புதன், 4 டிசம்பர், 2013

புகார்! சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மீது ஆசிரியர்கள் "வசூல்' குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க தீர்மானம்

மதுரை மாவட்ட சார்நிலை கருவூலங்களில் பணப் பலன்கள் பெறும்போது, அலுவலர்கள் சிலர் கட்டாய "கமிஷன்' வசூல் செய்வதாக ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர்.மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி பேரையூர் உட்பட தாலுகாக்களில் சார்நிலை கருவூலங்கள் உள்ளன. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் உட்பட பல்வேறு பணப் பலன்களுக்கு, இந்த அலுவலகங்களை தான் அணுகவேண்டியுள்ளது. மேலும், சேமநல நிதியில் கடன் பெறுவது, ஈட்டிய விடுப்பு சம்பளம் பெறுவது, அகவிலைப்படி நிலுவைத் தொகை பெறுவது மற்றும் ஓய்வூதியப் பலன்களை பெறவும் இந்த அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது பல அலுவலகங்களில், மொத்த பணத்தின் விகிதாசாரம் அடிப்படையில் ஒரு சதவிகிதம்
"
கமிஷன்' கட்டாயமாக வசூலிக்கின்றனர் என்பது ஆசிரியர்கள் புகார். இதைக் கண்டித்தும், கலெக்டரிடம் புகார் அளிக்கவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.அச்சங்கத் தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது:பணப் பலன் தொடர்பாக, பல்வேறு பணிகளுக்கு சார்நிலை கருவூலங்களை ஆசிரியர்கள் அணுகவேண்டியுள்ளது. மொத்த பணத்தில் விகிதாசாரம் அடிப்படையில் கட்டாய கமிஷன் வசூலிப்பதாக, எங்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பல மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க முடிவு செய்து, பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்றனர்.மாவட்ட கருவூல அலுவலர் முரளிதரன் கூறுகையில், ""கட்டாய வசூல் பிரச்னை தொடர்பாக இதுவரை எனக்கு எவ்வித புகார்களும் வரவில்லை. ஆசிரியர்கள் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது குறித்து தகவல் இல்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விருப்பமில்லை,'' என்றார்.
   NEWS SOURCE DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக