திங்கள், 31 ஆகஸ்ட், 2015

TRB PG TAMIL கம்பராமாயணம்

 கம்பராமாயணம் 
 

வடமொழி வால்மீகி இராமாயணத்தைத் தழுவி இயற்றப்பட்ட நூல் கம்பராமாயணம். இயற்றியவர் கம்பர்.
 

'தமிழிலுள்ள இலக்கியங்களில், வேறு உலக மொழிகளில் உள்ள ஒப்பரிய இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகும் பெருமையது கம்ப இராமாயணமே.  ஹோமரின் இலியத் (கிரேக்கம்) வர்ஜிலின் ஈனியட், ஆடிசி (லத்தீன்), மில்டனின் சுவர்க்கநீக்கம் (ஆங்கிலம்) போன்றவற்றோடு நிகராக விளங்கும் திறம் மிக்கது கம்பராமாயணமே' என்கிறார் மது.ச. விமலானந்தம். 'கம்பன் காவியம் தமிழரது கவித்துவத்தின் பேரெல்லை' என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தமிழிலக்கியத்தில் இது மிகப்பெரிய நூல். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்கள், 113 படலங்கள், 10569 விருத்தப்பாக்களைக் கொண்டது கம்பராமாயணம். கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.
 

  கம்பர்
 

'கவிச்சக்ரவர்த்தி' எனப் போற்றப்பட்ட கம்பர் சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர். காலம் 9ஆம் நூற்றாண்டு, 12ஆம் நூற்றாண்டு என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.   அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார் கம்பர்.
 

கம்பராமாயணம் தவிர, ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகிய பிற நூல்களையும் கம்பர் இயற்றியுள்ளார்.  'கல்வியிற் பெரியவர் கம்பர்',  'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' ஆகிய தொடர்கள் கம்பரின் கவித்திறத்தை விளக்குபவை. 
 

  கம்பராமாயணத்தின் சிறப்புகள்
 

கம்பராமாயணம் கதை அமைப்பிலும் கவிதை நயத்திலும் கற்பனை வளத்திலும் நாடகத்திறனிலும் காப்பியப் பாங்கிலும் சிறந்து விளங்குகிறது. 'கம்பசித்திரம்', 'கம்ப நாடகம்' என்று இதன் கவிச்சிறப்பு போற்றப்படுகிறது.
 

கம்பராமாயணக் கதை அமைப்பில் இழையோடும் அறக்கருத்துகள் பலவாகும்.
 

1. ஒருவனுக்கு ஒருத்தி, 2. கற்பின் திறம், 3. பிறன் மனை விழையாமை, 4. பொருந்தாக் காமத்தின் தீமை, 5. பெரியோர் சொல் கேட்டல், 6. சகோதரத்துவம், 7. தொண்டின் சிறப்பு ஆகியவை இராமன், சீதை, இராவணன், சூர்பனகை, பரதன், இலக்குவன், குகன், அனுமன் ஆகியோர் வாயிலாக உலகிற்கு உணர்த்தப்படுகின்றன.
 

தன்னிகரில்லாத தலைவனான இராமனின் பண்புகள் காப்பியம் முழுவதும் பேசப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சில :
 

இராமன் காடேக வேண்டும் என்னும் கொடுஞ்சொல்லைத் தசரதன் சொன்னதாகக் கைகேயி இராமனிடம் கூறுகிறாள். தசரதன் கட்டளைப்படி பட்டமேற்க வேண்டிய நிலையில், இச்சொல்லைக் கேட்ட இராமன் முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைக் கம்பர் கூறுகிறார். சாந்தமும் சமநிலையும் துன்பங்களைப் பொருட்படுத்தாத உரமும் இராமன் பண்புகள் அல்லவா! கைகேயியின் கொடுஞ்சொல் கேட்டபோதும் இராமனின் தாமரைமுகம் மாறவில்லை; வாடவில்லை; அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றிருந்தது.
 

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உணரக்கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா.

 

(கம்ப. 1602)
 

இராமனின் இந்தச் சமநிலைத்தன்மை சீதையின் உணர்வு வாயிலாகவும் வெளிப்படுவதைக் காணலாம்.
 

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்
'இத்திருத் துறந்து ஏகு' என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.

 

(கம்ப. 5088)
 

இந்தச் சமநிலைத்தன்மை வேறு எந்தக் காப்பியத் தலைவனிடமும் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.
 

கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் இராவணன்  -  இலங்கை அரசன்.  இராமனுக்கு இணையான வலிமையும் வீரமும் பொருந்திய இராவணனின் பெருமையையும் பெண்ணாசையால் அவன் அவற்றை இழந்த சிறுமையையும் ஒரே பாடலில் உணர்த்தி விடுகிறார் கம்பர்.
 

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்ததோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான்.

 

(கம்ப. 7272)
 

கம்பரின் காப்பியச் சிறப்பிற்கு ஒரு மிகச்சிறந்த அடிப்படை கம்பரின் பாத்திரப் படைப்பு ஆகும். நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், வெவ்வேறு பண்பியல்புகள், முரண்பட்ட மனநிலைகள், மானிடர், குரக்கினத்தார், அரக்கர், பறவை எனும் பல்வேறு வகையினர், அவர்களின் இன்ப, துன்பச் சூழல்கள், அச்சூழல்களால் தூண்டப்பட்டு அவர்கள் எதிர்வினை புரியும் முறைகள் என விரியும் ஒரு மிகப்பரந்த படைப்பு விரிவில் கம்பர் ஊடும் பாவுமாக இயங்கிப் பின்னிய மாபெரும் காப்பியமே கம்பராமாயணம். அவ்வளவு பாத்திரங்களோடும் உறவாடி,   அவர்களேயாகி,   அவர்களுக்குள் நின்று அவர்களுக்கு எதிராகவும் ஆகிக் காப்பியத்தின் அடிப்படை நோக்கமாகிய 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்ற முடிப்பை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்லும் திறத்தினைக் காப்பியத்தினுள் நுழைந்து காண்போர் நன்குணரலாம்.  மானுடப் பண்புகளையெல்லாம் நுணுகி நுணுகி ஆராய்ந்து எடுத்துக்காட்டிய மாட்சி கண்டுதான் பாரதி கம்பனைக் 'கம்பன் என்றொரு மானிடன்'  எனப் பாராட்டினார்;  மானுடத்தை முழுதறிந்த மானிடனாகக் கண்டார்.
 

தன்னலமற்ற தொண்டிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவன் அனுமன் என்றால் தன்னைத் தேடி வந்த அரச பதவியையும் துறந்த பண்பாளன் பரதன். அவனுடைய பற்றற்ற தன்மையை உணர்ந்த குகன், ஆயிரம் இராமர்கள் உனக்குச் சமமாக ஆவாரோ? எனப் புகழ்கின்றான். ஒரு பாத்திரத்தின் தன்மையை மற்றொரு பாத்திரம் வாயிலாக உணர்த்தும் காப்பிய உத்திக்குப் பின்வரும் பாடல் சான்றாகும்.
 

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
'தீவினை' என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

(கம்ப. 2337)


 

  கவித்திறன்
 

கம்பர் இராமாயணத்தை இயற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பாவகை விருத்தப்பாவாகும். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கையாளப்பட்ட விருத்தப்பா,     சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவரால் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுச் சிறப்புப் பெற்றது.  ஆனால் விருத்தப்பாவின் புகழை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர் கம்பர். 'கவிச் சக்ரவர்த்தி' எனப் போற்றப்படும் அளவிற்கு விருத்தப்பாவினைக் கையாண்ட கம்பருக்குப் பிறகு எழுந்த அனைத்துக் காப்பியங்களிலும் விருத்தாப்பாவையே கவிஞர்கள் பயன்படுத்தினர் எனலாம். 
 

'கம்பன் கவியே கவி' என அறிஞர் போற்றும் கவித்திறன் கம்பரின் தனித்திறன். கதை நிகழ்ச்சிக்கும், பாத்திரங்களின் சூழலுக்கும் ஏற்பச் சந்த நயத்தோடு அமைந்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம். அறுபதுக்கும் மேற்பட்ட ஒலி நயங்களை அமைத்துப் பாடிய கம்பர் 'சந்தவேந்தன்' எனப் புகழப்பட்டார்.
 

இலட்சிய நாடாகக் கோசல நாட்டைக் காட்டும் 'வண்மையில்லை ஓர் வறுமையின்மையால்' என்ற பாடலும் அழகிய பெண்ணுருவம் கொண்டு சூர்ப்பனகை அசைந்துவரும் அழகை மெல்லோசைகளால் எடுத்துரைக்கும் 'பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்'  எனும் பாடலும் குகன் சீற்றத்தை வெளிப்படுத்தும் 'ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?' எனும் பாடலும், மருத நில மாட்சியைக் கூறும் 'தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்க'  எனும் பாடலும் சந்த நயம் மிகுந்த பாடல்களுக்குச் சான்று அளிக்கின்றன.
 

ஒரு நிகழ்வின் இயல்பு, அழகு, அது தரும் பாதிப்பு, நிகழ்த்தும் பாத்திரத்தின் சொல்லமுடியாத அழகு - இவை எல்லாவற்றையும் கம்பர் கருத்தமைவால் மட்டுமன்றிக் கவிதையின் ஓசை(சந்த) அமைவாலும் காட்டவல்லவர். அதாவது ஏட்டில் படிப்பவனுக்கும், அதைக் காதில் கேட்பவனுக்கும் அவர்கள் மனத்தில் ஒரேவிதமான வண்ணச் சித்திரம் உருவாகி,  அவர்கள் புது உலகுக்கு இடம்பெயர்வர்.  இத்தகைய உன்னத ஆற்றலைச் சீதை மணமண்டபத்துக்கு வரும் நிகழ்வைக் கூறும் கம்பர்கவியில் காணலாம்.
 

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதிசீதம்
மின்னின் எழில் அன்னவள்தன் மேனி ஒளிமான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்

 

(கம்ப. 1144)
 

  உவமைச் சிறப்பு
 

கம்பரின் உவமைகள் தனித்தன்மை வாய்ந்தவை.  கூர்மையானவை.  கவிதையின் உட்பொருளைக் கண்முன் காண்பதற்கும், மனத்தால் உணர்வதற்கும் ஏற்ற பல உவமைகளைக் கம்பராமாயணம் முழுவதும் காணமுடிகிறது.
 

இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்ன அருங் கொடுமனக் கூனி தோன்றினாள்

 

எனக் கூனியின் வருகையும்,
 

கல் மருங்கு எழுந்து என்றும் ஓர்துளி வரக் காணா
நல் மருந்துபோல் நலன்உற உணங்கிய நங்கை

 

எனச் சீதையின் உடல், மனம் இரண்டும் வாடிய தன்மையும் உவமைகளால் உணர்த்தப்படுகின்றன.
 

விசுவாமித்திரர் இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்கும்போது மகனைப் பிரிய மனமில்லாத தயரதன் நிலைமையை எடுத்துரைக்கும் பாடல் உவமையின் உச்சம் என்றே போற்றப்படுகிறது. பிறவியிலேயே கண்ணில்லாத ஒருவன் திடீரென்று கண்ணைப் பெற்று,  உடனே மீண்டும் பார்வை இழந்தால் எவ்வாறு அதிர்ந்து துன்புறுவானோ அதைப்போலக் கடுந்துயரம் கொண்டான் தயரதன் என்பதைக் கம்பர் கூறும்விதம் காணுங்கள்.
 

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் 

 

எறிவேல் பாய்ந்த 

 

புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில் 

 

புகுத லோடும் 

 

உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின் 

 

நூசலாடக் 

 

கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் 

 

கால வேலான்.
 

(கம்ப.328)
 

கண்ணிழந்தான் பெற்றிழந்தான் - என்பது மிக அரிய உவமை. 'துயரம் உந்த ஆருயிர்நின்று ஊசலாட' என்பதில் தசரதன் உள்ளத்துள் நிகழும் மன-உயிர்ப் போராட்டம் காட்சியாகவே விரியும் ஒரு புதுமையான படிமத்தைக் காண்கிறோம். 
 

காலத்தால் அழியாத காப்பியம் கம்பராமாயணம்,  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுச்சுவை இன்பம் பயப்பது. 'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என, பாரதி பெருமையோடு கம்பரைப் புகழக் காரணமாக அமைந்த காப்பியமாகத் திகழ்கிறது.  

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

உண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம். உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்

. தமிழகத்தில், கடந்த2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்பணிநியமனம் செய்யப்பட்டனர். பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம் முடிக்கப்படாததால், ஆசிரியர்கள்அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் தகுதி காண் பருவம் முடிப்பதற்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி
சான்றிதழ்களுக்கும் 'உண்மை தன்மை சான்றிதழ்' சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை,ஆசிரியர்களிடம் இருந்து பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பும் பொறுப்பு தலைமையாசிரியர்களை சார்ந்தது. தகுதி காண் பருவம் முடிந்தால் மட்டுமே, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு, பண்டிகை முன்பணம், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற சலுகைகளை பெறமுடியும். உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதால், தகுதி இருந்தும் சலுகைகள் கிடைக்காமல் உள்ளனர்.

கோவைமாவட்டத்தில், 200 ஆசிரியர்கள் உண்மை தன்மை சான்றிதழ் கிடைக்காததால், தகுதி காண் பருவம் முடிக்க முடியாமல்பாதிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களைபூர்த்தி செய்து கொடுப்பது மட்டுமே ஆசிரியர்கள் நிலை என்பதால், தலைமையாசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டவிண்ணப்பங்களின் நிலை என்ன, எப்போது கிடைக்கும், தாமதத்துக்கு காரணம் என்ன என்று ஒன்றும் புரியாமலும், இப்பிரச்னைக்கு யாரை அணுகுவது என்று தெரியாமலும் ஆசிரியர்கள் குழப்பத்தில்உள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள்ஆகிவிட்டன. உண்மை தன்மை சான்றிதழ் கிடைக்காமல் விடுப்பு கூட எடுக்கமுடியாமல் சிரமப்படுகிறோம். தலைமையாசிரியரிடம் கேட்டால் அனுப்பிவிட்டேன் என்கிறார். 'அதிகாரிகளிடம் நேரடியாக கேட்க வழியில்லை. அவ்வாறு, விண்ணப்பங்கள் நேரடியாக எடுத்து சென்றாலும் தபால் போடும்இடங்களில் போட்டு செல்ல கூறுகின்றனர். உண்மை தன்மை சான்றிதழ் உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கீதா கூறுகையில்,''தகுதி காண் பருவத்திற்கான உண்மை தன்மை சான்றிதழ் விண்ணப்பங்கள் பெற்றதும் சென்னைக்கு அனுப்பிவிடுவோம். படிப்பை முடித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால், உண்மை தன்மை பெறுவதில் சற்று காலதாமதம் ஏற்படும். உண்மை தன்மை சான்றிதழ் வரவர, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கிவிடுவோம்,'' என்றார்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.செப்டம்பர் 1-ந் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.


சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. கொறடா சக்கரபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டம் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ப.தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்படும். 

மானிய கோரிக்கைகள்

25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது. அன்றைய தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

26-ந் தேதி (புதன்கிழமை) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

27-ந் தேதி (வியாழக்கிழமை) பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடக்கும். 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை ஆகும். அதேபோல், 29-ந் தேதி (சனிக்கிழமை), 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். 

31-ந் தேதி (திங்கட்கிழமை) சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

5 நாட்கள் கூட்டம் இல்லை

செப்டம்பர் 2-ந் தேதி (புதன்கிழமை) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங் கள் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 3-ந் தேதி (வியாழக்கிழமை) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. 

செப்டம்பர் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொழில் துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், போக்குவரத்துத்துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 5, 6 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகள் அரசு விடுமுறை நாளாகும். செப்டம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் இல்லை. செப்டம்பர் 12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். 

விநாயகர் சதுர்த்தி விடுமுறை

செப்டம்பர் 14-ந் தேதி (திங்கட்கிழமை) வருவாய் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

செப்டம்பர் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கால்நடை பராமரிப்பு, மீன் வளம், பால் வளத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும், செப்டம்பர் 16-ந் தேதி (புதன்கிழமை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும் நடைபெறும். 

செப்டம்பர் 17-ந் தேதி (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் அரசு விடுமுறை ஆகும்.

செப்டம்பர் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 19-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கூட்டம் இல்லை. செப்டம்பர் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறைநாளாகும். 

காவல் மற்றும்தீயணைப்பு துறை

செப்டம்பர் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வணிகவரி, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும், செப்டம்பர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். 

செப்டம்பர் 23-ந் தேதி (புதன்கிழமை) நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

செப்டம்பர் 24-ந் தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை ஆகும்.

செப்டம்பர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 26 (சனிக்கிழமை), 27 (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். 

சட்டமுன்வடிவு 

செப்டம்பர் 28-ந் தேதி (திங்கட்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை, வனம், சுற்றுச்சூழல் துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். மேலும், அன்றைய தினம் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். ஏனைய அரசினர் அலுவல்கள் நடைபெறும். 

இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார். 


செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு?

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி கூட உள்ள நிலையில்,கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த கூட்டத்தெதொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும்.குறிப்பாக முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் பட்டதாரி  இடைநிலை ஆசிரியர்கள் புதிய நியமனம் குறித்த அறிவிப்பு இருக்கும்.எத்தனை பணியிடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள்



பின்நவீனத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Post Modernism என்று கூறுவர். நவீனத்துவ நாவல் என்பது கதையை வரிசைமுறைப்படி கூறுவதாக இருந்தது. நவீனத்துவத்தின் கதை கூறும் வகைமையினைத் தகர்த்து, பிறழ்வு வரிசையில் கதை கூறுவதே பின்நவீனத்துவ நாவல்.

அண்மைக் காலங்களில் தமிழில் ஓரளவிற்குப் பின்நவீனத்துவ நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சாரு நிவேதிதா, '0' டிகிரி, பேன்சி பனியன் போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.

பிரேம் குமார் எழுதிய சொல் என்றொரு சொல் என்ற பின்நவீனத்துவ நாவல் புராண மரபுகளையும், இதிகாசங்களையும், பழங்கதைகளையும் எடுத்துக் கொண்டு புதுப்புது முறைகளில் கதை கூறுகிறது.

யுவன் சந்திரசேகரின், பகடை ஆட்டம் என்ற நாவல் பின்நவீனத்துவ நாவல்களில் புகழ் பெற்றது. சீனா, திபெத், இந்தியா, இமயமலை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட ஜோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் கற்பனைச் சரித்திரமே இந்நாவலாகும். கடந்த நூற்றாண்டில் மனித குலம் அடைந்த பெருந்தீமைகளின் கொடுங்கனவுகளின் அவலங்களும், அழிவுகளும் இந்த நாவலில் நிகழ்வுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நாவலில் நேரடியாக, காலவரிசையில் அமைந்த கதை சொல்லும் முறை இல்லை.

எம்.ஜி.சுரேஷ் எழுதிய 37c என்ற நாவல் தலைப்பிலேயே பின்நவீனத்துவ நாவல் என்பதைப் புலப்படுத்துகிறது. சராசரி மனிதனின் உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட். இதைச்செல்சியசாக மாற்றினால் 37 டிகிரி c என்று சொல்லலாம். 37 காலிபர் என்றும் சொல்லலாம். காலிபர் என்பது துப்பாக்கி வகை. இது வன்முறையின் குறியீடு. மனிதன், வன்முறை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் உருவகமாக 37 C என்று குறிப்பிடலாம். எனவே இதற்கு 37 C எனப் பெயர் வைத்திருக்கிறார். இந்நாவல் 37 அத்தியாயங்களைக் கொண்டது. தொடக்கமும் முடிவும் ஒன்றுபோல அமைந்து உள்ளது.

  • பின்நவீனத்துவ நாவல்கள் உணர்த்தும் செய்திகள்
  • பின்நவீனத்துவ நாவல்களில் இதுவரையில் கற்பிக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் தகர்கின்றன. புனிதம், உன்னதம் என்றெல்லாம் சொல்லப்பட்டவை உடைபடுகின்றன.பகுத்தறிவுக்கு உட்படுகின்ற இவற்றின் மூலம் மதம், சாதி, பண்பாடு, விழுமியங்கள் தகர்க்கப்படுகின்றன. உலகளாவிய நோக்கில் மனித இருத்தலையும், ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் பற்றிச் சிந்திக்கப் பின்நவீனத்துவ நாவல்கள் பயன்படுகின்றன.

     

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள்






    இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் சமூகரீதியில் புதிய போக்குகளை எதிர்கொண்ட காலம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அரசியல் தத்துவங்களும் ஆறுதலளித்த மதங்களும் தம் மேலாதிக்கத்தை இழந்திருந்த, எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் இருத்தல் குறித்த கசப்பும் நிரம்பி வழிந்த தருணம் அது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச நிதிநிறுவனங்களின் மூலதனக் கொடுங்கோன்மை, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஆழமாக ஊடுருவியது. பல்வேறு நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மனித ஆக்கங்கள் எல்லாமே சந்தைக்கானவையாக மாற்றப்பட்டன. நுகர்பொருள் பண்பாடு தனிமனித வாழ்வின் மீது மூர்க்கமாகத் திணிக்கப்பட்டது. இச்சூழல் கலை இலக்கியத் தளத்திலும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலித்தது.

    தமிழில் காத்திரமான நவீன இலக்கியம் சிறுபத்திரிகை சார்ந்த தளத்திலிருந்துதான் கடந்த ஐம்பதாண்டுகளாகப் பிரசுரம்பெற்று வருகின்றது. காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, அம்ருதா, உயிர் எழுத்து முதலான தீவிர இதழ்களின் தொடர்ந்த இயக்கம் வாசகப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது. இணைய இதழ்கள், வலைப்பூக்கள் ஆகியன உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே இலக்கியரீதியில் வலுவான தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஈழப் போர் காரணமாக உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். நவீனத் தமிழிலக்கியம் என்பது சிறுபான்மையினரான ஒரு சில குழுவினருக்கு மட்டும் உரியது என்னும் கருத்தியல் இந்தப் பத்தாண்டுகளில் மாறியிருக்கிறது.

    கடந்த பத்தாண்டுகளில் தோன்றியுள்ள பதிப்பகங்களின் எண்ணிக்கையும் விற்பனையாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்தக் காலகட்டத்தில் கவிதைத் தொகுப்புகளும் நாவல்களும் அதிக அளவில் வெளியாகியுள்ளன. நாவல் என்பது குறைந்தபட்சம் நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் அதற்கு இலக்கிய மதிப்புக் கிடைக்கும் என்னும் கருத்து தமிழ் கூறு நல்லுலகில் வேரூன்றியது இந்தக் கட்டத்தில்தான்.

    பல்வேறுபட்ட போக்குகளையுடைய நாவல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. என்னால் வாசிக்க முடிந்த ஐம்பதுக்கும் கூடுதலான நாவல்களைப் பற்றி வாசகனாகவும் விமர்சகனாகவும் சில கருத்துகளை முன்வைப்பதே இக்குறிப்புகளின் நோக்கம். இதில் இடம்பெறாத சிறந்த நாவல்களும் இருக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை.

    பன்முகத் தன்மைகளை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையாக்கும் முயற்சி எல்லா மட்டங்களிலும் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை ஏதோ ஓர் அடையாளத்துடன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்த மக்கள்திரள் அதை இழந்து பெரும் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகச் சமூகம் உருவாக்கித் தன் வசம் வைத்திருந்த மதிப்பீடுகளின் சிதைவு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி மீள முடியாததாய் நவீன மனிதனின்மேல் கவிந்துள்ளது. இத்தகைய சூழலில் இலக்கியப் படைப்பு கிளர்த்தும் அனுபவங்கள் முக்கியமானவை.

    இந்தப் பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் பிற இலக்கிய வடிவங்களைவிட, நாவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. அனுபவம்மிக்க நாவலாசிரியர்களுடன் முதல் நாவல் எழுதிய படைப்பாளியும் சமமாகக் களத்தில் உள்ளார்.

    பின்நவீனத்துவம் தமிழ்ப் புனை கதைப் பரப்பில் புதிய போக்கை அறிமுகப்படுத்தியது. இன்று பலரும் தொடர்ச்சியறு எழுத்து முறையில் கதை சொல்வதில் முனைந்துள்ளனர். தமிழவன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். ஜி. சுரேஷ், ரமேஷ் -பிரேம், ஜனகப்ரியா, கரிகாலன், சோ. தர்மன், பா. வெங்கடேசன், ஜீ. முருகன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர் போன்றோர் பின் நவீனத்துவக் கதைசொல்லல் மூலம் படைத்துள்ள நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

    எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு (ஸீஷீஸீ- றீவீஸீமீணீக்ஷீ) தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது. வேம்பலை என்னும் ஊரின் கதை, வெயிலின் கதை, பூர்வீகப் பழங்குடியினரின் கதை, தொன்மங்களின் கதை, அதியற்புதப் புனைவுகள் எனப் பல்வேறு கதையாடல்களின் ஒருங்கிணைப்பில் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கைப் பதிவுகள் நெடுங்குருதி யில் வெளிப்பட்டுள்ளன. நாவலின் மையம் குடும்பமும் விநோதமும்தான். புதியதான கதைகளின் வழியாக மீண்டும் மீண்டும் புதிய கதைகளை உற்பத்தி செய்யும் நாவலின் பிரதி மூலம் வாசகன் தனக்கான பிரதியை வடிவமைத்துக் கொள்ளலாம். நாவல் முழுக்கப் பல்வேறு அதிமானுட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை யதார்த்த வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அப்பாலை உலகத்துடன் தொடர்புகொள்ள, மனித மனம் தொன்மப் புனைவுகளைக் கட்டமைக்கிறது. தொல்பழங்குடித் தமிழரின் வாழ்க்கையை மறு வாசிப்புச் செய்திட முயலும் நெடுங்குருதி நாவல் முன்னிறுத்தும் நுண் அரசியல் முக்கியமானது.

    யாமம் நாவலின் மூலம் எஸ். ராம கிருஷ்ணன் சித்தரிக்கும் பல்வேறு புனைகதைகள், வரலாறு என்ற நினைவுத் தடத்தின் வழியே புதிய புனைவைக் கட்டமைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர், 'மதறாஸ் பட்டணம்' உருவான கால கட்டத்தில் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதாக விவரிக்கப்பட்டுள்ள கதையானது 'கலைப் பொருள்'ஆக உருமாற்றம் அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் மனத் தேடலும் விழைவும் நாவலில் இடம்பெற்றுள்ள பத்ரகிரி, தையல் நாயகி, திருச்சிற்றம்பலம், எலிசெபத், கிருஷ்ணப்பா போன்றோர் வழியே கசிந்துகொண்டிருக்கின்றன. வாழ்வின் மேன்மையையும் சிடுக்குகளையும் பதிவாக்கியுள்ள நாவல், இன்னொரு நிலையில் இருப்பின் அபத்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது. யாமம், நெடுங்குருதி ஆகிய இருநாவல்களின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் கிளர்த்தும் வாசிப்பு அனுபவங்கள் தனித்துவமானவை.

    பிரேம்-ரமேஷின் சொல் என் றொரு சொல் நாவலின் கதைசொல்லல், புதுவகைப்பட்ட வாசிப்பைக் கோருகின்றது. தர்க்க மற்ற, மையமற்ற, தொடர்ச்சியற்ற எழுத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர். காலத்தைச் சிதைத்துக் குறுக்கு நெடுக்கிலும் பயணிக்கும் கதைசொல்லலில், 'தமிழ்' என்னும் தொன்மத்தைக் கண்டறியும் முயற்சி அடியோட்டமாக உள்ளது. நாவலில் இடம்பெறும் நன்மொழித் தேவன் இரண்டாயிரமாண்டு தமிழ் மனோபாவத்தின் ஆதாரம். எங்கும் வியாபிக்கும் வல்லமைமிக்க நன்மொழித் தேவன் பிரதியைப் படைப்பதுடன், பிரதிக்குள் புதைந்துபோய், இறுதியில் பிரதியைவிட்டு வெளியேறுவதன் மூலம் தமிழின் அதிகபட்சச் சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளனர் பிரேம்-ரமேஷ். நாவலின் கதைசொல்லல் காப்பிய பாணியில் விரிவது, பிரதிமீதான ஈடுபாட்டை அதிகரிக்கிறது. பல்வேறு கதைகளின் சரடில் தொங்கிப் புதிர்வழியினுள் நுழையும் வாசகன் ஒரு நிலையில் புனைவு வெளியில் தொலைந்துபோக இடமுண்டு. நவீன உலகில் அமானுஷ்யத்தின் இடத்தையும் தமிழ்த் தொன்மத்தின் நுணுக்கத்தையும் நவீனக் கதைசொல்லல் மூலம் சித்தரிக்கும் சொல் என்றொரு சொல் பின் நவீனத்துவக் கதையாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

    யுரேகா என்றொரு நகரம், சிலந்தி, 37 என மூன்று நாவல்களையும் நவீனமான போக்கில் வடிவமைத்திருக்கும் எம். ஜி. சுரேஷ் எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தைக் கட்டமைக்கும் நிலையில் யுரேகா நாவலில் 'யுரேகா' என்ற நகரத்தை வைத்து அரசியல் சொல்லாடலைக் கட்டமைத்துள்ளது, அந்நாவலை வேறுவகையான வாசிப்புக்கு இட்டுச்செல்கிறது. அதிகாரம் வரலாற்றின் வழியாக மக்கள் திரளுக்குள் ஊடுருவி நிகழ்த்தும் வினையைச் சுவராசியமான கதையாக்கியுள்ளார் சுரேஷ். நவீன அறிவியலையும் வாய்மொழிக் கதை மரபையும் இணைத்துப் புதிய மொழியில் அவர் விவரித்துள்ள 37 நாவல், தட்டையான மொழியில் விரிகின்றது. பூமியில் குடும்ப நிறுவனத்தில் சிக்கியிருக்கும் மனிதர்கள், லோன் கிரகத்தில் இயந்திரங்களின் ஆளுமையில் சிதிலமாயிருக்கும் மனிதர்கள் என இருவேறு தளங்களில் விரியும் நாவல் மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணைகளை முன்வைக்கிறது.

    யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், குள்ளச் சித்தன் சரித்திரம், கானல் நதி ஆகிய மூன்று நாவல்களும் பிரதியாக்கம் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்குகின்றன. நினைவும் இசையும் புராணமும் புனைவும் வரலாறும் என விரியும் கதையாடலை யுவனின் பகடையாட்டம் நாவலில் காணலாம். எல்லாம் துல்லியமாக இருக்கின்றன என்னும் பிரக்ஞையின் அபத்தத்தை முன்னிறுத்தி எல்லாவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் இடமளிக்கும் வகையில் புனைகதைப் பரப்பை விவரித்து, வேறுதளத்துக்கு இட்டுச்செல்கின்றன யுவனின் நாவல்கள்.

    தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், இந்தியத் தத்துவ மரபையும் தமிழரின் புராதனத் தன்மையையும் மேலைச் சிந்தனை மரபையும் ஒருங்கிணைத்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உண்மை என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுவதேயன்றி, புதிதாகக் கண்டறியப்படுவதற்கான சாத்தியப்பாடு மிகக் குறைவு என்னும் நிலையில் உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியைக் கதையாடலின் வழியாகத் தமிழவன் கண்டறிய முயன்றுள்ளார். எதிரிணைகளை மோதவிட்டு ஒழுங்கைச் சிதைத்து விவாதிக்க முயலும் கதையாடல், தன்னிலைக்கும் வரலாறு மற்றும் பண்பாட்டிற்குமான உறவை அடையாளப்படுத்த முயன்றுள்ளது. பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் இந்நாவலில் இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள அறிதல் முறையும் உண்மையைக் கண்டறியும் முறையும் சிதிலமாகியுள்ளதைக் காண முடிகிறது.

    பின்நவீனத்துவக் கதையாடலை முன்னிறுத்தும் சாருநிவேதாவின் ராஸலீலா, காமரூபக் கதைகள் ஆகிய இருநாவல்களும் பாலியல் பற்றிய மறுபேச்சுகளை உருவாக்குகின்றன. பாலியல் செயல்பாடுகளும் பாலியல் பிறழ்வுகளும் நாவலாக்கத்தில் வெளிப்படையாகப் பதிவாகியிருப்பதுதான் சாருவின் சாதனை. மற்றபடி நாவல் முழுக்க ஆண் மையவாதத்தில் கதையாடல் விரிவதனால், பிரதியின் மையமழிப்பு, அதிகாரத் தகர்ப்பு போன்ற பின் நவீனத்துவச் சொல்லாடல்களுக்கு இடமில்லை. உடல் துய்ப்பையும் மனப்பிறழ்வு சார்ந்த அழகியலையும் எமினெம் இசையில் வெளிப்படுத்திய விதம் குறித்து வியப்படையும் சாருவுக்கு, தனது நாவல்கள் குறித்து அளவுக்கதிகமான பெருமிதம் இருக்கிறது. பெருமாள் என்ற பித்தனை மையமிட்டு விரியும் கதைசொல்லலில், கதைசொல்லும் முறை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது. பெண் பற்றிய சமூக விழுமியங்களைத் தகர்ப்பதற்கென அதே பாலியலைச் சித்தரிக்கும் நாவலில், அவ்வப்போது பின்நவீனத்துவ உத்திகள் விட்டேத்தியாகக் கலக்கப்படுகின்றன. அதிகார மையத்தைத் தகர்த்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடலை உருவாக்க விழையும் பின்நவீனத்துவக் கருத் தாடலைப் பெண்ணின் பிருஷ்டத்தைக் கடிப்பதற்கு ஏதுவாக உருமாற்றும் தந்திரத்தில் சாருவின் எழுத்து நுட்பமானது.

    கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் மொழி விளையாட்டு மூலம் அதிகார மையத்தைத் தகர்க்க முயல்கிறது. மன வலியும் வதையும் துக்கமும் துரத்தும் நடப்பு வாழ்க் கையிலிருந்து பீறிடும் எக்ஸ் என்னும் கதை மாந்தரின் குறிப்புகளை வாசித்துக்காட்டும் ஸ்டெல்லா என்ற மருத்துவமனை வரவேற்பாளினியின் மூலமாகக் கதைத் தளம் விரிகின்றது. ஒரு நிலையில் மனப் பிறழ்வின் உச்சத்தில் அதீதமாக வெளிப்படும் உணர்வுகளைப் பதிவாக்குதல் மூலம் நாவல் புதிய கேள்விகளை எழுப்புகிறது.

    ஜனகப்ரியாவின் சூரனைத் தேடும் ஊர் புதிய வகைப்பட்ட நாவல். பிழையூர் என்ற ஊருக்குள் வந்த சூரனை ஊரார் தேடுகின்றனர். ஒற்றைக் கண் மனிதன் எல்லோரையும் மிரட்டுகிறான். இருளை விரட்டுவதற்கான ஆராய்ச்சி ஊர்ச் சபையில் நடக்கிறது. ஊருக்குள் சாதிக் கலவரங்கள், மந்திரவாதிகள், கோடாங்கிகளின் சொற்கள் ஆதிக்கம் பெறுகின்றன. கிராமத்தை முன்னிறுத்திப் பல்வேறு தொன்மங்களையும் புனைவுகளையும் சேர்த்து நவீன உலக அரசியல் பிரதியில் வெளிப்படுகிறது. ஊருக்குள் கதை வடிவில் கோரமாகப் பல இடங்களில் வெளிப்பட்டும் மறைந்தும் இருக்கின்ற சூரனைத் தேடும் கதைப் போக்கில் பின்நவீனத்துவ அம்சம் பொதிந்துள்ளது.

    மாயமாக நாவலைப் புனைந்து சொற்களின் வழியாக வெளியிடும் கோணங்கியின் பாழியும் பிதிராவும் இந்த நூற்றாண்டின் விநோதமான பிரதிகள். பின்நவீனத்துவக் கலைஞன் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விதிகளுக்கேற்பப் படைப்புகளை உருவாக்க முடியாது என்னும் நிலையில் கோணங்கியின் எழுத்து முறை 'அலாதி'யானது. எழுத்து என்பது மொழி விளையாட்டுத்தான் என்ற நிலையில் கோணங்கி, அளவுக்கதிகமான தொன்மங்களின் வழியே கதைக்குள் பயணிக்க முயல்கிறார். அவருடைய நாவல்களில் உள்ள செயற்கையான மொழிநடையும் இயல்புக்கு மாறான விவரணைகளும் வாசகனைப் பிரதியைவிட்டே வெளியேற்றிவிட்டன. இழந்தது குறித்த ஏக்கத்துடன் நிகண்டுகள், பேரகராதிகள், செவ்விலக்கியம் போன்றவற்றால் அளவுக்கதிகமான நீண்ட வாக்கியங்களுடன் கோணங்கி சொல்லவருவது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

    பாழியில் சொல்லப்படும் கவித்துவம் நிரம்பிய வரிகள், கலங்கிய நிலையில் அர்த்தத்தை இழந்து தவிக்கின்றன. நகரமயமாதல், உலகமயமாக்கல், சுற்றுப்புறச் சூழலின் நாசம் என அண்மையில் தமிழர் வாழ்க்கையைப் பிடித்துள்ள நாசகாரச் சக்திகளின் அதிகாரத்திற்கெதிராக இழந்துபோன தமிழ் அடையாளத்தை மீட்டுருவாக்க முயல்கிறார் கோணங்கி. திணை சார்ந்த தமிழர் நிலவெளியும் எல்லாவற்றையும் மர்மப்படுத்த முயலும் விநோதக் காட்சிகளும் உடல்களைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சம கால நெருக்கடிகளைத் தனது நாவல்களில் ஸ்தூலமாக வெளிப்படுத்தாத கோணங்கிக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்த எதிர்வினை இருக்கிறது. மார்க்சியம் குறித்த, இழந்து போன வளமான நிலம் குறித்த ஆதங்கமும் உடல்கள்மீதான வதையும் வெவ்வேறு வடிவங்களில் அவருடைய நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. வெவ்வேறு காட்சிகள் வரலாறு என்னும் பெயரில் படிந்துள்ள மனநிலையுடன் பல்வேறு தொன்மக் கதைகளை விவரித்துக்கொண்டே போவது கோணங்கிக்கு இயல்பாக உள்ளது. யதார்த்தச் சித்தரிப்பின் ஊடே மாயப் புனைவு திடீரென உரசிப்போனால், வாசகனின் மனம் திடுக்கிடுவதுடன் தனக்கான பிரதியை உருவாக்க விழையும். ஆனால் கோணங்கியின் நாவல்களில் வெளிப்படும் கதைசொல்லல் வெறும் பிரமிப்பை மட்டும் தருகின் றது. நினைவிலி மனத்துடன் நெருங்கிய தொடர்புடைய கவிதையின் தனிப்பட்ட மொழியை வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல்கள், உரைநடைக்கே உரித்தான தருக்க ஒழுங்கைவிட்டுத் தனித்துள்ளன.

    கோணங்கிக்குத் தமிழ் இருப்பு குறித்த மகத்தான கனவுகளும் அதியற்புதமான புனைவுகளும் இருப்பது சரியானதுதான். ஆனால் அவற்றைப் புனைகதையாக்கும்போது, அடி யாழத்தில் ஒழுங்கு இருக்க வேண்டியது அவசியம். நிகண்டுகள், செவ் விலக்கியங்களில் இருந்து உருவப்பெற்ற சொற்கள் நவீன வாசகர்களுக்கு முற்றிலும் அந்நியமானவை. வரலாறு, ராகம், ஓவியம், இசை, உலக இலக்கியம், சிற்பம், நாட்டார் வழக்கு, கனவு, தொன்மம் எனப் பல்வேறு விஷயங்களைப் புனைகதை வடிவத்துக்குள் திணிக்கும்போது, வாசகன் குறித்த பார்வையைப் படைப்பாளர் கொண்டிருக்க வேண்டும். புனைகதையின் புதியதான மொழியில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கதிகமான சம்பவங்கள், வாசகனை அண்டவிடுவதில்லை. வாசிப்பின் வழியாகப் பெறும் மகிழ்வும் வாசகன் தனக்குள்ளாக உருவாக்கிக்கொள்ளும் பிரதிகளும் மறுக்கப்படுகின்ற நிலையில், கோணங்கியின் பிரமாண்டமான இருநாவல்களும் வாசக மறுப்புப் பிரதிகளாக உருமாறிவிட்டன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை மையமிட்டுக் கோணங்கியால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புதிய வகை நாவல் முயற்சிகள் தமக்கான வாசகர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

    பா. வெங்கடேசனின் தாண்டவ ராயன் கதை, ஜீ. முருகனின் மரம், சுதேசமித்ரனின் காக்டெயில் ஆஸ்பத்திரி, எஸ். செந்தில்குமாரின் ஜி. சௌந்தரராஜனின் கதை போன்ற நாவல்கள் புதிய வகைப்பட்ட கதை சொல்லலுக்கு எடுத்துக்காட்டுகள். இந்நாவல்களை முழுமையாக வாசித்து முடிக்காமையால் இக்கட்டுரையில் சேர்க்கவில்லை.

    பின்நவீனத்துவக் கதையாடலை மொழிந்திடும் நவீன நாவலாசிரியர்களின் புனைகதைகளை வாசிக்கும் போது, அவை இன்றும் மேலை நாவலாசிரியர்களின் பிடியிலிருந்து விலகித் தனித்து இயங்கவில்லை எனத் தோன்றுகிறது. போலச் செய்தல், நகலெடுத்தல், வெறுமனே சோதனை முயற்சி என்ற நிலையில் மார்க்யூசையும் உம்பர்ட்டோ போன்றோரின் பெயர்களையும் உச்சாடனம் செய்தல் நவீனத் தமிழ்ப் புனைகதைக்கு வளம்சேர்க்கவில்லை. விளிம்பு நிலையினரைக் கருவாகக் கொண்டு புதியதான உத்திகளைக் கையாண்டுள்ள சில சோதனை நாவல்கள், தமிழ்க் கதையாடல் மரபை மாற்றியமைத்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. நகலில் இருந்து விலகி அசலான புனைகதைகள் எழுதப்படுவதற்கான அடித்தளம் வலுவடைய வேண்டியது இன்றைய தேவை.

    1990களில் புதிய வகைப்பட்ட நவீன எழுத்து பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஒற்றைத் தன்மை, பிரதியின் அதிகாரம் என்னும் நிலையில் யதார்த்த வகைப்பட்ட எழுத்துகளைப் புறக்கணிக்கும் மனநிலை சிறுபத்திரிகை உலகில் பரவலானது. யதார்த்தப் புனைகதைகளின் காலம் முடிவடைந்துவிட்டது என்ற பொதுப்புத்தி வலுவடைந்தது. இவற்றை மீறி யதார்த்தப் புனைகதைகள் இன்றளவும் தமிழில் செல்வாக்குடன் விளங்குவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது.

    யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை வாசிக்கும்போது இது சுய வரலாறா அல்லது புனைகதையா என்ற ஐயம் தோன்றுகின்றது. குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் செயல்படும் அதிகாரத்தைப் பன்முகரீதியில் யூமா வாசுகி எழுத்தாக்கியுள்ளார். மரபுவழிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் அடையும் வலிகளைவிட மனப் பாதிப்புகள் அதிகம். சக உயிர்கள்மீது அன்பற்ற அணுகுமுறையால், அன்றாட வாழ்வின் கொடூரங்களுக்குள் வதைபடும் மனித உயிர்கள் பற்றிய விவரணைகளுக்குள் வாசகனை இட்டுச்செல்கிறது இந்நாவல். துயரத்தின் நெருக்கடியில், அறிவை இழந்து, இவையெல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்னும் அழுத்தமான கேள்வியை எழுப்பி, வாசகனைத் திகைக்கவைத்திருப்பது, யூமா வாசுகியின் கதைசொல்லலின் மேன்மையாகும். குடும்பம் என்ற பெயரில் எல்லோர்மீதும் வன்முறையைப் பிரயோகிக்கும் சூழல், மனித உடல்களை வெறும் வதைக்கான களமாக மாற்றுகின்றது. கதைசொல்லியான யூமா வாசுகி எவ்விதமான நிலைப்பாடும் கொள்ளாமல், விவாதத்திற்குரிய நிலையில் கதையை விவரிப்பது நாவலாக்கத்தில் முக்கியமானது. வெறுமனே புனைவு என்று ஒதுக்கிவிடாமல், சம்பவங்களின் விவரிப்பு தரும் அதிர்வுகளுடன் விவரிக்கப்பட்டுள்ள ரத்த உறவு, தமிழ்க் குடும்பம் குறித்த விமர்சனத்தை எழுப்புகின்றது.

    மீனவர் பின்புலத்திலிருந்து வந்த ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு, தமிழ்ப் புனைகதையை அடுத்த தளத்திற்கு மாற்றும் வல்லமை பெற்றது. ஒரு வட்டாரத்தில் வாழும் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கைக் கதையை உற்றுநோக்கும் தன்மையும் மதிப்பீடு சார்ந்து அணுகும் திறனும் மிக்கவர் தீவிரமான நாவலைத் தர முடியும் என்னும் நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகின்றது. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் வாழும் மனித உயிர்கள் மட்டுமின்றிப் பிற உயிரினங்களும் படும் 'பாடுகள்' அளவற்றவை. திசைகளற்ற கடற்பரப்பில், இயற்கையுடன் முரண்பட்டு மீன்களைப் பிடித்துவரும் மீனவர்களுக்கு 'நாளை மற்றுமொரு நாள்'தான். ஒருவிதமான சாகச மனநிலையில் இயற்கையுடன் போராடும் மீனவர்களின் சமூக வாழ்க்கை முரண்பாடுகள் மிக்கது. 1933ஆம் ஆண்டு தொடங்கி விவரிக்கப்படும் கதையில் கடற்பரப்புபோல, மக்களின் வாழ்க்கை நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் மூலம் மூன்று தலைமுறைகளாகக் கிராமத்தில் நிகழும் சம்பவங்களும் மாற்றங்களும் நாவலில் பதிவாகியுள்ளன. ஆமந்தூர் கிராமம்தான் முதன்மைக் கதாபாத்திரம். பல்வேறு கதைகளின் மூலம் ஜோடி குருஸ் வாழ்வு குறித்த பெரும் கேள்விகளை எழுப்புகிறார்.

    சாதாரணமாக இருந்த 'திருப்பூர்' என்ற ஊரில் நவீனத் தொழில்நுட்பமும் ஏற்றுமதி சார்ந்த வணிக உற்பத்தியும் ஏற்படுத்திய பிரமாண்டமான மாற்றத்தைப் புனைகதை வாயிலாக மணல் கடிகை என்னும் பெயரில் எம். கோபால கிருஷ்ணன் பதிவாக்கியுள்ளார். திடீரெனக் கொட்டும் டாலரால் எங்கும் பொருளாதாரப் பரவல். இதனால் மனிதர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு. மேல் நிலைப் பள்ளியில் பயின்று முடித்த ஐந்து பதின் பருவத்து இளைஞர்களுடன் தொடங்கும் புனைகதை வெவ்வேறு தளங்களுக்கு விரிகின்றது. ஒரே சூழலில் வளர்ந்தவர்கள்மீது நடப்பு வாழ்க்கை தந்த அனுபவங்கள், கசப்பாக நாவல் முழுக்க ஊறிக்கொண்டேயிருக்கின்றது. தனி மனித விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் மனிதர்களும் இயந்திரத்தின் பாகங்களாகும் விநோதம் நடந்தேறுகின்றது. பாரம்பரியமான மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. குறிப்பாகப் பெண்ணை முன்னிறுத்திச் சமூகம் உருவாக்கிய சொல்லாடல்கள் அபத்தமாகின்றன. மனித வாழ்க்கையின் வீழ்ச்சியையும் சோர்வையும் உள்ளடக்கிய நாவல் துயரத்தை முன்னிறுத்தினாலும் வாசிப்பில் வசீகரம் மிக்கது.

    பல்லாண்டுகளாகக் காட்டிற்குள் வாழ்ந்துவரும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆதிக்கச் சக்தியினராலும் அரசு இயந்திரத்தாலும் எவ்வாறு சிதிலமாகிறது என்பதை ச. பால முருகனின் சோளகர் தொட்டி நாவல் துயரமான தொனியில் விவரித்துள்ளது. ஏற்கனவே பாரம்பரியமான வனத்தை இழந்துகொண்டிருக்கும் பூர்வீகக் குடிகள் வாழ்க்கையில் வீரப்பன் போன்றவர்களை முன்னிறுத்திக் காவல் துறை செய்யும் கொடுமைகளும் வன்முறைகளும் அளவற்றவை. சந்தனக் கடத்தல் வீரப்பனின் மரணத்திற்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்நாவலில் கதையோட்டம் யதார்த்தமாக உள்ளது. ஆனால் மக்கள் படும் துயரங்களை வெறுமனே நகலெடுப்பதுபோல விவரித்திருப்பது, வாசிப்பில் வேறு அனுபவமெதையும் தரவில்லை. வெற்றுத் துயரங்கள், வதைகள், சித்திரவதைகள் என்னும் நிலையிலிருந்து விலகி, அதிகாரமையத்தின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தாதது நாவலின் பலவீனமான அம்சம்.

    கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத் தெரு, கறுப்பு லெப்பை ஆகிய இருநாவல்களும் இஸ்லாமியர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ் நிலையைக் களமாகக் கொண்டுள்ளன. தமிழ் முஸ்லிம் சமுதாயம் என்னும் ஒற்றைச் சொல்லாடலைக் கலைத்து, அதற்குள் இயங்கும் பல்வேறு மேல் கீழ் அம்சங்களை ஜாகிர் ராஜா இந்நாவல்களில் பதிவாக்கியுள்ளார். மைய அரசியல் மயப்பட்ட முஸ்லிம் மனோபாவத்திற்கு மாற்றாகச் சூபியிசத்தில் நம்பிக்கையுடன் தொன்மங்கள் சார்ந்து வாழ்கின்ற விளிம்புநிலையினரின் வாழ்க்கை பன்முகத் தன்மையுடையதாக உள்ளது. பொருளியல் ஏற்றத்தாழ்வு காரணமாக, வசதி படைத்த முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவு உள்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் அடித்தட்டு முஸ்லிம்களின் வாழ் நிலை பற்றிச் சித்தரிக்கும் நாவல்கள் தமிழுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

    பெருமாள்முருகனின் கூளமாதாரி, கங்கணம் நாவல்கள், கொங்கு நாட்டுப் பகுதியில் கவுண்டர், தலித்துகள் ஆகியோரை முன்னிறுத்தி யதார்த்தமான புனைவுகளைக் கட்டமைக்கின்றன. கிராமத்தைவிட்டு விலகியிருக்கும் அத்துவானக் காட்டில் ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்கள் அன்றாட உணவுக்காகச் சகித்துக்கொள்ளும் துயரங்கள் கூள மாதாரி நாவலில் பதிவாகியுள்ளன. முப்பத்தைந்து வயதானபோதும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெண்ணுடன் உடலுறவுகொள்ளத் துடிக்கும் முதிர் ஆணான மாரிமுத்துவின் கதைதான் கங்கணம் என்னும் நாவலாகியுள்ளது. காமத்தின் வாசனையை நுகரத் துடிக்கும் மாரிமுத்து பற்றிய புனைவு தமிழுக்குப் புதிது. குடும்பம், சொத்து என்னும் பெயரில் உடல்கள் வதைக்குள்ளாக்கப்படுவதைக் கங்கணம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    ஜெயமோகனின் ஏழாம் உலகம் அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஊனமுற்றோரை மூலதனமாகக் கொண்டு கோவில் வாசல், திரு விழாக்களில் பிச்சையெடுக்கவைத்து, வசதியாக வாழும் மனிதர்கள் பற்றிய இந்நாவல் நம்புவ தற்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மனித இருப்பின் கோரத்தையும் பேரவலத்தையும் யதார்த்த மொழியில் பதிவாக்கியுள்ள ஜெயமோகனின் எழுத்து, வாசக மனத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. கதை விவரிப்பு மூலம் ஜெயமோகன் சித்தரிக்கும் நம்பகத்தன்மையானது யதார்த்தக் கதைசொல்லலின் ஆகப் பெரிய பலம். காடு நாவலில் காட்டை முன்வைத்து ஜெயமோகன் விவரிக்கும் புனைகதை ஆழமான அனுபவங்களுக்கு இட்டுச்செல்லும் தன்மையுடையது. இயற்கையின் அங்கமான மனிதன், தனது இருப்பை மறந்து, பூர்வீக நிலமான காடு, வன உயிரினங்களைப் புறக்கணிக்கும் நிலையில், எதிர்கொள்ளும் அனுபவங்கள் முக்கியமானவை. சமுதாய வாழ்க்கைபோலவே காட்டிற்குள்ளும் தொடரும் வாழ்க்கை தனித்தன்மை வாய்ந்தது.

    தமிழ் மதிப்பீடுகளின் சரிவை வா. மு. கோமுவின் கள்ளி நாவல் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது. சக்கிலியர்-கவுண்டர் என விரியும் நாவலின் குவிமையம் பாலியல் பற்றிய வெளிப்படையான பேச்சுகளை முன்வைக்கிறது. உடல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆணும் பெண்ணும் படுகின்ற பாடுகளைக் நுட்பமாகக் கோமு கலைத்துப்போடுகிறார். பாலியலை முன்னிறுத்தித் தமிழ்ச் சூழலைக் கேள்விக்குள்ளாக்கும் கோமுவின் எழுத்து பண்பாட்டிற்கு விடப்பட்ட சவால். திலகவதியின் கல் மரம், சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி, எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி, நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக் கடல், க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் போன்ற நாவல்கள் யதார்த்தத் தளத்தில் குறிப்பிடத்தக்கவை.

    பிறப்பால் தலித்துகளாக உள்ள கண்மணி குணசேகரன், இமையம், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் போன்றோர் எழுதியுள்ள நாவல்களில் தலித்தியப் பிரக்ஞை வெளிப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்களுடைய படைப்புகளைத் தலித்திய நோக்கில் அணுகுவதை விரும்புவதில்லை. தலித் படைப்பாளர்கள் எழுதியுள்ள நாவல்கள் வெவ்வேறு தளங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. தலித் மக்களின் துயரங்களும் அவலங்களும் கதைக்களனாகும் நிலையில், பருண்மையான அரசியல் வெளிப்பாடு என்பது சிலரின் நாவலாக்கத்தில் வெளிப்படவில்லை. இமையத்தின் செடல் நாவல், சாதிய அடுக்குமுறையில் மேல்-கீழ் நிலையில் செயல்படும் ஆண்டான் ஜ் அடிமை உறவானது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் செயல்படுவதை விவரிப்பது நுண் அரசியல் சம்பந்தப்பட்டது. தலித் சாதியினரைவிடச் சமூக மதிப்பீட்டில் இழிந்தவராகக் கருதப்படும் 'கூத்தாடி' சாதியினர் பற்றிய கதையாடலைத் தேர்ந்தெடுத்ததில் இமையத்திற்கு எனத் தனித்த கருத்தியல் உண்டு. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மேலாதானூர் கிராமத்தில் செடல் என்னும் சிறுமியை முன்வைத்துத் தொடங்கும் கதை, பெண்ணுடலை முன்னிறுத்திச் சமூக இழிவுகளை விவரித்துள்ளது. தெய்வத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்படும் செடலின் உடல் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்களுக்குள்ளாகிறது. வட்டார வழக்கு மொழியில் விரிந்துள்ள நாவல், தலித் சார்ந்த எந்தவொரு பிரகடனத்தையும் முன்வைக்கவில்லை. இமையத்தின் நுட்பமான எழுத்து நடை இந்நாவலின் பெரிய பலம்.

    ஸ்ரீதர கணேசனின் வாங்கல் கடல் சார்ந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு நாவலான அவுரி பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்த போராட்டத்தினூடே தலித்துகள் சாதியரீதியில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை குறித்தும் அக்கறை கொண்டுள்ளது. சாதியத்துக்கும் வர்க்கத்துக்குமான முரண் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முந்தைய நாவல்களுடன் ஒப்பிடும்போது, அவுரியில் தலித்துகள் சாதிய ரீதியில் ஒடுக்கப்படுவது குறித்த சொல்லாடல்கள் வீர்யத்துடன் வெளிப்பட்டுள்ளன. அஞ்சலை மூலம் கண்மணி குணசேகரன் தலித் பெண்கள்மீதான அத்துமீறல்களை நுட்பமாகக் கலைப்படுத்தியுள்ளார். சூழலின் வெக்கை காரணமாகக் கணவனைவிட்டுப் பிரிய நேரிடும் பெண் தொடர்ந்து பாலியல்ரீதியில் படும் துயரங்கள் அஞ்சலையின் கதையாக வெளிப்பட்டுள்ளன. நாவலில் இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மனித இருப்பு குறித்த ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லையெனினும், உடல்கள்மீது ஏவப்படும் வதைகளை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளன.

    சோ. தர்மனின் கூகை நாவலில் தலித்துகள்மீதான ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறை முழுவதும் சித்தரிக்கப்பட்டாலும், பின்நவீனத்துவக் கதையாடலின் மூலம் தலித்துகளை வேறு ஒன்றாகக் குறியீடு செய்வது நிகழ்ந்துள்ளது. இரவில் கூர்மையான பார்வையுடன், இருளை ஊடுருவித் தனது இலக்கை அடையும் வல்லமை மிக்க புத்திசாலிப் பறவையான கூகை, பகலில் சிறிய பறவையால்கூடக் கொத்தப்படுகிறது. கூகையின் வட்டமான சுழலும் கண்களும் விரும்பிய திசையில் தலையைத் திருப்பும் லாவகமும் கண்டு பயந்திட்ட மனித மனம், கூகையின் முகப்பொலிவைக் கோரமென்றும் அதன் கத்தலைச் சாபமென்றும் அஞ்சி நடுங்குகிறது. சமூக உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் தலித் உடல்களின் வலிமையைக் கூகையாக உருவகப்படுத்திச் சாதிய மனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தர்மனின் கதையாடல் நுட்பமானது.

    தலித் பற்றித் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள சொல்லாடல்களின் பின்புலமாக இலக்கியரீதியில் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. வெறுமனே கிராமப் புறக் காட்சிகளும் ஆதிக்கச் சாதியினரின் அடாவடித்தனமும் தலித்துகளின் ஒடுங்குதலும் தொடக்க கால தலித் நாவல்களில் பதிவாகியிருப்பது ஏற்புடையதே எனினும் பத்திருபது ஆண்டுகள் கடந்த நிலையில் தலித் நாவல்கள் புதிய வகைப்பட்ட உத்திகளையும் உள்ளடக்கியதாக மாற வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பெருவெடிப்பாக வெளிப்பட்டுள்ள தலித்திய நாவல்கள் சரியான திசை வழியில் பயணிக்கின்றன என்பதற்கு அடையாளமாக இமையம், சோ.தர்மன், சிவகாமி, பாமா போன்றோரின் எழுத்து முயற்சிகள் உள்ளன. ஒப்பீட்டளவில் தலித் நாவல்களின் எண்ணிக்கை குறைவு.

    பெண் நாவலாசிரியர்களில் அ. தமிழ்ச்செல்வியின் இடம் தனித்துவமானது. அளம், மாணிக்கம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத் துறை, கண்ணகி என ஆறு நாவல்களில் தமிழ்ச்செல்வி சித்தரிக்கும் உலகு பெண்களை மையமிட்டுள்ளது. ஆண் அதிகாரம் சார்ந்த தமிழ்க் கிராமியச் சூழலில் நிலவும் பெண்ணுடல்மீது ஒடுக்குமுறை இவருடைய கதையாடல்களின் பொதுத்தன்மை. தஞ்சை மண்ணின் மனத்துடன் சொல்லப்பட்டுள்ள இவரது நாவல்களில் தொன்மங்களும் நாட்டார் கதைகளும் இயல்பாகக் கலந்துள்ளன. பெண்ணியம் என்னும் நிலையில் மேலைக் கோட்பாடுகளைப் பின்பற்றாமல், தமிழ் நிலம் சார்ந்து தமிழ்ச்செல்வி புதிய வகைப்பட்ட மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.

    அவருடைய எல்லா நாவல்களிலும் அல்லல்பட்டுத் துயரமடையும் கதைகளையும் ஆண்களால் புறக்கணிப்பட்ட நிலையில் தனக்கான வெளியை உருவகிக்கும் பெண்களையும் நிரம்பக் காண முடிகிறது. வெறுமனே யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள கதைகள், வாசிப்பதற்கு அலுப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.

    இஸ்லாமியப் பின்புலத்தில் விரிந்திடும் பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் இரண்டாம் ஜாமங்களின் கதை தமிழ்ப் பெண் எழுத்துகளில் குறிப்பிடத்தக்கது. நாவலாசிரியை சல்மா பெண்ணுடல் பற்றிய பெருங்கதையாடல்களைச் சிதைக்கின்ற வகையில் நாவலைப் படைத்துள்ளார். மதமும் அரசியலும் தொடர்ந்து பெண்ணுடல்களைக் கண்காணிப்பிற்குள்ளாகிடும் நிலையில், பண்பாடு என்னும் பெயரில் திணிக்கப்படும் அழுத்தங்கள் கொடூரமானவை. ஆண்-பெண் உறவுக்கிடையில் பால் சமத்துவமற்ற நிலையில், பெண்ணுடல்மீது புனையப்படும் வரலாறு ஒற்றைத் தன்மையுடையது. இஸ்லாமிய நெறிப்படி பெண்ணுடல் மறு உற்பத்திக்கான களம் என்னும் நிலையில், அவளுக்குப் புணர்ச்சி மூலம் இன்பம் கிடைக்காது என்ற கருத்து வன்முறையின் மூலம் பெண்ணுலகினுள் திணிக்கப்படுவது தற்செயலானது அல்ல. வீட்டில் அன்றாடச் செயல்களில் மதத்தின் ஆளுமை நுண் அளவில் செயல்படுகிறது. சமூக வாழ்வில் அடையாளமிழந்த பெண்கள், தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மதத்தின் மீது அதீதமான ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்கே உரித்தான நெறிமுறைகள், மதச் சடங்குகள், நோன்புகள் புனித நம்பிக்கைகள், மன்றாடல்கள் என விரியும் நாவலில் பெண்களின் நிலை குறித்த கேள்விகளை சல்மா எழுப்பியுள்ளார். யதார்த்தமான கதை சொல்லலில் விரியும் இந்நாவலில் ஓரளவு வசதியான இஸ்லாமியப் பெண்கள் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அன்றாடம் காய்ச்சியாக உழைத்து வாழும் முஸ்லிம் பெண்களின் உலகம் வேறுவகைப்பட்டதாகத் தானிருக்கும் எனினும் மறைபொருளாக உருவகிக்கப்பட்டுவந்த பெண்ணுலகை சல்மாவின் நாவல் அறிமுகப்படுத்தியுள்ளது.

    உமாமஹேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை நாவல் ஒரு குடும்பத்தின் கதையாக விரிந்துள்ளது. ஒன்றோடொன்று தொடர்பற்ற குடும்பச் சம்பவங்கள், அனுபவங்களின் தொகுப்பில் கதை சொல்லப்பட்டுள்ளது. பெரிய வீட்டில் குடும்ப நிறுவனம் எவ்விதமான ஓர்மையும் கொள்ளாமல் பெண்களை ஒடுக்கிவைத்துள்ளது என்பதை அழுத்தமான விமர்சனமற்று மேலோட்டமாகச் சொல்கிறார் உமாமஹேஸ்வரி. குழந்தைப் பருவம் தொடங்கி கிழவியான போதும், பெண்ணின் இருப்பு, இரண்டாம் நிலையில் ஆணுக்குக் கீழாக ஒடுக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றைத் தளத்தில் இயங்குகிறது கதை. யாரும் யாருடனும் இல்லை எனத் தொடர்ந்து உமாமஹேஸ்வரி கதைப்பதை வாசிப்பதற்கு மிகுந்த பொறுமை தேவை. குடும்பக் கதைகளின் போக்கு வேறு வகையாக மாறிவிட்டது என்பதை நாவலாசிரியை உணர வேண்டும்.

    எங்கும் தொழில்நுட்ப ஆதிக்கம் ஆழமாக ஊடுருவும் வேளையில், கிராமத்தில் ரத்த உறவு காரணமாக ஏற்படும் பாரதூரமான விளைவுகள் முக்கியமானவை. கவுண்டர் இனத்துக் குடும்பமொன்றில், பரம்பரை, ஊர் அபிமானம், சாதிப் பெருமை, பாரம்பரியம் போன்ற நிலமான்ய மதிப்பீட்டில் எல்லோரும் பணிந்து போகின்றனர். அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும் மனித உடல்களை வாதைக்குள்ளாக்குகின்றன. யதார்த்தக் கதை சொல்லல் மூலம் சித்திரக் கூடு நாவலில் இந்திரா சித்தரிக்கும் விவரிப்பு மெலிவாக இருப்பினும், மனிதர்கள் தமக்குத் தாமே ஏதோ ஒன்றின் பெயரால் இட்டுக்கொள்ளும் 'விலங்குகள்' குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றது.

    ஒப்பீட்டு நிலையில் நாவலாக்கத்தில் பெண் நாவலாசிரியர்களின் முயற்சி திருப்திகரமாக உள்ளது. ஆனால் காத்திரமான நாவல்களை எழுதும் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்ணுக்கே உரித்தான தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்த புதிய வகைப்பட்ட கருத்தாடல் பிறக்க வழியேற்படும். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் அசலான கருத்துகளைப் படைப்பாக்கிடப் பெண்ணுக்கு இன்னும் சமூகத் தடைகள் உள்ளன என்பது தான் உண்மை.

    புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவரான ஷோபா சக்தியின் கொரில்லா, ம் ஆகிய இரு நாவல்களும் அழுத்தமான அரசியல் பின்புலத்தில் புதிய வகைப்பட்ட கதையாடலைக் கட்டமைத்துள்ளன. ஈழத்தில் நடைபெற்ற கொரில்லாப் போர் குறித்த விவரணைகள் வரலாற்று அடிப்படையில் இரு நாவல்களிலும் பதிவாகியுள்ளன. எது நிஜம் எது புனைவு என்ற இடை வெளியைச் சிதைத்துப் புதிது புதிதான கதைப் பரப்பைப் பரப்புகிறார் ஷோபா சக்தி. இன மோதல் காரணமாக உருவெடுத்த ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய வீரம், பயம், துக்கம், கழிவிரக்கம், துரோகம், நட்பு, தோழமை, கசப்பு போன்ற பல்வேறு உணர்வுகளின் வழியாக மனிதர்கள் முரண்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றனர். புலம்பெயர்ந்து வாழ நேர்ந்திடும் நாட்டிலும் சரமாரியாகப் புனைவுகளின் மூலம் வாழ முயலும் முன்னாள் போராளிகள் இருப்புக்காக எதையும் செய்யத் துணிகின்றனர். இதுதான் நடந்தது என்று சொல்லப்படும் வரலாற்று உண்மை, ஒரு நிலையில் புனைகதையாக உருமாறும் விந்தை நடந்தேறுகிறது. மரணத்திற்கு முன்னர் மனித இருப்பு என்பது அபத்தமானது. ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் சராசரியாக வாழ முயன்றுகொண்டிருக்கும் சாதாரண மக்களின் வேட்கையும் வெறுப்பும் நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் யார் துரோகி? யார் மாவீரன்? என்னும் அளவுகோல்களை மீறிச் சொல்லப்படுகின்ற சேதிகளுக்கெல்லாம் 'ம்' போட நேரிடுவதுதான் துயரத்தின் உச்சம். ஷோபா சக்தி அவருக்கான பிரதியை எழுதியுள்ளார். ஆனால் வாசிப்பின் வழியாக ஒவ்வொருவரும் அவரவர் பிரதியை உருவாக்கிக்கொள்வதற்கான தோதுடன் கதை சொல்லல் உள்ளது.

    தேவகாந்தன் ஈழப் பிரச்சினையைக் கருவாகக்கொண்டு கனவுச் சிறை நாவலை எழுதியுள்ளார். ஐந்து பாகங்களைக் கொண்ட அதன் ஒவ்வொரு பாகமும் தன்னளவில் தனித்து விளங்குகிறது. அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய மூன்று நாவல்களும் 1991-2001 வரையிலான காலகட்டத்தில் ஈழ மக்களின் துயர வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. இயக்கத்தினர் மீதான பரிவுடன் எழுதப் பெற்றுள்ள இந்நாவல்கள், ஆயுதப் போராட்டம் எங்ஙனம் மக்களை அலைக்கழிக்கிறது என்பதை விரிவாகப் பதிவாக்கியுள்ளன. எளிய முறையில் திருப்திகரமாக வாழ்ந்துகொண்டிருந்த ஈழத்து மக்களின் வாழ்க்கையைச் சிதைத்ததுடன், இதுவரை அறம் சார்ந்த நிலையில் உருவாக்கப்பட்டிருந்த எல்லாவிதமான மதிப்பீடுகளும் சிதைவடைந்த நிலை பல்வேறு சம்பவங்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இன்று கையறு நிலையில் துயரத்தின் உச்சத்தில் வாடிக்கொண்டிருக்கும் ஈழ மக்கள் பற்றி மீளாய்வு செய்திட தேவகாந்தனின் நாவல்கள் உதவும்.

    வரலாறு என்பதே புனைவு என்னும் பின்நவீனத்துவ வாசிப்பு நிகழும் காலகட்டத்தில் தனியொரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பெருமை பீற்றிக் கொள்ளும் சுயபுராணங்கள் அல்ல. படைப்பாளியின் தேர்ந்தெடுத்த மன நிலை காரணமாக உருவாக்கப்பட்ட பிரதி என்னும் நிலையில் வேறு வகைப்பட்ட புனைவுகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.

    ராஜ் கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை, பாரததேவியின் நிலாக்கள் தூரம் தூரமாக ஆகிய தன் வரலாற்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன. பிறப்பால் தலித்தாக அறியப்படும் ராஜ் கௌதமன் தனது கிராமச் சூழலிலிருந்து, தற்சமயம் புதுவையில் பேராசிரியராகப் பணியாற்றுதல்வரை விருப்பு வெறுப்பற்றுக் கதை சொல்கிறார். அவருடைய நினைவுப் புலத்தில் பதிவாகியுள்ள சம்பவங்கள் வெவ்வேறு மட்டங்களில் தொடுக்கப்படும்போது, வாசிப்பில் சுவாரசியம் ஏற்படுத்துகின்றன. எளிய மனிதராக வாழத் தொடங்கிய சிலுவை ராஜின் உலகம் விரிந்துகொண்டே போகிறது. எல்லாமே கதைகளாக அறியப்படும் காலகட்டத்தில் சிலுவை ராஜ் பற்றிய கதைகளின் மூலம் வாசகன் ஏதாவது அறிந்துகொள்ள வாய்ப்புண்டு.

    நிலாக்கள் தூரம் தூரமாக நாவலில் பாரத தேவி கடந்துபோன வாழ்க்கையின் பதிவுகள் குறித்துப் புனைந்துள்ள கதைகள் அசலான மொழியில் விரிந்துள்ளன. பாலுணர்வு குறித்த ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மட்டும் சுமையாக மாறிவருவதைப் பாரத தேவி கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

    கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்டுள்ள தமிழ் நாவல்களைத் தொகுத்து வாசிக்கும்போது, ஏதோ 'குறைவது' போலத் தோன்றுகின்றது. ஏழு கோடித் தமிழர்கள் உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், தமிழில் வெளியாகியுள்ள நாவல்களின் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை. பல்வேறு சோதனை முயற்சிகள் பல்கிப் பெருகியிருக்க வேண்டிய நிலையில், சில நாவல்கள் புதிய போக்கில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் படைப்பாளர்கள் மேலை இலக்கியப் படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தூக்கிக்கொண்டு 'சிந்துபாத் தூக்கிக்கொண்டு அலைந்த கடற்கிழவன்'போலத் திரிவதை நிறுத்திவிட்டு, இதுவரை தத்துவரீதியில் உருவாக்கப்பட்ட சொல்லாடல்களின் மூலம் தமிழ்த் தொன்மமும் மரபும் சார்ந்த புனைகதைகளை எழுத வேண்டும். 'வீட்டிற்கு வெளியே காகம் கரைந்தால் யாரோ விருந்தாளி வரப் போகிறார்' என்று நம்பும் தமிழ் மனோபாவத்திலிருந்து புதிய வகைப்பட்ட எழுத்து தோன்ற வேண்டும்.

    சாதியக் கொலைகள், மேனாமினுக்கி அரசியல் போன்றவை பற்றி எழுத முடியாத தடைகளைத் தகர்த்துப் புதிய கதையாடல் தோன்றுவதற்கான தேவை இன்று உள்ளது. எல்லாவற்றையும் மறுவாசிப்பிற்குள்ளாக்கும் நிலையில், நவீனத் தமிழ் நாவல் குறித்தும் கட்டு டைத்துப் பார்க்கும்போது, நமது பலமும் பலவீனமும் வெளிப்படும்.

    குறிப்பு

    தமிழ் நாவல் பற்றிய என் மதிப்பீட்டில் மிகச் சிறந்த நாவல்கள் விடுபட்டிருக்கக்கூடும். என் வாசிப்பு அனுபவத்திற்கு ஏற்ற நிலையில் நாவல்கள் பற்றிய மதிப்பீடுகள் வரையறைக்குட்பட்டுள்ளன.

    உள்ளடக்கம்

     

     

    பின்நவினத்துவம்




    முன்னுரை:

           அரசியல், சமூகம், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கயம் என எந்த ஒரு தளத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவை காலந்தோறும் மாறுபட்ட சிந்தனை முறைகளையும் கோட்பாடுகளையும் உள்வாங்கி புதிய தளமாற்றத்திற்கு ஆளாகின்றன. அந்த வகையில் தற்கால சூழ்நிலையில் புதிதாக பரவலை உண்டாக்கியுள்ள சிந்தனை முறைகளில் ஒன்றுதான் 'பின்நவீனத்துவம்' என்பது. இக்கோட்பாடு அல்லது சிந்தனைமுறை அரசியல் தொடங்கி இலக்கியம் வரை பல தளங்களிலும் தனது பரப்பை விரித்துக்கொண்டுள்ளது  எனலாம்.
         
             அது இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளப்பெரியது. மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்று அதன் கூறுகள் பற்பல. இங்ஙனம் மேலைநாடுகளில் கருக்கொண்ட இச்சிந்தனைமுறை இன்று பலதரப்பட்ட இலக்கிய மொழிகளிலும் தனது கிளையை நீட்டியுள்ளது. ஆகவே, அது தமிழ்ச் சூழலிலும் வந்து சேர்ந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழில் சில படைப்பாளர்கள் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கியுள்ளனர். எனினும் பின்நவீனத்துவத்தை அறியாமலே எழுதப்பட்ட பல படைப்புகளிலும் பின்நவீனத்துவக் கூறுகள் உள்ள பிரதிகள் காணக்கிடைக்கின்றன.  அவைகள் அடையாளம் காணப்படுதல் வேண்டும்.


    பின்நவீனத்துவம் தோற்றமும் வளர்ச்சியும்:

           பின்நவீனத்துவத்தின் தோற்றுவாயையும் அதன் வளர்ச்சி நிலையினையும் அறிய நவீனத்துவக் காலம்தொட்டு இன்றளவும் ஏற்பட்டுவந்துள்ள வளர்ச்சி மாற்றத்தினை அரசியல், சமூக, பொருளாதார, அறிவியல் பின்புலத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கலை, இலக்கியத் தளங்களில் தனி இடம் பிடித்துள்ள 'நவீனத்துவம், பின்நவீனத்துவம்' போன்ற சிந்தனை முறைகளை, அதன் வளர்ச்சிப் போக்கினை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை உள்ள காலக்கட்டத்தை நவீனத்துவக் காலமாக வரையறுக்கலாம். இக்காலக் கட்டத்தில் தோன்றிய புதிய தத்துவங்களும், கோட்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் வாழ்வியல் முறைமைகளில் மாற்றங்களைக் கோரியது. அதன் விளைவாக முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்த பலதரப்பட்ட சிந்தனைப் போக்குகள் அடிக்கட்டுமானத்திலையே ஆட்டம் கண்டன. குறிப்பாக நிலப்பிரபுத்துவமும், மதமைய செயல்பாடுகளும் முற்றிலும் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வந்த காலனி ஆதிக்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிர்நிலைகள் தோன்றின. பெரும்பான்மை நாடுகளில் தேசிய சுயேட்சை விருப்பம் மேலோங்கியது. மேலும், தொழிற்புரட்சியால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம், சந்தைப் பங்கீட்டில் போட்டியை உருவாக்கியது. இந்த நாடு பிடிக்கும் நிகழ்வு இரண்டு (1914-1918, 1939-1945) உலகப்போர்களையும் நிகழ்த்திக் காட்டியது. இதனால் நிறுவப்பட்ட அதிகார மையங்கள் பல உருவாகின. இது பலரை விளிம்புக்குத் தள்ளி நிராகரிக்கவும், ஒடுக்கவும் செய்தது. இத்தகைய 'மையம் x விளிம்பு' எனும் கருதுகோள் இலக்கியத் துறைகளிலும் பிரதிப்பளித்தது. இவ்வாறான மையம் நோக்கிய செயல்பாட்டை சிதறடிக்கும் விதமாக அதிகாரத்தின் படிநிலைக் கட்டமைப்பை உடைத்துவிட்டு எல்லாவற்றையும் கிடைமட்டத்தில் வைத்துப்பார்க்கும் நோக்கில் உருவான இருபதாம் நூற்றாண்டு சிந்தனை முறைதான் 'பின்நவீனத்துவம்' ஆகும்.
             பின்நவீனத்துவத்தின் காலத்தை 1950 - களில் இருந்து இன்றளவும் நீளும் காலக்கட்டமாக வரையறுக்கலாம். நவீனத்துவக் காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி - தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் எல்லாவற்றையும் முழுமையாக புரிந்து கொள்ள முனைந்தது. அறிவியல் வளர்ச்சியில் உலகம் முழுவதும் சென்று வரவும்,தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்பட்டன. ஆகவே, எல்லா சிந்தனைகளையும் உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகளான தொழிற்சாலை, கல்வி நிலையம், போக்குவரத்து, தகவல்தொடர்பு, பொதுவூடகம் போன்றவை மூலம் நவீனத்துவத்தில் மையத்தை கட்டமைக்கும் பல போக்குகள் உருவாகின. அதில் முதலாளித்துவம் தலையாயது. முதலாளித்துவத்திற்கு எதிராக தோன்றிய மார்க்ஸியமும் இன்னொரு பாட்டாளி வர்க்க மையத்தையே கட்டமைக்க முயன்றதால் இதன் போதாமையைப் புரிந்து கொண்ட பின்நவீனத்துவ வாதிகள் விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவைகள் மீது கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, அனைவருக்கும் ஒத்த இடமுள்ள ஒரு சமூக கட்டுமானம், ஒரு சிந்தனை முறை தேவை என்பதை உணர்ந்து ரொலான் பார்த் (1915-1980), ழாக் லக்கான் (1901-1981), லியோதர்த் (1924-1998), ழாக் டெரிடா (1930-2004), மிகைல் பூக்கோ (1926-1984) போன்ற மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் - மையத்தைக் கலைத்தெறியும் புதிய, புதிய சிந்தனை முறைகளுக்கு வித்திட்டனர். இதன் பின்வந்த ஒவ்வொரு தொடர்புடைய சிந்தனைமுறைகளின் தொப்புத்தான் 'பின்நவீனத்துவம்' ஆகும். அது தற்போது நவீனத்துவத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு எல்லா தளங்களிலும் தனது ரேகையைப் பதித்துவருகிறது எனலாம்.
          பின்நவீனத்துவத்தின் வளர்ச்சிப் போக்கினை வரலாற்று நோக்கில் பார்ப்பின் அதன் தொடக்கம் 1931-ல் கருப்பெறுகிறது எனலாம். ஏனெனில் பின்நவீனத்துவம் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகத்தான் கொள்ளப்படுகிறது. மால்கம் பிராட்பரி கூற்றுப்படி, 'நவீனத்துவத்தின் காலம் 1890 முதல் 1930 வரை'1 என வரையறுக்கப்பட்டிருப்பதால் நவீனத்துவத்தின் முடிவில் இருந்து பின்நவீனத்துவம் தொடங்குகிறது எனலாம்.
        1957 -ல் வரலாற்றாசிரியரான பெர்னர்ட் ரோஸன்பர்க், 'தொழில் நுட்ப வளர்ச்சி, உலகம் முழுக்க உள்ள மக்களை ஒரே மாதிரியான தன்மை (Sameness) கொண்டவர்களாக மாற்றிவிட்டது. இது பின்நவீன வாழ்வியல் நிலமை'2 என்றார். அதேபோல் 1964 -ல் பீட்லரும் 1968 - ல் லியோ ஸ்டீன் பெர்க்கும், 'நவீன கலை இலக்கிய மதிப்பீடுகளைப் புறக்கணிக்கும் பின்நவீன கலாச்சாரம் ஒன்று தோன்றி இருக்கிறது.'3 என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும் உண்மையில் பின்நவீனத்துவம் ழாக் டெரிடா அவர்கள் 1966 ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நிர்நிர்மாணம் (Deconstruction) குறித்த கட்டுரை வாசித்தப்போதுதான் பிறந்தது எனலாம். ஏனெனில் அக்கட்டுரையின் வாயிலாகத்தான் மையங்களைச் சிதறடித்தல், பன்முகமாய் பார்த்தல் போன்ற பின்நவீனத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் புழக்கத்திற்கு வந்தன.   மேலும்,      ழாக் டெரிடாவின்   படைப்புகளான - 'மனித விஞ்ஞான உரையாடலில் அமைப்பு, குறி மற்றும் விளையாட்டு (Structure, sign and play in the Discourse of human science)' பேச்சும் நிகழ்வும் (Speech and phenomena)'' எழுதுவதும் வித்தியாசப்படுதலும் (writing diference)' ஆகியன பின்நவீனத்துவத்தின் பல கூறுகளை விரிவாக பேசிச் செல்கின்றன.
             மேலும் பின்நவீனத்துவத்தின் பிதாமகனாகக் கருதப்படும் லியோதார்த் 1974-ல் வெளியிட்ட 'பின்நவீனத்துவ நிலவரம்: அறிவின் மீதான அறிக்கை (the post modern condition: a Report on knowledge)' எனும் நூல் முதன்முதலாக பின்நவீனத்துவச் சிந்தனையை பெருமளவிற்கு தௌவுப்படுத்தியது எனலாம்.
    இன்னும் ரொலான்பார்த், பெலிக்ஸ் கத்தாரி, ழீன் பொத்ரியார், இஹாப் ஹஸன், பிரெடரிக் ஜேம்சன் மிகைல் பூக்கோ, ழாக் லக்கான் போன்ற அறிஞர்கள் நவீனத்துவத்தை கேள்விக் குள்ளாக்கி பின்நவீனத்துவத்தின் வளர்ச்சிக்குப் பாதை செய்தனர். மேலும், பின்நவீனத்ததுவத்தின் முன் இயங்களான பொதுமைப்பாவியம் (Impressionism)இ அகத்திறப்பாங்கியம் (Expressionism), கனசதுரவியம் (Cubism), டாடாயியம் (Dadaism), மிகைநடப்பியம் (surrealism), இருத்தலியம் (Existentialism), அமைப்பியம் (Structuralism), பின்அமைப்பியம் (post-Structuralism) போன்றனவும் பின்நவீனத்துவத்திற்கு பல அடிப்படைக் கூறுகளை வழங்கியுள்ளன.
              
             இங்ஙனம் 1960 -களில் மேற்குலகில் தோற்றம் கண்ட பின்நவீனத்துவம் 1980 –களில் உச்சத்தை அடைந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது. எனினும் இன்று இக்கோட்பாடு மேற்குலகில் வலுவிழந்து விட்டது. ஆனால் தமிழ்ச் சூழலில் 2000 –க்கு பிறகுதான் பின்நவீனத்துவம் பெரிதும் தலைதூக்கி வளர்ச்சிக் கண்டு வருகிறது எனலாம்.


    பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம்:

         மேற்குலக நாடுகளில் கலை, இலக்கியத்தளத்தில் இருபதாம் நூற்றாண்டில் அறுபது, எழுபதுகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சிந்தனை முறைகளில் ஒன்றுதான் post modernism. அது தமிழில் 'பின் நவீனத்துவம்', 'பின்னை நவீனத்துவம்' போன்ற சொற்களால் வழங்கப்படுகின்றது. பொதுவாக இப்புதுமைக் கோட்பாட்டை செல்லமாக pomo (போமோ) என்று அழைப்பர். (இதை தமிழில் 'பிந' என்று சுருக்கி குழப்பாமல் நாமும் 'போமோ' என்றே பயன்படுத்துவதில் பெருங்குற்றம் ஒன்றுமில்லை.)
         பின்நவீனத்துவம் என்பதை இன்னதுதான் என வரையறுத்துக் கூறுவது முடியாத ஒன்றாகும். ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய பல சிந்தனைக் கூறுகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. மேலும், வரையறைகளுக்கு உட்படாமல் மீறி நிற்பதும் பின்நவீனத்துவத்தின் ஒரு கூறே ஆகும். எனவே, இங்கு பின்நவீனத்துவம் குறித்த முழுமையான வரையறைகள் கிடைப்பது கடினம். எனினும் பின்நவீனத்துவம் குறித்த கருத்தாடல்களைப் படித்தறிவதன் மூலம் அதை புரிந்து கொள்ளமுடியும்.
    அதற்கு முன் இஹாப் ஹஸன் அவர்கள் குறிப்பிடும் நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகவும் அதன் மறுப்பாகவும் தோன்றியதாகும். எனவே, நவீனத்துவத்தையும் பின்நவீனத்துவத்தையும் ஒப்புமை நோக்கில் வேறுபடுத்திக் காட்டும் போது, நவீனத்துவத்தைப் புரிந்துகொண்ட ஒருவனால் பின்நவீனத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

    'நவீனத்துவம்                   -           பின்நவினத்துவம்

    உருவம்                               -           எதிர் உருவம்
    நோக்கம்                             -           விளையாட்டு
    வடிவம்                                -           சந்தர்ப்பவசம்
    படிநிலை அமைப்பு         -           ஒழுங்கற்ற அமைப்பு
    படைப்பு                               -           நிகழ்வு
    இருத்தல்                             -           இல்லாதிருத்தல்
    மையப்படுத்தல்               -           சிதறடித்தல்
    வகைமை பிரதி                -           ஊடிழைப்பிரதி
    வேர்-ஆழம்                        -           மேலீடானத் தளம்'4
      -இனி பின்நவீனத்துவம் குறித்தப் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களைக் கீழே வரிசைப்படுத்திக் காண்போம். அவை;

    லியோ தார்த்; 
         'பெருங்கதையாடல்களின் மீதான நம்பிக்கையின்மையே பின்நவீனத்துவம். அது நவீனத்துவத்தின் ஒரு பகுதியாகவும் அதே சமயத்தில் நவீனத்துவத்தைச் சந்தேகப் படுவதாகவும் உள்ளது'5

    ஹேர்பர்ட் மார்க்யூஸ்;
       'சமூகத்தில் அதிகார மையத்தில் உள்ளவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் மற்றமைகளையும் அதாவது விளிம்பு நிலையினரான பெண்கள், மூன்றாம் பாலினர், தலித்துக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஏழ்நிலையினர் போன்று ஏதேனும் காரணம் கருதி புறக்கணிக்கப்பட்டவர்களையும் முன்னிலைப் படுத்திப் பேசுவது பின்நவீனத்துவம் ஆகும்.'6

    மிகைல் பூக்கோ;
        'இது வரையிலான உலக வரலாறு என்பது தனிமனித மையம் தோன்றி வளர்ந்த வரலாறாகவே இருந்துவந்துள்ளது. இன்று அந்த தனிமனித மையத்தை தகர்த்துக் கொண்டிருப்பதே பின்நவீனத்துவம் ஆகும். ஏனெனில் சுயம் என்பது சுயாதினமானது அல்ல அது மொழி, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதே'7

    காரத்திகேசு சிவத்தம்பி;
          'பின்நவீனத்துவம் என்பது கலையின் செல்நெறிகள் பற்றியது. நவீனத்துவக் கலைக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டது. அது ஒரு கலைப்பாணியாக (Artistic style) அமையும்'8

    ந. முத்துமோகன்;
         'பின்னை நவீனத்துவச் சிந்தனை சில தீவிரமான நிலைபாடுகளை முன் வைக்கிறது. மரபுரீதியான பழைய சமூகங்கள் கொண்டிருந்த கருத்துநிலைகளையும், நவீன முதலாளிய சமூகம் அறிவித்திருந்த பல்வேறு சமூக இலக்குகளையும் அது அடிப்படையான மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. சிந்தனை வாழ்வில் ஒற்றைக் கோட்பாடுகளிலிருந்து துவங்கி உலகம் தழுவிய அளவிற்கு வளர்க்கப்படும் எல்லாவகை கருத்தியல்களையும் அது ஏற்க மறுக்கிறது. அவ்வகை கொள்கைகளை பின்நவீனத்துவம் ஒட்டுமொத்தப் படுத்துபவை (Totalising) மேலாதிக்கப் பண்பு கொண்டவை (Hegemonising) என்று மதிப்பிடுகிறது. இறைவன், தனிமனிதன், பிரக்ஞை, அறிவு, சமூகம், மானுட விடுதலை என்பது போன்ற புள்ளிகளை மையமாகக்கொண்டு, மொத்த உலக நோக்கும் கட்டி எழுப்பப்படுவதை அது மறுதலிக்கிறது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, நிலையற்றவை, நேர்கோட்டுத் தன்மையற்றவை, பன்மிய பாங்கு கொண்டவை, நேர்காட்சித் தளத்தவை போன்றன பின்நவீனத்துவமாகக் கொள்ளப்படுகின்றன'9

    அ. மார்க்ஸ்;
       'பன்மைத் தன்மைக்கு (plurality) அழுத்தமளித்தல், எல்லாவிதமான அதிகார ஆதாரங்களையும் (Authority) கேள்விக்குள்ளாக்குதல், எல்லாவிதமான மொத்த தத்துவ முயற்சிகளையும் (Totality) மறுத்தல் - ஆகியவற்றை பின்னை நவீனத்துவக் கூறுகள் எனலாம்.'10

    தி.சு. நடராசன்;
       'பின்நவீனத்துவ கருத்தியல் வழிமுறைகளையும் நிலைபாடுகளையும் பின்வருமாறு தொகுக்கலாம். அவை,
    1.முதலாளித்துவத்தின் அடுத்த கட்டத்து வளர்ச்சியாகிய பின்னை முதலாளித்துவம், தொழில் குழும உற்பத்தி முறை, உலகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் இது வருகிறது.
    2.மாற்றுவதல்ல மறுப்பது, தீர்ப்பது அல்ல சச்சரவு   செய்வது.
    3.முழுமைக்கும் ஒட்டுமொத்தப் படுத்தலுக்கும் மறுப்பு பகுதிகளை தொடர்பற்றத் தன்மைகள் கொண்ட தீவுகளாக வருணிப்பது.
    4.ஒற்றைத் தன்மைக்கும் எதிராக பன்முகத் தன்மைக் கொண்டது.
    5.வரலாற்றைத் திரும்பப் பார்த்து பயணிக்கச் செய்வது.
    6.பெருநெறி, பெருங்கதையாடல்களுக்கு மறுப்புச் சொல்லி சிறுகதையாடல்களை வலியுறுத்துவது.
    7.பலராலும் அங்கீகரிக்கப்பட்ட புனிதம் என்பவற்றை மறுப்பது.
    8.சுய முரண்பாடுகள் கொண்டது.
    9.வம்போடு நகை முரண் நிரம்ப நிற்பது'11

    டிசே தமிழன்; 
      'பின் நவீனத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது 'எதையும் சந்தேகித்தல்' ஆகும். அது உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதே இல்லை. மேலும், பிரதியை பார் பிரதி எழுதியவரை பார்க்காதே என்கிறது.'12

    சாதிக் பாட்சா;
        'பின்நவீனத்துவச் சிந்தனை மேலோட்டமாக ஆறு வகையான கூறுகளைக் கொண்டுள்ளது. அவை,
    1.பெருங்கதையாடல் தகர்வு
    2.தன்னிலையை முன்னிலைப்படுத்தல்
    3.ஒழுங்கவிழ்ப்பு
    4.பகுத்தறிவைக் கேள்விக்குள்ளாக்குதல்
    5.மொத்தத்துவத்தை மறுத்தல்
    6.பன்மைத் தன்மைகளை வலியுறுத்தல்'13

    ஜெயமோகன்;
          'நவீனத்துவம் என்றால் புதமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டதட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப்போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப் படுத்துகிறார்கள்.
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி அடைந்தது. எல்லாவற்றையும் தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியல் உருவாக்கிய தொழிற்புரட்சி மூலம் உலகம் முழுக்க போகவும் தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்பட்டது. ஆகவே, எல்லா சிந்தனைகளையும் உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. இந்த இரு விஷயங்களும் தான் நவீனத்துவத்தின் அடிப்படை; அதாவது, 1)அறிவியலை மையமாக்கிய நோக்கு  2)உலகளாவிய நோக்கு.
    நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகளான;
    1. தொழிற்சாலை
    2. பள்ளி
    3. பொதுப் போக்குவரத்து
    4. பொதுச் செய்தி தொடர்பு
    5. பொது ஊடகம்.
    -இவை மூலம் நவீனத்துவச் சமூகத்தில் உறுதியான மையம் கொண்ட அமைப்பு உருவாகும் போது அதற்கு எதிரான தேவையில்லாத அமைப்புகள் ஒடுக்கப்படுகின்றன. நிராகரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக சிந்தனைகளிலும் சமூக அமைப்பகளிலும் பண்பாட்டிலும் ஏராளமான போக்குகள் உலகமெங்கும் உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக நவீனத்துவப் போக்கு என்பது வழக்கம்.
          இந்த நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டையைப்பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவாகியது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப்பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் வீழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம். ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.
    இவ்வாறு நவீனத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன்பின் வந்த எல்லா சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக பின்நவீனத்துவம் என்கிறார்கள். பின்நவீனத்துவத்திற்குள் பலவகையான போக்குகள் உள்ளன. ஆனால் மையங்களையும் ஒட்டுமொத்த பெரும் அமைப்புகளையும் நிராகரிக்கும் போக்கு மட்டும் பொதுவாக இருக்கும்.
          பின்நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுப்போக்கு. இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூகத்தில் ஆண்மை மைய விழுமியாக போற்றப்ட்டது என்றால் அங்கே திருநங்கைகள் ஒடுக்கப் படுவார்கள் இல்லையா? பின்நவீனத்துவ சமூகம் அப்படி மைய விழுமியங்களை ரொம்பவும் சார்ந்திருக்காது. இருபாலினத்தவருக்கும் அதே இடத்தை அளிக்கும். தமிழ்ச் சமூகம் கூட இன்று இந்த இடம் நோக்கி வந்து விட்டிருக்கிறது அல்லவா? அதாவது மிகச்சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டுபிடித்து அதை நிரூபித்து, அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாளானவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கபட வேண்டும் என்கிறது. அப்படி மையப்படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.'14

    அஸ்வத்தாமா;
        'மார்க்சியத்தின் போதாமைகளுக்குத் தீர்வு, ''மார்க்சியத்திலிருந்து விடுதலை' போன்ற கோஷங்களுடன் நவீனத்துவமும் அதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம் என்ற விதமான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளால் உலகெங்கும் பரப்பப்பட்டன. 'பகுத்தறிவே பயங்கரம், ''தருக்கமே வன்முறை, ''மொழியே ஆயுதம்,' 'ஒழுங்கமைவு கருத்தொருமிப்பு என்பது அடிமைத்தனம்' போன்ற கருத்துக்களைப் பின்நவீனத்துவம் முன்னிலைப்படுத்தியது. 'கோட்பாடு என்ற ஒன்றே இல்லை' என்றது. கவர்ச்சிகரமான சொல்லாடல்களுடன் வந்த பின்நவீனத்துவத்தைப் பலர் பின்பற்றத் தொடங்கினர். பின் கோட்பாட்டை மறுத்த பின்நவீனத்துவமே ஒரு கோட்பாடாகிவிட்டது.'15

    மருதையன்;
           'பின்நவீனத்துவம் என்பது ஏகாதிப்பத்தியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு ஆளும் வர்க்கத் தத்துவம். இதன் சாராம்சம் வெறிகொண்ட கம்யூனிச எதிரப்பாகும். பெருங்கதையாடலை எதிர்ப்பது என்ற பெயரில் துரோகத்தையும், பிழைப்பு வாதத்தையும், சுயநலத்தையும், குழுநலனை முன்னிருத்துவதையும், யாரோடும் சமரசம் செய்து கொள்வதையும், பொறுக்கித் தின்பதையும் ஒரு கழக நடவடிக்கைப் போலச் சித்தரித்ததுதான் இதன் சாதனை'16

    ZZZ (கவனிக்க- ஆசிரியன் அடையாள மறுப்பு );
        'முன் நவீனத்துவ காலத்தில், அதாவது பகுத்தறிவு வளராத காலத்தில், ராமன் காட்டுக்கு போனான் என்ற கதையை உண்மையாக நம்பினார்கள். இது மரபு.நவீனயுகத்தில் கதைவேறு, கட்டுரை வேறு அதாவது உண்மை என்று ஒன்று உள்ளது. அதைத்தவிர எல்லாம் பொய் என்று நம்பினார்கள். ராமன் காட்டுக்கு போனான் என்றால் அதற்கான சான்றுகள் என்னென்ன என்று கேட்டார்கள். பின்நவீனத்துவ வாதிகள் - இட்டுக்கட்டியக் காரணத்தினால், கதை, கட்டுரை எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ராமன் காட்டுக்கு போனானா? அதை கதை என்று சொன்னால், அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளதை மறக்க வேண்டாம். அதே போல் அதை உண்மை என்று நம்புகிறவர்கள் அதில் உள்ள கதையைக் கவனிக்காமல் விடக்கூடாது என்கிறார்கள்.

    பின்நவீனத்துவத்தின் உட்கூறுகள்:
        பின்நவீனத்துவம் தன்னகத்துள்ளே புதமை வாய்ந்த பல உட்கூறுகளைக் கொண்டுள்ளது. அவற்றை மேற்கூறிய பின்நவீனத்துவம் குறித்த அறிஞர்களின் கருத்தாடல்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். எனினும் பின்நவீனத்துவ வாசிப்பு அணுகளுக்கு துணைசெய்யும் விதமாக, பின்நவீனத்துவத்தின் உட்கூறுகளைத் தொகுத்தளிக்கலாம். அவை,
    1.    மையத்தை சிதறடித்தல்
    2.    ஒழுங்கை குலைத்தல்
    3.    புனிதங்களைப் பகடி செய்தல்
    4.    நேர்கோடற்ற சிதறடிப்பாக எழுதுதல்
    5.    அர்த்த சாத்தியப்பாடற்ற பிரதிகளை உருவாக்குதல்,
    6.    முழமையை மறுத்து துண்டுகளை முன்வைத்தல்
    7.    விளிம்புகளை முன்னிலைப்படுத்தல்
    8.    எதிர்க  கலைத்துவத்தை (anti artistic) உருவாக்குதல்
    9.     கேள்விகளால் துளைத்தல்
    10.   சொல் சமிஞ்ஞையால் விளையாடுதல்
    11.   அதிர்ச்சிகளைத் தருதல்
    12.   இடக்கரடக்கலானவற்றை வெளிப்படுத்துதல்
    13.   கனவு நிலையில் மொழிதல்
    14.   காலத்தை முன் பின்னாக இணைத்தல்
    15.   தன்னிலை தகர்த்தல்
    16.   பிரதிகளை மீட்டுருவாக்கம் செய்தல்
    17.  ஆழமான ஒற்றை கருத்தை மறுத்தல்
    18.   பன்முகமாய் இருத்தல்
    19.   அபத்தங்களைப் பிரசுரித்தல்
    20.    பகுத்தறிவற்ற மாயத்தன்மையை(Mystic) ஏற்படுத்தல்
    21.    பிரதிகள் தனக்குள்ளே சுழலுதல்
    22.    கலைத்துப் போடுதல்
    23.    உண்மையையும் புனைவையும் கலந்து மொழிதல்
    24.    அறிதலின் மீதான அறிதல்
    25.    கொண்டாட்டங்களை மறுத்தல்
    26.    முரண்படுத்துதல்
    27.    தொடர்ச்சியின்மையாக மொழிதல்
    28.    மிகை நடப்பியத்தை புகுத்தல்
    29.    முடிவின்றி விட்டுவிடுதல்
    30.    ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தருதல்
    31.    புதிய இலக்கிய வகைமைகளைக் கையாளுதல்
    32.    பலகுரல் எடுத்துரைப்பைத் (polypony) தருதல்
    33.    எல்லாவற்றையும் கேலி செய்தல்
    34.    பிரதியைக் கட்டுடைத்தல்
    35.    சந்தர்ப்ப வசங்களைக் கையாளுதல்
    36.    வாசகனை படைப்பாளியாக்குதல்
    37.    பிரதிக்குள்ளே முரண்படுதல்
    38.   இருண்மையாக மொழிதல்
     -என பின்நவீனத்துவத்தின் உட்கூறுகள் இலக்கியத்தைப் பொறுத்தவரை பலவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.



    தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம்:


         தமிழ்ச் சூழலில் காலத்துக்கு காலம் பல்வேறு இயங்கள் (isms) தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயிருக்கின்றன. மார்க்ஸியம், அமைப்பியம், இருத்தலியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன அவற்றில் சில. இவை போன்ற சிந்தனைப் போக்குகளின் நீட்சியாக தற்போது தமிழ்ச்சூழலில் புதிதாக வந்திருக்கும் இயம் - பின்நவீனத்துவம் ஆகும். இன்றைய காலத்தில் அது தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரர் ஏற்றுக்கொண்டும், இன்னொரு சாரர் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தப்படியும் இருக்கின்றனர்.
              1990 -களில் பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. காப்ரியல், லூயி போர்கே, இடாலோ, டொனால்ட் பார்தல்மே போன்ற அயல்நாட்டு பின்நவீன எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு பின்நவீனத்துவக் கதைகள் தமிழுக்கு பரிச்சயமாயின. அந்த பாதிப்பில் தமிழிலும் அதுபோல் எழுத தமிழ் எழுத்தாளர்கள் முயற்சி செய்தனர். சில்வியா, தி. கண்ணன், பிரேம் - ரமேஷ், சாருநிவேதிதா, போன்றோர் மையம் நீக்கிய, நேரற்ற எழுத்தில் பின்நவீன சிறுகதைகளை எழுதி ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார்கள். அந்தத் தொடக்கம் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி, யுவன் சந்திரசேகர் போன்றோரால் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், தமிழ்ச்சூழலில் 1980 -களில் இருந்து பேசப்பட்டு வரும் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த பல படைப்புகள், இங்கு அதுவரை நிலவி வந்த ஆதிக்க கதையாடல்களை, இலக்கிய கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டு வெளிவந்துள்ளன. அவைகளும் பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுவனவே தவிர பின்நவீனத்துவத்தை பேசியும், எழுதியும், திறனாய்வு செய்தும் அதனை வளர்ச்சி நிலைக்கு எடுத்து வந்தவர்களில் முக்கியமானவர்கள். தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகர்ஜீனன், பெ.வேல்சாமி, அ.மார்க்ஸ், எஸ்.ரவிக்குமார்,  க.பூர்ணசந்திரன், தி.சு.நடராசன், அ.ராமசாமி, காரத்திகேசு சிவம்தம்பி, ந.முத்துமோகன், ராஜ்கௌதமன், பா.செல்வகுமார், பிரம்மராஜன், கோவை.ஞானி, க.பஞ்சாங்கம் போன்றவர்கள் ஆவர். பிரேம்-ரமேஷ் அவர்கள் பின்நவீனத்துவம் குறித்தான நூல்களை படைத்தும், உரையாடல்களைப் பெருக்கியும் வருவதுடன், அதிகமான பின்நவீன கலைப் பிரதிகளையும் எழுதி வருகின்றனர்.
            மேற்கூறியவாறான பின்நவீனவாதிகளுக்கும் பின்நவீன பிரதிகளுக்கும் இடம்தந்து அதனைச் செல்வாக்கு பெறச்செய்தது எப்போதும் போல் புதிய கோட்பாடுகளுக்கு இடம்தரும் சிற்றிதழ்கள்தான். தமிழ்ச் சூழலில் அப்பணியைச் செய்த முக்கியச் சிற்றிதழ்களாக நிறப்பிரிகை, வித்தியாசம், மேலும், முழக்கம், வைகறை, களம்புதிது, கோடங்கி, சிதைவு, கிரணம், நிகழ், உன்னதம், காலச்சுவடு, கல்குதிரை, பன்முகம், லயம், சதுக்கப்பூதம், உண்மை, உயிர்மை, தமிழினி முதலியவற்றைக் குறிப்பிடலாம். இன்னும் பின்நவீனத்துவத்தை எடுத்துச் சென்றதில் பல்கலைக்கழகங்களி;ன் பணியும் முக்கியமானதாகும்.      தி.சு.நடராசன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோர்களின் முயற்சியால் 1997- ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழவன், அ.மார்க்ஸ், க.பூரணசந்திரன், ந.முத்துமோகன், எஸ்.ரவிக்குமார் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பின்நவீன வாதிகளைக் கூட்டி பின்நவீனத்துவம் குறித்த தேசிய கருத்தரங்கம் முதலில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு தமிழியல் துறையில் பின்நவீனத்துவம் ஒரு பாடமாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதே போல் சென்னை, மதுரை காமராசர், பாண்டிச்சேரி, தஞ்சைத்தமிழ் -பல்கலைக்கழகங்களும் பின்நவீனத்துவ படிப்பினையைத் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பின்நவீனத்துவம் குறித்த ஆய்வுகளும் பல நிகழ்ந்துள்ளன.
    தமிழில் பின்நவீனத்துவப் படைப்புகள்;
           பின்நவீனத்துவம் எல்லா சமூகங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும், எல்லா மொழிகளுக்கும், எல்லா கலாச்சாரங்களுக்கும் ஒன்றாக இருக்காது. அந்தந்த சூழலில் அவ்வவற்றிற்கான பின்நவீனத்துவ நெகிழ்நிலை உண்டு. அமெரிக்க, பிரெஞ்சு, சூழலில் சொல்லப்படும் அதே தொடர்கள், அணுகல்கள் பின்நவீனத்துவம் எனும் பெயரில் இந்திய தமிழ்ச் சூழலில் இருக்க முடியாது. இந்திய – தமிழக தத்துவ மரபுகளுக்குள் பின்நவீனத்துவம் என்னவாக தனது வினையை, விலகலைச் செய்யும் என்பதை அதன் வரலாற்றுச் சொல்லாடல்கள் மற்றும் கலாச்சார சொல்லாடல்களைக் கவிழ்த்தும், கலைத்துமே நாம் அடையாளம் காண முடிகிறது. அதை விட்டுவிட்டு எதிர்கலைத்தன்மை, பகடித்தனம், தன்னிலைக் கவிழ்ப்பு, Celebration of Fragmentation, Contradiction, inner-Contradiction, pleasure of the text- என பட்டியல் போட்டு இதில் அடங்காதனவற்றை பின்நவீனத்துவ பிரதி இல்லை என மறுத்தல் கூடாது. ஏனெனில் நமக்கான பின்நவீனத்தன்மையை நம் தமிழ்ச் சூழலில் இருந்துதான் அனுகுதல் வேண்டும்.    
        அங்ஙனம் நோக்கின் தமிழ்ச் சூழலில் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த படைப்புகளில் இருந்தே பின்நவீனத்துவ பங்களிப்பு தொடர்ந்து வந்துள்ளதை அறிந்துகொள்ள முடியும். பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது, பின்நவீனத்துவம் கூறும் 'ஆசிரியர் இறந்து விட்டார் (Death of author)' என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு கொடுக்கின்றது. இன்றைய சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக் கதை என்று வைத்துக்கொண்டு கிழிகிழியென்று கிழித்து, கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண்படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும்பார், அதற்கு பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியைப் பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போல் தலித்தியச் சூழலில் நோக்கும்போது, தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்க நிலையினர் பெருங்கதையாடல்களின் மூலம் தங்கள் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இன்று தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம், கேள்விகள் எழுப்புவதன் மூலம் பெருங்கதையாடல்களை சிதைத்து வந்திருக்கிறார்கள். ஆதிக்கச் சக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தலித்துக்கள் தமக்கான அரசியலை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். எனவே, பெண்ணிய எழுத்துக்களை முன்வைக்கும் மாலதிமைத்ரி, சுகிர்தராணி, சல்மா, பெருந்தேவி, யவனிகா ஸ்ரீராம், வெண்ணிலா போன்றவர்களின் படைப்புகளிலும், தலித்தியத்தை முன்வைக்கும் ஆதவன் தீட்சண்யா, ஸ்ரீநேசன், பாலை நிலவன், ராஜ்கௌதமன் போன்றவர்களின் படைப்புகளிலும் பின்நவீனத் தன்மையைக் காணமுடியும்.
             மேலும், பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாகின. பிரேம் - ரமேஷ் அவர்களின் 'எரிக்கப்பட்ட பிரதிகளும்; புதைக்கப்பட்ட மனிதர்களும், 'சொல் என்றொரு சொல்' சாருநிவேதிதாவின் 'சீரோ டிகிரி', எக்ஸ்டன்ஸிலிசமும்- பேன்சிபனியனும்' போன்றவை இவ்வகை நாவல்கள். மீபுனைவுகளாக உள்ளுக்குள்ளே சுழலும் தன்மையுடையனவாக ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம், 'பின்தொடரும் நிழலின் குரல்', யுவன் சந்திரசேகரின் 'மணற்கேணி', 'வெளியேற்றம்' போன்றவை வெளிவந்துள்ளன. பழைய ஆக்கங்களின் மீட்டுருவாக்கமாக ஜெயமோகனின் 'கொற்றவை'யும் பா.விஜய்யின்  'காற்சிலம்பின் ஓசையிலே'வும் சிலப்பதிகாரத்தை எழுதிச் செல்கிறது. வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையாக பா.வெங்கடேசனின் 'தாண்டவராயன் கதை' முதலாக பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் பிரேம்-ரமேஷ் அவர்களின் 'கான்கீரிட் வனம்' யுவன் சந்திரசேகரின் 'ஒளிவிலகல்,' 'சோம்பேறியின் நாட்குறிப்பு' எம்.ஜி.சுரேஷின் '37', 'சிலந்தி','யுரேகா என்றொரு நகரம்', 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனிரும்' கோணங்கியின் 'பிதிரா', 'பொம்மைகள்', 'உடைபடும் நகரம்' போன்ற நாவல்களையும் பின்நவீனத்துவக் கூறுகள்       அடங்கியப் பிரதிகளாக எடுத்துக் கொள்ள முடியும்.
          சிறுகதைகளைப் பொறுத்தவரை பின்நவீனத்துவத்தின் முன்னோடியாக புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும். ஏனெனில் பின்நவீனத்துவத்தை உள்வாங்காமல் எழுதப்பட்டாலும் அவரது சிறுகதைகளில் பின்நவீனத் தன்மைகள் வெகுவாக காணக்கிடக்கின்றன. தற்போது மௌனியின் சிறுகதைகள் அதன் நீட்சியாக வந்து பின்நவீனத்துவ வாசிப்பைக் கோருகிறது எனலாம். இன்னும் தமிழவன், சுஜாதா, சுந்தரராமசாமி போன்றவர்களின் கதைகளிலும் பின்நவீனக் கூறுகளைக் காணலாம். இதில் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதுபவர்களில் முதன்மையாக பிரேம்-ரமேஷ் அவர்களையும் சாருநிவேதிதா போன்றவர்களையும் குறிப்பிடலாம்.
             தமிழ்ச் சூழலில் கவிதையில்தான் பின்நவீனத்துவக் கூறுகள் கொட்டிக் கிடக்கின்றன. பிரேம்-ரமேஷ் அவர்களின்    'பேரழகிகளின் தேசம்',   'கருப்பு     வெள்ளைக்கவிதைகள்',    'சக்கரவாளக்கோட்டம்', 'உப்பு' பாரதிநிவேதனின் 'ஏவாளின் அறிக்கை' யவனிகா ஸ்ரீராமின் 'கடவுளின் நிறுவனம்', 'சொற்கள் உறங்கும் நூலகம்' இசையின் 'சிவாஜிகணேசனின் முத்தங்கள்' இலக்ஷ்;மி மணிவண்ணனின் 'சங்கருக்கு கதவற்றவீடு' பெருந்தேவியின் 'தீயுறைத் தூக்கம்' போன்ற படைப்புகளில் பின்நவீனத்துவம் வெகுவாக உள்ளதைக் காணலாம். மேலும், பிரம்மராஜன், ஆத்மநாம், மாலதிமைத்ரி, அனார், சுகிர்தராணி, கண்டராதித்தன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், விக்ரமாதித்யன், கரிகாலன், ராணிதீலக், பழனிவேல், நாகதிசை, பா.தேவேந்திர பூபதி, சல்மா, ரசூல்  போன்றவர்களின் கவதைகளிலும் பின்நவீன முயற்சிகளைக் காண முடியும்.
          -இவ்வாறு தமிழ் படைப்புலகில் இன்றையச் சூழலில் பின்நவீனத்துவம் ஆழ வேரூன்றியுள்ளது எனலாம். இதில் ஈழத்துப் பிரதிகளும் தங்கள் பங்களிப்பை ஓரளவிற்கு தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


    பின்நவீனத்துவம் –  பொருத்தப்பாடு:

        பின்நவீனச் சிந்தனைப்போக்கு அரசியல், சமூகம், சினிமா, கலை, இலக்கியம், பண்பாடு என எல்லா தளங்களிலும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிலும் அது ஒட்டுமொத்த மாற்றங்களைச் செய்துவிடாவிட்டாலும் பொருத்தப்பாடுடையச் சில விளைவுகளை உண்டுபண்ணியுள்ளதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பின்நவீனத்துவத்தை ஒரு வாசிப்பு முறையாக கொண்டு நோக்குவோமெனில் அதற்கான பொருத்தப்பாடுகளை, நாம் சங்க இலக்கியத்தில் கூட கண்டடைய முடியும். எனினும் இன்றைய நிலையில் பின்நவீனச் சிந்தனைக்குப் பொருந்தி வரும் சிலப்பதிவுகளைக் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்துக்காட்டலாம். அவை,


    அரசியல் தளத்தில்...

        பெரியாரை தமிழ்ச் சூழலின் மிகச்சிறந்த பின்நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் மதம், மரபு, நம்பிக்கை போன்றவை மூலம் கட்டமைக்கப்பட்டிருந்த பல பெருங்கதையாடல்களை முதலில் கட்டுடைத்தவர் அவர்தான். பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச் சூழலில் ஆரம்பித்துவைத்துவரும் அவரே. சான்றாக டிசே தமிழன் கூறுவதுபோல், 'தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதை, தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக் கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்களையும் இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. எனவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் அவ்வாறு கூறினார்.'18  என்று அதனை பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.


    சமூக தளத்தில்...

            சமூகத்தில் இன்றைய நவீனச் சூழல் பல வாழ்வியல் மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. அதில் ஒன்று எல்லோரும் கிடைமட்ட பரப்பிற்கு வந்து கொண்டிருப்பது. இதற்கு சான்றாக 'கையயேந்தி பவன்' உணவகச் சூழலைச் சொல்லலாம். இங்கு ஹோட்டல்களில் உள்ளதைப்போல் குளிர்விப்பான் அறை (AC room), குடும்ப அறை (family room) என்று பாகுபாடுகள் கிடையாது. தீண்டாமை ஒழியாத கிராமத்தின் டீக்கடைகளில் உள்ளதைப்போல் இரட்டைக் குவளைகள் கிடையாது. கையேந்தி பவனுக்கு சாப்பிட வந்துவிட்டால் உணவை கையில் ஏந்திக்கொண்டு சாலையோரம் நின்றுதான் சாப்பிட வேண்டும். வந்தவன் TATA SUMO-வில் வந்தாலும், நடந்து வந்தாலும் இங்கு ஒரே ஒழுங்குதான் கடைபிடிக்கப்படும். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என எந்த அதிகார மையமும் இங்கு தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. இங்ஙனம் அதிகார படிநிலைக் கட்டமைப்பை சமூக தளத்தில் உடைத்துவிட்ட கையேந்தி பவன் ஒரு பின்நவீன வரவுதான்.


    சினிமா தளத்தில்...

      மேற்கத்தியச் சூழலில் பின்நவீனத்துவத்துடன் முழுமையாகப் பொருத்தப்பாடுடைய பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சான்றாக Avadar, Terminator, Titanic  போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் அது அரிது. இருப்பினும் ஒரு சில பின்நவீனத்துவக் கூறுகளுடன் பொருந்திவரும் திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

    1.இரட்டை முடிவுகளைத் தரும் '12 B '
    2.புனைவுகளின் மீதான புனைவாக வெளிவந்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' (எம்.ஜி. ஆர். படம் அல்ல, செல்வராகவன் இயக்கத்;தில் கார்த்தி நடித்து வெளிவந்தது.)
    3.தமிழ் சினிமா உலகை (கோலிவுட்), அதன் படைப்பாக்க செயல்பாட்டை பகடி செய்யும்  'தமிழ்ப்படம்'.
    4.கனவு உலகைச் சித்தரிக்கும் 'நியூ'
    5.ஆண்களையே நாயகர்களாக பார்த்த தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிலைப்படுத்தி தலைகீழாக்கம் செய்த 'சிநேகிதி'
    6.வார்த்தைகளே இல்லாமல் பேசிச்செல்லும் 'பேசும்படம்'
    7.பின்நிகழ் வினையை வாழும்காலத்தில் பதிவு   செய்திருக்கும் 'எந்திரன்'
    8.சமூகத்திலிருந்து முரண்படும் பிறழ்மனநிலையைக் காட்டும் 'நான்கடவுள்'
        -போன்றவைகள் ஆகும். மேலும், சினிமாவில் காட்டப்படும் சிறிய துண்டு நிகழ்வுகளில் பின்நவீனப் போக்கினைப் பல திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. 'கிரி' படத்தில் வீரபாகுவாக வரும் வடிவேல் தன் அக்காவை ' Super Figure ' எனும் இடத்தும், 'யாரடி நீ மோகினி' படத்தில் வாசுவாக வரும் தனுசிடம் 'ஆத்துல குளிக்கும் போது குண்டி கழுவிக்கலாம் இப்ப கல்ல வச்சி துடைச்சிக்கடா' என நண்பனின் குரல் ஒலிக்கும் இடத்தும் முறையே அபத்தத்தையும், இடக்கரடக்கலையும் முன்வைத்துச் செல்வதைக் காணலாம். (தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வுகள் நவீனம் கடந்த பின்நவீன நிகழ்வாக இருப்பதால் அதை பின்நவீனத்துவக் கூறாக எடுத்துக்கொள்வோம். வேற வழியில்ல)இங்ஙனம் தமிழ்ச்சூழலில் சினிமாதளத்தில் சிறு, சிறு நிகழ்வுகளாகவும் படத்தின் ஒரு கூறாகவும் பின்நவீனத்துவம் பதிவாகியுள்ளதைப் பல திரைப்படங்களில் காணலாம்.

    கலை தளத்தில்...

       முதலில் சிற்பக்கலையை எடுத்துக்கொள்வோம். அதில் பின்நவீனச் சிந்தனையைத் தேடி ரொம்ப தூரம் அலைய வேண்டியதில்லை. பன்முக பார்வைக்கு இடம்தரும் பிள்ளையார் சிலைகூட அதற்கொரு சான்றுதான். அது யானையா? மனிதனா? அல்லது இரண்டுமா? அதே போல் யாழியை பார்ப்போமெனில் அதை ஒரு பின்நவீன கற்பனை என்றுதான் சொல்லவேண்டும். சிங்கம், முதலை, யானை என்று கலந்துகட்டி உருவாக்கப்பட்டிருக்கும் அது பார்வையாளனிடம் பல கேள்கிகளைத் தோற்றுவிக்கிறது.

       அடுத்து ஓவியக்கலையை எடுத்துக்கொண்டால் அதில் பின்நவீனத்துவம் குறித்து விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு ஓவியத்தில் பின்நவீனக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. பின்நவீனத்துவத்தின் முன் இயங்கள் பல ஓவியத்திலிருந்து இலக்கியத்திற்கு நகர்ந்தமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. 

    இலக்கியத் தளத்தில்...

       இன்றைய சூழ்நிலையில் சிறுகதை, கவிதை, நாவல் என்று எல்லா இலக்கியக் கூறுகளிலும் பின்நவீனச் சிந்தனைகள் இடம்பெறுவதைக் காணலாம். வடிவம், உத்தி, கற்பனை, பாடுபொருள் என்று எல்லா இலக்கிய செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஒரு எடுத்துக்காட்டை மட்டும் ஞானக்கூத்தனின் கீழ்க்கண்ட கவிதையிலிருந்து பார்ப்போம். அது,


    'கடற் கரையில் சில
    மரங்க ளென்று நான் க
    விதை எழுத நினைத்திருந்
    தேன். எதையும் நி
    னைத்ததும் மு
    டிக்க வேண்
    டும் மு
    டிக்க வில்லை யென் றால் ஏ
    தும் மாற்றம் ஆ
    கி விடும்...'19

     -இக்கவிதை பேச வேண்டியக் கருத்தை வருணித்துச் செல்லாமல் வடிவத்திலையே சொல்லி விடுகிறது. இங்கு வார்த்தைகள் வெட்டி, வெட்டி துண்டாடப் பட்டிருப்பதிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு விட்டதைப் புரிந்து கொள்ள முடியும். அதையே இன்னுமொரு வாசிப்பாக, 'கடற்கரையில் சில மரங்கள்' எனும் தலைப்பில் கவிஞன் எழுதவிரும்பிய ஆசையும் துண்டாடப்பட்டுவிட்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, ஞானக்கூத்தனின் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள சொல்லுடைப்பும், பன்முக வாசிப்பும் பின்நவீனத்துவக் கூறுகளே எனலாம்.


    பண்பாண்டுத் தளத்தில்...

       'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது பண்பாட்டு மரபு. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தது மரபு மீறல். பெண்களுக்கு சமஉரிமை கொடுத்தது நவீனம். பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொண்டு வாழ்வது பின்நவீனம். (இரண்டு பின்நவீன வாதிகள் ஒரு பெண்ணுடன் வாழ்வதாக கேள்வி)

       அப்பாவும் மகனும் சேர்ந்து மது அருந்துவது, சிறுசு முதல் பெருசு வரை குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சியில் அரைகுறை மஞ்சள் காட்சிகளைப் பார்ப்பது. எமகண்டத்தில் மணம் முடிப்பது - என்று தமிழ்ச்சூழலில் பல பண்பாட்டுக் கூறுகளும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை பின்நவீனச் சிந்தனையாக எடுத்துக்கொள்ளலாம்.

    முடிவுரை:

    • மேலை நாடுகளில் ஒரு கோட்பாடாக உருவாகிய பின்நவீனத்துவம் இன்று எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் எல்லா பண்பாட்டுக்கும் ஏற்புடையதாக மாற்றம் கண்டுள்ளது.

    •  பின்நவீனத்துவம் என்பதை பெருங்கதையாடல்களின் மீதான தகர்வாக எடுத்துக் கொள்ளலாம். அது சிறுசிறு அங்ஙகங்களையும் மறுக்கப்பட்டவைகளையும் முன்னெடுக்கிறது. நவீனத்துவத்தின் நீட்சியாக உருவான இக்கோட்பாடு நவீனத்துவத்தின் பல நிறுவல்களை கேள்விக்குள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சாதாரணமாக நோக்கும் அது மையமற்ற ஒரு சுதந்திரநிலையை ஏற்படுத்தி தருகிறது.

    • இன்றைய நிலையில் தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் பெரும் செல்வாக்குடன் திகழ்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என்று அதன் பரப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில் பின்நவீன படைப்புகள் பல வெளிவந்த வண்ணம் உள்ளன. பின்நவீனத்துவத்தை ஒரு வாசிப்பு முறையாக கொண்டு அணுகுவோமெனில் பின்நவீனப் பிரதியை நாம் சங்க இலக்கியத்தில் கூட காணமுடியும்.



    சான்றெண் விளக்கக் குறிப்பு:

    1.எம்.ஜி.சுரேஷ்- இஸங்கள் ஆயிரம்  - பக். 187
    2.மேலது. - பக். 189
    3.மேலது. - பக். 189
    4.எம்.ஜி. சுரேஷ்-  பின்நவீனத்துவம் என்றால் என்ன? - பக். 129
    5.வெ.கிருஷ;ணமூர்த்தி(தொ.ஆ)  - பின்நவீனத்துவத்தின் அடிப்படைக்             கூறுகள் முதலிய கட்டுரைகள், - பக். 23
    6.மேலது. - பக். 30
    7.தி.சு.நடராசன், அ.ராமசாமி(தொ.ஆ) - பின்னை நவீனத்துவம்   கோட்பாடுகளும்  தமிழ்ச் சூழலும் - பக். 17
    8.சிவத்தம்பி-  தமிழ் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - பக். 211
    9.தி.சு.நடராசன், அ.ராமசாமி(தொ.ஆ) - பின்னை நவீனத்துவம்     கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் - பக். 11
    10.அ.மார்க்ஸ்- பின்நவீனத்தும் இலக்கியம், அரசியல் -  பக். 104
    11.தி.சு.நடராஜன்- திறனாய்வுக்கலை - பக். 163
    12.டிஷே தமிழன்- என்னுடைய பின்நவீனத்துவப் புரிதல்கள் - கட்டுரை
    13.சாதிக் பாட்சா- பின்நவீனத்துவம் ஒழுங்கவிழ்பின் கூறுகள் - கட்டுரை
    14.ஜெயமோகன்- பின்நவீனத்துவம் ஓர் எளிய விளக்கம்  - கட்டுரை
    15.அஸ்வத்தாமா- பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்  - கட்டுரை
    16.மருதையன்- தமிழ் நாட்டில் பின்நவீனத்துவம் - நேர்காணல்
    17.ZZZ said-  (இணையம்)  - கட்டுரை
    18.அயன்ஆல்- பின்நவீனத்துவம் குறித்த என்தேடலில் கண்டவை- கட்டுரை
    19.மு.சுந்திரமுத்து- படைப்புக்கலை,  - பக். 88



    ----------------------------------------------------------------------------- ம.மகேஷ்-------------