இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் 1
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைப்பது; சமண, பௌத்த, வைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணுவது; புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டு தமிழ்த்தேசியம் காண்பது.
இது மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாது, வணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது.
மொழியாலும், பொருளாலும், இலக்கிய நயத்தாலும், இன்சுவையாலும் முதன்மை பெறும் காப்பியம் இது. பல்வேறு வகையான சிந்தனை மரபுகளையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கி இருப்பது. விரிந்த களப் பின்னணியும் காலப் பின்னணியும் கொண்டது. பல்வேறு இன மக்கட் பிரிவினர் பற்றிப் பேசுவது. சமூக, சமய, அரசியல் சிந்தனைகளின் களஞ்சியமாகத் திகழ்வது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தருகின்ற ஓர் உன்னதக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரம் - கதைப்பின்னல்
சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்என மூன்று காண்டங்களைக் கொண்டது. புகார்க்காண்டம்-10 காதைகள்; மதுரைக்காண்டம் 13-கதைகள்; வஞ்சிக்காண்டம் 7-காதைகள்; ஆக முப்பது காதைகளையுடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக