புதன், 12 ஆகஸ்ட், 2015

சென்னையின் புதல்வர்:இணைய சாம்ராஜ்யத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) ஆக சுந்தர் பிச்சை!


சுந்தர் பிச்சை | கோப்புப் படம்: கமல் நரங்
சுந்தர் பிச்சை 

'இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா' என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்துவிட்டது.

கூகுள் சாம்ராஜ்யம்

எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இணைய உலகில் கூகுள் ஓர் அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.

அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) ஆக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்தபோது அவர் பிரபலமடைந்தார்.

ஆலமரமாய்…

சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர், ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது. பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.

ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.

விரியும் ஆதிக்கம்

சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது. ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.

சென்னையின் புதல்வர்

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ் "அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்" எனப் பாராட்டுகிறார்.

சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அடுத்த பாய்ச்சல்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இவை போன்ற தயாரிப்புகள் எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை இருக்கிறார்.

ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அழைக்கப்படும் சுந்தர் பிச்சை இப்போது சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்ட நிலையில், கூகுளின் அடுத்த பாய்ச்சல் நிச்சயம் மகத்தானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

 

50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது!


தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலை பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., ஆகிய திட்டங்களின் கீழ், மாத சம்பளம் தரப்படுகிறது.


இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடும். எனவே, ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதந்தோறும் சம்பளம் வழங்க, தனித்தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.


தற்போதைய நிலவரப்படி, பள்ளிக்கல்வி பணியாளரில், 1,764 பேர்; இளநிலை உதவியாளரில், 4,393 பேர்; ஆய்வக உதவியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 9ம் தேதி செய்தி வெளியானது.


இந்நிலையில், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்திலுள்ள பணி இடங்களை, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, நேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் வந்துள்ளது. இதனால், இனி, ஓர் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

 

ஆதார் அட்டை கட்டாயமில்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு


புதுடில்லி:'ஆதார்' அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்; அந்த அட்டை இருந்தால் தான், அரசின் நல உதவிகள் கிடைக்கும் என, கூறப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை, மூன்று நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதல் நீதிபதிகளை கொண்ட, 'பெஞ்ச்'சிற்கு வழக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என, நிர்ப்பந்திக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரம் கிடையாது:



'ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்' என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்திருந்த வழக்குகளை, நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே மற்றும் சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது.அதில், ஆதார் அடையாள அட்டை பெற, பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் என்ற மற்றொரு கேள்வி எழுந்தது.

அப்போது, 'பொதுமக்களின் தனித்தகவல்களை ரகசியம் காப்பது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை' என ஒருசாராரும், 'அது, அடிப்படை உரிமையல்ல' என, மற்றொரு சாராரும் வாதிட்டனர்.மேலும், 'அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, மூன்று நீதிபதிகளை கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு அதிகாரம் கிடையாது' என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ரகசியம் காப்பது:



இதையடுத்து, ஆதார் அனைவருக்கும் கட்டாயமா என்ற விவகாரத்தில் முடிவெடுக்கவும், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்யவும், தலைமை நீதிபதி தலைமையிலான, கூடுதல் நீதிபதிகளை கொண்ட பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவது என, மூன்று நீதிபதிகள் பெஞ்ச், நேற்று முடிவு செய்து உத்தரவிட்டது.இப்போது இந்த வழக்கு, தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு மாற்றப்பட்டுள்ளது; இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர்களை, தலைமை நீதிபதி விரைவில் அறிவிப்பார்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை:



மூன்று நீதிபதிகளை கொண்ட டிவிஷன் பெஞ்ச், முன்னதாக பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
* பொது வினியோக திட்டம், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் பெற மட்டுமே, ஆதார் அடையாள அட்டை மற்றும் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
*அரசின் பிற நலத்திட்ட உதவிகளை பெற, ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என, நிர்ப்பந்திக்க கூடாது.
* பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட, 'பயோமெட்ரிக்' விவரங்கள் மற்றும் பிற தகவல்களை, வேறு யாருக்கும் பகிரக் கூடாது.
* நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி, பொதுமக்களின் தகவல்கள் மற்றும் பிற குறிப்புகளை, குற்ற 
நடவடிக்கை விசாரணைக்கு எந்த அமைப்பினரும் பயன்படுத்தக் கூடாது.
* எனினும், ஆதார் தகவல் சேகரிப்பு பணிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை; தொடர்ந்து அப்பணி நடைபெறலாம்.இவ்வாறு, பெஞ்ச் உத்தரவிட்டது.

 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

களவும் மெய்ப்பாடும்

வடவர் திருமண முறை எட்டு; ஆனால் தமிழர் திருமண முறையோ களவின் வழி கற்பில் புகுவதாகும், ஊழ்வகையால் பிறவிதோறும் சேர்தல் என்ற நம்பிக்கையை உடையவர்கள் தமிழர்கள். எதிர்பட்டுக் களவில் ஒழுகும் தலைமக்களுக்குச் சில இயல்புகள் ஏற்படுவதாகவும், அத்தகைய இயல்புகளின் வழி அவர்களிடம் அவத்தைகள் அதாவது, மெய்ப்பாடுகள் ஏற்படுவதாகவும், தொல்காப்பியர் விளக்குகிறார். காதல் என்றால் அவத்தைத்தான், அதை தொல்காப்பியர் மெய்ப்பாடுகளாக கூறுகிறார். களவுக்காலத்தில் தலைமகளுக்கு ஒன்பது வகையான இயல்புகளும் தலைமகனுக்கு ஏழு வகையான இயல்புகளும் நிகழ்வதாக களவியலில் தொல்காப்பியர் அறிவிக்கிறார்.

மெய்ப்பாடு என்பது இலக்கியத்தில் வரும் போது மெய்ம்மைப் பாடாகிறது. மனித உணர்வு அருவம்; அதனைப் பருப்பொருட்டாக்கித் தர இலக்கியம் முயல்கிறது. மீண்டும் படிக்கும் உள்ளம் அதனை வாங்கிக் கொண்டு அருவமாகவே உணர்கிறது. மெய்ப்பட - உருப்பட - மெய்ம்மைப்படத் தோன்றிப் படிப்பவருக்குச் சென்று சேர்தற்கு உதவுதலால் இஃது மெய்ப்பாடு எனப்பட்டது.

(தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கை மெய்ப்பாடுகள். ப.53)

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும் (தொ.நூ.1460)

மெய்ப்பாடுகள் எட்டு என்றாலும், அவை விரியும் பொழுது 34 ஆகிறது. அவத்தைப் பத்தாகும். முதல் ஆறு அவத்தைகள் ஐந்திணைக்குரிய அவத்தைகளாகவும், ஏழாவது அவத்தை பெருந்திணைக்குரியதாகவும் எட்டாவது அவத்தை கைக்கிளைக்குரியதாகவும், ஒன்பதாவது மயக்கம், பத்தாவது சாக்காடாகவும் தொல்காப்பியர் கூறுகிறார். இனி களவில் தலைவியின் இயல்புகளைக் காண்போம்.

தலைவியின் இயல்புகள்

மாற்றம் என்பது மனிதத்தத்துவம். களவில் ஏற்படும் மாற்றம் மனிதனின் இயல்புகளில் குறிப்பிடத்தக்கது. பெருமையும் உரனும் ஆடுஉ மேன.... எனவும், அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்.... எனவும் கூறியவாறு உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றார் தொல்காப்பியர். அந்த வழியில் களவு மேற்கொள்ளும் தலைமகன் இயல்புகள் ஏழாகவும் தலைமகளின் இயல்புகள் ஒன்பதாகவும் கூறுகிறார். இவற்றை அவத்தை என்பர். அதில் தலைவியின் இயல்புகளாக

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அல்

சிறப்புடைய மரபின் அவை களவு என மொழிப (பொருள்.களவியல்.நூற்பா.9)

என்னும் நூற்பா மூலம் உரைக்கின்றார். களவு காலத்தில் தலைமகள், தன் சிந்தனை முழுவதும் தன் தலைவனையும் காதலையுமே நினைத்திருப்பாள். அதை ஒருதலை உள்ளுதல் என்றும்; தலைவனைப் பெற வேண்டும் என்ற வேட்கையும்; அவ்வாறு தொடர்ந்து காதலை எண்ணி நினைத்திருப்பதால் உணவு மறந்து உடம்பு மெலிதல்; உறங்காமையின் காரணமாக உளறுவது; சிந்தனையின் மயக்கத்தால் நாணத்தை மறத்தல், எதைக் கண்டாலும் தன் தலைவனின் அங்க அடையாளங்கள் போல் தோன்றல் பித்துப்பிடித்தது போல் இருத்தல்; மோகத்தின் காரணமாக மயக்கமாதல், எண்ணமெல்லாம் நிறைந்து சிந்தனையின் முடிவில் இறத்தல் போல்வன தலைவிக்கான களவுகால இயல்புகளாம். இந்த இயல்புகள் அவத்தைகள் என்று கொள்ளப்பட்டாலும் மெய்ப்பாட்டியலில் ஐந்திணைக் குரிய மெய்ப்பாடுகளைப் பத்து அவத்தைகளுள் ஆறு அவத்தைகளைத் தனியாக கூறுகிறார்.

களவின் அவத்கைள்

மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் முதலில் அகத்திணைக்கும், புறத்திணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகளைச் சொல்லி, பின் அகத்திற்கே உரியனவற்றை உணர்த்துகிறார். அவத்தைகளாகச் சொல்லும் பத்தில் பெண்பாலருக்கு உரியனவும் உள்ளன. ஆண் பாலுக்கும் உரியனவும் உள்ளன. களவியலில் தலைவியின் களவு கால இயல்புளைக் கூறிவிட்டு இங்கு அவளின் அவத்தைகளைச் சொல்கிறார். பத்து அவத்தைகளின் முதல் புணர்ச்சிக்குமுன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப்பின் நிகழும் மெய்ப்பாடுகள், களவிற்கும் கற்பிற்குமுரிய மெய்ப்பாடுகள் வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் கற்பிற்குரிய மெய்ப்பாடுகள் என விரித்துரைக்கின்றார்.

களவொழுக்கத்தில் பெண்களின் இயல்பு மாற்றங்கள் அவத்தைகளாகக் கொள்கிறார் தொல்காப்பியர். காதல் ஏற்பட்டால் தலைமகள் தன் காதலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்தாலே அவள் செயலாகயிருக்கும். அதன் நிமித்தமே அவள் இயல்புகள் மாறுகின்றன. தலைவனுக்கும் கூட தன் இயல்பு வெளிப்படாவண்ணம் அவள் நடந்துகொள்வாள். தொல்காப்பியர் இந்த நிகழ்வுகளையே முதல் அவத்தையாகக் கூறுகிறார். அதை,

"புகுமுக புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க் கின்மையொடு"

(தொல்.மெய்.நூ.257) என வரும் நூற்பா விளக்கும்.

அடுத்து, தலைமகள் காதலின் காரணத்தால் தன் அழகை மேன்படுத்துவாள். எதைச் செய்தாலும் நன்றாகயிருக்கவேண்டும். என்பதற்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வாள். கூந்தலை வரிப்பதும் கட்டுவதும் காதணிகளைக் களைவதும் அணிவதும், முறையாக அணிந்துள்ள அணிகளைச் சரிபார்ப்பதும், ஆடையைக் குலைந்து உடுத்தலுமாகிய செயல்களில் ஈடுபடுவாள். இதை தலைவியின் இரண்டாம் அவத்தையாகக் கூறுகிறார். இரண்டாம் அவத்தையின் கண்ணும் நேரில் தலைவனைப் பார்க்காவிடத்து அவள் செய்யும் செயல்களைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். இதை,

கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்ந்து உடுத்தல்..... (தொல்.மெய்.258)
 என்ற நூற்பா விளங்கும்.

இனி, நேரில் தலைமகனைப் பார்த்தவிடத்து அவள் செய்யும் செயல்களை,

அல்குல், தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு...... (தொல்.மெய்.நூ.259)

என்னும் நூற்பா வழி உணர்த்துகிறார். தனது இல்லத்தின் பெருமைகளைப் பேசி அவள் செய்யும் செய்கைகளை இவ்விடம் காணலாம். தலைமகனும் தலைமகளும் சந்திக்குமிடத்தில் இவை நிகழும் என தொல்வழி அறியலாம்.

மேற்கண்ட மூன்று கட்ட அவத்தைகளும் தலைவனோடு புணர்த்தலுக்கு முன் நடக்கும் அவத்தைகளாம்.

புணர்ச்சிக்குப்பின் தலைமகளிடத்தில் காணும் அவத்தைகளைப் பின் விளக்குகிறார். அதில் இடந்தலைப்பாடு காரணமாக தலைமகள் அலருக்கு நாணுதல் போன்ற செயல்களைக் காணலாம்.

பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் (தொல்.மெய்.நூ.260)
கொடுப்பவை கோடல்....

என்ற நூற்பா அவற்றை விளக்கும்.

ஐந்தாம், அவத்தையாக, காதலின் காரணமாக தலைமகனையே எந்தநேரமும், நினைத்திருப்பதால் தலைமகளானவள் தன் விளையாட்டை மறக்கிறாள். அலர் காரணமாக தலைவனை மறைவாக காணுதல் தலைமகனைக் காணாதவிடத்து உள்ள சோகத்தை அவனை கண்டவுடன் மறத்தல் பன்முறை ஆராய்ந்து புணர்ச்சிக்கு உடன்படல் போல்வனற்றைத் தொல்காப்பியர் கூறுகிறார். இதை,

தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தல்.... (தொல்.மெய்.நூ.261)

தலைமகன் மேல் கொண்ட மிகுந்த காதலால் தலைமகனின் கோலம் அழித்தலோடு, தன் கோலத்தையும் அழித்துக்கொள்ளுதல், அலரின் காரணமாக, தலைமகள் தலைமகனைச் சந்தேகப்பட்டுக் கலக்கமுற்றுக் கூறல் போல்வனவற்றை,

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்....... (தொல்.மெய்.நூ.262)

என்ற நூற்பா கூறுகிறது. இவை ஆறாம் அவத்தையாம்.

அடுத்து வருகின்ற அவத்தைகளைத் தொல்காப்பியர் அகத்திணைக்குக் கூறாமல் பெருந்திணை, கைக்கிளை உள்ளீட்டவற்றிற்குக் கூறுகிறார்.

இந்த ஐந்திணை அவத்தைகளைக் காணும் போது, காதல் கொண்ட பெண்ணின் வளர்கின்ற காதல் புலப்படும். களவின்கண் ஒரு பெண்ணின் மாறும் இயல்புகளைக் களவியலில் கூறிவிட்டு மெய்ப்பாட்டியலில் களவின் காரணமாக அவள்படும் அவத்தைகளை விவரிக்கிறார் தொல்காப்பியர். பத்து அவத்தைகளில் ஐந்திணை அவத்தைகள் பெரும்பாலும் பெண்பாலுக்குரியவனவாக அமைந்துள்ளன. களவியலில் கூறிய இயல்புகளையே ஒட்டியே மெய்ப்பாட்டியலில் அவத்தைகளாக விவரிக்கிறார். இதன்மூலம் இயல் தொடர்புக்கும் கருத்துத் தொடர்புக்கும் தொல்காப்பியர் முதன்மைத்தந்திருப்பது தெரிகிறது. அதோடு காதலின் பல நிலைகளும், அத்தகைய நிலைகளில் தலைமகளின் அவத்தைகளால் இயல்புகள் எவ்வாறு மாறுபடும் என்பதையும் தெளிவாக சொல்கிறார். தொல்காப்பியர் பொருள் மெய்ப்பாடு பற்றிப் பொதுவாக கருதினும் திணை இலக்கியமே அவர் கண்முன் நிற்கிறது. அகத்திணை மாந்தர்கள் பண்பு நலன்களை அவர்களின் தோற்றத்தின்வழி அறிகிறோம். அவர்களுடைய மன நிகழ்வுகளை அவர்களது தோற்றம், செயல், பழக்கவழக்கம் கொண்டு அறிந்து கொள்கிறோம். அந்தவகையில் இந்த பத்து வகை அவத்தைகள், களவில் ஈடுபடும் தலைமக்களின் மன உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுவதோடு, காதலின் வளர்ச்சி நிலைகளையும் காட்டுகின்றன.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு-அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.

கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.

இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 

புதன், 5 ஆகஸ்ட், 2015

கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல!


படிப்பது மாணவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது, படிப்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் அதைச் சிறப்பாக தேர்வில் எழுதுவதும்தான்.

அறிவுத்திறன் அபாரமாக உள்ள பல பிள்ளைகள்கூட தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவே சிரமப்படுவதாகக் குறைபடுகின்றனர். என்ன படித்தாலும் தேர்வு நேரத்தில் பதற்றப்படுவதாகச் சொல்லும் மாணவர்களை நிறைய இருக்கிறார்கள். ஒரு தேர்வில் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலே வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைப்பதும் தெரிகிறது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு அந்த மாதிரி நினைக்க வைக்கின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்க, தேர்வெழுத நம் நேர்மறை சிந்தனை முறையான அஃபர்மேஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்!

உளவியல் வன்முறை

இன்று மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல ஆக்கிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் பெருமை காக்கவும், பள்ளியின் 'ரிசல்ட்' காக்கவும், நண்பர்கள் மத்தியில் மானம் காக்கவும் அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் துடிக்கிறார்கள். சுதந்திரமான போக்கில் படிக்கும், தேர்வெழுதும் நிலை இன்று இல்லை. அவர்கள் சுய மதிப்பு தொடர்ந்து காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பல பள்ளிகளில் பேதப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் தண்டிப்பதையும் படிப்பதற்கான கிரியா ஊக்கிகளாக பயன்படுத்தி வருகிறார்கள். மின்சாரக் கம்பிக்குப் பயந்து சொன்னதைச் செய்யும் சர்க்கஸ் மிருகம் போலத் தண்டனையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். மதிப்பெண்களுக்குத் தக்கவாறு செக்ஷன் பிரிப்பது, பெஞ்சுகள் அமைப்பது, மரியாதை கொடுப்பது எனச் செய்வதாகப் பல பெற்றோர்கள் புகார் கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தாக்குதல்கள் வகுப்பறைகளில் குறைந்திருந்தாலும், உளவியல் வன்முறைக்குக் குறைவில்லை.

பொய்ச் சமூகங்கள்

பல ஆசிரியர்கள், படிக்காத மாணவர்கள் என்றால் அவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கிறோம். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற எண்ணத்தை ஒரு மாணவனுக்கு மிக எளிமையாக ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அவ்வளவு வலிமையான ஆயுதம் ஆசிரியர்களிடம் உள்ளது. திட்டுவதை விடப் புறக்கணித்தல் மிக மோசமானது. ஒப்பிட்டுப் பேசுவது, படிக்காததால் பெற்றோருக்கு அவமானம் எனச் சொல்லி மறுக வைப்பது எனும் அணுகுமுறைகள் மாணவர்கள் மன நிலையை முழுவதுமாக எதிர்மறையாகத் திருப்பி விடுகின்றன.

தொழில்நுட்பத்தால் கவனக்குறைவு இன்று எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போலச் சதா அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். விக்கினால் கூட வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் பல பொய் சமூகங்களை வடிவமைத்துவருகின்றன. டி.வியில் சதா சர்வ காலமும் ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்வு நேரத்தில்தான் 20-20 விளையாடுவார்கள் அல்லது மோட்டோ ஜி.பி. ரேஸில் பைக் ஓட்டுகிறார்கள். படிப்பிலிருந்து கவனத்தை சிதற வைக்கக் கோடிக் காரணங்கள் உண்டு. நம் காலத்தில் இவை இருந்ததில்லை. ஆதலால் ஆதரவோடும் புரிதலோடும் நம் பிள்ளைகளை அணுகுவது முக்கியம்.

ஆசையோடு படித்தல் என்பது மிக முக்கியம். ஆனால் பிடிக்காத பாடம் அல்லது பிடிக்காத குரூப் எனும்போது ஆசையை விடப் பயமும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. கணக்குப் படிக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடும் என்று சொல்லி வராத பாடத்தில் போட்டு வாழ்க்கையைக் கெடுத்த பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்.

சம்மதிக்காமல்

கற்றல் இங்கு அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருவதால் மாணவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்து தோல்வி பயமும் மன நெருக்கடியும் இயல்பாக வந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் மாணவர்களின் தற்கொலை முயற்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு என் நேரடி விண்ணப்பம் இதுதான்: உங்கள் வாழ்க்கையில் கல்வி ஒரு அங்கம். அதை ரசித்துச் செய்ய முடியும். அதன் வெற்றி தோல்விகள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றிப் போடாது. உங்களுக்கான படிப்பை, வேலையை, துறையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு யாரும் போட்டி அல்ல. நீங்கள் சம்மதிக்காமல் யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது. உங்களால் எதையும் செய்ய முடியும். அதை நீங்கள் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

பயமில்லாமல் ஆசையோடு எந்தக் கட்டாயமுமின்றிப் படிப்பது காலத்துக்கும் நிலைக்கும். புரிந்து படிக்கவும் உதவும். படித்ததைச் செயல்படுத்தவும் நம்பிக்கை தரும். பிறருக்காகப் படிப்பதை விடுத்துத் தனக்காகப் படிக்கையில் ஊக்கம் தானாக வரும்.

படிப்பது தியானம் போல. அது உள்ளுக்குள் நிகழும் ரசவாதம். அதை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்ய முடியும்.

விடுமுறை நாளில் படுத்தவாறு கையில் காபியுடன் பிடித்த கதைப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பது போலப் பாடப் புத்தகத்தையும் மனம் லயித்துப் படிக்க முடியும்.

'கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல' என்பதை மனம் நம்பும்போது கற்றல் அனுபவம் ஒரு சுக அனுபவமே!

மாணவர்கள் கீழ்க்கண்ட அஃபர்மேஷன்களை பயன்படுத்தலாம்:

"நான் முழு ஆர்வத்துடனும் கவனத்துடனும் கற்கிறேன்."

"நான் என் மீது பூரண சுய மதிப்பும் நம்பிக்கையும் கொள்கிறேன்."

"நான் எல்லாத் தேர்வுகளிலும் என் அதிகபட்சத் திறமையை வெளிப்படுத்துகிறேன்."

"நான் விரும்பிய துறையை ஏற்று, அதில் சிறப்பாகக் கற்கிறேன்."

"நான் படிப்பது தொடர்பான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறேன்."


 

வங்கிப் பணிக்கான தேர்வுகளில் வெற்றியடைய என்ன செய்யவேண்டும்? 

 வங்கி பணியைப் பொறுத்தவரை பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஐ.பி.பி.எஸ். (Institute of Banking Personnel Selection) என்ற அமைப்பு மூலமாக எழுத்தர் (Clerk) மற்றும் வங்கி அலுவலர் (Probationary Officer) ஆகிய இரு பணிகளுக்குக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றன. இவை மட்டுமல்லாது இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) உதவியாளர் மற்றும் Grade-B அலுவலர் பணிகளுக்கும் போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வுசெய்யப்படுகின்றனர். மேலும், வங்கி பணிகளில் பொறியியல், விவசாயம், சட்டம் மற்றும் கணினி பட்டதாரிகளுக்குப் பிரத்தியேகமாகச் சிறப்பு அலுவலர் (Specialist Officer) தேர்வும் நடத்தப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மட்டும் தனக்கான பணியாளர்களைப் பிரத்தியேகமாகத் தனித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கிறது.

மேற்கண்ட அனைத்து அலுவலர் நிலை (Officer Rank) தேர்வுகளுக்கும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் ஏறத்தாழ ஒன்றுதான். எழுத்தர் தேர்வில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரு நிலைகளிலும், அலுவலர்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் என்ற நான்கு நிலைகளில் தேர்வு நடைபெறும்.

ரிசர்வ் வங்கி அலுவலர் தேர்வுக்கான தேர்வு முறை மட்டும் மேற்கண்ட தேர்வு முறைகளில் இருந்து சற்று வேறுபடும். எழுத்தர் மற்றும் வங்கி அலுவலர் ஆகிய இரண்டு தேர்வுகளுக்குமே குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு அவசியம்.

வங்கித் தேர்வில் ஆங்கில மொழியறிவு, கணிதத் திறன், தர்க்கத் திறன் மற்றும் பொதுஅறிவு மற்றும் தற்கால நடப்புகள், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். வங்கித் தேர்வுக்குத் தயார் செய்ய பேங்கிங் சர்வீஸ் கிரானிக்கல் (www.bscacademy.com ), பேங்கிங் டுடே ( www.bankexamstoday.com), பிரத்தியோகிதா தர்பன் (www.pdgroup.upkar.in) உள்ளிட்ட மாத இதழ்கள் உறுதுணையாக அமையும்.

இவை மட்டுமல்லாமல் சென்ற ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகங்களும் சந்தையில் கிடைக்கின்றன. எழுத்துத் தேர்வில் தேறியவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுப் பொருளாதாரம், வங்கித் துறை தொடர்பான கேள்விகள், பொதுஅறிவு மற்றும் ஆளுமைத்திறன் ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் நேர்காணலால் சோதிக்கப்படுவார்கள். அதன் தொடர்ச்சியாகக் குழு விவாதத்தில் பங்கேற்கச் செய்து அவர்களின் ஆளுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன் சோதிக்கப்படும்.

பிரதானத் தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் ஆகிய மூன்று நிலைகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் இறுதியான தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

பெரும்பான்மையான வங்கித் தேர்வுகள் கணினி வழியாகவே ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகின்றன.

தேர்வுக்கு நல்ல தயாரிப்பு அவசியம். புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல. புத்தகங்களில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி எடுப்பதுதான் மிகவும் முக்கியமானது.

ஏனெனில் தவறாக விடையளிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.வங்கித் தேர்வுகளைத் தமிழில் எழுத இயலாது.



 

கற்பவரால் தனது கல்வியை இக்கட்டான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தப்படாதவரை கல்வியில் எதுவுமே நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். - டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்றதும் நான் ரஞ்சிதாவை நினைத்தேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . வீராங்கனை என்றால் நமக்கு ஜான்சிராணியும் கல்பனா சாவ்லாவும் நினைவுக்கு வரலாம். ஆனால், ரஞ்சிதா மாதிரி பெண் குழந்தைகளுக்கு 'உயிரோடும் உயிர்ப்போடும்' இருப்பதே வீராங்கனைகளின் வீரத்துக்கு இணையானதாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியவர் ரஞ்சிதா.

பெண் குழந்தைகள் வயசுக்கு வந்த நாளோடு அவர்களின் பள்ளிக் கனவுகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். இந்த 21-ம் நூற்றாண்டிலும் கிராமங்களில் இதை பார்க்கலாம். ரஞ்சிதா அதை எதிர்த்துப் போராடி தனது போராட்டத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டது எனக்கு ஒரு பாடமாக இருந்தது.

ரஞ்சிதாவும் இந்தியக் கல்வியும்

கல்வி கற்பதற்கான ஆரம்ப வயது மூன்று என மத்திய அரசு 1986-ல் அறிவித்தது. பால்வாடியும், எல்.கே.ஜியும் அறிமுகமானபோது எதிர்ப்பும் வந்தது.

அரசால் போடப்பட்ட ஜனார்த்தன ரெட்டி கல்விக் குழு ஒரு வித்தியாசமான காரணம் சொன்னது. பெண் குழந்தை சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பள்ளியில் சேர்க்க ஆறு வயது வரை காத்திருந்தால் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைகளில் நிரந்தரமாக ஈடுபடுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றது.

ரஞ்சிதா ஆறாம் வகுப்புக்கு நான் பணிபுரிந்த பள்ளிக்கு வந்தார். அந்த வருடம்தான் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியானார். கல்விக்காகத் தனியான செயற்கைகோள் 2002-ல் தொடங்கப்பட்டது. சர்வ சிக்ஷ அபியான் (அனைவருக்கும் கல்வி) மூலம் நாடெங்கும் எல்லா குழந்தைகளும் பள்ளிக்குப் போகிறார்களா என கணக்கிடப்பட்டது.

ரஞ்சிதா எட்டாம் வகுப்புக்கு வந்தபோது அப்துல்கலாம் பல ஊர்களில் குழந்தைகளை நேரடியாக சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்.

பெண் கல்வி பற்றி கலாம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய அறிவியல் மாநாட்டுக்கு கலாம் வந்தார். அவரைச் சந்திக்க எங்கள் பள்ளியிலிருந்து தேர்வான மூவரில் ஒருவர் ரஞ்சிதா. ஜனாதிபதியிடம் குழந்தைகள் ஏடாகூடமாகப் பேசிவிடக்கூடாதென்று கேள்விகள் முன்னமே பெறப்பட்டன. அவற்றைப் பல்கலைக்கழகமும், அதிகாரிகள் குழுவும் பரிசீலித்தன. அவர்களை ஏமாற்றிவிட்டு ரஞ்சிதா கேள்வியை மாற்றிக் கேட்டார்.

''பெண்கள் முன்னேற என்ன வழி?'' என்றார் அவர். மற்ற குழந்தைகளின் கேள்விகள் அறிவியல், ராக்கெட் என்று இருந்தன. ஆனால், ரஞ்சிதாவின் கேள்வியில் சமூக அக்கறை வெளிப்பட்டது. புன்னகையுடன் அப்துல்கலாம் "பெண்கள் முன்னேற கல்வி (Education), பங்கேற்றல் (Participation), அங்கீகாரம் (Recognition) தேவை" என ரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார். கேட்பது ஒரு எட்டாவது படிக்கும் குழந்தைதானே என அவர் அசட்டையாக பதில் தரவில்லை.

சாவித்திரி பூலே அம்மையார்தான் இந்தியாவின் முதல் ஆசிரியை. பண்டித ரமாபாய்தான் முதல் பெண்கள் பள்ளிக்கூடத்தை நிறுவியவர். அரசு 1952-ல் அமைத்த லட்சுமணசாமி முதலியார் கமிஷன் முன்பாக, பெரியார், ஜி.டி.நாயுடு போன்றவர்கள் வாதாடிப் பெற்றதுதான் பெண்களுக்கான தனியான கல்விக்கூடங்கள். பெண் குழந்தைகளுக்கு கல்வி முழுமை அடைந்தால் அல்லவா வளர்ச்சியில் பங்கு பெறவும் அங்கீகரிக்கப்படவுமான அடுத்த படிநிலைகளை அடைய முடியும்?

ரஞ்சிதா திடீரென்று ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. சில ஆசிரியர்கள் கவலைப்பட்டோம். பின் தங்கிய மாவட்டமான எங்கள் ஊரில் இது அடிக்கடி நடப்பதுதான். அவருக்கு திருமணம் நிச்சயமாயிருக்கலாம் என அரசல்புரசலாக சில மாணவிகள் கூறி அதிர்ச்சி அடையவைத்தார்கள்.

ரஞ்சிதாவுக்கு திருமணம்

அவரது முறைமாமனின் முதல் திருமணம் தோல்வியாம். அதனால் அங்கே ரஞ்சிதா பலிகடா ஆக்கப்பட்டார். என்ன செய்யலாம் என நாங்கள் கையைப் பிசைந்தோம். முறைமாமன் காவல்துறையில் செல்வாக்கு பெற்றவர். ரஞ்சிதா போன்ற அறிவுச் சுடர் வீசும் மேதமைக் குழந்தைகள் நம் கையை விட்டுச் செல்வதை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கப்போகிறோம் என நாங்கள் பரிதவித்தோம். அப்போது சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.

கலாமுக்குக் கடிதம்

பலவிதமாகப் போராடிப் பார்த்த அந்த எட்டாம் வகுப்பு புயல், இறுதியாக பிரம்மாஸ்திரத்தை ஏவிவிட்டது. ரஞ்சிதா ஒரு தபால் கார்டில் அப்துல் கலாமுக்கு தன் நிலையை விளக்கித் தன்னை காப்பாற்றுமாறு கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். அந்தக் கடிதம் புதுடெல்லி போனதா, கலாம் வாசித்தாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் வந்துவிட்டனர். ரஞ்சிதாவை மீட்டுவிட்டனர்.

இன்றும் பெண் குழந்தைகளுக்கு முழுமையான பள்ளிக்கல்வியே ஒரு போராட்டம், உயர்கல்வி பெறும் உயரத்துக்கு மீண்டு எழுதல் ஒரு கடுந்தவம் என்பதுதான் சூழல். இன்று ரஞ்சிதா பி.காம் பட்டதாரி ஆகிவிட்டார். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு நடந்த அக்னிப்பிரவேசத்தில் அவர் தப்பியிருந்தால் எப்படியிருந்திருக்குமோ அதற்கு இணையான வீரம்தான் இது என்பது என் கருத்து.

அப்துல் கலாமை ஆபத்தில் உதவும் சக்தியாக எப்படி குழந்தைகள் நம்பினார்கள் என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது. ரஞ்சிதா இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். அவரது வாழ்க்கையின் வெற்றியில் "எல்லாப் புகழும் கலாமுக்கே" என்கிறார் அவர்.


 

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.!


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.

என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன்  தெரிவித்தார்.


 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

TRB PG TAMIL: முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள்


முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள்

 

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை.சதாசிவம் பண்டாரத்தார் இந்நூலில் உள்ள சில அகச்சான்றுகள்எடுத்துக்காட்டி இந்நூலாசிரியரை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கிறார். காதலையும் வீரத்தையும் தங்கள் வாழ்வியல்நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். இந்நூலின் பெயர் இரு வகைகளில் விளக்கப்படுகிறது.

 

மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களகை; கொண்டது.

 

ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது.

மூவேந்தர்களின் வீரம், கொடை, புகழ், படைச்சிறப்பு (யானை மறம், குதிரை மறம்) பகையரசர்களிடம் திறை பெற்றமை, நாடு, நகர் வளம்,பகைப்புலம் பழித்தல், களம், வெற்றி, எயில்கோடல், கைக்கிளை போன்ற பொருண்மைகளில் கற்பனைச் சுவையுடன் முத்தொள்ளாயிரம்பாடல்கள் அமைந்துள்ளன. மூவேந்தர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.இடைக்காலத்தில் எழுந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாயகன் நயகி பாவத்துடன் ஜீவாத்மா-பரமாத்மாவுடன் கூடுவதற்குத் துடிக்கும்துடிப்பைத் தங்கள் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். முத்தொள்ளாயிர ஆசிரியர் தன்னை ஒருதலைக்காதல் கொண்ட பெண்iணாகவும், சேரன்,சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர்களின்பால் தமக்குள்ள அன்பினை மையப்படுத்தி பல பாடல்கள் பாடியுள்ளார்.

 

வித்துவான் ந.சேதுரகுநாதன் அவர்கள் உரை எழுதியுள்ள முத்தொள்ளாயிரத்தில்

 

கடவுள் வாழ்த்து.            1

பாண்டியன்.                  60

சோழன்                       46

                                 

   சேரன்                      23

                                  130
---

என அமைந்துள்ளன. பிற உரையாசிரியர்களின் உரைகளில் பாடல்களின் எண்ணிக்கையும் (108, 109, 110) வைப்பு முறையும் (சேரன், சோழன்,பாண்டியன்) மாறுபடுகின்றன. மூவேந்தர்களும் தொன்மை மரபிற்கு ஏற்பவும், சிறப்பிற்கேற்பவும் சிறப்புப் பெயர்கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

 

சேர மன்னர்கள் : கோதை, மாந்தைக்கோ, வஞ்சிக்கோ, பூமியர் கோ, வானவன், முசிறியர் கோமான் எனவும்

 

சோழ மன்னர்கள் : விந்தையர்கோன், கோழிக்கோமான், வளவன், செம்பின், கிள்ளி, நீர்நாடன், புகாஅர்ப்பெருமான் சென்னி, காவிரி நாடன் எனக்குடிப் பெயர்களாலும் 

பாண்டிய மன்னர்கள் : மாக்கடுங்கோன், மாறன், கூடற்கோமகன், தென்னன், செழியன், வழுதி, தமிழ்நர் பெருமான், பொதியற்கோன், செலேகவண்ணன், வையையார் கோமான், கொற்கைக் கோமான், பஞ்சவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். 
 

கற்பனை வளம் : கவிதைக்கு உயிர் மூச்சாக விளங்குவது கற்பனையே. சேரநாட்டின் வளத்தினையும் மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஆசிரியர்சுவைபடவிளக்கியுள்ளார். 
 

நாட்டு வளம் : விரும்பத்தக்க வேற்படையைக் கொண்ட சேரனது நாட்டில் சேறுபட்ட (அள்ளல்) நீர் நிறைந்த வயல்களில் அரக்காம்பல்கள் பூத்துக்கிடந்தன. அவைகளைப் பார்த்துப் பறவைகள் தங்கள் சிறகால் பக்கத்தில் நீந்தி வந்த குஞ்சுகளை அனைத்து ஒடுக்கிக் கெண்டனவாம். குஞ்களின்சிறகுகளில் எங்கே தீப் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தால்தான்... 

 

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளம்தீப் பட்டது எனவெரீஇப் - புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்குமு; கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கைக்கோதை நாடு (முத். 110) 
 

நெருப்புக் கொளுந்துகளாய்ச் செந்தாமரப் பூக்கள் வயல்நீர் மீது வாயவிழ்ந்து பூத்ததும் தண்ணீர்தான் தீப்பற்றிக் கொண்டதோ என்று பறவைக்கூட்டம் பதபதைத்து அச்சத்தால் ஆரவாரம் செய்தன.

 

நாட்டில் பயப்பட வேண்டிய காரியம் ஒன்றும் இல்லைதான், ஆனாலும் பயப்பட்டுத் தவிக்கின்றன இந்த பறவைகள். சேரமன்னது ஆட்சி முற்றிலும்அமைதியைக் கெடுத்துவிடும் என்று எப்படிச் சொல்லக்கூடும்? இந்தவிதமாக எக்களிப்போடும் நகைச் சுவையோடும் நாயகி தோழியிடம்கூறுகிறாள். பெருமிதமும் நகையும் தோழியின் கூற்றில் அமைந்துள்ளது. வெள்ளத்தில் ஆரக்காம்பலாகிய தீப்படித்திருக்கின்றது எனக்கூறிநாட்டுவளம் கூறப்பட்டுள்ளது. 
 

பாண்டிய நாட்டின் வளம்: பாண்டிய நாடு முத்துக்களுக்குப் பெருமை பெற்ற நாடு. பாண்டிய நாட்டில் ஒரு பெண் தன் தோழியிடம் தன் நாட்டின்வளமை பற்றிக் கூறுவதாக இக்காட்சி அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள கடற்கரைச் சோலைக்குச் சென்றபோது அங்கு எங்கு பார்த்தாலும்முத்துக்களாகவே தோன்றுகின்றன. கமுக பாளையிலிருந்து உதிர்ந்த மணிகளும், புன்னையின் அரும்புகளும், சங்கு ஈன்று போட்ட முதிராமுத்துக்களின் தொகுதியும் இவ்வாறு காட்சியளிக்கின்றன.
 

முத்துக் குடையினால் உலகுக்கு நிழல் செய்கின்ற வழுதிநாட்டில் எங்கும் முத்துக்களே மிளிர்கின்றன. அவன் வெண்கொற்றற் குடையைப்போலல்லவா நாடும் விளங்குகின்றது. நந்து (சங்கு) முதிர்ந்த முத்துக்களை ஈன்றால் மக்கள் அணிவதற்கு எடுத்துச் செல்வர். முதிரா முத்துக்கள்எடுப்பாரின்றி சிதறிக் கிடக்கும்.
 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு. (முத்.36)

 

முத்துப்போன்ற வடிவுடைய பொருட்களை எல்லாம் முத்துக்களாகக் கற்பனை செய்திருப்பதைக் காணமுடிகிறது.
 

பாண்டிய நாட்டில் மக்கள் துணையுடன் கூடிக்களித்து மகிழும் மற்றொரு காட்சியும் இவண் ஒப்பு நோக்கத் தக்கது.

 

மைந்தோடு மகளிர் திமிர்ந்திட்ட

குங்கும ஈர் சாந்தின் சேறிழுக்கி – எங்கும்

தடுமாறல் ஆசிய தன்மைத்தே தென்னன்

நெடுமாடக் கூடல் அகம். (முத். 37)
 

கூடல் மகளிர் மேல்மாடத்திலிருந்து கொழுநரோடு ஊடிச் சிதறவீசிய குங்குமச் சந்தனச் சேறு வீதிமுழுவதும் பரவிக்கிடத்தலால் அவ்வீதிகள்வழிச்செல்வோரை வழுக்கிவிட்டுத் தடுமாறச்செய்யும் இயல்புடையது. இப்பாடலில் நெடுமாடக் கூடல் நகரின் செல்வச் செழிப்பும் இன்பப்பெருக்கமும், சுட்டப்பட்டுள்ளது.
 

சோழமன்ணின் உறையூர் நகர்வளம் மாற்றாரைப் போரில் வெல்லும் வளவனது அழகு நிறைந்த உறையூரினிடத்திலுள்ள வீதிகள், பூ விற்பவர்கள்முதல்நாள் மாலைப் பொழுதிற் கிள்ளிக் களைத்தெறிந்த பல வண்ணபூக்கள் மிகுதியாகப் பரவியிருக்கின்ற விதத்தைத் தெருக்கள் வில்லோடுபொருந்திய விண்ணகம் (வானவில்) போன்று கண்ணுக்கு இனியனவாயக் காட்சியளிக்கிறது. கிள்ளிக் களைந்த பூவின் மிகுதி இவ்வளவென்றால்தொடுத்த பூக்களுக்கு அளவு எவ்வளவாகும்? அவற்றை சூடியிருப்பவர் (அணிந்திருப்பவர்) அதிகமாக இருப்பர்.

 

அம்மலர்ப் பொழில்கள்தாம் எவ்வளவோ என்று ஆராயும் போது உறந்தையின் சிறப்பு, பொழிலின் மிகுதி, இன்பப்பெருக்கம் அறியமுடிகிறது.தரையில் கிள்ளிக் களைந்த சிதறிக் கிடக்கும் பூக்களை வானவில்லுடன் கற்பனை செய்து பார்ப்பது சுவைபயக்கிறது. 
 

சேரன் ஆட்சிச்சிறப்பு 
 

மூவேந்தர்களும் அன்று ஆண்ட நாட்டின் எல்லைப்பரப்பும் கற்பனையின் விரிவாக்கமாகத்தான் அமைந்துள்ளது.

 

வானிற்கு வையகம் போன்றது வானத்து

மீனிற் கனையார் மறமன்னர் – வானத்து

மீன்சேர் மகியனையான் விண்ணுயர் கொல்லியர்

கோன்சேரன் கோதையென்பான். (முத். 16) 
 

கோதை அரசாளும் காலத்தில் அவன் ஆளும் நிலப்பரப்பின் அகலம், அவனுக்கு அடங்கி சிற்றசர்தொகை, அவனுடைய இயல்பு ஆகியவற்றிற்குமிகைப்படுத்தப்பட்ட கற்பனையாக புலவர் அளவீடு தந்துள்ளார். 
 

கோதையின் ஆட்சியின் நிலப்பரப்பு – வானப் பரப்பின் அளவுள்ளது. அவனாட்சியில் அடங்கியுள்ள சிற்றரசர்களின் எண்ணிக்கை – வானவெளியில்மின்னுகின்ற விண்மீன்கள் அளவாகும் - கோதையோ வெண்மதியை ஒத்தவன் என்கிறார். 
 

சோழனின் ஆட்சிப் பரப்பு 
 

குடை, செங்கோல் என்பன அரசர்க்குச் சிறந்தவை, செங்கோல் பிடித்தல் முறை கோடாமைக்கு அறிகுறியாகும். சோழமன்னன் உலகிற்கு நிழல்செய்கின்ற குடை மிகமிகப் பெரியது; மந்தர மலைதான் அதற்குக் காம்பு; நீல ஆகாயப் பரப்பு முழுவதும் அதற்கு மேற்பரப்பு ஒலை; சந்திரன்நடுவட்டம். அந்தக் குடை உலகம் முழுவதும் நிழல் செய்து காக்கின்றது என்று அவன் குடையின் தண்மையையும், கோலின் செம்மையையும் புலவர்கூறியுள்ளார்.

 

பாண்டினின் ஆட்சிப் பரப்பினைச் சுட்டும் விதமாக கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது 
 

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள். (முத். 97) 
 

தேர்ச் சக்கரத்தை நிமிர்த்தவல்ல தோள்களில் ஒளி செய்யும் மாலையணிந்தவன் பாண்டியன் அழகிய வெண்கொற்றக் கொடையினை உடையஅம்மன்னனது ஆணையினால், பொன்னால் ஆகிய அழகிய அணிகலன்களை அணிந்த கண்ணிமைக்காத தேவர்களின் திருந்திய அடிகள்இம்மண்ணுலகை மிதிக்க மாட்டா. பாண்டியனது உடமை எனக் கருதி தேவர்கள் பூமியை மிதிக்கமாட்டாத செய்திக்குப் பாண்டியனின்திறத்தினைக் கற்பனையாக ஆசிரியர் படைத்துக் காட்டியுள்ளார். 
 

யானை மறம் 
 

முத்தொள்ளாயிரத்தில் மொத்தம் 33 பாடல்களில் யானைகள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. 
 

பெருமை 
 

மூவேந்தர்களில், படைச்சிறப்பு, நாடுகளின் பெருமை, யானைகளின் வீரம், ஆற்றல், போரிடும் தன்மை, நாணம், இரக்க உணர்வு முதலியனவற்றைச்கற்பனை கலந்து சுட்டும் விதமாக இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 
 

நீர்வளம் மிக்க வஞ்சி மாநகரில் கள் குடிப்பவர்கள் கள் குடிக்கும் பாத்திரத்தில் அதை வாங்கி, கள்ளின் மேற்பரப்பில் மிதக்கும் நுரையைக் கையால்வழித்து வெளியே எறிந்துவிட்டுக் கள்ளைக் குடிப்பார்கள். அவ்வாறு நுரையை வழித்து எறியும் போது கள்ளும் நிலத்தில் சிந்தும் அந்த வீதியில்அரசனின் அழகிய யானைகள் செல்லும்போது வீதியில் கிடக்கும் கள்ளிலும், நுரையிலும் யானையின் கால்கள் படும். அப்போது கள்ளும், நுரையும்மண்ணுடன் கலந்து வீதியெங்கும் சேறாகிவிடும்.

 

களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்

களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந்து

ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே

பூம்பொழில் வஞ்சி அகம். (முத். 14) 
 

ஒரு அரசனின் போர் திறத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் அவன் மிகவும் பலமுள்ளவன் என்று சொல்லும்போது படைபலம் பற்றியும்பேசப்படுகிறது 'பல்யானை மன்னீர்' என்று அழைத்துப் படுதிறை தந்துய்ம்மின் என்று அறிவுறுத்துகிறார். ஒரு அரசனின் புகழைப்பாடவும்பலயானைகள் கொண்ட பேரரசர்கள் தேவைப்படுகிறார்கள்.

 

'செங்கண்மாக் கோதை' என சிவந்த கண்களையுடைய சேரமன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது சிவந்த கண்களை உடையவன் - போர்நாட்டம்மிகுந்தவன் அவனைப் போலவே அவனுடைய யானையும் 'சினவெங் களியானை' என அழைக்கப்படுகிறது.
 

பாண்டியனின் யானைகள்
 

'மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க

வையக மெல்லா மெமதென் றெழுதுமே

மெய்யிலை வேல் மாறன் களிறு' (முத். 47)
 

வீரம் கனல்கின்ற வேற்படைமன்னர் திரள்திரளாகக் கூடியிருக்கின்றனர். பகை வீரர்களின் அகன்ற பரந்த பெரியமார்பைப் பார்த்தது பாண்டியனின்யானை பாய்ந்தது: மார்பைத் துளைத்துவிட்டது. தன் தந்தத்தை மருப்பூசியாகக் கொண்டு பகை வீரனின் மார்பை ஓலையாக எண்ணி 'இந்நாடுஎமதென்று எழுதும்' என்பதாக யானையின் வீரச் செயலை பாண்டியனின் படைவீரன் ஒருவன் கூறுகிறான். சீவக சிந்தாமணியில் கட்டியங்காரன்கந்துக்கடனிடம் யானையின் வீரச்செயல்பாட்டை கூறியிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.
 

யானையின் இரு தந்தங்கள்
 

பேய்க்கு அச்சத்தை உண்டாக்கும் வேப்பந்தாரினை அணிந்த பாண்டியனது உயர்வும் அழகும் பொருந்திய யானையின் இரண்டு கொம்புகளும்பகைவரிடம் அச்சத்தைத் தோற்றுவித்தன. பகைவரின் மதிலை ஒரு கோட்டால் இடித்துத் திறந்து உள்ளே சென்றது, பகையரசனது மார்பாகியவயலில் மற்றொரு கோடாகிய கலப்பையால் உழுதது. உழுதவுடனே வெற்றி விளைந்துவிட்டது. ஒருகோடு கதவுகோலின் வேலையையும்,மற்றொன்று கலப்பையின் வேலையையும் செய்ததாக வீரர்கள் பேசிக் கொள்கின்றனர்.

 

உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்து

இருகோடும் செய்தொழில் தேரில் ஒரு கோடு

வேற்றார் அகலம் உழுமே ஒருகோடு

மாற்றார் மதில்திறக்கு மால் (முத். 15)
 

மற்றொரு பாடலில் யானையின் தோற்றமும், செயலும் கற்பனையின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

 

தோற்ற மலைகட லோசை புயல்கடாம்

காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் கூற்றுங் (முத். 16)

 

யானையின் தோற்றம் மலையைப் போன்றது, அதன் ஓசை கடல் முழக்கத்தைப் போன்றது, மேகம் மழைபொழிதல் போல் மதநீர் பொழிந்துகொண்டே செல்லும், கடுங்காற்றினும் விரைந்து நிமிர்ந்து செல்லும்: பகைவரைக் கொல்லுதலில் எமனுங்கூட அதனிடம் கடன்வாங்கவேண்டியதுதான், என யானையின் செயல்பாட்டில் புலவரின் கற்பனை வளத்தைக் காணமுடிகிறது.

 

யானையின் நாணம்

 

'அடுமதில் பாய வழிந்தன கோட்டைப்

பிடிமுன்பு அழகழிதல் நாணி - முடியுடை

மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்மேல்

றென்னவர் கோமான் களிறு (முத். 17)

 

போர் தொடங்கிற்று, தென்னவனுடைய சினக்களிறு நிமிர்ந்து சென்று பகைவர் மதிலை இடித்தது. மதிலின் கண் இருந்த பொறிகள்அனைத்தையும் உடைத்தது. மதிலும் உடைந்தது. கொம்புகளும் உடைந்தன. பகைமன்னரை கீழே தள்ளிக் குத்திக் கிழிக்கின்றது.

மதிலை ஒடித்ததினால் ஒடிந்த கொம்பைப் பிடியானைப் பார்த்து இழிவாக நினைக்கும் என்று எண்ணி நாணிப் பகையரசனுடைய குடiலைக்கிழித்து அதனால் கொம்பை மறைக்கின்றது. சிலம்பு அடைக்கலக்காதையிலும் பகைமன்னனின் குடலைக் குத்தியிழுக்கின்ற யானையைக்காணலாம்.

 

(சிலப் - அடைக்கலக்காதை, 20எ-உகசு})

 

மலையையொத்த தோள்களையுடைய கிள்ளியின் யானைக் கொடி கட்டிய மதிலில் பாய்ந்து ஒடிந்த தன் கொம்புகளும், மாற்று வேந்தர் தம்மணிமுடியைக் காலால் எற்றித் தேய்ந்த தன் நகங்களும் பெண் யானையின் முன் அழகிழந்து தோன்றும் பொல்லாமைக்கு நாணி பிடியானைநிற்கும் அந்தப்புரத்திற்குச் செல்லாமல் புறங் கடையிலேயே நின்று விட்டதாம் இந்த ஆண் யானை. யானைக்கும் நாணமா?

 

சோழநாட்டு யானையின் செயல் கற்பனை வானத்தைத் தொடவைக்கின்றது. கோயர்கோக்கிள்ளி - உறையூர்ச் சோழனது யானை, போர்தொடங்கிவிட்டால் வடக்கே உச்சயினி வரைபோய் வென்று, பின்பு தெற்கே வந்து ஈழ நாட்டையும் வென்று, உறையூருக்கே வந்து சேர்தல்கிள்ளியின் வழக்கம் அவனுடைய யானையும் அவ்வளவு தொலைவு சென்று வரும். போரில் அது தாவிப்பாய்ந்த ஓட்டத்தைப் பார்த்த வீரர்கள் ஒருகாலால் காஞ்சியிலும், இரண்டாவது காலால் உச்சியினியிலும், மூன்றாவது காலால் தெற்கே திரும்பி இலங்கையிலும் மிதித்து நாலவது காலால்உறையூருக்கு வந்துவிடும் என்று நாலுகாலுக்கும் உள்ள பெருமையைக் கூறுகின்றார்கள்.

 

கிள்ளியின் யானைப் படைகள் நிற்கும் இடத்தை படைவீரர்கள் காண்கின்றனர். அவ்வீரர்கள் வியப்பது போல புலவர் நம்மை வியக்கவைக்கின்றனார்.

யானைக் கூட்டங்கள் மலை மலையாக நிற்கின்றன. ஆயிரக் கணக்கான யானைகள் மறிகடல் போல முழங்குகின்றன. அவற்றின் கால்கள் பெரியசங்கிலிகளால் கட்டிப் போடப் பட்டுள்ளன.

 

ஒரு வீரன்: யானை தன் காலை நிமிர்ந்தால் சங்கிலிக் கண் அற்றுப்போய்விடும்போல் உள்ளது.

 

மற்ற வீரன்: காலை நிமிர்ந்தால் சங்கிலியை அறுத்துக் கொண்டு போய் பகைவரையெல்லாம் அழித்துவிடும் பகைவருடைய மனைவியர்;தம்கழுத்திலுள்ள மங்கலக் கயிறுகளும் அற்றுப் போய்விடும் என யானையின் மறத்தன்மை இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. (முத். 70)
 

மற்றொரு பாடலிலோ : யானைகள் மதிலுக்கு புறத்தில் உள்ள வேல் வடிவுள்ள இரும்புக் கதவுகளை முதலிற் பாய்ந்து ஒடித்தன. பின்பு உட்சென்றுமதிற்கதவைக் கோத்து எடுத்த கோட்டுடன் விளங்குவதால் 'பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றும்' என்றார் புலவர். யானை சேனைக் கடலின்நடுவில் பாய்கட்டிய மரக்கலம்போல விளங்குவதாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. செல்கின்ற வழியில் நன்றாக ஊனுண்ணலாம் என்றுதான் பேய்க்கூட்டங்களும் வந்துவிட்டன. களத்தில் இறந்தவர்களுடைய குடல்களை இழுத்து மாலையாக அணிந்து கொண்டு ஊன்தின்ற மகிழ்ச்சியினால்பேய்மகளிர் ஆடுகின்றனர். இத்தகைய ஆரவாரத்துடன் மலை நடந்து வந்ததுபோல் வருகின்றது யானை.

 

சினவெங்களி யானையின் கொலைத்தொழில் போருக்கு யானை செல்கின்றது. நெடுநாளாக எதிர்பார்த்திருந்த கழுகுக் கூட்டம், பருந்துக்கூட்டம், நரிக் கூட்டம் எல்லாம் பின் தொடர்கின்றன. போர் நடந்த நாள் முழுநிலவு நாள். வானில் உள்ள முழுநிலவின் தோற்றம் பகைமன்னர்களின் விரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையைப் போல் அமைந்ததனால் அதனை யானை பற்றத் தன்துதிக்கையை நீட்டியது. சேரமன்னின்சினமுள்ள கொடிய மதயானை முழுநிலவினை பகையரசனின் வெண்கொற்றக்கொடை என்றெண்ணி தன் துதிக்கையைக் கொண்டு இழுக்கநிற்பது அருமையான கற்பனை.

 

குதிரை மறம்

மாறனுடைய குதிரைப்படையே அவன் பகைவனுடைய யானைப்படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலியகுதிரைப்படைகள் இருந்ததை அறியமுடிகிறது.

 

'நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்

புரைசை அறநிமிர்ந்து பொங்கா அரசர்தம்

முன்முன்னா வீழ்ந்தமுடி கள்ளைதத்த மாப்

பொன்னுரைகல் போன்ற குளம்பு' (முத்.13)

 

அணிகளாக அமைந்த ஒளிபொருந்திய வேல்படையைக் கொண்ட பாண்டிய மன்னனைப் போரிட எதிர்த்து நின்ற மாறனுடைய குதிரைப் படையேஅவன் பகைவருடைய யானைப் படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலிய குதிரைப் படைகள் இருந்ததைஅறிய முடிகின்றது. 
 

பகைவர்களை கழுத்தணி கயிறு அறுபடும்படிச் சினந்து பாண்டிய அரசனுக்கு முன்னர், போரிடுவதற்கு முன்னர் எண்ணிப் பார்க்காமல் தோல்வியுற்றுவீழ்ந்த பகை மன்னர்களின் முடிகளை உதைத்துத் தேய்ந்த பாண்டிய மன்னனுடைய குதிரைகளின் குளம்புகள் பொன்னை உரைத்துப்பார்க்கப்பயன்படுத்தப்பெறும் பெரிய கட்டளைக்கல் போன்ற வடிவில் அமைந்திருந்தன. பகைவரின் ஆண்மையின் தரத்தை இது அறிய உதவியது.

 

நெற்கதிர் அறுது;ததபின்பு அந்த வைக்கோலால் மடைகளை அடைக்கும்படி நகர்வளமிக்க சோழநாட்டுவேந்தன் மழைபோல் கொடைத்தொழில்செய்பவன் போர்க்களத்தில் வளவனுடைய குதிரைகள் காற்றினும் கடுகிச் சென்று பகை மன்னருடைய பொன்முடிகளை உதைத்தன. மார்பிலுள்ளபொன்னணிகளை எற்றி உதைத்துத் தங்கம் உரைத்த கட்டளைக் கற்போன்ற குளம்புகள் உடையனவாயின. வளவனின் நாட்டின் நீர்வளமும்,போர்ப் பரிகளின் வீரமும் சுட்டப்பட்டுள்ளன. கற்போன்ற கால்குளம்புகள் என இப்பாடலில் இடம்பெற்றுள்ள தகவல்போல் மற்றொரு பாடலில்பகையரசனின் கீரிடத்தையும், மார்பில் அணிந்துள்ள பொன்னணிகளை எத்தியதால் யானையின் கால் நகங்கள் சிதைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

 

மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்

பொன்னுரைகள் போன்ற குளம்பு (முத்.68)