புதன், 4 டிசம்பர், 2013

ஏற்காடு தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டுப்பதிவு; 8-ந் தேதி முடிவு தெரியும்

ஏற்காடு தொகுதியில் ஓட்டுப்பதிவு இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடக்கிறது. இதையட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை 8-ந் தேதி நடக்கிறது.
நேரடி போட்டி
ஏற்காடு தொகுதி எம்.எல்..வாக இருந்த பெருமாள்(.தி.மு..) கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்ததையட்டி, அத்தொகுதிக்கான இடம் காலியாக உள்ளது. இதனால் ஏற்காடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் .தி.மு.. சார்பில் மறைந்த எம்.எல்.. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு..சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். என்றாலும் .தி.மு.&தி.மு.. இடையேதான் நேரடி போட்டி நடைபெறுகிறது.
2 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள்
ஏற்காடு தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர். பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர். திருநங்கைகள் 6 பேர். இவர்கள் ஓட்டுப்போட வசதியாக 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து தேர்தலுக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 4 மாவட்ட போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீசார் என 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார். மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடிகளில் 269 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணைய தளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.
இணையதள வசதி இல்லாத 21 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
ஆள்மாறாட்டம் செய்தால் தண்டனை
இன்று நடைபெறும் இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திலோ, வாக்களிப்பு நேரத்திலோ தவறான ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க முயற்சித்தால் ஓராண்டு சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முன்னிலையில்சீல்வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான சேலம்&ஏற்காடு ரோட்டில் உள்ள சி.எஸ்.. பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 8&ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது.

புகார்! சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மீது ஆசிரியர்கள் "வசூல்' குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க தீர்மானம்

மதுரை மாவட்ட சார்நிலை கருவூலங்களில் பணப் பலன்கள் பெறும்போது, அலுவலர்கள் சிலர் கட்டாய "கமிஷன்' வசூல் செய்வதாக ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர்.மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி பேரையூர் உட்பட தாலுகாக்களில் சார்நிலை கருவூலங்கள் உள்ளன. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் உட்பட பல்வேறு பணப் பலன்களுக்கு, இந்த அலுவலகங்களை தான் அணுகவேண்டியுள்ளது. மேலும், சேமநல நிதியில் கடன் பெறுவது, ஈட்டிய விடுப்பு சம்பளம் பெறுவது, அகவிலைப்படி நிலுவைத் தொகை பெறுவது மற்றும் ஓய்வூதியப் பலன்களை பெறவும் இந்த அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது பல அலுவலகங்களில், மொத்த பணத்தின் விகிதாசாரம் அடிப்படையில் ஒரு சதவிகிதம்
"
கமிஷன்' கட்டாயமாக வசூலிக்கின்றனர் என்பது ஆசிரியர்கள் புகார். இதைக் கண்டித்தும், கலெக்டரிடம் புகார் அளிக்கவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.அச்சங்கத் தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது:பணப் பலன் தொடர்பாக, பல்வேறு பணிகளுக்கு சார்நிலை கருவூலங்களை ஆசிரியர்கள் அணுகவேண்டியுள்ளது. மொத்த பணத்தில் விகிதாசாரம் அடிப்படையில் கட்டாய கமிஷன் வசூலிப்பதாக, எங்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பல மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க முடிவு செய்து, பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்றனர்.மாவட்ட கருவூல அலுவலர் முரளிதரன் கூறுகையில், ""கட்டாய வசூல் பிரச்னை தொடர்பாக இதுவரை எனக்கு எவ்வித புகார்களும் வரவில்லை. ஆசிரியர்கள் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது குறித்து தகவல் இல்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விருப்பமில்லை,'' என்றார்.
   NEWS SOURCE DINAMALAR

கதைகளின் ராணி'

கதைகளின் ராணி' என சக எழுத்தாளர்களால் வர்ணிக்கப்பட்டவர் வை.மு. கோதைநாயகி. நாடகசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், கர்நாடக இசைப் பாடகி, சுதந்திரப் போராட்டத் தியாகி, சமூக ஆர்வலர் என பன்முகத்தவராக விளங்கிய வை.மு. கோதைநாயகி, 1901ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று காஞ்சிபுரம், நீர்வளூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் என்.எஸ். வெங்கடாச்சாரி - பட்டம்மாள்.
கோதைக்கு ஒரு வயதாகும்போதே தாய் இறந்துவிட்டார். பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்த காலகட்டம் அது. 1907ஆம் ஆண்டு கோதைக்கு ஐந்து வயதானபோது, ஒன்பது வயதான வை.மு. பார்த்தசாரதிக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்.
கோதை படிக்க வேண்டுமென விருப்பப்பட்டார் பார்த்தசாரதி. மாமியாரிடமிருந்து தமிழையும், தெலுங்கையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் கோதை. 1924 முதல் தெருக்குழந்தைகளை அழைத்துவந்து அவர்களுக்குக் கதை சொல்லி மகிழ்ந்த கோதை, திருவாய்மொழி பாசுரங்களைப் தொடந்து பாடுவதன் மூலம் தமிழ்மொழிச் செறிவை வளர்த்துக்கொண்டார்.
குழந்தைகளுக்குப் பழைய புராணக் கதைகள் அனைத்தும் சொல்லித் தீர்ந்துபோன ஒரு கட்டத்தில், சமூகம் சார்ந்த புதிய கற்பனைக் கதைகளை அவர் சொல்ல ஆரம்பித்திருந்தார். குழந்தைகளை மட்டுமல்லாது வீட்டுப் பெரியவர்களையும் அவரின் கதை சொல்லும் பாங்கு வெகுவாக ஈர்த்திருந்தது.
கோதையின் கதை சொல்லும் திறனையும், கீர்த்தனைகளை இசைப்பதில் அவருக்கிருந்த லயிப்பையும் கண்டு வியந்த பார்த்தசாரதி, அக்காலத்தில் பிரபல நாடக நிறுவனங்களாக இயங்கிய அன்னையர் நாடக கம்பெனி, மதுரை பாய்ஸ் கம்பெனி, தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் கம்பெனி முதலிய நாடக கம்பெனிகள் அரங்கேற்றிய பல நாடகங்களைப் பார்க்க கோதையை அழைத்துச் சென்றார். அதுவே கோதையின் படைப்பிலக்கியத்திற்கு வித்திட்டிருக்கிறது.
தமிழில் சரளமாக எழுதப் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால், தோழி பட்டம்மாளிடம் தான் சொல்பவற்றை அப்படியே எழுதித் தரச்சொன்னார். அப்படி அவர் படைத்த முதல் நாடகத்தின் பெயர் 'இந்திர மோகனா'. இந்நூலை 1924ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி நோபிள் பிரஸ் வெளியிட்டது.
பிரபல இதழ்களான தி இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா வெளியிட்ட விமர்சனங்கள் இந்நூல் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான காரணங்களாக அமைந்தன.
இந்த வரவேற்பு கோதையின் எழுத்தார்வத்தை அதிகப்படுத்தியது. பட்டம்மாளிடமே எழுதுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். பிறகு 'வைதேகி', 'பத்மசுந்தரம்' ஆகிய நூல்களைப் படைத்தார். இத்தருணத்தில் வடுவூர் துரைசாமி அய்யங்காரிடமிருந்து அழைப்பு வர, தன் கணவரோடு சென்று அவரைச் சந்தித்தார் கோதை. 'மனோரஞ்சனி' என்ற மாத இதழொன்றை அப்போது நடத்திவந்தார் வடுவூரார். படைப்புகளை அவ்விதழில் தொடராக எழுதிப் பின் நூலாகக் கொண்டுவருவது அவர் வழக்கம். இப்பாணியிலேயே கோதையின் நூல்களையும் கொண்டுவர யோசனை கூறினார். இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த 'ஜகன்மோகினி' இதழை வாங்கி நடத்துவது குறித்தும் எடுத்துக் கூற, 'ஜகன்மோகினி' இதழின் பொறுப்பினைக் கோதை எடுத்துக்கொண்டார்.
48 பக்கங்களுடன் அவ்விதழ் 1000 பிரதிகள் அச்சாயிற்று. கோதையின் 'பத்மசுந்தரம்', 'ராதாமணி' நாவல்கள் தொடராக வெளிவந்தன. ஆண்டுதோறும் ஒன்றிரண்டு தனி நாவல்களையும் அவர் எழுதினார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, சுத்தானந்த பாரதி, ராஜாஜி, சோமசுந்தர பாரதி, டி.கே.சி. போன்ற ஆளுமைகளின் படைப்புகளையும் வெளியிட்டார். 48 பக்க இதழை 72 பக்க இதழாக உருமாற்றினார்.
கோதையின் ஐந்து நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. ‘அனாதைப் பெண்’, ‘ராஜமோகன்’, ‘தியாகக்கொடி’ (1937), ‘நளினசேகரம்’ (1942), 'சித்தி' (1968) ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் 'சித்தி' படத்துக்காக சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார்.
கோதை பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். கேட்ட மாத்திரத்திலேயே வசீகரிக்கின்ற குரல் வளம் கொண்டிருந்த கோதையின் ரசிகர்களில் மகாகவி பாரதியாரும் ஒருவர். 'ஆடுவோமே' பாடலைக் கோதை இசைப்பதற்கெனவே அவர் எழுதியதாகவும் கூறப்படுகிறது. கோதை இயற்றிய தனிப் பாடல்களும் கீர்த்தனைகளும் இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசண்ட் அம்மையார் மூலம் சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தொடர்பு ஏற்பட, சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை இணைத்துக்கொண்டார் கோதை. 1925இல் காந்தியையும், கஸ்தூரிபாயையும் சந்தித்து வந்த பிறகு, கதராடைகளையே அணிய ஆரம்பித்தார்.
1931ஆம் ஆண்டு மகாத்மாவின் அழைப்பை ஏற்றுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு 6 மாத சிறைத்தண்டனை பெற்றார். 1932இல் லோதி கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின்போது 'சோதனையின் கொடுமை' , 'உத்தம சீலன்' ஆகிய நாவல்களைப் படைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 10 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் அரசு அவருக்கு வழங்க, அதை வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்துக்குத் தந்துவிட்டார்.
05-02-1956இல் அவரது ஒரே மகனான வை.மு. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இயற்கை எய்த, அவரின் பிரிவின் துயர் தாங்காத கோதை படுக்கையில் வீழ்ந்தார். 20-02-1960இல் உயிர் நீத்தார். இவர் மறைவு குறித்து தி இந்து, ஆனந்த விகடன், கல்கி, சுதேசமித்திரன் முதலிய இதழ்கள் தலையங்கம் வெளியிட்டன.
சுமார் 115 நூல்களை எழுதியுள்ள கோதை 1958இல் எழுதிய நாவல் 'கிழக்கு வெளுத்தது'. 'துப்பறியும் ராஜாராம் நாயுடு' மற்றும் 'குளிர்ந்த நெஞ்சம்' ஆகிய நாவல்கள் அவர் எழுதி முற்றுப் பெறாமல் போனவை.