வெள்ளி, 27 டிசம்பர், 2013

பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு


பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள். மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 தேர்வு பயம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு எழுதப்போகும் மாணவ–மாணவிகள் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறோமோ என்று எண்ணுவார்கள். சிலர் அதிகமாக பயப்படுவார்கள். அதுபோல மாணவர்கள் பலருக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வும் இருக்காது. பாலியல் குறித்து பல சந்தேகங்கள் இருக்கலாம். இது போன்ற விவகாரங்களில் மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்லாமல் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பேணவும் தமிழ்நாடு ழுழுவதும் 10 உளவியல் நிபுணர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 3 மாவட்டங்களில் தங்கள் பணியை செயல்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களும் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்தேகம் தீர்க்கப்படுகிறது உளவியல் நிபுணர்கள் இவர்களுக்காக புதிதாக வாங்கப்பட்ட வேன்களில் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைபடி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு மன அழுத்தம்போக்க கலந்தாய்வு நடத்துகிறார்கள். அப்போது பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கும் அந்த உளவியல் நிபுணர்கள் பதில் அளித்து சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள்.
 இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:– வேன்களில் பள்ளிகளுக்கு சென்று உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இதுவரை 24 ஆயிரத்து 500 மாணவ–மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுவிட்டது. 1 லட்சம் பேருக்கு ஆலோசனை இந்த கல்வி ஆண்டில் மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். எனவே மாணவர்கள் தேர்வு பயம் இல்லாமல் தேர்வு எழுதவேண்டும். மேலும் எந்த சந்தேகம் இருந்தாலும் ஒளிவு மறைவு இன்றி உளவியல் நிபுணர்களிடம் சொல்லி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். 
இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக