பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்துவிட்டது. மாணவர்களெல்லாம் புத்தகமும் கையுமாகப் பரீட்சை எழுதும் நாளை எண்ணிப் பரபரப்பாக இருப்பீர்கள். "நாம படிக்காமல் விட்ட சேப்டர்ல இருந்து நிச்சயம் கேள்வி வரும்னு சொல்லிக்கிறாங்கடா… இப்ப தலையும் புரியல காலும் புரியல" என நண்பர்களுக்குள் பதற்றமாகப் பேசிக்கொண்டிருப்பீர்கள்.
"முக்கியமான பாடங்களை யெல்லாம் படிச்சுட்டோமா?"
"ரொம்பவும் கஷ்டம்னு விட்ட பகுதியையும் மனப்பாடம் செஞ்சாவது எழுதிடலாமா?"
"எது கஷ்டமான பாடமோ அதை மட்டுமே திரும்பத் திரும்பப் படிச்சிக்கிட்டிருந்தா நல்லா படிச்ச பகுதிகள் மறந்துபோய்டுமோ?" …
இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் பயங்களும் மூளையைத் துளைக்கின்றனவா? எவ்வளவுதான் படித்து அத்தனை பாடங்களையும் எழுதிப் பார்த்துப் பிழைதிருத்தம் செய்து தயார்நிலையில் இருந்தாலும் ஒருவிதமான படபடப்பு இருக்கத்தான் செய்கிறது அல்லவா! இந்தப் பதற்றத்திலிருந்து எப்படி விடுபட? இதோ சில எளிய வழிகள்.
பயம் எதற்கு?
முதலாவதாக இறுதிப் பரீட்சை எழுதப்போகிறோம் என்ற நடுக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் பல முறை படித்து, உங்கள் வகுப்புத் தேர்வுகளில் எழுதிப் பார்த்து, மீண்டும் மீண்டும் படித்த பாடங்களைத்தான் இப்போது பொதுத் தேர்வு என்ற பெயரில் எழுதப்போகிறீர்கள். ஒரே வித்தியாசம், இப்போது பரீட்சை வேறு பள்ளியில் நடக்கவிருக்கிறது.
தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட எல்லாப் பாடப் பிரிவுகளையும் பல முறை படித்திருப்பீர்கள். இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் முதலாவதாகத் தொடங்கும் பரீட்சையைக் கடைசியில் படியுங்கள்.
குறிப்பு எடுக்கலாம்
அதிகாலை என்பது அமைதியான வேளை என்பதால் படிக்கும்போது உடலும் மனமும் ஒருமுகப்படும். இதனால் படிக்கும் அத்தனை விஷயங்களும் நன்றாக மனதில் பதியும். அதே வேளையில் போதுமான ஓய்வும் அத்தியாவசியம். உங்கள் புத்தகங்களை விரித்துவைத்துப் படிக்கப் போதுமான இடம், சரியான வெளிச்சம், சவுகரியமான நாற்காலி இருந்தால் சிறப்பு. முக்கியமாக கவனச் சிதறல் உண்டாக்கும் கணினி விளையாட்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவை பார்வையில் படாமல் இருந்தால் நல்லது. சிலர் மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே படித்தால் ஆழமான வாசிப்புக்கு உதவும் என்பார்கள். ஆனால் பொதுவாக அமைதியான சூழல்தான் நல்லது.
படிக்கும்போதே குறிப்பு எடுப்பது, ஃபுளோ சார்ட் வரைதல், விளக்க வரைபடங்கள் வரைதல் ஆகியவை சிறப்புச் சொற்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். ஃபுளோ சார்ட் என்பது ஒரு தலைப்பின்கீழ் இடம்பெற வேண்டிய முக்கியத் தகவல்களைத் தனித் தனிப் பெட்டிகளில் துணைத் தலைப்புகளின் கீழ எழுதுவதாகும். அதே நேரத்தில் அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டிருக்கும் வரிசையில் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதாகும். இறுதிக் கட்டத் தயாரிப்புக்கு இவை மிகவும் கைகொடுக்கும். சரசரவென அத்தனை குறிப்புகளையும் புரட்டிப் பார்த்தாலே போதும்; படித்த அத்தனையும் நினைவுக்கு வந்துவிடும்.
குழுவாகக் கற்கலாம்
கடந்த ஆண்டு கேள்வித் தாள்களை வைத்து மாதிரித் தேர்வுகள் எழுதலாம். இதன் மூலம் பரீட்சை எழுதிய உணர்வு முழுமையாகக் கிடைக்கும். குறிப்பிட்ட கால வரையறையில் எழுதிப்பார்க்கும்போது உங்களுடைய நேர நிர்வாகத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை மாதிரித் தேர்வுகள் எழுதுகிறீர்களோ அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்குண்டு. குழந்தைகளுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வுக்குத் தயாராகும் குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வு தேவை என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
குழு கற்றல் முறை மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும். நண்பர்களோடு சேர்ந்து படிக்கும்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம், கடினமான கருத்து களை எளிதில் கலந்துரையாடிப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சிலருக்குக் குழுவாகப் படிக்கும்போது விளையாட்டுத்தனம் மேலோங்கும். அப்படியானால் நீங்கள் படித்தவற்றை உங்கள் பெற்றோரிடமோ அல்லது சகோதர, சகோதரிகளிடமோ விளக்குங்கள். இது தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்கக் கைகொடுக்கும். புரிந்த விஷயங்களை மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆகையால் படித்தவை மனதில் நிற்குமா என்ற பயமும் பறந்துபோகும்.
உணவில் கவனம்
பொதுவாகத் தேர்வு என்றாலே பதைபதைப்பு அதிகரிக்கும். அதிலும் பொதுத் தேர்வு என்றதும் மன அழுத்தம் அதிகரிக்கும். விளைவு அதிகப்படியாகச் சாப்பிடுதல், உறக்கமின்மை போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். இந்தச் சூழலில் உங்கள் உணவுப் பட்டியலைத் திட்டமிடுவது முக்கியம். எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்த்துவிட்டுப் பழங்கள், காய்கறிகள், வைட்டமின், புரதச் சத்து மிக்க உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.
சோர்வாக உணரும் சமயங்களில் கொய்யா, வாழை, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிட்டால் பசிக்கு ருசியான தீனியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். சோம்பலையும் தவிர்க்க இது உதவும். படிக்கும் நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க, காபி, தேநீர் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்குப் பதிலாக மோர், இளநீர், சத்து மாவுக் கஞ்சி அருந்தலாம். மூளை சுறுசுறுப்பாக வேலைபார்க்க ஆக்ஸிஜன் அவசியம். அதற்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
தேர்வு நாளுக்குத் திட்டமிடல்
தேர்வு எழுதப் புறப்படும்போது நிதானமான மனோநிலையில் இருப்பது அவசியம். அதற்கு என்ன தேவை? கடைசி நேரத் தயாரிப்பை முதலில் தவிர்க்க வேண்டும். தேர்வுக்குத் தேவையான உபகரணங்களை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டு எடுத்து வைப்பதற்குப் பதிலாக முன்கூட்டியே ஒரு சரிபார்ப்புப் பட்டியலை (Check list) தயார் செய்யுங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட பேனாக்கள், பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷார்ப்னர், கைக்கடிகாரம், தேர்வு நுழைவுச்சீட்டு, குடிநீர் பாட்டில் ஆகியவை இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். தேர்வு நடக்கவிருக்கும் மையத்துக்குச் செல்லும் வழியை, பயணிக்க வேண்டிய நேரத்தை தூரத்தை முன்கூட்டியே சரிபார்த்துவிடுங்கள்.
தேர்வு தினத்தன்று
தேர்வு அறையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாளை விநியோகித்து 15 நிமிடங்கள் அளிப்பார்கள் இல்லையா! அப்போது கேள்விகள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள்.
கேள்வித் தாளில் இடம் பெற்றிருக்கும் வரிசையில்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. நன்றாக பதில் தெரிந்த கேள்விகளை முதலில் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இப்படி எழுதும்போது ஓரிரு முறை நீங்கள் சரிபார்க்க வேண்டியது கேள்வியின் எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறோமா என்பதுதான்.
நேர நெருக்கடி ஏற்பட்டால் பதில்களைப் பத்திகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரு வரிப் புள்ளிகளாக மளமளவென எழுதிவிடுங்கள். இதன் மூலம் கேள்விகளைத் தவறவிடாமல் இருக்கலாம். விளக்க வரைபடங்களுக்கு விவரத் துணுக்குகள் எழுத மறவாதீர்கள்.
எதுவாக இருப்பினும் ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற முனைப்பு இருப்பது சரிதான். இருந்தாலும் மதிப்பெண்களைவிட வாழ்க்கை பெரியது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக