வெள்ளி, 25 ஜூலை, 2014

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது

நடப்பாண்டு முதல், இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த அவர்: "தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவிப்பதிலும், சிறப்பிப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் வளர்த்த சான்றோர்களான கம்பர், கபிலர், உ.வே. சுவாமிநாத அய்யர், உமறுப் புலவர், ஜி.யு. போப் ஆகியோர் பெயரில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர, சொல்லின் செல்வர் விருது, கணினித் தமிழ் விருது மற்றும் தமிழ்த் தாய் விருது ஆகிய விருதுகளும் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்தது தமிழக அரசு.

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"" என்று கம்பரையும், வள்ளுவரையும், இளங்கோவடிகளையும் போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார்.

இவர்களில், உலகப் பொது மறையாம் திருக்குறளை படைத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கம்பர் பெயரில் கடந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல், நெஞ்சை அள்ளும் "சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இளங்கோவடிகள் விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

இதே போன்று, தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறுபவருக்கு 25,000 ரூபாய் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருது, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும்.

மேலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழறிஞர்களின் கோரிக்கையினை ஏற்று முன்னாள் முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பெருகி வரும் மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டும், கட்டட வசதிகளின் தேவையைக் கருத்திற் கொண்டும், 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பழந்தமிழரின் சிறப்புக்களையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழியை மேலும் வளர்க்கவும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், பழந்தமிழரின் வாழ்வியல் நெறிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினரும், உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக