செவ்வாய், 24 டிசம்பர், 2013

TRB PG TAMIL : 30 மற்றும் 31–ந்தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளது


முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

 தேர்வு எழுதிய அன்றே தமிழ்பாடத்தில் 44–க்கும் மேற்பட்ட வினாக்கள் சரியாக தெரியவில்லை. வினாத்தாள் சரியாக அச்சாகவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதன்காரணமாக தமிழ் பாடத்திற்கு உரிய முடிவு தவிர மற்ற பாட முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 7– ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்தபடி இருந்தனர்.

 இந்த நிலையில் மாலை தமிழ் பாடத்திற்கு உரிய முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

 மதுரை
 மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 சேலம்
 சேலம் அருகே சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்க சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் செல்லவேண்டும்.

 திருச்சி
 திருச்சி புதூரில் உள்ள பிஷப் கீப்பர் மேல்நிலைப்பள்ளியில் கரூர், திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளது.

 விழுப்புரம்
 விழுப்புரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சான்றிதழ் சரிபார்க்க செல்லவேண்டும்.

 வேலூர்
 வேலூரில் ஊரிஸ் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளது.

 சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு எந்த ஊரில் எத்தனை மணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது என்ற விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 கோர்ட்டு உத்தரவு
 இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி நடத்தப்பட உள்ளது. ஒரே மதிப்பெண்ணை பலர் எடுத்திருப்பதால் ஒரே மதிப்பெண் பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டதால் வேலைக்கு உத்தரவாதம் என்று யாரும் நினைக்கக்கூடாது. இந்த பட்டியல் தற்காலிகமானதுதான். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் இறுதி பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
 இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக