செவ்வாய், 29 ஜூலை, 2014

டி.ஆர்.பி :திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் வெளியாகும்

டி.ஆர்.பி :திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் வெளியாகும்

தேர்வு இறுதி பட்டியலை எதிர்பார்த்து,தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர் ஏற்கனவே திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட பாடவாரியாக இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன

பணி நிறைவடைந்ததும் எந்நேரமும் தேர்வுமுடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி 30 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

திங்கள், 28 ஜூலை, 2014

ஐந்து பைசா விவகாரம்....

ஐந்து பைசா விவகாரத்தால் முன்னாள் ஊழியருக்கு எதிராக 41 ஆண்டுகளாக டெல்லி போக்குவ ரத்துக் கழகம் போராடி வருகிறது. இந்த சட்டப் போராட்டத்தின் இறுதி முடிவு அடுத்த மாதம் 12-ம் தேதி தெரியவரும்.

டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந் தவர் ரன்வீர் சிங். இவர் 1973-ம் ஆண்டு மாயாபுரி சென்று கொண் டிருந்த பஸ்ஸில் பணியில் இருந்த போது, போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் ஏறினர்.

ஒரு பெண் பயணியிடம் 15 பைசா வசூலிப்பதற்குப் பதில், 10 பைசா டிக்கெட் கொடுத்து போக்குவரத்துக் கழகத்துக்கு ஐந்து பைசா இழப்பை ஏற்படுத்திய தாக அவர்கள் கண்டுபிடித்தனர்.

ரன்வீர் சிங் கவனக்குறைவாக நடந்து போக்குவரத்துக் கழகத் துக்கு ஐந்து பைசா இழப்பை ஏற்படுத்திவிட்டதாக அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இதுபோன்ற இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 76-ம் ஆண்டு ரன்வீர் சிங் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து பணியாளர் நல நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் வழக்கு தொடர்ந்தார். என்னை பழிவாங்கியுள்ளனர் என்று அவர் வாதிட்டார்.

நடந்துள்ள தவறுக்கு அளிக்கப் பட்டுள்ள தண்டனை பொருத்தமற் றதாக உள்ளது என்று தெரிவித்த பணியாளர் நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி, 90-ம் ஆண்டு உத்தர விட்டது. அவருக்குச் சேர வேண்டிய ஊதியத்தை வழங்கும் படியும் உத்தரவிட்டது.

இதை ஏற்காத டெல்லி போக்கு வரத்துக் கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் விஷயத்தில் மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மீது கருணை காட்ட முடியாது. எனவே அவரை டிஸ்மிஸ் செய்தது செல்லும் என்று உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்பு, 2008-ம் ஆண்டு பணியாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. அதற்குள் ரன்வீர் சிங் ஓய்வுபெற்று விட்டார். தனக்குச் சேர வேண்டிய ஓய்வுகால சலுகைகள், சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு சம்மதிக்காத போக்கு வரத்துக் கழகம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹுமா கோலி முன்பு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'போக்குவரத்துக் கழகத்தை ஏமாற்றிய ஒரு ஊழியரை எந்த தண்டனையும் இன்றி தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது. அவருக்கு பின் தேதியிட்டு சம்பளம் வழங்க முடியாது. ஓய்வுகால சலுகைகளும் வழங்க முடியாது. ரன்வீர் சிங்கின் பணிக்கால ஆவணத்தில் அவர் பல முறை இதுபோன்று தவறு செய்துள்ளது பதிவாகி உள்ளது. பயணிகளை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வைத்தது நிரூபிக் கப்பட்டுள்ளது. எனவே அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது செல்லும்' என்று குறிப் பிட்டுள்ளது.

இம்மனு நீதிபதி ஹுமா கோலி முன்பு அடுத்தமாதம் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஐந்து பைசா விவகாரத் தில் கடந்த 41 ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் முடிவு அன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி நஷ்டத் தில் இயங்கி வருகிறது என்று கூறப்படும் நிலையில் இந்த வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க 31ந் தேதிவரை காலஅவகாசம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும்அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில் உள்ள பி.எட் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்தஉள்ளது. இந்த கல்லூரிகளில் 300 இருக்கின்றன. இந்த இடங்களில் சேர ஆன்லைன் மூலம் பட்டதாரிகள் வருகிறார்கள். இன்றுடன்(திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்
பட்ட படிப்பு தேர்வு முடிவு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.எனவே பி.எட் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க 31ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில் 29ந்தேதி முதல் 31ந் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,அசோக் நகரில் உள்ள ஸ்டெல்லா மேட்டிட்டியூடினா பி.எட்., கல்லூரி, சைதாப்பேட்டையில் உள்ள அரசு பி.எட்.,கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 8ஆயிரம் பட்டதாரிகள் விண்ணபித்துள்ளனர் என்றார்.

TRB PG TAMIL:21 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை உயர் நீதி மன்ற உத்தரவினை மறு ஆய்வுசெய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்

>
>
>

BRTE வழக்கு : பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தடை ஏதும் வழங்கப்படவில்லை!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர்ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர்பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன்அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது என .மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் வாசுதேவன் தெரிவித்ததாக செய்திவெளியானது.

ஆசிரியர் நியமனத்துக்கு அத்தகைய தடை ஏதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்படவில்லை என்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று மட்டுமே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன

ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கையை ஏற்றி யும், இறக்கியும், அ.தி.மு.க., அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர் -தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

.
ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கையை ஏற்றி யும், இறக்கியும், அ.தி.மு.க., அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்,' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான, அவரது அறிக்கை:முதலில், கல்வி துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், '55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவர்' எனக்கூறி, மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.ஒரு வாரம், அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, '55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என, திடீரென ஒரு போடு போட்டார்.

ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன், அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார்.அவரைத் தொடர்ந்து, சிவபதி, முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், '26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம்' என்றார். சில நாட்களுக்கு பின், விழிப்புணர்வு பெற்றவரை போல, அவர், '14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்' என்றார்.

சிவபதியை தொடர்ந்து நான்காவது அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக பழனியப்பனும் பொறுப்பில் இருந்த போது, 'நமக்கேன் வம்பு' என, ஆசிரியர் நியமனம் பற்றி எதுவும் கூறவில்லை.ஆனால், அப்போது ஊரகத் தொழில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, '64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளோம்' என்றார்.
இன்று அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இன்றைய கல்வி அமைச்சர் வீரமணி, ஒரு விழாவில் பேசும் போது, 'கடந்த மூன்றாண்டுகளில், 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்' என, அறிவித்தார்.

ஆனால், இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது, '3,459 ஆசிரியர்கள் மற்றும், 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர்' என, தெரிவித்திருக்கிறார். எப்படி தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்து எண்ணிக்கையை ஏற்றியும், இறக்கியும் அ.தி.மு.க., அமைச்சர்களால் கூற முடிகிறதோ.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Source DINAMALAR

ஞாயிறு, 27 ஜூலை, 2014

தமிழ் இஸ்லாமியப் படைப்பாளி :தோப்பில் முஹம்மது மீரான்


தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தற்போது திருநெல்வேலியில் வசிக்கும் தோப்பில், போர்த்துக்கீசியப் படையெடுப்பைப் பின்னணியாகக் கொண்டு புதிய நாவலை எழுதிவருகிறார்.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் நான் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல் லாம் அங்கு அருகிலேயே படித்தேன். நாகர்கோவிலில் உள்ள தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்தேன்.

கதைகள் எழுதுவதில் நாட்டம் எப்படி வந்தது?

பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே கதைகள் எழுதுவேன். எங்கள் ஊரில் கொலைச் சம்பவங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கும். அப்படி நடக்கும்போது அதைப் பற்றி சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள கவிஞர்கள் கவிதையாகப் பாடுவார்கள். அம்மாதிரிப் பாடல்களை அவர்களே பாடி சந்தையில் விற்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிப் படிப்பேன். பக்கத்து ஊர்களில் நடக்கும் கூத்து நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்ப்பேன்.

இதுமட்டுமல்ல என் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். எங்கள் அப்பா எல்லோரையும் சுற்றி உட்காரவைத்துக் கதைகள் சொல்வார். இவை எல்லாம்தான் காரணம் என நினைக்கிறேன். 'ஒரு கடலோர கிராமத்தின் கதை' முழு நாவலும் என் அப்பா சொன்ன கதைகள்தாம்.

உங்கள் முதல் படைப்பும் அதுதானா?

அதற்கு முன்பு நிறைய கதைகள் எழுதி மலையாளப் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். சில நாட்களிலேயே கதைகள் திரும்ப வந்துவிடும். அப்போது தமிழ் எழுதத் தெரியாது. 1962 வாக்கில் எங்கள் பகுதியில் நடந்த மீனவர் - முஸ்லிம் கலவரத்தை 'ஒரு ரிப்போர்ட்டிங்' போல முழுமையாக எழுதினேன். அதை மலை யாளப் பதிப்பகங்களுக்கு அனுப்பினேன்.

அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ரிப் போர்ட்டிங்கை மலையாள எழுத்தாளர்கள் கே. ஜி. சேதுநாத், கரமணை ஜனார்த்தனன் ஆகியோர் படித்துவிட்டு 'சிறந்த நாவல்' என்றார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது 'கூனன் தோப்பு' நாவலாக வெளிவந்தது.

முதலில் பிரசுரமான கதை எது?

மெட்ராஸில் (சென்னை) இருந்து வந்த 'பிறை' என்னும் ஒரு பத்திரிகையில் 1968-ல் எனது முதல் சிறுகதை 'நரக பூமியில்' பிரசுரமானது. அந்தக் கதை மலையாளத்தில் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது. நிலா முதீன் என்பவர்தான் மொழிபெயர்த்தார். அந்தச் சமயத்தில் நானும் மெட்ராஸில் வேலை பார்த்ததால் 'பிறை'யில் தொடர்ந்து எழுதினேன்.

தமிழில் நேரடியாக எழுதியது எப்போது?

மிகச் சமீபத்தில்தான். 'சாய்வு நாற்காலி'க்கு முன்பு வரை நான் நேரடியாகத் தமிழில் எழுதிய தில்லை. நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிப் பிரதி எடுக்க வேண்டும். தமிழில் வாசிப்பும் 1990களுக்குப் பிறகுதான்.

2000 வருடத் தமிழ் எழுத்து வரலாற்றை விட்டுவிட்டு வேறோர் இடத்தில் இருந்து நீங்கள் கதை சொல்லத் தொடங்குகிறீர்கள் எனலாமா?

எனக்குத் தமிழ் இலக்கியம் தெரியாது. எங்கள் ஊர் பெரிய கலாச்சார பூமி. அங்கு இருந்த நிலப்பிரபுத்துவ அமைப்பால் அடிமைப் பட்ட மக்களின் வாழ்க்கையைத்தான் எடுத்துக் கொண்டேன். நான் ஜெயகாந்தனை வாசித்தது கிடையாது; மெளனியை வாசித்தது கிடையாது; பிச்சமூர்த்தியை வாசித்தது கிடையாது. எனக்குத் தெரிந்த விஷயத்தை, எனக்குத் தெரிந்தபடி என்னுடைய மொழியில் சொல்கிறேன். அவ்வளவுதான்.

தமிழில் நீங்கள் வாசித்த படைப்புகளில் உங்களைப் பாதித்தவை எவை?

என்னை எந்த நூலும், ஆசிரியரும் பாதித்தது கிடையாது. 1990களுக்குப் பிறகுதான் தமிழ் வாசிக்கவே ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் பேராசிரியர் கி.நாச்சிமுத்துதான். "தமிழ்ல ஏதாவது படிச்சிருக்கீங்களா?" எனக் கேட்டார். "படிச்சதில்ல சார்" எனச் சொன்னேன். "இத படிச்சுப்பாருங்க"ன்னு சுந்தர ராமசாமியின் 'புளிய மரத்தின் கதை'யையும் கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராம'த்தையும் கொடுத்தார். நான் முதலில் வாசித்தவை இந்த இரு நூல்கள்தாம்.

உங்கள் எழுத்துக்கு முன்னோடி என யாரையும் சொல்ல முடியாதா?

இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அவர்களுடைய மொழியைக் கொண்டே எழுதக் காரணமாக இருந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்தான். அவரது கதைகளைப் படித்த போதுதான் நாமும் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. அவர் பெரிய மேதை. அவர் மொத்தம் எழுதியது 1900 பக்கங்கள்தாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோலப் பக்கங்களைச் சுருக்கிவிடுவார். அவரின் நூறு பக்கங்களைப் படித்தால், ஆயிரம் பக்கமாக விரிந்துகொள்ளும். அது பஷீரிடம் உள்ள சிறப்பு. அது நம்மால் முடியுமா?

ஒரு வகையில் உங்கள் எழுத்துகளை வட்டார வழக்குக் கதைகள் என வகைப்படுத்தலாமா?

எனக்கு இதில் மாறுப்பட்ட கருத்து உண்டு. இப்படி வகைப்படுத்துவது எழுத்தைச் சிறுமைப் படுத்தும் வேலை. இது மாதிரியான வகைப் படுத்துதல் மலையாளத்தில் இல்லை. பெருமாள் முருகன், பூமணி, சோ. தர்மன் போன்றோர் எல்லாம் தமிழின் பெரிய எழுத்தாளர்கள். அவர்களையும் வட்டார வழக்கு என்றால், பொதுக்கதைகள் எவை? அசோகமித்திரன் எழுதுவதா?

உங்கள் கதைகளில் தொடர்ந்து இஸ்லாம் அடிப்படைவாதத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள். இதை உங்கள் சொந்த சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது?

எதிர்ப்புகள் வந்தன. யாரும் புத்தகம் வாங்க மாட்டார்கள்; படிக்க மாட்டார்கள். 'முஸ்லிம் எதிரி' எனப் பிரச்சாரம் செய்தார்கள். இதற்குச் சக படைப்பாளிகளும் காரணம். அதே சமயத்தில் கவி கா.மு.ஷெரீப், அப்துல் வகாப் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாராட்டுகளும் வந்தன. அடிப்படைவாதிகள்தாம் என்னை எதிர்த்தார்கள். சமூகத்தில் அவர்கள்தானே அதிகம்.

இன்றைக்குள்ள இஸ்லாமியத் தமிழ் எழுத்துகளை வாசிக்கிறீர்களா?

இம்மாதிரி வகைப்படுத்துதல் மீது எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் அர்ஷியா என்பவரின் முயற்சி எனக்குப் பிடித்திருந்தது. கீரனூர் ஜாகிர் ராஜா, களந்தை பீர்முகம்மது ஆகியோரின் எழுத்துகளும் பிடித்திருக்கின்றன.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

போர்த்துக்கீசியப் படையெடுப்பின் காரணமாக எங்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் இன்றைக்குப் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையைத்தான் நாவலாக எழுதிவருகிறேன்.

உங்கள் எழுத்துகளுக்கு வரலாறுதான் ஆதாரமாக இருக்கிறதா?

நான் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் கடந்த காலத்தின் வழியாக வரலாற்றுக்குச் சென்றுவிடுவேன். வரலாறு எனக்குப் பிடிக்கும். வரலாற்றுப் புத்தகங்கள் நிறைய வாசிப்பேன். வரலாற்றை மறந்துவிட்டுப் படைப்புகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். நிகழ்காலம் அதற்கு முக்கியமல்ல.


தமிழகம் :முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் ,டிஇஓ -முதன்மைகல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்: திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், திருநெல்வேலி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ஆனந்தி திருச்சிக்கும்,
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும்,
திருச்சி முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் சேலத்துக்கும்,
கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப்அந்தோணிராஜ் சென்னைக்கும் (எஸ்எஸ்ஏ), புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) சுபாஷினி திண்டுக்கல்லுக்கும்,
வேலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுப்பிரமணியன் தமிழ்நாடு பெற்றோர்
ஆசிரியர் கழக செயலாளராகவும்,
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(எஸ்எஸ்ஏ) சுவாமிநாதன்விழுப்புரத்துக்கும் (எஸ்எஸ்ஏ), சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கணேசமூர்த்திநீலகிரிக்கும்,
நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) முருகன் திருப்பூருக்கும்,
நாமக்கல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கோபிதாஸ் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,
திருச்சி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) பூபதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராகவும்,
ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் சீதாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ)மாற்றப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு விவரம்: ,
சென்னை ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த அனிதா, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராகவும்(எஸ்எஸ்ஏ),
தூத்துக்குடி டிஇஓ ரத்தினம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்விஅலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), திண்டுக்கல்
ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த பால்ராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ),
பட்டுகோட்டை டிஇஓ நாகேந்திரன், கரூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), கிருஷ்ணகிரி டிஇஓதுரைசாமி, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ),
திருவண்ணாமலை டிஇஓ கணேசன், பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், பழனி டிஇஓ கலையரசி, திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,
அறந்தாங்கி டிஇஓ தாமரை, நாமக்கல் கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும்,
சிவகங்கை டிஇஓ ரவிக்குமார், நீலகிரி கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும்,
கடலூர் டிஇஇஓ குணசேகரன், ஈரோடு கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும்,
கடலூர் டிஇஓ மல்லிகா, கோயம்புத்தூர் கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும், உத்தமபாளையம் டிஇஓ ஜெயலட்சுமி, தேனி கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும், அரியலூர் டிஇஓ கணேசன், புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், தூத்துக்குடி டிஇஓ செந்தமிழ்ச்செல்வி, நாகப்பட்டினம் கூடுதல் மாவட்டமுதன்மை கல்வி அலுவலராகவும்,
தென்காசி டிஇஓ வசந்தி, சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வி துறைநேற்று பிறப்பித்துள்ளது.

சனி, 26 ஜூலை, 2014

'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்


மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.

'எனது அரசு'(MyGov ) http://mygov.nic.in என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும் பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று, 60 நாட்கள் நிறைவுபெற்ற தினத்தில், இந்த சேவை துவங்கப்பட்டிருப்பது, இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பாகும்.

"இந்திய மக்கள் பலர், தங்களது நேரம், அறிவு, திறன் அனைத்தையும் அரசின் செயல் திட்டங்களுக்காக வழங்க தயாராக உள்ளனர். மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர் என்பதை, கடந்த 60 நாட்கள் ஆட்சி காலத்தில் நான் உணர்ந்துள்ளேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், "mygov.nic.in இணையப் பக்கம், அரசின் நிர்வாகத்தில், மக்கள் தங்களது பங்களிப்பினை அளிக்க சிறந்த வழியாக அமையும். இந்த இணையதளம், மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும்.

ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பில்லாமல் வெற்றியடையாது. மக்களின் பங்கு என்பது தேர்தலில் வாக்களிப்பதோடு முடிந்திவிடாது. அரசின் நடவடிக்கைகளில் மக்களின் பங்கு அவசியமானது" என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அரசின் இந்த இணையதள அறிமுக விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உள்துறை செயலாளர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த இணையதளத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை, தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே, மக்களின் கருத்துக்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம், அரசின் முக்கிய திட்டங்களுக்கு மக்களிடம் அந்த துறை ரீதியாக, கருத்துக்களை சேகரிக்கவும், திட்டங்கள் மீதான ஆலோசணை, எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பெற்று அதன் மீது விவாதங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 'ஆலோசனை', 'செயல்' என இரண்டு பிரிவுகள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக, பெண் கல்வி, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், டிஜிட்டல் இந்தியா, வேலை உருவாக்கம் என அரசின் சில திட்டங்கள் இணையதளத்தில் மக்களின் கருத்து பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன.


வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான  மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.
இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

TRB PG TAMIL :தமிழ்நாட்டின் "ஜேன் ஆஸ்டென்'

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பிரிட்டானியப் பெண் எழுத்தாளரான ஜேன் ஆஸ்டென்.  இவரது எழுத்துப் பணியை அவருடைய குடும்பத்தினர் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதிலேயே பலதரப்பட்ட இலக்கியப் பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள், ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத்தந்தன.

17-ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த "உணர்ச்சிகரமான புதின'ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகள் 18-ஆம் நூற்றாண்டு ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும், பொருளாதார ஆதாயத்துக்காகவும், ஆண்களையும் திருமணத்தையும் சார்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டின. 1811 முதல் 1816 வரை வெளியான சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி, பிரைட் அண்ட் பிரிஜுடிஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தன.

இவர் ஆங்கில பெண் எழுத்தாளர்களுள் மிகச்சிறந்த எழுத்தாளராகக் கருதப்பட்டார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. உலகெங்கும் ஆங்கில இலக்கியப் பாடங்களிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றன.

தமிழ் எழுத்தாளர் பற்றிய வரலாற்றுக் குறிப்பில் ஆங்கிலப் பெண் எழுத்தாளரைப் பற்றிய தேவையில்லாத முகவுரை எதற்கு என்று கேட்டுவிடாதீர்கள். ஜேன் ஆஸ்டெனுக்கும் தமிழ் எழுத்தாளர் அநுத்தமாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆம்! ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டென் போன்ற எழுத்தாளுமை மிக்கவர் தமிழ் பெண் எழுத்தாளர் அநுத்தமா. சிறந்த சமூகப் புதின ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் ராஜேஸ்வரி பத்மநாபன் என்ற இயற்பெயர் கொண்ட அநுத்தமா.

1950-60-களில் நடுத்தர குடும்பத்துப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாக பல படைப்புகளை எழுதினார். இவர், "தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென்' என்றே புகழப்பட்டார் என்றால், இவருடைய எழுத்தாளுமை எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவர் எழுதிய  மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம், மாற்றாந்தாய் போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றைப் போக்கும் நோக்கத்தோடு எழுதப்படுபவைதான் சமூகப் புதினங்கள். இவ்வகைப் புதினங்கள் சமுதாயச் சிக்கல்கள், சீர்திருத்தங்கள், பிரசாரங்கள் என்னும் போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வகையான புதினங்களை, மு.வ., வ.ரா., கு.வேங்கடரமணி, கல்கி, நாரண துரைக்கண்ணன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பா., லட்சுமி, அநுத்தமா, இராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, அனுராதா ரமணன் முதலியோர் படைத்துள்ளனர்.

ராஜேஸ்வரி பத்மநாபன், ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். மெட்ரிகுலேஷன் வரை படித்த இவர், தனது சொந்த முயற்சியால் தெலுங்கு,

இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

12-ஆம் வயதிலேயே பத்மநாபன் என்பவரை மணந்தார். புகுந்த வீட்டில் மாமனார் அவரை மகள்போல் நடத்தினார். தனது 22-வது வயதில் எழுதத்தொடங்கினார். தான் எழுதிய முதல் சிறுகதையான "ஒரே ஒரு வார்த்தை'யை மாமனாரிடம் படிக்கக் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு ""பலே'' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி பாராட்டியவர், லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து, "அநுத்தமா' என்ற பெயரை தெரிவுசெய்து, மகள்போல் இருந்த மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டி மகிழ்ந்தார்.

மாமனார் புனைபெயர் சூட்டிய பிறகுதான் அநுத்தமா என்ற பெயரில் எழுதிக் குவிக்கத் தொடங்கினார் ராஜேஸ்வரி பத்மநாபன். இவருக்கு வாய்த்த கணவர் பத்மநாபன், தவம் இருந்து கிடைத்த வரமோ என்பதுபோல் அநுத்தமாவுக்கு உற்ற துணையாகவும், உதவும் கரமாகவும் விளங்கினார்.

இவரது முதல் படைப்பான "அங்கயற்கண்ணி', கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது "மணல்வீடு' புதினம் முதல் பரிசு பெற்றது. இதன்பிறகு பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. அநுத்தமா எழுதிய கதைகள் அனைத்தும் குடும்பக் கதைகள். ஒவ்வொரு இல்லத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் அவை பிரதிபலித்தன.

ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்க்கப் பெற்றிருந்தார் அநுத்தமா. மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர். அவருடைய இத்தகைய

புலமைக்குக் கணவரே காரணம் என்றால்

மிகையில்லை.

தன் எழுத்துகளுக்குச் சிறப்பு சேர்த்த, வளர்த்த கி.வா.ஜகந்நாதன் மீது அநுத்தமாவுக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் இருந்தது. கி.வா.ஜ., எல்லோரிடம் அநுத்தமாவை அறிமுகப்படுத்தும்போது "எனது தங்கை' என்று சகோதரப் பாசத்துடனேயே அறிமுகப்படுத்துவாராம்.

ஒருமுறை கி.வா.ஜ., கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தரமுடியுமா எனக் கேட்க, அநுத்தமாவும் உடனே ஒப்புக்கொண்டாராம்.

""எத்தனை நாட்களில் தரமுடியும்?'' என்று கி.வா.ஜ. கேட்க, ""பத்து நாட்களில்'' என்று அநுத்தமா வாய்தவறிச் சொல்லிவிட்டாராம்.

""அது எப்படி ஒரு முழு நாவலைப் பத்து நாட்களில் உன்னால் எழுத முடியும்?'' என்று

கேட்டாராம்.

அன்றிரவே அநுத்தமா எழுதத்தொடங்கினார். எழுத எழுத; அந்தக் காகிதங்களிலேயே பிழை திருத்தி, கணவரிடம் கொடுப்பாராம். அநுத்தமா புதிய பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களை, பத்மநாபன் திருத்திய பிரதியாக

எடுப்பாராம்.

பெண்கள் எழுத்தாளராகப் பிரகாசிப்பது என்பது நமது தமிழ்ச் சமுதாயத்தில் கொஞ்சம் சிரமம்தான். காரணம், சில பெண் எழுத்தாளர்களுக்கு அவர்களது குடும்பமே முதல் எதிரியாக இருந்துள்ளது. ஆனால், மனைவியின் குறிப்பறிந்து நடந்துகொண்ட கணவர் பத்மநாபனின் குணத்தையும், புனைபெயர் வைத்து ஊக்கப்படுத்திய மாமனாரின் பண்பையும் என்னவென்று

சொல்வது!

கி.வா.ஜ.விடம் சொன்னபடி, சரியாகப் பத்தே நாள்களில் நாவலை முடித்துக் கொடுத்தபோது கி.வா.ஜ. நிஜமாகவே அசந்து போனாராம்.

1956-இல் இவர் படைத்த "பிரேமகீதம்' என்ற புதினம், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்பமரத்து பங்களா ஆகிய புதினங்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுக் கதைகளைத் தவிர, பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து, நான்கு புதினங்களைக் குழந்தை இலக்கியத்துக்கு நல்கியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய "ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிக் குவித்திருக்கிறார் அநுத்தமா.

"கேட்ட வரம்' என்ற நாவல், பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நாவல். இந்நாவலை காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பாராட்டியுள்ளார் என்றால், இதைவிட மிகப்பெரிய விருது ஒரு படைப்பாளிக்குத்

தேவையா என்ன?

அநுத்தமாவின் "ஒரே ஒரு வார்த்தை' எனும் நாவல் மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற பெருமைக்கும் புகழுக்கும்

உரியதாயிற்று.

""சமையலுக்கும் நாவலுக்கும் அடுக்களையில் இருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே'' என்று பாராட்டுவாராம் அகிலன்.

ஆல மண்டபம், நைந்த உள்ளம், ஒன்றுபட்டால், ஜயந்திபுரத் திருவிழா, துரத்தும் நிழல்கள், சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு), மாற்றாந்தாய், முத்துச் சிற்பி, சுருதிபேதம், கெüரி, லட்சுமி, தவம், பூமா, ஒரே ஒரு வார்த்தை, ருசியான கதைகள், அற்புதமான கதைகள், பிரமாதமான கதைகள், படுபேஷான கதைகள், அழகான கதைகள் ஆகியவை இவருடைய பிற படைப்புகள்.

ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் தேவை, அமைதியான சூழல், எழுத்துக்கு ஆக்கம் சேர்க்கும் குடும்பத்தாரின் ஒற்றுமை. எழுத ஊக்குவிக்கும் நல்ல நட்பு உள்ளங்கள், படைப்புகளைப் பாராட்டும் சிறந்த வாசகர்கள். இவை அனைத்தும் அநுத்தமாவின் வாழ்க்கையில் வரமாகக் கிடைத்தவை.  

குடும்பத்துக்கும் எழுத்துக்கும் செழுமை சேர்த்த அநுத்தமா, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவு, தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு மாபெரும் இழப்பு என்றாலும், காலத்துக்கும் அழியாத காவியங்களை அல்லவா விட்டுச்சென்றிருக்கிறார்!


மீண்டும் வேலை :மக்கள் நல பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

மக்கள் நல பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்களாக 13 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 13 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த
மனுவை நீதிபதி சுகுணா விசாரித்து, 13 ஆயிரம் பேருக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழகஅரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் டிவிஷன் பெஞ்சு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை உச்ச நீதிமன்றம்விசாரித்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் புதியதாக விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கடந்த ஒருவாரமாக வாதாடினார். அவர் வாதாடும்
போது, திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்ற ஒரே காரணத்திற்காக ஆட்சி மாற்றம்ஏற்பட்டதும் பழிவாங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 13 ஆயிரம் பேரை பணியை விட்டு அரசு நீக்கி உள்ளது.இதை ரத்து செய்யவேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, அரசு பிளீடர்
எஸ்.டி.எஸ்.,மூர்த்தி, அரசு சிறப்பு வக்கீல் இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும்பணி வழங்க முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு என்றனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தனர்.


Sent from my iPad

முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் :ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனிமாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார்முன்னிலையில் நடந்தது.மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துக்குமாரி பேசினார்.
பணி மாறுதல்மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் மாநில அளவில் காலிப்பணியிடங்கள் காட்டாமல்மறைக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. கலந்தாய்வு நாள் அன்று அனைத்து ஆசிரியர்களும் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை கண்டித்து ஆகஸ்ட் 9ல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்ததீர்மானிக்கப்பட்டது. பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழி மூலம் நடத்தாமல், பழையமுறையிலேயே நடத்த வேண்டும்.2004ல் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெள்ளி, 25 ஜூலை, 2014

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது

நடப்பாண்டு முதல், இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த அவர்: "தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவிப்பதிலும், சிறப்பிப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் வளர்த்த சான்றோர்களான கம்பர், கபிலர், உ.வே. சுவாமிநாத அய்யர், உமறுப் புலவர், ஜி.யு. போப் ஆகியோர் பெயரில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர, சொல்லின் செல்வர் விருது, கணினித் தமிழ் விருது மற்றும் தமிழ்த் தாய் விருது ஆகிய விருதுகளும் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்தது தமிழக அரசு.

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"" என்று கம்பரையும், வள்ளுவரையும், இளங்கோவடிகளையும் போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார்.

இவர்களில், உலகப் பொது மறையாம் திருக்குறளை படைத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கம்பர் பெயரில் கடந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல், நெஞ்சை அள்ளும் "சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இளங்கோவடிகள் விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

இதே போன்று, தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறுபவருக்கு 25,000 ரூபாய் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருது, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும்.

மேலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழறிஞர்களின் கோரிக்கையினை ஏற்று முன்னாள் முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பெருகி வரும் மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டும், கட்டட வசதிகளின் தேவையைக் கருத்திற் கொண்டும், 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பழந்தமிழரின் சிறப்புக்களையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழியை மேலும் வளர்க்கவும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், பழந்தமிழரின் வாழ்வியல் நெறிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினரும், உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


Sent from my iPad

வியாழன், 24 ஜூலை, 2014

Tamil PG dates and events



சோழன்... ராஜேந்திர சோழன்..

அந்த பாண்டிய மன்னனுக்கு மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன் என்று பெயர். சோழ ஆளுமையை தகர்த்தே ஆக வேண்டும் என்ற வெறியை உடையவன். சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டு மூச்சுத் திணறியவன்.

காவிரி கடலில் கலந்து வீணா வதை தடுப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட கிளை நதிகளை உரு வாக்கி, கால்வாய் களை பிரித்து புல் விளைந்த இடங்களெல்லாம் நெல் விளையும் பூமியாக்கி இருந்தார்கள் சோழர்கள்.

அந்தணர்கள் அரசருக்கு அடுத்தபடி நின்று யாருக்கு எங்கே என்ன எப்படி வேண்டுமென்பதை கலந்து பேசி தீர்மானிக்கிறார்கள். குடிமக்கள் விண்ணப்பம் இட்டவுடன் கூடிப்பேசி, உடனே நிறைவேற்றுகிறார்கள்.

ஒருமுறை ஆதூரச் சாலைக்கு ஐம்பது கல் நடந்து வந்த ஆடு மேய்க்கும் பெண்ணிடம், "எது உன் ஊர். என்ன பிரச்சனை உனக்கு" என கேட்க, "காலில் முள் தைத்து விட்டதய்யா. அந்த இடம் புண்ணாகி, சீழ் பிடித்து உயிர் போகும் வலி" எனக்கூறி அந்தக் காலை காட்டினாள். அதை பார்த்து விட்டு, ''கடவுளே" என்று நிர்வாகி கதறுகிறான். ஆடு மேய்க்கும் அந்த பெண்ணை அழைத்துச்சென்று சல்லியகிரியை என்று வழங்கப்படும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சீழை அகற்றி நூலால் தைக்கிறார்கள். காஞ்சன இலை ரசத்தை நோவு தெரியாமல் இருக்க கொடுக்கி றார்கள். இருபத்தியேழு வகை மூலிகைகள் இருக்கின்றன. களிம்பு தடவி, இலைகளை அப்பி, வாழை நாரால் கட்டு போடுகிறார்கள். போஷாக்கான உணவு கொடுக்கி றார்கள். தூங்கும்படி விசிறிவிடு கிறார்கள்.

இதையெல்லாம் மாறுவேடத் தில் ஊர்சுற்றிய பாண்டியன் பார்க்கிறான். ஆடு மேய்க்கும் பெண்ணிற்கே இத்தனை உயர்வு என்றால் மற்றவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும் என நினைக்கையில் அவனுக்கு தலை சுற்றியது. பாண்டிய நாடும் இப்படி மாறாதா என ஏங்கி னான். இடங்கை, வலங்கை என்று அடித்துக் கொள்கிறார்கள். மறவர்களுக்கிடையே சண்டை நடப்பது தினசரி பழக்கமே தவிர, ஒன்றாய் கூடி படை எடுக்கின்ற வழக்கமே இல்லையே என நினைந்து அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடுவதற்குள் சோழர் படை நுழைகிறது.

910-ம் வருடம். மன்னன் பராந்தகன் தலைமையில் ஒன்றி ரண்டா, பலநூறா, ஆயிரமா, சோழதேசப் படைகளை கணக்கிடமுடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் மதுரை நோக்கி வந்து இரண்டாக பிரிந்து மதுரையை சிதறடித்து சூறையாடி எவன் இடங்கை, எவன் வலங்கை என்று தேடித்தேடி அடிக்கி றார்கள். வெற்றியின் சின்னமாக கன்னியாகுமரியில் புலிக் கொடியை பறக்க விடுகிறார்கள். சுசீந்திரத்தில் இதற்கான கல்வெட்டு இருக்கிறது.

அதன்பிறகு பாண்டியர்களுக்கு கடுமையான கட்டளைகள் இடப் பட்டது. அதன்படி, பாண்டியர்கள் வாளேந்தக் கூடாது. வீரக்கழல் அணியக்கூடாது. பெரிய மீசை வளர்க்கக் கூடாது. சோழர்களைக் கண்டால் குந்தி உட்கார வேண்டும் என கட்டளைகள் நீண்டு கொண்டே போனது. அரச மக்களின் சகல நகைகளும், பண்டாரச் செல்வங் களும் கொண்டு வரப்பட்டன. தேவ ரடியார் பெண்கள் எங்கள் அரண் மனையை கழுவட்டும். பாண்டிய தேசத்தில் பூனை இருக்கலாம். ஒரு யானைகூட இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டன. நாக்கை அறுத்துக்கொள்கிற அளவுக்கு அவமானங்கள் நேர்ந்தன.

"நானும் தமிழன், நீயும் தமிழன். நமக்குள் போரா" என்ற கேள்விக்கு "ஆமாம். அதனால் என்ன, தரையில் படுடா நீ தமிழன்தான். ஆனால் உனக்கு துரோகி என்று பெயர்" என கொக்கரித்து சோழர்கள் சிவன் தலை பாம்பாய்ச் சீறினார்கள்.

இப்போதுதான் அடுத்தடுத்த பல கேள்விகள் எழுந்தன. "ஆமாம் பாண்டிய மன்னன் மாறவர்மனின் மணிமுடியும், செங்கோலும் எங்கே. வைரங்கள் பதித்த அரச போர்வை எங்கே. துணைக்கு வந்த இலங்கை படைகள் எங்கே. இலங்கை மன்னன் ஐந்தாம் கசபனின் சக்க சேனாதிபதி எங்கே. வெள்ளூரில் பல இலங்கை வீரர்களை அடித்து பல் உடைத்தோமே காலில் விழுந்து வணங்கி உயிர்பிச்சை கேட்டு ஓடினார்களே. அப்படியானால் மணிமுடி எங்கே, செங்கோல் எங்கே" கேள்விகள் நீண்டபடி இருந்தன.

பலரை பிரம்பால் அடித்ததில் விஷயம் வெளியே வந்தது. சக்க சேனாதிபதி இலங்கைக்கு மணிமுடியையும் செங்கோலையும் எடுத்துப்போய் விட்டான். அவனோடு மாறவர்மனும் ஓடிவிட் டான். மன்னனும் இல்லை. மணி முடியும் இல்லை. வடகிழக்கு பருவகாற்று உதவியால் ஒரு நாவாயில் சிறிய படையோடு பாண்டியன் சேர தேசத்தில் அடைக் கலம் புகுந்தான். இப்பொழுது மண் மட்டுமே தங்களுக்கு. மற்ற எதுவும் கிடைக் காது என சோழர்களுக்கு புரிந்தது.

சோழ மன்னன் பராந்தகன் பொருமினான். மணிமுடியை கேட்டு இலங்கைக்கு ஆள் அனுப்பினான். தரமறுத்து அப்போதைய இலங்கையின் நான்காம் மன்னன் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்கோடிக்கு போய் விடுகிறான். அடர்ந்த மரங் களை எளிதில் தாண்ட முடியாத நிலை.

பராந்தகனுக்குப் பிறகு கண்டா ராதித்தன். அதற்குப் பிறகு சுந்தர சோழன். அதற்குப் பிறகு உத்தம சோழன். அதற்குப் பிறகு இராஜராஜன். அத்தனை பேரும் அந்த மணிமுடியையும் செங்கோலையும் அடைய செய்த முயற்சி பலிக்கவில்லை.

இவர்கள் எல்லோரும் இறந்த பிறகு சோழ தேசம் எழுந்து நின்று தெற்குப் பார்த்து உருமியது. தீக்குகள் எட்டும் சிதறின. "தென் இலங்கை பூமியில் தானே இருக்கிறது. வெல்ல முடியாத வீரர்களா. செல்ல முடியாத கோட்டையா.

சோழர்கள் வெற்றி கொள்ள முடியாத களமா. பராந்தகர் ஒரு லட்சம் வீரர்களோடு போனார். நான் ஆறு லட்சம் வீரர்களோடு நாலாபக்கமும் உள்ளே நுழைவேன்" என கர்ஜித்தான் ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன்.

1017-ம் வருடம். காடுகளை அழித்து உள்ளே நுழைகிறான். பாண்டிய மன்னனின் மணிமுடி யையும் செங்கோலையும் கிழிந்த ஆடையையும் கைப்பற்றுகிறான். எந்த மன்னனின் கையில் அவை இருந்தனவோ அந்த மன்னனின் மணிமுடியையும் பறித்து சோழ தேசம் திரும்புகிறான். இலங்கைக்கும் தமிழ் தேசத்துக்கும் பெரும் பகை உண்டு. ராஜேந்திர சோழன் காலத்தில் அந்த வன்மம் தீர்க்கப்பட்டது.

ஐம்பது வயதில் அரச பதவி ஏற்று 82 வயதில் காஞ்சிபுரத்துக்கு அருகே பிரம்மதேசம் என்கிற ஊரிலே ராஜேந்திர சோழன் இறந்து போனான். பலநூறு மாளி கைகள் கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்தை விட்டு கவின் மிகு கற்சிலைகள் கங்கை கொண்ட சோழீஸ்வரத்தை விட்டு அவன் ஆருயிராய் நேசித்த பரமஸ்வாமியை விட்டு எசாளம், எண்ணாயிரம் வேதபாடசாலை களை விட்டு காஞ்சிபுரத்து வணிகர் கூட்டத்தை விட்டு, கைலாயநாதர் கோயில் விட்டு அவன் நேசித்த தமிழை விட்டு அந்த மாமன்னன் சிறு கூட்டத்தினரிடையே இறந்து போனான்.

ஒன்பது லட்சம் வீரர்களோடு கோதாவரிக் கரை வரை போனவன் அரசியல் காரணங்களுக்காக அங்கே நின்று தொடர்ந்து போக உத்தரவிட்டவன் பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்திலேயே தங்கி மரணமடைந்தான். அவன் கடைசியாக தரிசித்த சந்திர மவுளீஸ்வரர் கோயில் இன்னும் இருக்கிறது. அரசனுக்கும், அவனோடு உடன்கட்டை ஏறிய அவன் மனைவி வீரமாதேவிக்கும் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு நீர்பந்தல் அமைத்த கல்வெட்டு இருக்கிறது.

வரலாற்றின் பக்கங்கள் இன் றும் உயிர்ப்புடன் இருக்கின் றன. இன்றும் நாளையும் (ஜூலை 24, 25-ல்) கங்கை கொண்ட சோழபுரம் வாருங்கள். கொண்டாடுங்கள். காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள பிரம்மதேசம் வாருங்கள். கை கூப்பி தொழுங்கள்.


ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி

சிவராமன் - இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.

சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 36 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இங்குள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 169. அத்தனையும் சிவராமன் வழிகாட்டுதலில் இந்தப் பள்ளி மாணவர்கள் பார்த்துப் பார்த்து நட்டு வளர்த்தவை.

சிட்டம்பட்டிக்கு 7 கிலோ மீட்டரில் மருதூர் கிராமம். இங்கிருந்து 60 குழந்தைகள் சிட்டம்பட்டிக்கு படிக்க வருகிறார்கள். காலை ஏழு மணி பேருந்தை விட்டுவிட்டால் பள்ளிக்கு இவர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் ஆறரை மணிக்குத்தான் மருதூருக்கு செல்லும் பேருந்து வரும். அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் மாலையிலும் இந்தக் குழந்தைகள் நடந்துதான் வீடு திரும்ப வேண்டும்.

ஊர் செல்லும் வரை சாலையில் இரண்டு பக்கமும் நிழலுக்கு ஒதுங்கக் கூட மரம் இல்லாத நிலை முதலில் இருந்தது. ஆனால், இப்போது இந்தச் சாலையில் ஐம்பது மரக் கன்றுகள் இடுப்பளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. இது எப்படி? விளக்குகிறார் சிவராமன்.

''மருதூர் சாலையில் இரண்டு பக்கமும் மரங்களை நட்டு வளர்ப்பதற்காக, 'ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி' என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்காக 6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மட்டுமே பயன்படுத்தினோம். இதன்படி மருதூரைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஐம்பது செடிகளை ஒரு வருடத்துக்கு முன்பு கொடுத்தோம். அதை அவர்களே மருதூர் சாலையில் தங்களுக்குப் பிடித்தமான இடத்தில் நட்டார்கள்.

ஒவ்வொரு மாணவனும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வந்து, தாங்கள் நட்டு வைத்த மரக் கன்றுக்கு ஊற்ற வேண்டும். அதேபோல் மாலையில் வீடு திரும்பும்போதும் பள்ளியிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய் ஊற்ற வேண்டும். மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிந்ததும் அவர்கள் பராமரித்து வந்த கன்றுகளை அடுத்து வரும் மாணவர்கள் பராமரிக்க வேண்டும். காட்டுக் கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பூமியை வெப்பமடையச் செய்கின்றன. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக காட்டுக் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியிலும் எங்களது மாணவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தினத்தையொட்டி ஜூன் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் எங்கள் மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தோம். யார் அதிகமான காட்டுக் கருவேல மரச் செடிகளை வேருடன் பிடுங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவித்திருந்தோம். 3 நாட்களில் 23 மாணவர்கள் சேர்ந்து 1,54,031 கருவேல மரக் கன்றுகளை வேருடன் பிடுங்கிக் கொண்டு வந்தார்கள். பழத்திலிருந்து நேரடியாக நாம் எடுக்கும் விதைகளை விடவும் பறவைகள் தின்று போடும் விதைகளுக்கு வீரியம் அதிகம்.

அதனால், எங்கள் பள்ளிக்கு பறவைகளை வரவைப்பதற்காக பள்ளியின் மேல் கூரையில் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்திருக்கிறோம். மாணவர்கள் கொடுக்கும் சிறுசேமிப்புக் காசிலிருந்து தானிய வகைகளை வாங்கி வந்து மேல் கூரையில் போட்டு வைப்போம். பறவைகள் வந்து போகும் இடத்தில் வேப்பம் பழம் உள்ளிட்ட பழங்களை நாங்களே போட்டு வைப்போம்.

புளி, வேம்பு விதைகளை சேமித்து வைத்திருந்து மழைக் காலங்களில் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு புறம்போக்கு நிலங்களில் தூவச் சொல்லுவோம். பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள் அந்த நாளில் இனிப்புக்குப் பதிலாக மரக்கன்றுகளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

எங்கள் பள்ளிக்குள் இனி மரங்கள் வைக்க இடமில்லை. அதனால், சிட்டம்பட்டி கிராமத்துக்குள் மரங்களை நட தீர்மானித் திருக்கிறோம். அங்கே புதர் மண்டிக் கிடக்கும் தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்து குளக்கரையில் பனைக் கன்றுகளை நடப்போகிறோம்.

பனை மரங்கள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளுக்கு இணையானவை. தெப்பக் குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் எங்கள் பள்ளிக்கு குடி தண்ணீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் இருக்கும். ஆக, தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்வதில் பொதுநலம் கலந்த எங்கள் சுயநலமும் இருக்கிறது'' சிரித்தபடி சொன்னார் சிவராமன்.


மொபைல் ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்


மொபைல் ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எப்படி செயல்படுகிறது?

மாணவர்களுக்கு ஆசிரியர் வகுப்பெடுக்கும்போது மற்று மொரு ஆசிரியர் வகுப்பறையில் இருப்பார். அவர் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறை, அவர்களது உடல் மொழி, முக பாவனைகள், உள்ளிட்டவைகளை ஹார்ட் HART- (Human Affect Recording Technology) எனப்படும் கைப்பேசி ஆப்-ல் பதிவிடுவார்.

ஒரு பருவத்துக்கு ஒரு பாடத்துக்கு மூன்று முறை ஆசிரியர் இதனை பதிவிடுவார். இந்த தகவல்களைக் கொண்டு மாணவர்களின் செயல்பாடுகளை கணிக்க கொலம்பியா ஆசிரியர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர் ரயன் பேக்கர் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளார். இது ப்ராம்ப் ப்ரோடாக்கால் (BROMP-Baker Rodrigo Observation Method Protocol) என்றழைக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக 50 மாநகராட்சி ஆசிரியர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு இரண்டு பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ளன. இறுதிகட்ட வகுப்புகள் முடிந்த பிறகு இந்த ஆசிரியர்களுக்கு ப்ராம்ப் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் வழங்கப்படும். அதன் பிறகே அவர்கள் மாணவர்களை கணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டம் க்வெட் - என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. க்வெட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு துணைத் தலைவர் உமா மகேஷ் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் மாணவர்களை கணித்து விட முடியாது.

மிக நுட்பமாக அவர்களை கவனித்தால் மட்டுமே சரியான முடிவுகள் கிடக்கும் என்பதால், இது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

வகுப்புகளிலிருந்து கிடைக் கும் தகவல்கள் கொலம்பியா வில் உள்ள ஆசிரியர் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்படும்.

அவர்கள் எந்தவித மாற்றங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள்," என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, "ஒரு மாணவர் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் தொடர்ந்து குறைவான மதிப்பெண் எடுத்தால், அவர் பள்ளியை விட்டு நிற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாணவரும் எந்தெந்த பாடங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்று தெரிவதால், அவர்கள் பள்ளியை விட்டு நிற்காமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.

Sent from my iPad

சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க.கோரிக்கை

சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்வதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது :இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் !

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது :இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் !

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் பாலபாரதி, ' , 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2- வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்றார்

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ''அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது'' என்றார்.
இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்'' என்றார்


Sent from my iPad