ஏற்காடு தொகுதியில் ஓட்டுப்பதிவு இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடக்கிறது. இதையட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை 8-ந் தேதி நடக்கிறது.
நேரடி போட்டி
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்ததையட்டி, அத்தொகுதிக்கான இடம் காலியாக உள்ளது. இதனால் ஏற்காடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க.சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். என்றாலும் அ.தி.மு.க&தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நடைபெறுகிறது.
2 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள்
ஏற்காடு தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர். பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர். திருநங்கைகள் 6 பேர். இவர்கள் ஓட்டுப்போட வசதியாக 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து தேர்தலுக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 4 மாவட்ட போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீசார் என 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார். மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடிகளில் 269 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணைய தளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.
இணையதள வசதி இல்லாத 21 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
ஆள்மாறாட்டம் செய்தால் தண்டனை
இன்று நடைபெறும் இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திலோ, வாக்களிப்பு நேரத்திலோ தவறான ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க முயற்சித்தால் ஓராண்டு சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முன்னிலையில் ‘சீல்‘ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான சேலம்&ஏற்காடு ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 8&ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக