செவ்வாய், 29 ஜூலை, 2014

மெய்ப்பாட்டியலில் வளரும் காதல்



மெய்ப்பாட்டியலில் வளரும் காதல்

காதலினால் மானுடர்க்குக் கல்வி உண்டாம்; கவலை தீரும்; கவிதை உண்டாம்; கலைகள் உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத் தீரே என்றான் பாரதி. காதல் இல்லா மனிதன் மிருகத்திற்குச் சமமானவன். தமிழர் வாழ்வும் பண்பாடும், காதலையும் வீரத்தையும் தழுவி நிற்பதாகும். அவற்றை இரு கண்களாக மதித்துப் போற்றினர் என்பதற்கு அவர்களின் இலக்கியங்களே சான்று. இவற்றிற்கு மேலாக வாழ்வியலைச் சொல்லப்புகும் தொல்காப்பியர், களவின் நிலைகளையும், அற்கானக் காரணத்தையும், களவில் ஒழுகும் தலைமக்களின் இயல்புகளையும் அவர்களின் மன உணர்வுகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவ்வாறு கூறிய செய்திகளில் தலைமகளுக்கு ஏற்படும் காதல் இயல்புகளையும் அதன்வழி, அவளின் அவத்தைகளையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

களவும் மெய்ப்பாடும்

வடவர் திருமண முறை எட்டு; ஆனால் தமிழர் திருமண முறையோ களவின் வழி கற்பில் புகுவதாகும், ஊழ்வகையால் பிறவிதோறும் சேர்தல் என்ற நம்பிக்கையை உடையவர்கள் தமிழர்கள். எதிர்பட்டுக் களவில் ஒழுகும் தலைமக்களுக்குச் சில இயல்புகள் ஏற்படுவதாகவும், அத்தகைய இயல்புகளின் வழி அவர்களிடம் அவத்தைகள் அதாவது, மெய்ப்பாடுகள் ஏற்படுவதாகவும், தொல்காப்பியர் விளக்குகிறார். காதல் என்றால் அவத்தைத்தான், அதை தொல்காப்பியர் மெய்ப்பாடுகளாக கூறுகிறார். களவுக்காலத்தில் தலைமகளுக்கு ஒன்பது வகையான இயல்புகளும் தலைமகனுக்கு ஏழு வகையான இயல்புகளும் நிகழ்வதாக களவியலில் தொல்காப்பியர் அறிவிக்கிறார்.

மெய்ப்பாடு என்பது இலக்கியத்தில் வரும் போது மெய்ம்மைப் பாடாகிறது. மனித உணர்வு அருவம்; அதனைப் பருப்பொருட்டாக்கித் தர இலக்கியம் முயல்கிறது. மீண்டும் படிக்கும் உள்ளம் அதனை வாங்கிக் கொண்டு அருவமாகவே உணர்கிறது. மெய்ப்பட - உருப்பட - மெய்ம்மைப்படத் தோன்றிப் படிப்பவருக்குச் சென்று சேர்தற்கு உதவுதலால் இஃது மெய்ப்பாடு எனப்பட்டது.

(தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கை மெய்ப்பாடுகள். ப.53)

மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும் (தொ.நூ.1460)

மெய்ப்பாடுகள் எட்டு என்றாலும், அவை விரியும் பொழுது 34 ஆகிறது. அவத்தைப் பத்தாகும். முதல் ஆறு அவத்தைகள் ஐந்திணைக்குரிய அவத்தைகளாகவும், ஏழாவது அவத்தை பெருந்திணைக்குரியதாகவும் எட்டாவது அவத்தை கைக்கிளைக்குரியதாகவும், ஒன்பதாவது மயக்கம், பத்தாவது சாக்காடாகவும் தொல்காப்பியர் கூறுகிறார். இனி களவில் தலைவியின் இயல்புகளைக் காண்போம்.

தலைவியின் இயல்புகள்

மாற்றம் என்பது மனிதத்தத்துவம். களவில் ஏற்படும் மாற்றம் மனிதனின் இயல்புகளில் குறிப்பிடத்தக்கது. பெருமையும் உரனும் ஆடுஉ மேன.... எனவும், அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்.... எனவும் கூறியவாறு உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றார் தொல்காப்பியர். அந்த வழியில் களவு மேற்கொள்ளும் தலைமகன் இயல்புகள் ஏழாகவும் தலைமகளின் இயல்புகள் ஒன்பதாகவும் கூறுகிறார். இவற்றை அவத்தை என்பர். அதில் தலைவியின் இயல்புகளாக

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அல்

சிறப்புடைய மரபின் அவை களவு என மொழிப (பொருள்.களவியல்.நூற்பா.9)

என்னும் நூற்பா மூலம் உரைக்கின்றார். களவு காலத்தில் தலைமகள், தன் சிந்தனை முழுவதும் தன் தலைவனையும் காதலையுமே நினைத்திருப்பாள். அதை ஒருதலை உள்ளுதல் என்றும்; தலைவனைப் பெற வேண்டும் என்ற வேட்கையும்; அவ்வாறு தொடர்ந்து காதலை எண்ணி நினைத்திருப்பதால் உணவு மறந்து உடம்பு மெலிதல்; உறங்காமையின் காரணமாக உளறுவது; சிந்தனையின் மயக்கத்தால் நாணத்தை மறத்தல், எதைக் கண்டாலும் தன் தலைவனின் அங்க அடையாளங்கள் போல் தோன்றல் பித்துப்பிடித்தது போல் இருத்தல்; மோகத்தின் காரணமாக மயக்கமாதல், எண்ணமெல்லாம் நிறைந்து சிந்தனையின் முடிவில் இறத்தல் போல்வன தலைவிக்கான களவுகால இயல்புகளாம். இந்த இயல்புகள் அவத்தைகள் என்று கொள்ளப்பட்டாலும் மெய்ப்பாட்டியலில் ஐந்திணைக் குரிய மெய்ப்பாடுகளைப் பத்து அவத்தைகளுள் ஆறு அவத்தைகளைத் தனியாக கூறுகிறார்.

களவின் அவத்கைள்

மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் முதலில் அகத்திணைக்கும், புறத்திணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகளைச் சொல்லி, பின் அகத்திற்கே உரியனவற்றை உணர்த்துகிறார். அவத்தைகளாகச் சொல்லும் பத்தில் பெண்பாலருக்கு உரியனவும் உள்ளன. ஆண் பாலுக்கும் உரியனவும் உள்ளன. களவியலில் தலைவியின் களவு கால இயல்புளைக் கூறிவிட்டு இங்கு அவளின் அவத்தைகளைச் சொல்கிறார். பத்து அவத்தைகளின் முதல் புணர்ச்சிக்குமுன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப்பின் நிகழும் மெய்ப்பாடுகள், களவிற்கும் கற்பிற்குமுரிய மெய்ப்பாடுகள் வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் கற்பிற்குரிய மெய்ப்பாடுகள் என விரித்துரைக்கின்றார்.

களவொழுக்கத்தில் பெண்களின் இயல்பு மாற்றங்கள் அவத்தைகளாகக் கொள்கிறார் தொல்காப்பியர். காதல் ஏற்பட்டால் தலைமகள் தன் காதலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்தாலே அவள் செயலாகயிருக்கும். அதன் நிமித்தமே அவள் இயல்புகள் மாறுகின்றன. தலைவனுக்கும் கூட தன் இயல்பு வெளிப்படாவண்ணம் அவள் நடந்துகொள்வாள். தொல்காப்பியர் இந்த நிகழ்வுகளையே முதல் அவத்தையாகக் கூறுகிறார். அதை,

"புகுமுக புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க் கின்மையொடு"

(தொல்.மெய்.நூ.257) என வரும் நூற்பா விளக்கும்.

அடுத்து, தலைமகள் காதலின் காரணத்தால் தன் அழகை மேன்படுத்துவாள். எதைச் செய்தாலும் நன்றாகயிருக்கவேண்டும். என்பதற்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வாள். கூந்தலை வரிப்பதும் கட்டுவதும் காதணிகளைக் களைவதும் அணிவதும், முறையாக அணிந்துள்ள அணிகளைச் சரிபார்ப்பதும், ஆடையைக் குலைந்து உடுத்தலுமாகிய செயல்களில் ஈடுபடுவாள். இதை தலைவியின் இரண்டாம் அவத்தையாகக் கூறுகிறார். இரண்டாம் அவத்தையின் கண்ணும் நேரில் தலைவனைப் பார்க்காவிடத்து அவள் செய்யும் செயல்களைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். இதை,

கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்ந்து உடுத்தல்..... (தொல்.மெய்.258)
 என்ற நூற்பா விளங்கும்.

இனி, நேரில் தலைமகனைப் பார்த்தவிடத்து அவள் செய்யும் செயல்களை,

அல்குல், தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு...... (தொல்.மெய்.நூ.259)

என்னும் நூற்பா வழி உணர்த்துகிறார். தனது இல்லத்தின் பெருமைகளைப் பேசி அவள் செய்யும் செய்கைகளை இவ்விடம் காணலாம். தலைமகனும் தலைமகளும் சந்திக்குமிடத்தில் இவை நிகழும் என தொல்வழி அறியலாம்.

மேற்கண்ட மூன்று கட்ட அவத்தைகளும் தலைவனோடு புணர்த்தலுக்கு முன் நடக்கும் அவத்தைகளாம்.

புணர்ச்சிக்குப்பின் தலைமகளிடத்தில் காணும் அவத்தைகளைப் பின் விளக்குகிறார். அதில் இடந்தலைப்பாடு காரணமாக தலைமகள் அலருக்கு நாணுதல் போன்ற செயல்களைக் காணலாம்.

பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் (தொல்.மெய்.நூ.260)
கொடுப்பவை கோடல்....

என்ற நூற்பா அவற்றை விளக்கும்.

ஐந்தாம், அவத்தையாக, காதலின் காரணமாக தலைமகனையே எந்தநேரமும், நினைத்திருப்பதால் தலைமகளானவள் தன் விளையாட்டை மறக்கிறாள். அலர் காரணமாக தலைவனை மறைவாக காணுதல் தலைமகனைக் காணாதவிடத்து உள்ள சோகத்தை அவனை கண்டவுடன் மறத்தல் பன்முறை ஆராய்ந்து புணர்ச்சிக்கு உடன்படல் போல்வனற்றைத் தொல்காப்பியர் கூறுகிறார். இதை,

தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தல்.... (தொல்.மெய்.நூ.261)

தலைமகன் மேல் கொண்ட மிகுந்த காதலால் தலைமகனின் கோலம் அழித்தலோடு, தன் கோலத்தையும் அழித்துக்கொள்ளுதல், அலரின் காரணமாக, தலைமகள் தலைமகனைச் சந்தேகப்பட்டுக் கலக்கமுற்றுக் கூறல் போல்வனவற்றை,

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்....... (தொல்.மெய்.நூ.262)

என்ற நூற்பா கூறுகிறது. இவை ஆறாம் அவத்தையாம்.

அடுத்து வருகின்ற அவத்தைகளைத் தொல்காப்பியர் அகத்திணைக்குக் கூறாமல் பெருந்திணை, கைக்கிளை உள்ளீட்டவற்றிற்குக் கூறுகிறார்.

இந்த ஐந்திணை அவத்தைகளைக் காணும் போது, காதல் கொண்ட பெண்ணின் வளர்கின்ற காதல் புலப்படும். களவின்கண் ஒரு பெண்ணின் மாறும் இயல்புகளைக் களவியலில் கூறிவிட்டு மெய்ப்பாட்டியலில் களவின் காரணமாக அவள்படும் அவத்தைகளை விவரிக்கிறார் தொல்காப்பியர். பத்து அவத்தைகளில் ஐந்திணை அவத்தைகள் பெரும்பாலும் பெண்பாலுக்குரியவனவாக அமைந்துள்ளன. களவியலில் கூறிய இயல்புகளையே ஒட்டியே மெய்ப்பாட்டியலில் அவத்தைகளாக விவரிக்கிறார். இதன்மூலம் இயல் தொடர்புக்கும் கருத்துத் தொடர்புக்கும் தொல்காப்பியர் முதன்மைத்தந்திருப்பது தெரிகிறது. அதோடு காதலின் பல நிலைகளும், அத்தகைய நிலைகளில் தலைமகளின் அவத்தைகளால் இயல்புகள் எவ்வாறு மாறுபடும் என்பதையும் தெளிவாக சொல்கிறார். தொல்காப்பியர் பொருள் மெய்ப்பாடு பற்றிப் பொதுவாக கருதினும் திணை இலக்கியமே அவர் கண்முன் நிற்கிறது. அகத்திணை மாந்தர்கள் பண்பு நலன்களை அவர்களின் தோற்றத்தின்வழி அறிகிறோம். அவர்களுடைய மன நிகழ்வுகளை அவர்களது தோற்றம், செயல், பழக்கவழக்கம் கொண்டு அறிந்து கொள்கிறோம். அந்தவகையில் இந்த பத்து வகை அவத்தைகள், களவில் ஈடுபடும் தலைமக்களின் மன உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுவதோடு, காதலின் வளர்ச்சி நிலைகளையும் காட்டுகின்றன.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக