டாயம் இல்லை

"முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் வென்றாலும் இரண்டாம்நிலை தேர்வில் வரலாறு பாடத்தில் சறுக்கினேன். மூன்றாவது முறை தமிழ் இலக்கியத்துடன் விருப்பப் பாடமாகப் புவியியலையும் எடுத்தபோது, இரண்டாம் நிலையில் வெற்றி கண்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றியை வெறும் 8 மதிப்பெண்களில் தவற விட்டேன். அப்போது மனம் உடைந்த எனக்கு சகோதரர் இரமேஷ் ஊக்கம் அளித்தார். அதே உத்வேகத்தில் முயற்சி செய்து ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனேன்" என்கிறார் சிவசுப்ரமணி.

யூ.பி.எஸ்.சி.க்கு முயற்சி செய்தபோது விருத்தாச்சலம், திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வேயில் வேலை செய்தார் சிவசுப்ரமணி. அப்போது யூ.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரான சுரேஷ்குமாரின் 'தன்னார்வ பயிலும் வட்டம்' பெரிதும் உதவியது.

'தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியும் என்றில்லை. இந்த தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களிடமும் சீனியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்டுதான் நான் தயாரானேன். பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்தாலும், முயற்சி செய்து ஆங்கில நூல்களையே படிப்பது நல்லது. தமிழில் படித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது கடினமானது. இதில், நேரமும் வீணாகும். நேர்முகத் தேர்வை சந்திக்க மாதிரிப் பயிற்சிகள் அவசியம்' என்கிறார் சிவசுப்ரமணி.

பணி அனுபவம்

மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா இருப்பதால் அங்கு பொறுப்பேற்கப் பொதுவாக அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஆனால் சிவசுப்ரமணி ஒடிசாவில் நியமிக்கப்பட்டபோது மகிழ்ந்தார். அவருடைய கறாரான நடவடிக்கையால் ஒடிசா காவல்துறையினர் 'கமாண்டர்' எனும் பட்டப்பெயரில் அழைக்கின்றனர். 'ஐ.பி.எஸ். பெறுவது வெற்றிக்கான அடிப்படையே தவிர முழுமையான வெற்றி அல்ல. இதில் சிறப்பாக செயலாற்றி மக்களுக்கு நற்பணிகள் செய்வதில்தான் உண்மையான வெற்றி உள்ளது' என்கிறார் சிவசுப்ரமணி.

நான் படித்தவை

# 'நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்' - இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

# முதல்நிலைக்காக:

6 முதல் பிளஸ் டூ வரையிலான என்.சி.இ.ஆர்.டி பாட நூல்கள்.

# பொது அறிவு:

The Hindu, Wizard and Civi#Service Chronicle.

# Tata Mcgraw Hil#and Unique guides.

இரண்டாம் நிலையில்

வரலாற்றுப் புத்தகங்கள்

# 'The Wonder that was India', A.L. Bhasham

# 'Advanced Study in the History of the Medieva#India', Vo#I, II and III, J.L. Mehta

# 'Modern India 1885-1947', Sumit Sarkar

# India's Struggle for Independence', Bipin Chandra

புவியியல் புத்தகங்கள்

# Physica Geography, Savindra singh

# Environmenta#Geography, Savindra Singh

# Human and Economic Geography, Goh ChengLeong and Gillian Clare Morgan

தமிழ் நூல்கள்

சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள்.