புதன், 4 டிசம்பர், 2013

நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிக்கல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட வழக்குகளை, 'பைசல்' செய்து முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை, சத்துணவு சாப்பிடும் மாணவருக்கு, நான்கு செட் சீருடை, நோட்டு புத்தகம், பாடப்புத்தகம், புத்தகப் பை, கல்வி உபகரணம், காலணி, நில வரைபடம், சைக்கிள், லேப்-டாப், சத்துணவு வழங்கல், சிறப்பு ஊக்கத்தொகை, கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் - சி..., மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறது. இந்நிலையில், இவர்கள், நீதிமன்ற வழக்கு, கிராம கல்விக் குழு, பெற்றோர் - ஆசிரியர் குழு, கல்வி மேலாண் வளர்ச்சிக் குழு, மாணவர் குழு மற்றும் சங்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். நீதிமன்ற விவகாரங்களை கையாளுவதற்காக, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியின் அலுவலகங்களில், தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

நிலுவை வழக்கு:

அதில், கல்வி அதிகாரிக்கு எதிராக ஆசிரியர் வழக்கு, ஆசிரியர் பணியின் பணப்பயன் தொடர்பான வழக்கு, பள்ளியின் சொத்துகளை அபகரித்துக் கொண்டவருக்கு எதிரான வழக்கு, பள்ளி வளாகத்தில் நடந்த விபத்துகள் தொடர்பான வழக்கு, மாணவரின் பெற்றோர், பள்ளியின் மீது தொடர்ந்த வழக்கு என்பது உள்ளிட்ட, பல்வேறு வகையான வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும், சில தீர்ப்புகள் அமல்படுத்தப்படாமல், மேல்முறையீடு, தடையாணை உள்ளிட்ட சட்டப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றன. அதனால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு, அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சம்பந்தப்பட்ட நபர் மூலம் தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால், மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர், உள்ளூர் குழுக்கள் மூலம், 'பைசல்' செய்ய வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்த்துக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு:

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில அளவில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், நூற்றுக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வழக்குகளை, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர், போலீஸ், தலைமையாசிரியர் ஆகியோரை ஒருங்கிணைத்து, வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதில், காலதாமதம் ஏற்படுகிறது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை, மாநில, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியும், ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்படுவதால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்ற வழக்குகளை கணக்கெடுத்து, சம்பந்தப்பட்டவருடன், பைசல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அவமதிப்பு வழக்குகளை உடனடியாக முடித்துக் கொடுக்க, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மே 4-இல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும். அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசு கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. இந்த 15 சதவீத இடங்களில் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுபோல் 2014-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2014 மே 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது.
இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுபவராகவோ அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவோ வேண்டும். 17 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
கடைசி தேதி:நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அத்தாட்சியை 2014 ஜனவரி 10-ம் தேதி ஆன்-லைனில் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் ரூ. 1,000 அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான அத்தாட்சியை 2014 பிப்ரவரி 5-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
ஒரே தாள்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு 180 கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, www.cbse.gov.in  மற்றும் www.aimpt.nic.in  ஆகிய இணையதளங்களை தொடர்புகொள்ளலாம்

60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "கெடு!

கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட, 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், சராசரியாக, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில், அதிகமான பள்ளிகள், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெறுகின்றன.கடந்த பொதுத்தேர்வில், 5,767 பள்ளிகளில், 329 பள்ளிகள், பத்தாம் வகுப்பில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன. 2,595 மேல்நிலைப் பள்ளிகளில், 288 பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன. இந்த, 617 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை உயர்த்தி காட்ட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை, கெடு விதித்துள்ளது. இலக்கை எட்டுவதற்காக, தலைமை ஆசிரியர் முதல், பாட ஆசிரியர் வரை, அனைவருக்கும், பேராசிரியர்களைக் கொண்டு, சிறப்பு பயிற்சியை, கல்வித் துறை அளித்து வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உதவியுடன், பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபடுகின்றன. இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களும், ஈடுபடுகின்றனர். மாணவர்களுக்கு, பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், முக்கிய பாடங்கள், திரும்ப திரும்ப, கேட்கப்படும் கேள்விகள், கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறைகள் குறித்தும், விளக்கப்படுகின்றன. இவ்வளவிற்குப் பிறகும், தேர்ச்சி அதிகரிக்கவில்லை எனில், முதல்கட்டமாக, தலைமை ஆசிரியர், "பலிகடா' ஆக்கப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிகளுக்கு, மாற்றப்படுவர். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவாவது, கடுமையாக உழைப்பதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.