ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

நம்பியாண்டார் நம்பிகள்

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

நம்பியாண்டார் நம்பிகள் வரலாறு
.

பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் இவர். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர்.

பிள்ளையார்க்கு அமுதூட்டல்


திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனை புரியும் ஆதி சைவக் குடும்பத்தில் தோன்றியவர் இவர். பெற்றோர் சிவபிரானைச் சுந்தரர் குறித்துப் போற்றும் நம்பி என்னும் பெயரைச் சூட்டி உரிய பருவத்தில் உபநயனம் செய்வித்து வேத சிவாகமங் களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தனர். ஒருநாள் இவர் தந்தையார் வேற்றூர்க்குச் செல்ல நேரிட்டது. தந்தையார் தம் மைந்தரை அழைத்து பிள்ளையார்க்குப் பூசை நிவேதனம் செய்து பள்ளிக்குச் செல்லுமாறு பணித்து வெளியூர் சென்றார். தந்தை கட்டளைப்படி நம்பிகள் காலையில் எழுந்து நீராடி மலர் பறித்து மாலை தொடுத்துக்கொண்டு தாயார் தயாரித்து அளித்த நிவேதனத்துடன் ஆலயம் சென்றார். பிள்ளையார்க்குத் திருமஞ்சனம் முதலாயின செய்து தாயார் அளித்த நிவேதனத்தை எதிரே வைத்து பிள்ளையாரை அமுது செய்தருளுமாறு பலமுறையும் வேண்டி நின்றார். நாள்தோறும் தந்தையார் படைக்கும் நிவேதனத்தைப் பிள்ளையார் உண்டு வருவ தாக எண்ணிய நம்பிகள் தன் பூசையில் ஏதேனும் தவறு நேர்ந்ததோ என்று உளம் நைந்து வருந்தியவராய்ப் பிழையிருப்பின் மன்னித்து திருஅமுதை ஏற்றருள வேண்டும் என வேண்டினார். அதற்கும் பிள்ளையார் வாளா இருத்தலைக் கண்டு மனம் பொறாதவராய்த் தன் தலையைக் கோயில் சுவரில் மோதிக் கொள்ள முற்பட்டார். அது கண்டு திருவுளம் இரங்கிய பிள்ளையார் `குழந்தாய் பொறு` எனத் தடுத்து நிவேதனத்தை மகிழ்வோடு உண்டருளினார்.

கலைஞானம் கைவரப் பெறல்


இந்நிகழ்ச்சியால் நம்பிகள் பள்ளி செல்லக் காலம் தாழ்த்தது என்றும் இனிச் சென்றால் ஆசிரியர் தன்னைத் தண்டிப்பார் என்றும் கூறப் பிள்ளையார் நாமே அப்பாடங்களை உனக்கு கற்பிப்போம் எனக் கூறித் தாமே நம்பிகளுக்குத் தமிழ் கற்பித்தருளினார்.

நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்

கற்கும் சரக்கன்று காண் (திசுவருட்பயன் - 1)

என்னுமாப்போல விநாயகர் திருவருளால் நம்பிகள் கலை ஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றார்.

விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார்.

இவ்வற்புத நிகழ்ச்சி நாடெங்கும் பரவியது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அபயகுலசேகரன் என்னும் இராசராச மன்னன் அப் பிள்ளையாரை வழிபடுதற் பொருட்டும் தன் உள்ளத்தில் நெடு நாட்களாக இருந்த கவலையைத் தீர்த்துக் கொள்ளற் பொருட்டும், விநாயகருக்கு உகந்த பழ வகைகள், கரும்பு, தேன், அவல், எள்ளுருண்டை முதலான பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தடைந்தான். நம்பிகளை வணங்கி இவற்றைப் பிள்ளையார் ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டினான். மன்னன் விரும்பிய வண்ணம் நம்பிகள் பிள்ளையார்க்கு அபிடேக ஆராதனை கள் புரிந்து மன்னன் கொண்டு வந்த நிவேதனப் பொருள்களைப் படைத்து அமுது செய்தருளுமாறு வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றருளினார்.

அது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் நெடு நாளைய கவலையை நம்பிகளிடம் தெரிவித்தான். மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்தருள வேண்டுமெனக் கேட்டுக் கொண் டான். நம்பிகள் மன்னனின் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார். அவர் வேண்டுகோளை ஏற்ற பொல்லாப் பிள்ளையார் `தில்லையில் தேவாரமூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` எனக் கூறியதோடு திருத்தொண்டர் வரலாறுகளையும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்தியருளினார்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகளும் அபய குலசேகரனாகிய சோழ மன்னனும் மகிழ்ந்து தில்லையை அடைந்து அவ்வறையைத் திறக்கு மாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவாரமூவர் கையடையாளம் இட்டுள்ளதால் அவர்கள் வந்தால் அன்றி அவ்வறைக் கதவைத் திறத்தல் இயலாது எனக் கூறக்கேட்ட மன்னன் மூவர் திருவுருவங் களுக்கும் அபிடேக ஆராதனைகள் செய்வித்து எழுந்தருளச் செய்து அவ்வறைக்கு எதிரே நிறுத்திட மூவரும் வந்துவிட்டனர். கதவைத் திறக்கலாமே எனக் கூறத் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு வழியின்றிக் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்த ஏடுகளைக் கறையான் புற்று மூடியிருக்கக்கண்ட மன்னன் மனம் வருந்தி எண்ணெய் சொரிந்து புற்றை அகற்றிப் பார்த்த அளவில் ஏடுகளில் பல செல்லரித்திருந்ததை அறிந்து அளவிலாத துயருற்றான். அந்நிலையில் `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க` என்றொரு அசரீரி அனைவரும் கேட்க எழுந்தது. மன்னன் ஆறுதல் அடைந்து அவ்வேடுகளைச் சிதையாமல் எடுத்து அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.

திருமுறை வகுத்தவர்


நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாக வும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய வற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை யின் வகைநூலாய் பொல்லாப்பிள்ளையார் தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு திருத் தொண்டர் திருவந்தாதி என்ற வகை நூலையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது திருஏகாதசமாலை என்னும் பிரபந்தத்தையும் அருளி மன்னன் விருப்பின்படி அவற்றையும் இத்திருமுறையில் சேர்த் தருளினார்.

காலம்


நம்பியாண்டார் நம்பிகள், திருமுறைகளை வெளிப்படுத்திய முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் இராசராச சோழன் (கி.பி. 985-1014) காலத்திலும், முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் பலரும் கருதுவர். உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத் துள் அபயகுல சேகரன் இராசராசன் என்றே குறிப்பிடுகின்றார். பன்னிரு திருமுறைகளில் பதினொரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பிகளே தொகுத்தருளினார் என்பதாலும், அவரால் தொகுக்கப் பட்ட ஒன்பதாம் திருமுறையில் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழன் எடுப்பித்த கோயிலும் இடம் பெற்றுள்ளமையாலும் இவ்விரு மன்னர் காலங்களிலும் நம்பிகள் வாழ்ந்தவர் என்று கொள்ளலே முறை. அங்ஙனமாயின் நம்பிகள் காலம் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலம் எனக் கோடலே பொருந்துவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக