பெண்கள் ஐ.ஏ.எஸ் ஆக அவர்களுக்குத் திருமணம் ஒரு தடை இல்லை!' என்கிறார் ஆர்.விமலா. இவருக்கு மணமாகி ஏழு வருடங்களுக்குப் பின் யூ.பி.எஸ்.சி. எழுதி ஐ.ஏ.எஸ். வெற்றிபெற்றபோது இவருக்கு இரட்டை குழந்தைகள் இருந்தன. மேற்கு வங்க மாநிலப் பிரிவின் 2010 பேட்ச் அதிகாரியான விமலா, மேற்கு மேதினிப்பூர் மாவட்ட கடக்பூரின் சப் டிவிஷனல் அதிகாரியாக செயல்பட்டு பின்னர் தற்போது, சிலிகுரி-ஜல்பாய்குரி வளர்ச்சி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
பிளஸ் டூவில் வேதியியலில் முதல் மதிப்பெண் பெற்றவர் விமலா. இதனால், பட்டப் படிப்பிலும் வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மகளிர் கல்லூரியில் படித்தார். 1998-ல் கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோது கோவையில், நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உட்பட மூன்று சம்பவங்கள் விமலாவின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அந்த மூன்று சம்பவங்கள்
"அப்போதுதான், என் வாழ்க்கையில் முதன்முறையாக 144 தடை உத்தரவை நேரில் பார்த்தேன். ஒரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரின் பணிகள் என்ன என்பதையும், பாதுகாப்பில் அரசு நிர்வாகத்தின் பங்கையும் நேரில் கண்டறிந்தேன்" என்கிறார் விமலா. அதையொட்டி படிப்பு முடிந்ததும் திருமணமாகி திருச்சிக்கு இடம்பெயர்ந்தார் விமலா. திருச்சியில் அவருடைய கணவர் கே.குமார் அச்சகம் நடத்திவருகிறார். "எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின்பு 2004-ல் கும்பகோணம் சிறுவர் பள்ளியில் நடந்த தீவிபத்து என்னைக் கலங்கடித்தது. அடுத்து வந்த சுனாமி, என் மனதையும் புரட்டிப் போட்டது. இந்த மூன்று சம்பவங்களில் நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இந்த நிலையில் யூ.பி.எஸ்.சி தேர்வை எழுத முடிவு செய்தேன்" என்கிறார்.
அரசு வேலைவாய்ப்பு அதிகாரியின் சேவை
விமலாவின் முடிவுக்குக் கணவர் குமாரும் அவரது வீட்டாரும் சம்மதித்துவிட்டார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நேரங்களில் மட்டும் படித்தவர், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று அதன் துணை இயக்குநர் சுரேஷ்குமார் செய்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டது விமலாவுக்கு அதிக பலன் தந்தது. அங்கு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும்படியான ஒரு நூலகம் அமைத்திருந்தார். அத்துடன் அங்கு யூ.பி.எஸ்.சி. வெற்றியாளர்கள் பலரும் வந்து கலந்துரையாடியிருக்கிறார்கள். இப்படியாக, யூ.பி.எஸ்.சி. எழுத விமலாவுக்கு சுரேஷ்குமார் வழிகாட்டினார்.
யூ.பி.எஸ்.சி.யின் மூன்றாவது முயற்சியில் முதல்நிலை மற்றும் நான்காவது முயற்சியில் மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ஐந்தாவது முறை ஐ.ஏ.எஸ். கிடைத்தது.
வெற்றிப்படிக்கட்டான தோல்விகள்
"யூ.பி.எஸ்.சி.யின் பாடத்திட்டத்துக்கு ஏற்ற நூல்களை நானே தேர்ந்தெடுத்துக்கொண்டேன். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்தேன். தமிழ்ப் பண்டிதரான தாத்தாவின் தமிழ்த் தாக்கம் எனது தந்தை மூலமாக என்னிடம் இருந்தது. முதல்நிலையின் பொது அறிவுக்காக நான் 6 முதல் 10 வரையிலான தமிழக அரசின் வரலாறு மற்றும் அறிவியல் பாடநூல்கள் மற்றும் இணையதளங்களில் பயின்றதும் போதுமானதாக இருந்தது. பிளஸ் டூவில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் வரலாறு மற்றும் அறிவியல் பாட நூல்களை வாங்கிப் படித்தேன். எனது ஒவ்வொரு தோல்வியிலும் எனது தவறுகளைக் கண்டுபிடித்துத் திருத்திக்கொண்டது வெற்றிப் படிக்கட்டானது. மூன்று முறை தோல்வி அடைந்தாலும் துவண்டுபோய்விடாமல் புதிய வேகத்துடன் அடுத்தது முயன்றேன். நான்காவது முயற்சியின்போது நேர்முகத்தேர்வுக்குப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தேன். இதற்காக மட்டும் சென்னையின் மனிதநேயம் பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதப் பயிற்சி பெற்றேன். இந்தப் பயிற்சி எனது கடைசி முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற பெரிதும் உதவியது" என்கிறார் விமலா.
கணவர் அளித்த ஒத்துழைப்பு
"எதையாவது சாதிக்க வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் அதற்கு திருமணம் ஒரு தடை கிடையாது. முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கவில்லை எனினும், அதன் பெயர் தோல்வி இல்லை. எனக்குக் கிடைத்த தோல்விகள் என்னைத் தளர்வடையச் செய்யவில்லை. இன்றுவரை திருச்சியில் இருந்தபடி அவ்வப்போது வந்து என்னை கவனித்துக்கொண்டு, எனது கணவர் அளிக்கும் ஒத்துழைப்பை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்கிறார் விமலா.
தற்போது விமலாவுக்குக் கிடைத்த மாநிலப் பிரிவான மேற்கு வங்காளம், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் கொண்டது. அந்தப் பகுதி மாவட்டங்களிலும் ஆட்சியராகப் பணியாற்றும் வாய்ப்பு வரும் நாட்களில் அவருக்குக் கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலிலும் பணியாற்றும் வகையில், ஐ.ஏ.எஸ்.ஸில் கிடைக்கும் பயிற்சி ஒருவரை நன்கு தயார்படுத்திவிடும் என நம்புகிறார் விமலா.
பிடித்து படித்த எழுத்தாளர்கள்:
கல்கி, சாண்டில்யன், நாஞ்சில் நாடன், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், மேலாண்மை பொன்னுசாமி.
விருப்பப் பாடத் தமிழ் நூல்கள்:
பாரதியார், பாரதிதாசன் கவிதைகளும் நூல்களும்.
விருப்பப் பாட வரலாற்று நூல்கள்:
பழங்கால இந்தியாவுக்கு ஏ.எல்.பாஷம், ஆர்.சி.மஜும்தார், ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர் போன்றோர் எழுதிய நூல்களும், இடைக்கால இந்தியாவுக்கு ஜே.எல். மெஹ்தா, சதிஷ் சந்திரா போன்றோரின் நூல்களும். நவீன இந்தியாவுக்கு பிபின் சந்திரா, குரோவர், சுமித் சர்க்கார் போன்றோரின் நூல்களும்.
- விமலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக