வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள்






இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் சமூகரீதியில் புதிய போக்குகளை எதிர்கொண்ட காலம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அரசியல் தத்துவங்களும் ஆறுதலளித்த மதங்களும் தம் மேலாதிக்கத்தை இழந்திருந்த, எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் இருத்தல் குறித்த கசப்பும் நிரம்பி வழிந்த தருணம் அது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச நிதிநிறுவனங்களின் மூலதனக் கொடுங்கோன்மை, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஆழமாக ஊடுருவியது. பல்வேறு நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மனித ஆக்கங்கள் எல்லாமே சந்தைக்கானவையாக மாற்றப்பட்டன. நுகர்பொருள் பண்பாடு தனிமனித வாழ்வின் மீது மூர்க்கமாகத் திணிக்கப்பட்டது. இச்சூழல் கலை இலக்கியத் தளத்திலும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலித்தது.

தமிழில் காத்திரமான நவீன இலக்கியம் சிறுபத்திரிகை சார்ந்த தளத்திலிருந்துதான் கடந்த ஐம்பதாண்டுகளாகப் பிரசுரம்பெற்று வருகின்றது. காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, அம்ருதா, உயிர் எழுத்து முதலான தீவிர இதழ்களின் தொடர்ந்த இயக்கம் வாசகப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது. இணைய இதழ்கள், வலைப்பூக்கள் ஆகியன உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே இலக்கியரீதியில் வலுவான தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஈழப் போர் காரணமாக உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். நவீனத் தமிழிலக்கியம் என்பது சிறுபான்மையினரான ஒரு சில குழுவினருக்கு மட்டும் உரியது என்னும் கருத்தியல் இந்தப் பத்தாண்டுகளில் மாறியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் தோன்றியுள்ள பதிப்பகங்களின் எண்ணிக்கையும் விற்பனையாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்தக் காலகட்டத்தில் கவிதைத் தொகுப்புகளும் நாவல்களும் அதிக அளவில் வெளியாகியுள்ளன. நாவல் என்பது குறைந்தபட்சம் நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் அதற்கு இலக்கிய மதிப்புக் கிடைக்கும் என்னும் கருத்து தமிழ் கூறு நல்லுலகில் வேரூன்றியது இந்தக் கட்டத்தில்தான்.

பல்வேறுபட்ட போக்குகளையுடைய நாவல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. என்னால் வாசிக்க முடிந்த ஐம்பதுக்கும் கூடுதலான நாவல்களைப் பற்றி வாசகனாகவும் விமர்சகனாகவும் சில கருத்துகளை முன்வைப்பதே இக்குறிப்புகளின் நோக்கம். இதில் இடம்பெறாத சிறந்த நாவல்களும் இருக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை.

பன்முகத் தன்மைகளை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையாக்கும் முயற்சி எல்லா மட்டங்களிலும் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை ஏதோ ஓர் அடையாளத்துடன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்த மக்கள்திரள் அதை இழந்து பெரும் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகச் சமூகம் உருவாக்கித் தன் வசம் வைத்திருந்த மதிப்பீடுகளின் சிதைவு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி மீள முடியாததாய் நவீன மனிதனின்மேல் கவிந்துள்ளது. இத்தகைய சூழலில் இலக்கியப் படைப்பு கிளர்த்தும் அனுபவங்கள் முக்கியமானவை.

இந்தப் பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் பிற இலக்கிய வடிவங்களைவிட, நாவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. அனுபவம்மிக்க நாவலாசிரியர்களுடன் முதல் நாவல் எழுதிய படைப்பாளியும் சமமாகக் களத்தில் உள்ளார்.

பின்நவீனத்துவம் தமிழ்ப் புனை கதைப் பரப்பில் புதிய போக்கை அறிமுகப்படுத்தியது. இன்று பலரும் தொடர்ச்சியறு எழுத்து முறையில் கதை சொல்வதில் முனைந்துள்ளனர். தமிழவன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். ஜி. சுரேஷ், ரமேஷ் -பிரேம், ஜனகப்ரியா, கரிகாலன், சோ. தர்மன், பா. வெங்கடேசன், ஜீ. முருகன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர் போன்றோர் பின் நவீனத்துவக் கதைசொல்லல் மூலம் படைத்துள்ள நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு (ஸீஷீஸீ- றீவீஸீமீணீக்ஷீ) தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது. வேம்பலை என்னும் ஊரின் கதை, வெயிலின் கதை, பூர்வீகப் பழங்குடியினரின் கதை, தொன்மங்களின் கதை, அதியற்புதப் புனைவுகள் எனப் பல்வேறு கதையாடல்களின் ஒருங்கிணைப்பில் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கைப் பதிவுகள் நெடுங்குருதி யில் வெளிப்பட்டுள்ளன. நாவலின் மையம் குடும்பமும் விநோதமும்தான். புதியதான கதைகளின் வழியாக மீண்டும் மீண்டும் புதிய கதைகளை உற்பத்தி செய்யும் நாவலின் பிரதி மூலம் வாசகன் தனக்கான பிரதியை வடிவமைத்துக் கொள்ளலாம். நாவல் முழுக்கப் பல்வேறு அதிமானுட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை யதார்த்த வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அப்பாலை உலகத்துடன் தொடர்புகொள்ள, மனித மனம் தொன்மப் புனைவுகளைக் கட்டமைக்கிறது. தொல்பழங்குடித் தமிழரின் வாழ்க்கையை மறு வாசிப்புச் செய்திட முயலும் நெடுங்குருதி நாவல் முன்னிறுத்தும் நுண் அரசியல் முக்கியமானது.

யாமம் நாவலின் மூலம் எஸ். ராம கிருஷ்ணன் சித்தரிக்கும் பல்வேறு புனைகதைகள், வரலாறு என்ற நினைவுத் தடத்தின் வழியே புதிய புனைவைக் கட்டமைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர், 'மதறாஸ் பட்டணம்' உருவான கால கட்டத்தில் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதாக விவரிக்கப்பட்டுள்ள கதையானது 'கலைப் பொருள்'ஆக உருமாற்றம் அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் மனத் தேடலும் விழைவும் நாவலில் இடம்பெற்றுள்ள பத்ரகிரி, தையல் நாயகி, திருச்சிற்றம்பலம், எலிசெபத், கிருஷ்ணப்பா போன்றோர் வழியே கசிந்துகொண்டிருக்கின்றன. வாழ்வின் மேன்மையையும் சிடுக்குகளையும் பதிவாக்கியுள்ள நாவல், இன்னொரு நிலையில் இருப்பின் அபத்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது. யாமம், நெடுங்குருதி ஆகிய இருநாவல்களின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் கிளர்த்தும் வாசிப்பு அனுபவங்கள் தனித்துவமானவை.

பிரேம்-ரமேஷின் சொல் என் றொரு சொல் நாவலின் கதைசொல்லல், புதுவகைப்பட்ட வாசிப்பைக் கோருகின்றது. தர்க்க மற்ற, மையமற்ற, தொடர்ச்சியற்ற எழுத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர். காலத்தைச் சிதைத்துக் குறுக்கு நெடுக்கிலும் பயணிக்கும் கதைசொல்லலில், 'தமிழ்' என்னும் தொன்மத்தைக் கண்டறியும் முயற்சி அடியோட்டமாக உள்ளது. நாவலில் இடம்பெறும் நன்மொழித் தேவன் இரண்டாயிரமாண்டு தமிழ் மனோபாவத்தின் ஆதாரம். எங்கும் வியாபிக்கும் வல்லமைமிக்க நன்மொழித் தேவன் பிரதியைப் படைப்பதுடன், பிரதிக்குள் புதைந்துபோய், இறுதியில் பிரதியைவிட்டு வெளியேறுவதன் மூலம் தமிழின் அதிகபட்சச் சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளனர் பிரேம்-ரமேஷ். நாவலின் கதைசொல்லல் காப்பிய பாணியில் விரிவது, பிரதிமீதான ஈடுபாட்டை அதிகரிக்கிறது. பல்வேறு கதைகளின் சரடில் தொங்கிப் புதிர்வழியினுள் நுழையும் வாசகன் ஒரு நிலையில் புனைவு வெளியில் தொலைந்துபோக இடமுண்டு. நவீன உலகில் அமானுஷ்யத்தின் இடத்தையும் தமிழ்த் தொன்மத்தின் நுணுக்கத்தையும் நவீனக் கதைசொல்லல் மூலம் சித்தரிக்கும் சொல் என்றொரு சொல் பின் நவீனத்துவக் கதையாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

யுரேகா என்றொரு நகரம், சிலந்தி, 37 என மூன்று நாவல்களையும் நவீனமான போக்கில் வடிவமைத்திருக்கும் எம். ஜி. சுரேஷ் எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தைக் கட்டமைக்கும் நிலையில் யுரேகா நாவலில் 'யுரேகா' என்ற நகரத்தை வைத்து அரசியல் சொல்லாடலைக் கட்டமைத்துள்ளது, அந்நாவலை வேறுவகையான வாசிப்புக்கு இட்டுச்செல்கிறது. அதிகாரம் வரலாற்றின் வழியாக மக்கள் திரளுக்குள் ஊடுருவி நிகழ்த்தும் வினையைச் சுவராசியமான கதையாக்கியுள்ளார் சுரேஷ். நவீன அறிவியலையும் வாய்மொழிக் கதை மரபையும் இணைத்துப் புதிய மொழியில் அவர் விவரித்துள்ள 37 நாவல், தட்டையான மொழியில் விரிகின்றது. பூமியில் குடும்ப நிறுவனத்தில் சிக்கியிருக்கும் மனிதர்கள், லோன் கிரகத்தில் இயந்திரங்களின் ஆளுமையில் சிதிலமாயிருக்கும் மனிதர்கள் என இருவேறு தளங்களில் விரியும் நாவல் மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணைகளை முன்வைக்கிறது.

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், குள்ளச் சித்தன் சரித்திரம், கானல் நதி ஆகிய மூன்று நாவல்களும் பிரதியாக்கம் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்குகின்றன. நினைவும் இசையும் புராணமும் புனைவும் வரலாறும் என விரியும் கதையாடலை யுவனின் பகடையாட்டம் நாவலில் காணலாம். எல்லாம் துல்லியமாக இருக்கின்றன என்னும் பிரக்ஞையின் அபத்தத்தை முன்னிறுத்தி எல்லாவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் இடமளிக்கும் வகையில் புனைகதைப் பரப்பை விவரித்து, வேறுதளத்துக்கு இட்டுச்செல்கின்றன யுவனின் நாவல்கள்.

தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், இந்தியத் தத்துவ மரபையும் தமிழரின் புராதனத் தன்மையையும் மேலைச் சிந்தனை மரபையும் ஒருங்கிணைத்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உண்மை என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுவதேயன்றி, புதிதாகக் கண்டறியப்படுவதற்கான சாத்தியப்பாடு மிகக் குறைவு என்னும் நிலையில் உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியைக் கதையாடலின் வழியாகத் தமிழவன் கண்டறிய முயன்றுள்ளார். எதிரிணைகளை மோதவிட்டு ஒழுங்கைச் சிதைத்து விவாதிக்க முயலும் கதையாடல், தன்னிலைக்கும் வரலாறு மற்றும் பண்பாட்டிற்குமான உறவை அடையாளப்படுத்த முயன்றுள்ளது. பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் இந்நாவலில் இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள அறிதல் முறையும் உண்மையைக் கண்டறியும் முறையும் சிதிலமாகியுள்ளதைக் காண முடிகிறது.

பின்நவீனத்துவக் கதையாடலை முன்னிறுத்தும் சாருநிவேதாவின் ராஸலீலா, காமரூபக் கதைகள் ஆகிய இருநாவல்களும் பாலியல் பற்றிய மறுபேச்சுகளை உருவாக்குகின்றன. பாலியல் செயல்பாடுகளும் பாலியல் பிறழ்வுகளும் நாவலாக்கத்தில் வெளிப்படையாகப் பதிவாகியிருப்பதுதான் சாருவின் சாதனை. மற்றபடி நாவல் முழுக்க ஆண் மையவாதத்தில் கதையாடல் விரிவதனால், பிரதியின் மையமழிப்பு, அதிகாரத் தகர்ப்பு போன்ற பின் நவீனத்துவச் சொல்லாடல்களுக்கு இடமில்லை. உடல் துய்ப்பையும் மனப்பிறழ்வு சார்ந்த அழகியலையும் எமினெம் இசையில் வெளிப்படுத்திய விதம் குறித்து வியப்படையும் சாருவுக்கு, தனது நாவல்கள் குறித்து அளவுக்கதிகமான பெருமிதம் இருக்கிறது. பெருமாள் என்ற பித்தனை மையமிட்டு விரியும் கதைசொல்லலில், கதைசொல்லும் முறை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது. பெண் பற்றிய சமூக விழுமியங்களைத் தகர்ப்பதற்கென அதே பாலியலைச் சித்தரிக்கும் நாவலில், அவ்வப்போது பின்நவீனத்துவ உத்திகள் விட்டேத்தியாகக் கலக்கப்படுகின்றன. அதிகார மையத்தைத் தகர்த்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடலை உருவாக்க விழையும் பின்நவீனத்துவக் கருத் தாடலைப் பெண்ணின் பிருஷ்டத்தைக் கடிப்பதற்கு ஏதுவாக உருமாற்றும் தந்திரத்தில் சாருவின் எழுத்து நுட்பமானது.

கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் மொழி விளையாட்டு மூலம் அதிகார மையத்தைத் தகர்க்க முயல்கிறது. மன வலியும் வதையும் துக்கமும் துரத்தும் நடப்பு வாழ்க் கையிலிருந்து பீறிடும் எக்ஸ் என்னும் கதை மாந்தரின் குறிப்புகளை வாசித்துக்காட்டும் ஸ்டெல்லா என்ற மருத்துவமனை வரவேற்பாளினியின் மூலமாகக் கதைத் தளம் விரிகின்றது. ஒரு நிலையில் மனப் பிறழ்வின் உச்சத்தில் அதீதமாக வெளிப்படும் உணர்வுகளைப் பதிவாக்குதல் மூலம் நாவல் புதிய கேள்விகளை எழுப்புகிறது.

ஜனகப்ரியாவின் சூரனைத் தேடும் ஊர் புதிய வகைப்பட்ட நாவல். பிழையூர் என்ற ஊருக்குள் வந்த சூரனை ஊரார் தேடுகின்றனர். ஒற்றைக் கண் மனிதன் எல்லோரையும் மிரட்டுகிறான். இருளை விரட்டுவதற்கான ஆராய்ச்சி ஊர்ச் சபையில் நடக்கிறது. ஊருக்குள் சாதிக் கலவரங்கள், மந்திரவாதிகள், கோடாங்கிகளின் சொற்கள் ஆதிக்கம் பெறுகின்றன. கிராமத்தை முன்னிறுத்திப் பல்வேறு தொன்மங்களையும் புனைவுகளையும் சேர்த்து நவீன உலக அரசியல் பிரதியில் வெளிப்படுகிறது. ஊருக்குள் கதை வடிவில் கோரமாகப் பல இடங்களில் வெளிப்பட்டும் மறைந்தும் இருக்கின்ற சூரனைத் தேடும் கதைப் போக்கில் பின்நவீனத்துவ அம்சம் பொதிந்துள்ளது.

மாயமாக நாவலைப் புனைந்து சொற்களின் வழியாக வெளியிடும் கோணங்கியின் பாழியும் பிதிராவும் இந்த நூற்றாண்டின் விநோதமான பிரதிகள். பின்நவீனத்துவக் கலைஞன் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விதிகளுக்கேற்பப் படைப்புகளை உருவாக்க முடியாது என்னும் நிலையில் கோணங்கியின் எழுத்து முறை 'அலாதி'யானது. எழுத்து என்பது மொழி விளையாட்டுத்தான் என்ற நிலையில் கோணங்கி, அளவுக்கதிகமான தொன்மங்களின் வழியே கதைக்குள் பயணிக்க முயல்கிறார். அவருடைய நாவல்களில் உள்ள செயற்கையான மொழிநடையும் இயல்புக்கு மாறான விவரணைகளும் வாசகனைப் பிரதியைவிட்டே வெளியேற்றிவிட்டன. இழந்தது குறித்த ஏக்கத்துடன் நிகண்டுகள், பேரகராதிகள், செவ்விலக்கியம் போன்றவற்றால் அளவுக்கதிகமான நீண்ட வாக்கியங்களுடன் கோணங்கி சொல்லவருவது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பாழியில் சொல்லப்படும் கவித்துவம் நிரம்பிய வரிகள், கலங்கிய நிலையில் அர்த்தத்தை இழந்து தவிக்கின்றன. நகரமயமாதல், உலகமயமாக்கல், சுற்றுப்புறச் சூழலின் நாசம் என அண்மையில் தமிழர் வாழ்க்கையைப் பிடித்துள்ள நாசகாரச் சக்திகளின் அதிகாரத்திற்கெதிராக இழந்துபோன தமிழ் அடையாளத்தை மீட்டுருவாக்க முயல்கிறார் கோணங்கி. திணை சார்ந்த தமிழர் நிலவெளியும் எல்லாவற்றையும் மர்மப்படுத்த முயலும் விநோதக் காட்சிகளும் உடல்களைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சம கால நெருக்கடிகளைத் தனது நாவல்களில் ஸ்தூலமாக வெளிப்படுத்தாத கோணங்கிக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்த எதிர்வினை இருக்கிறது. மார்க்சியம் குறித்த, இழந்து போன வளமான நிலம் குறித்த ஆதங்கமும் உடல்கள்மீதான வதையும் வெவ்வேறு வடிவங்களில் அவருடைய நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. வெவ்வேறு காட்சிகள் வரலாறு என்னும் பெயரில் படிந்துள்ள மனநிலையுடன் பல்வேறு தொன்மக் கதைகளை விவரித்துக்கொண்டே போவது கோணங்கிக்கு இயல்பாக உள்ளது. யதார்த்தச் சித்தரிப்பின் ஊடே மாயப் புனைவு திடீரென உரசிப்போனால், வாசகனின் மனம் திடுக்கிடுவதுடன் தனக்கான பிரதியை உருவாக்க விழையும். ஆனால் கோணங்கியின் நாவல்களில் வெளிப்படும் கதைசொல்லல் வெறும் பிரமிப்பை மட்டும் தருகின் றது. நினைவிலி மனத்துடன் நெருங்கிய தொடர்புடைய கவிதையின் தனிப்பட்ட மொழியை வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல்கள், உரைநடைக்கே உரித்தான தருக்க ஒழுங்கைவிட்டுத் தனித்துள்ளன.

கோணங்கிக்குத் தமிழ் இருப்பு குறித்த மகத்தான கனவுகளும் அதியற்புதமான புனைவுகளும் இருப்பது சரியானதுதான். ஆனால் அவற்றைப் புனைகதையாக்கும்போது, அடி யாழத்தில் ஒழுங்கு இருக்க வேண்டியது அவசியம். நிகண்டுகள், செவ் விலக்கியங்களில் இருந்து உருவப்பெற்ற சொற்கள் நவீன வாசகர்களுக்கு முற்றிலும் அந்நியமானவை. வரலாறு, ராகம், ஓவியம், இசை, உலக இலக்கியம், சிற்பம், நாட்டார் வழக்கு, கனவு, தொன்மம் எனப் பல்வேறு விஷயங்களைப் புனைகதை வடிவத்துக்குள் திணிக்கும்போது, வாசகன் குறித்த பார்வையைப் படைப்பாளர் கொண்டிருக்க வேண்டும். புனைகதையின் புதியதான மொழியில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கதிகமான சம்பவங்கள், வாசகனை அண்டவிடுவதில்லை. வாசிப்பின் வழியாகப் பெறும் மகிழ்வும் வாசகன் தனக்குள்ளாக உருவாக்கிக்கொள்ளும் பிரதிகளும் மறுக்கப்படுகின்ற நிலையில், கோணங்கியின் பிரமாண்டமான இருநாவல்களும் வாசக மறுப்புப் பிரதிகளாக உருமாறிவிட்டன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை மையமிட்டுக் கோணங்கியால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புதிய வகை நாவல் முயற்சிகள் தமக்கான வாசகர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

பா. வெங்கடேசனின் தாண்டவ ராயன் கதை, ஜீ. முருகனின் மரம், சுதேசமித்ரனின் காக்டெயில் ஆஸ்பத்திரி, எஸ். செந்தில்குமாரின் ஜி. சௌந்தரராஜனின் கதை போன்ற நாவல்கள் புதிய வகைப்பட்ட கதை சொல்லலுக்கு எடுத்துக்காட்டுகள். இந்நாவல்களை முழுமையாக வாசித்து முடிக்காமையால் இக்கட்டுரையில் சேர்க்கவில்லை.

பின்நவீனத்துவக் கதையாடலை மொழிந்திடும் நவீன நாவலாசிரியர்களின் புனைகதைகளை வாசிக்கும் போது, அவை இன்றும் மேலை நாவலாசிரியர்களின் பிடியிலிருந்து விலகித் தனித்து இயங்கவில்லை எனத் தோன்றுகிறது. போலச் செய்தல், நகலெடுத்தல், வெறுமனே சோதனை முயற்சி என்ற நிலையில் மார்க்யூசையும் உம்பர்ட்டோ போன்றோரின் பெயர்களையும் உச்சாடனம் செய்தல் நவீனத் தமிழ்ப் புனைகதைக்கு வளம்சேர்க்கவில்லை. விளிம்பு நிலையினரைக் கருவாகக் கொண்டு புதியதான உத்திகளைக் கையாண்டுள்ள சில சோதனை நாவல்கள், தமிழ்க் கதையாடல் மரபை மாற்றியமைத்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. நகலில் இருந்து விலகி அசலான புனைகதைகள் எழுதப்படுவதற்கான அடித்தளம் வலுவடைய வேண்டியது இன்றைய தேவை.

1990களில் புதிய வகைப்பட்ட நவீன எழுத்து பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஒற்றைத் தன்மை, பிரதியின் அதிகாரம் என்னும் நிலையில் யதார்த்த வகைப்பட்ட எழுத்துகளைப் புறக்கணிக்கும் மனநிலை சிறுபத்திரிகை உலகில் பரவலானது. யதார்த்தப் புனைகதைகளின் காலம் முடிவடைந்துவிட்டது என்ற பொதுப்புத்தி வலுவடைந்தது. இவற்றை மீறி யதார்த்தப் புனைகதைகள் இன்றளவும் தமிழில் செல்வாக்குடன் விளங்குவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது.

யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை வாசிக்கும்போது இது சுய வரலாறா அல்லது புனைகதையா என்ற ஐயம் தோன்றுகின்றது. குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் செயல்படும் அதிகாரத்தைப் பன்முகரீதியில் யூமா வாசுகி எழுத்தாக்கியுள்ளார். மரபுவழிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் அடையும் வலிகளைவிட மனப் பாதிப்புகள் அதிகம். சக உயிர்கள்மீது அன்பற்ற அணுகுமுறையால், அன்றாட வாழ்வின் கொடூரங்களுக்குள் வதைபடும் மனித உயிர்கள் பற்றிய விவரணைகளுக்குள் வாசகனை இட்டுச்செல்கிறது இந்நாவல். துயரத்தின் நெருக்கடியில், அறிவை இழந்து, இவையெல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்னும் அழுத்தமான கேள்வியை எழுப்பி, வாசகனைத் திகைக்கவைத்திருப்பது, யூமா வாசுகியின் கதைசொல்லலின் மேன்மையாகும். குடும்பம் என்ற பெயரில் எல்லோர்மீதும் வன்முறையைப் பிரயோகிக்கும் சூழல், மனித உடல்களை வெறும் வதைக்கான களமாக மாற்றுகின்றது. கதைசொல்லியான யூமா வாசுகி எவ்விதமான நிலைப்பாடும் கொள்ளாமல், விவாதத்திற்குரிய நிலையில் கதையை விவரிப்பது நாவலாக்கத்தில் முக்கியமானது. வெறுமனே புனைவு என்று ஒதுக்கிவிடாமல், சம்பவங்களின் விவரிப்பு தரும் அதிர்வுகளுடன் விவரிக்கப்பட்டுள்ள ரத்த உறவு, தமிழ்க் குடும்பம் குறித்த விமர்சனத்தை எழுப்புகின்றது.

மீனவர் பின்புலத்திலிருந்து வந்த ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு, தமிழ்ப் புனைகதையை அடுத்த தளத்திற்கு மாற்றும் வல்லமை பெற்றது. ஒரு வட்டாரத்தில் வாழும் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கைக் கதையை உற்றுநோக்கும் தன்மையும் மதிப்பீடு சார்ந்து அணுகும் திறனும் மிக்கவர் தீவிரமான நாவலைத் தர முடியும் என்னும் நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகின்றது. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பில் வாழும் மனித உயிர்கள் மட்டுமின்றிப் பிற உயிரினங்களும் படும் 'பாடுகள்' அளவற்றவை. திசைகளற்ற கடற்பரப்பில், இயற்கையுடன் முரண்பட்டு மீன்களைப் பிடித்துவரும் மீனவர்களுக்கு 'நாளை மற்றுமொரு நாள்'தான். ஒருவிதமான சாகச மனநிலையில் இயற்கையுடன் போராடும் மீனவர்களின் சமூக வாழ்க்கை முரண்பாடுகள் மிக்கது. 1933ஆம் ஆண்டு தொடங்கி விவரிக்கப்படும் கதையில் கடற்பரப்புபோல, மக்களின் வாழ்க்கை நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் மூலம் மூன்று தலைமுறைகளாகக் கிராமத்தில் நிகழும் சம்பவங்களும் மாற்றங்களும் நாவலில் பதிவாகியுள்ளன. ஆமந்தூர் கிராமம்தான் முதன்மைக் கதாபாத்திரம். பல்வேறு கதைகளின் மூலம் ஜோடி குருஸ் வாழ்வு குறித்த பெரும் கேள்விகளை எழுப்புகிறார்.

சாதாரணமாக இருந்த 'திருப்பூர்' என்ற ஊரில் நவீனத் தொழில்நுட்பமும் ஏற்றுமதி சார்ந்த வணிக உற்பத்தியும் ஏற்படுத்திய பிரமாண்டமான மாற்றத்தைப் புனைகதை வாயிலாக மணல் கடிகை என்னும் பெயரில் எம். கோபால கிருஷ்ணன் பதிவாக்கியுள்ளார். திடீரெனக் கொட்டும் டாலரால் எங்கும் பொருளாதாரப் பரவல். இதனால் மனிதர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு. மேல் நிலைப் பள்ளியில் பயின்று முடித்த ஐந்து பதின் பருவத்து இளைஞர்களுடன் தொடங்கும் புனைகதை வெவ்வேறு தளங்களுக்கு விரிகின்றது. ஒரே சூழலில் வளர்ந்தவர்கள்மீது நடப்பு வாழ்க்கை தந்த அனுபவங்கள், கசப்பாக நாவல் முழுக்க ஊறிக்கொண்டேயிருக்கின்றது. தனி மனித விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் மனிதர்களும் இயந்திரத்தின் பாகங்களாகும் விநோதம் நடந்தேறுகின்றது. பாரம்பரியமான மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. குறிப்பாகப் பெண்ணை முன்னிறுத்திச் சமூகம் உருவாக்கிய சொல்லாடல்கள் அபத்தமாகின்றன. மனித வாழ்க்கையின் வீழ்ச்சியையும் சோர்வையும் உள்ளடக்கிய நாவல் துயரத்தை முன்னிறுத்தினாலும் வாசிப்பில் வசீகரம் மிக்கது.

பல்லாண்டுகளாகக் காட்டிற்குள் வாழ்ந்துவரும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆதிக்கச் சக்தியினராலும் அரசு இயந்திரத்தாலும் எவ்வாறு சிதிலமாகிறது என்பதை ச. பால முருகனின் சோளகர் தொட்டி நாவல் துயரமான தொனியில் விவரித்துள்ளது. ஏற்கனவே பாரம்பரியமான வனத்தை இழந்துகொண்டிருக்கும் பூர்வீகக் குடிகள் வாழ்க்கையில் வீரப்பன் போன்றவர்களை முன்னிறுத்திக் காவல் துறை செய்யும் கொடுமைகளும் வன்முறைகளும் அளவற்றவை. சந்தனக் கடத்தல் வீரப்பனின் மரணத்திற்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்நாவலில் கதையோட்டம் யதார்த்தமாக உள்ளது. ஆனால் மக்கள் படும் துயரங்களை வெறுமனே நகலெடுப்பதுபோல விவரித்திருப்பது, வாசிப்பில் வேறு அனுபவமெதையும் தரவில்லை. வெற்றுத் துயரங்கள், வதைகள், சித்திரவதைகள் என்னும் நிலையிலிருந்து விலகி, அதிகாரமையத்தின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தாதது நாவலின் பலவீனமான அம்சம்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத் தெரு, கறுப்பு லெப்பை ஆகிய இருநாவல்களும் இஸ்லாமியர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ் நிலையைக் களமாகக் கொண்டுள்ளன. தமிழ் முஸ்லிம் சமுதாயம் என்னும் ஒற்றைச் சொல்லாடலைக் கலைத்து, அதற்குள் இயங்கும் பல்வேறு மேல் கீழ் அம்சங்களை ஜாகிர் ராஜா இந்நாவல்களில் பதிவாக்கியுள்ளார். மைய அரசியல் மயப்பட்ட முஸ்லிம் மனோபாவத்திற்கு மாற்றாகச் சூபியிசத்தில் நம்பிக்கையுடன் தொன்மங்கள் சார்ந்து வாழ்கின்ற விளிம்புநிலையினரின் வாழ்க்கை பன்முகத் தன்மையுடையதாக உள்ளது. பொருளியல் ஏற்றத்தாழ்வு காரணமாக, வசதி படைத்த முஸ்லிம்களால் பாலியல் வல்லுறவு உள்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் அடித்தட்டு முஸ்லிம்களின் வாழ் நிலை பற்றிச் சித்தரிக்கும் நாவல்கள் தமிழுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெருமாள்முருகனின் கூளமாதாரி, கங்கணம் நாவல்கள், கொங்கு நாட்டுப் பகுதியில் கவுண்டர், தலித்துகள் ஆகியோரை முன்னிறுத்தி யதார்த்தமான புனைவுகளைக் கட்டமைக்கின்றன. கிராமத்தைவிட்டு விலகியிருக்கும் அத்துவானக் காட்டில் ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்கள் அன்றாட உணவுக்காகச் சகித்துக்கொள்ளும் துயரங்கள் கூள மாதாரி நாவலில் பதிவாகியுள்ளன. முப்பத்தைந்து வயதானபோதும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெண்ணுடன் உடலுறவுகொள்ளத் துடிக்கும் முதிர் ஆணான மாரிமுத்துவின் கதைதான் கங்கணம் என்னும் நாவலாகியுள்ளது. காமத்தின் வாசனையை நுகரத் துடிக்கும் மாரிமுத்து பற்றிய புனைவு தமிழுக்குப் புதிது. குடும்பம், சொத்து என்னும் பெயரில் உடல்கள் வதைக்குள்ளாக்கப்படுவதைக் கங்கணம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஊனமுற்றோரை மூலதனமாகக் கொண்டு கோவில் வாசல், திரு விழாக்களில் பிச்சையெடுக்கவைத்து, வசதியாக வாழும் மனிதர்கள் பற்றிய இந்நாவல் நம்புவ தற்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மனித இருப்பின் கோரத்தையும் பேரவலத்தையும் யதார்த்த மொழியில் பதிவாக்கியுள்ள ஜெயமோகனின் எழுத்து, வாசக மனத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. கதை விவரிப்பு மூலம் ஜெயமோகன் சித்தரிக்கும் நம்பகத்தன்மையானது யதார்த்தக் கதைசொல்லலின் ஆகப் பெரிய பலம். காடு நாவலில் காட்டை முன்வைத்து ஜெயமோகன் விவரிக்கும் புனைகதை ஆழமான அனுபவங்களுக்கு இட்டுச்செல்லும் தன்மையுடையது. இயற்கையின் அங்கமான மனிதன், தனது இருப்பை மறந்து, பூர்வீக நிலமான காடு, வன உயிரினங்களைப் புறக்கணிக்கும் நிலையில், எதிர்கொள்ளும் அனுபவங்கள் முக்கியமானவை. சமுதாய வாழ்க்கைபோலவே காட்டிற்குள்ளும் தொடரும் வாழ்க்கை தனித்தன்மை வாய்ந்தது.

தமிழ் மதிப்பீடுகளின் சரிவை வா. மு. கோமுவின் கள்ளி நாவல் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது. சக்கிலியர்-கவுண்டர் என விரியும் நாவலின் குவிமையம் பாலியல் பற்றிய வெளிப்படையான பேச்சுகளை முன்வைக்கிறது. உடல் வேட்கையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆணும் பெண்ணும் படுகின்ற பாடுகளைக் நுட்பமாகக் கோமு கலைத்துப்போடுகிறார். பாலியலை முன்னிறுத்தித் தமிழ்ச் சூழலைக் கேள்விக்குள்ளாக்கும் கோமுவின் எழுத்து பண்பாட்டிற்கு விடப்பட்ட சவால். திலகவதியின் கல் மரம், சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி, எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி, நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக் கடல், க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் போன்ற நாவல்கள் யதார்த்தத் தளத்தில் குறிப்பிடத்தக்கவை.

பிறப்பால் தலித்துகளாக உள்ள கண்மணி குணசேகரன், இமையம், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் போன்றோர் எழுதியுள்ள நாவல்களில் தலித்தியப் பிரக்ஞை வெளிப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் தங்களுடைய படைப்புகளைத் தலித்திய நோக்கில் அணுகுவதை விரும்புவதில்லை. தலித் படைப்பாளர்கள் எழுதியுள்ள நாவல்கள் வெவ்வேறு தளங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. தலித் மக்களின் துயரங்களும் அவலங்களும் கதைக்களனாகும் நிலையில், பருண்மையான அரசியல் வெளிப்பாடு என்பது சிலரின் நாவலாக்கத்தில் வெளிப்படவில்லை. இமையத்தின் செடல் நாவல், சாதிய அடுக்குமுறையில் மேல்-கீழ் நிலையில் செயல்படும் ஆண்டான் ஜ் அடிமை உறவானது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் செயல்படுவதை விவரிப்பது நுண் அரசியல் சம்பந்தப்பட்டது. தலித் சாதியினரைவிடச் சமூக மதிப்பீட்டில் இழிந்தவராகக் கருதப்படும் 'கூத்தாடி' சாதியினர் பற்றிய கதையாடலைத் தேர்ந்தெடுத்ததில் இமையத்திற்கு எனத் தனித்த கருத்தியல் உண்டு. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மேலாதானூர் கிராமத்தில் செடல் என்னும் சிறுமியை முன்வைத்துத் தொடங்கும் கதை, பெண்ணுடலை முன்னிறுத்திச் சமூக இழிவுகளை விவரித்துள்ளது. தெய்வத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்படும் செடலின் உடல் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்களுக்குள்ளாகிறது. வட்டார வழக்கு மொழியில் விரிந்துள்ள நாவல், தலித் சார்ந்த எந்தவொரு பிரகடனத்தையும் முன்வைக்கவில்லை. இமையத்தின் நுட்பமான எழுத்து நடை இந்நாவலின் பெரிய பலம்.

ஸ்ரீதர கணேசனின் வாங்கல் கடல் சார்ந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு நாவலான அவுரி பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்த போராட்டத்தினூடே தலித்துகள் சாதியரீதியில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை குறித்தும் அக்கறை கொண்டுள்ளது. சாதியத்துக்கும் வர்க்கத்துக்குமான முரண் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முந்தைய நாவல்களுடன் ஒப்பிடும்போது, அவுரியில் தலித்துகள் சாதிய ரீதியில் ஒடுக்கப்படுவது குறித்த சொல்லாடல்கள் வீர்யத்துடன் வெளிப்பட்டுள்ளன. அஞ்சலை மூலம் கண்மணி குணசேகரன் தலித் பெண்கள்மீதான அத்துமீறல்களை நுட்பமாகக் கலைப்படுத்தியுள்ளார். சூழலின் வெக்கை காரணமாகக் கணவனைவிட்டுப் பிரிய நேரிடும் பெண் தொடர்ந்து பாலியல்ரீதியில் படும் துயரங்கள் அஞ்சலையின் கதையாக வெளிப்பட்டுள்ளன. நாவலில் இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மனித இருப்பு குறித்த ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லையெனினும், உடல்கள்மீது ஏவப்படும் வதைகளை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளன.

சோ. தர்மனின் கூகை நாவலில் தலித்துகள்மீதான ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறை முழுவதும் சித்தரிக்கப்பட்டாலும், பின்நவீனத்துவக் கதையாடலின் மூலம் தலித்துகளை வேறு ஒன்றாகக் குறியீடு செய்வது நிகழ்ந்துள்ளது. இரவில் கூர்மையான பார்வையுடன், இருளை ஊடுருவித் தனது இலக்கை அடையும் வல்லமை மிக்க புத்திசாலிப் பறவையான கூகை, பகலில் சிறிய பறவையால்கூடக் கொத்தப்படுகிறது. கூகையின் வட்டமான சுழலும் கண்களும் விரும்பிய திசையில் தலையைத் திருப்பும் லாவகமும் கண்டு பயந்திட்ட மனித மனம், கூகையின் முகப்பொலிவைக் கோரமென்றும் அதன் கத்தலைச் சாபமென்றும் அஞ்சி நடுங்குகிறது. சமூக உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் தலித் உடல்களின் வலிமையைக் கூகையாக உருவகப்படுத்திச் சாதிய மனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தர்மனின் கதையாடல் நுட்பமானது.

தலித் பற்றித் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள சொல்லாடல்களின் பின்புலமாக இலக்கியரீதியில் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. வெறுமனே கிராமப் புறக் காட்சிகளும் ஆதிக்கச் சாதியினரின் அடாவடித்தனமும் தலித்துகளின் ஒடுங்குதலும் தொடக்க கால தலித் நாவல்களில் பதிவாகியிருப்பது ஏற்புடையதே எனினும் பத்திருபது ஆண்டுகள் கடந்த நிலையில் தலித் நாவல்கள் புதிய வகைப்பட்ட உத்திகளையும் உள்ளடக்கியதாக மாற வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பெருவெடிப்பாக வெளிப்பட்டுள்ள தலித்திய நாவல்கள் சரியான திசை வழியில் பயணிக்கின்றன என்பதற்கு அடையாளமாக இமையம், சோ.தர்மன், சிவகாமி, பாமா போன்றோரின் எழுத்து முயற்சிகள் உள்ளன. ஒப்பீட்டளவில் தலித் நாவல்களின் எண்ணிக்கை குறைவு.

பெண் நாவலாசிரியர்களில் அ. தமிழ்ச்செல்வியின் இடம் தனித்துவமானது. அளம், மாணிக்கம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத் துறை, கண்ணகி என ஆறு நாவல்களில் தமிழ்ச்செல்வி சித்தரிக்கும் உலகு பெண்களை மையமிட்டுள்ளது. ஆண் அதிகாரம் சார்ந்த தமிழ்க் கிராமியச் சூழலில் நிலவும் பெண்ணுடல்மீது ஒடுக்குமுறை இவருடைய கதையாடல்களின் பொதுத்தன்மை. தஞ்சை மண்ணின் மனத்துடன் சொல்லப்பட்டுள்ள இவரது நாவல்களில் தொன்மங்களும் நாட்டார் கதைகளும் இயல்பாகக் கலந்துள்ளன. பெண்ணியம் என்னும் நிலையில் மேலைக் கோட்பாடுகளைப் பின்பற்றாமல், தமிழ் நிலம் சார்ந்து தமிழ்ச்செல்வி புதிய வகைப்பட்ட மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.

அவருடைய எல்லா நாவல்களிலும் அல்லல்பட்டுத் துயரமடையும் கதைகளையும் ஆண்களால் புறக்கணிப்பட்ட நிலையில் தனக்கான வெளியை உருவகிக்கும் பெண்களையும் நிரம்பக் காண முடிகிறது. வெறுமனே யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள கதைகள், வாசிப்பதற்கு அலுப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.

இஸ்லாமியப் பின்புலத்தில் விரிந்திடும் பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் இரண்டாம் ஜாமங்களின் கதை தமிழ்ப் பெண் எழுத்துகளில் குறிப்பிடத்தக்கது. நாவலாசிரியை சல்மா பெண்ணுடல் பற்றிய பெருங்கதையாடல்களைச் சிதைக்கின்ற வகையில் நாவலைப் படைத்துள்ளார். மதமும் அரசியலும் தொடர்ந்து பெண்ணுடல்களைக் கண்காணிப்பிற்குள்ளாகிடும் நிலையில், பண்பாடு என்னும் பெயரில் திணிக்கப்படும் அழுத்தங்கள் கொடூரமானவை. ஆண்-பெண் உறவுக்கிடையில் பால் சமத்துவமற்ற நிலையில், பெண்ணுடல்மீது புனையப்படும் வரலாறு ஒற்றைத் தன்மையுடையது. இஸ்லாமிய நெறிப்படி பெண்ணுடல் மறு உற்பத்திக்கான களம் என்னும் நிலையில், அவளுக்குப் புணர்ச்சி மூலம் இன்பம் கிடைக்காது என்ற கருத்து வன்முறையின் மூலம் பெண்ணுலகினுள் திணிக்கப்படுவது தற்செயலானது அல்ல. வீட்டில் அன்றாடச் செயல்களில் மதத்தின் ஆளுமை நுண் அளவில் செயல்படுகிறது. சமூக வாழ்வில் அடையாளமிழந்த பெண்கள், தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மதத்தின் மீது அதீதமான ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்கே உரித்தான நெறிமுறைகள், மதச் சடங்குகள், நோன்புகள் புனித நம்பிக்கைகள், மன்றாடல்கள் என விரியும் நாவலில் பெண்களின் நிலை குறித்த கேள்விகளை சல்மா எழுப்பியுள்ளார். யதார்த்தமான கதை சொல்லலில் விரியும் இந்நாவலில் ஓரளவு வசதியான இஸ்லாமியப் பெண்கள் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அன்றாடம் காய்ச்சியாக உழைத்து வாழும் முஸ்லிம் பெண்களின் உலகம் வேறுவகைப்பட்டதாகத் தானிருக்கும் எனினும் மறைபொருளாக உருவகிக்கப்பட்டுவந்த பெண்ணுலகை சல்மாவின் நாவல் அறிமுகப்படுத்தியுள்ளது.

உமாமஹேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை நாவல் ஒரு குடும்பத்தின் கதையாக விரிந்துள்ளது. ஒன்றோடொன்று தொடர்பற்ற குடும்பச் சம்பவங்கள், அனுபவங்களின் தொகுப்பில் கதை சொல்லப்பட்டுள்ளது. பெரிய வீட்டில் குடும்ப நிறுவனம் எவ்விதமான ஓர்மையும் கொள்ளாமல் பெண்களை ஒடுக்கிவைத்துள்ளது என்பதை அழுத்தமான விமர்சனமற்று மேலோட்டமாகச் சொல்கிறார் உமாமஹேஸ்வரி. குழந்தைப் பருவம் தொடங்கி கிழவியான போதும், பெண்ணின் இருப்பு, இரண்டாம் நிலையில் ஆணுக்குக் கீழாக ஒடுக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றைத் தளத்தில் இயங்குகிறது கதை. யாரும் யாருடனும் இல்லை எனத் தொடர்ந்து உமாமஹேஸ்வரி கதைப்பதை வாசிப்பதற்கு மிகுந்த பொறுமை தேவை. குடும்பக் கதைகளின் போக்கு வேறு வகையாக மாறிவிட்டது என்பதை நாவலாசிரியை உணர வேண்டும்.

எங்கும் தொழில்நுட்ப ஆதிக்கம் ஆழமாக ஊடுருவும் வேளையில், கிராமத்தில் ரத்த உறவு காரணமாக ஏற்படும் பாரதூரமான விளைவுகள் முக்கியமானவை. கவுண்டர் இனத்துக் குடும்பமொன்றில், பரம்பரை, ஊர் அபிமானம், சாதிப் பெருமை, பாரம்பரியம் போன்ற நிலமான்ய மதிப்பீட்டில் எல்லோரும் பணிந்து போகின்றனர். அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும் மனித உடல்களை வாதைக்குள்ளாக்குகின்றன. யதார்த்தக் கதை சொல்லல் மூலம் சித்திரக் கூடு நாவலில் இந்திரா சித்தரிக்கும் விவரிப்பு மெலிவாக இருப்பினும், மனிதர்கள் தமக்குத் தாமே ஏதோ ஒன்றின் பெயரால் இட்டுக்கொள்ளும் 'விலங்குகள்' குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றது.

ஒப்பீட்டு நிலையில் நாவலாக்கத்தில் பெண் நாவலாசிரியர்களின் முயற்சி திருப்திகரமாக உள்ளது. ஆனால் காத்திரமான நாவல்களை எழுதும் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்ணுக்கே உரித்தான தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்த புதிய வகைப்பட்ட கருத்தாடல் பிறக்க வழியேற்படும். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் அசலான கருத்துகளைப் படைப்பாக்கிடப் பெண்ணுக்கு இன்னும் சமூகத் தடைகள் உள்ளன என்பது தான் உண்மை.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவரான ஷோபா சக்தியின் கொரில்லா, ம் ஆகிய இரு நாவல்களும் அழுத்தமான அரசியல் பின்புலத்தில் புதிய வகைப்பட்ட கதையாடலைக் கட்டமைத்துள்ளன. ஈழத்தில் நடைபெற்ற கொரில்லாப் போர் குறித்த விவரணைகள் வரலாற்று அடிப்படையில் இரு நாவல்களிலும் பதிவாகியுள்ளன. எது நிஜம் எது புனைவு என்ற இடை வெளியைச் சிதைத்துப் புதிது புதிதான கதைப் பரப்பைப் பரப்புகிறார் ஷோபா சக்தி. இன மோதல் காரணமாக உருவெடுத்த ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய வீரம், பயம், துக்கம், கழிவிரக்கம், துரோகம், நட்பு, தோழமை, கசப்பு போன்ற பல்வேறு உணர்வுகளின் வழியாக மனிதர்கள் முரண்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றனர். புலம்பெயர்ந்து வாழ நேர்ந்திடும் நாட்டிலும் சரமாரியாகப் புனைவுகளின் மூலம் வாழ முயலும் முன்னாள் போராளிகள் இருப்புக்காக எதையும் செய்யத் துணிகின்றனர். இதுதான் நடந்தது என்று சொல்லப்படும் வரலாற்று உண்மை, ஒரு நிலையில் புனைகதையாக உருமாறும் விந்தை நடந்தேறுகிறது. மரணத்திற்கு முன்னர் மனித இருப்பு என்பது அபத்தமானது. ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் சராசரியாக வாழ முயன்றுகொண்டிருக்கும் சாதாரண மக்களின் வேட்கையும் வெறுப்பும் நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் யார் துரோகி? யார் மாவீரன்? என்னும் அளவுகோல்களை மீறிச் சொல்லப்படுகின்ற சேதிகளுக்கெல்லாம் 'ம்' போட நேரிடுவதுதான் துயரத்தின் உச்சம். ஷோபா சக்தி அவருக்கான பிரதியை எழுதியுள்ளார். ஆனால் வாசிப்பின் வழியாக ஒவ்வொருவரும் அவரவர் பிரதியை உருவாக்கிக்கொள்வதற்கான தோதுடன் கதை சொல்லல் உள்ளது.

தேவகாந்தன் ஈழப் பிரச்சினையைக் கருவாகக்கொண்டு கனவுச் சிறை நாவலை எழுதியுள்ளார். ஐந்து பாகங்களைக் கொண்ட அதன் ஒவ்வொரு பாகமும் தன்னளவில் தனித்து விளங்குகிறது. அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய மூன்று நாவல்களும் 1991-2001 வரையிலான காலகட்டத்தில் ஈழ மக்களின் துயர வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. இயக்கத்தினர் மீதான பரிவுடன் எழுதப் பெற்றுள்ள இந்நாவல்கள், ஆயுதப் போராட்டம் எங்ஙனம் மக்களை அலைக்கழிக்கிறது என்பதை விரிவாகப் பதிவாக்கியுள்ளன. எளிய முறையில் திருப்திகரமாக வாழ்ந்துகொண்டிருந்த ஈழத்து மக்களின் வாழ்க்கையைச் சிதைத்ததுடன், இதுவரை அறம் சார்ந்த நிலையில் உருவாக்கப்பட்டிருந்த எல்லாவிதமான மதிப்பீடுகளும் சிதைவடைந்த நிலை பல்வேறு சம்பவங்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இன்று கையறு நிலையில் துயரத்தின் உச்சத்தில் வாடிக்கொண்டிருக்கும் ஈழ மக்கள் பற்றி மீளாய்வு செய்திட தேவகாந்தனின் நாவல்கள் உதவும்.

வரலாறு என்பதே புனைவு என்னும் பின்நவீனத்துவ வாசிப்பு நிகழும் காலகட்டத்தில் தனியொரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பெருமை பீற்றிக் கொள்ளும் சுயபுராணங்கள் அல்ல. படைப்பாளியின் தேர்ந்தெடுத்த மன நிலை காரணமாக உருவாக்கப்பட்ட பிரதி என்னும் நிலையில் வேறு வகைப்பட்ட புனைவுகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.

ராஜ் கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை, பாரததேவியின் நிலாக்கள் தூரம் தூரமாக ஆகிய தன் வரலாற்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன. பிறப்பால் தலித்தாக அறியப்படும் ராஜ் கௌதமன் தனது கிராமச் சூழலிலிருந்து, தற்சமயம் புதுவையில் பேராசிரியராகப் பணியாற்றுதல்வரை விருப்பு வெறுப்பற்றுக் கதை சொல்கிறார். அவருடைய நினைவுப் புலத்தில் பதிவாகியுள்ள சம்பவங்கள் வெவ்வேறு மட்டங்களில் தொடுக்கப்படும்போது, வாசிப்பில் சுவாரசியம் ஏற்படுத்துகின்றன. எளிய மனிதராக வாழத் தொடங்கிய சிலுவை ராஜின் உலகம் விரிந்துகொண்டே போகிறது. எல்லாமே கதைகளாக அறியப்படும் காலகட்டத்தில் சிலுவை ராஜ் பற்றிய கதைகளின் மூலம் வாசகன் ஏதாவது அறிந்துகொள்ள வாய்ப்புண்டு.

நிலாக்கள் தூரம் தூரமாக நாவலில் பாரத தேவி கடந்துபோன வாழ்க்கையின் பதிவுகள் குறித்துப் புனைந்துள்ள கதைகள் அசலான மொழியில் விரிந்துள்ளன. பாலுணர்வு குறித்த ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மட்டும் சுமையாக மாறிவருவதைப் பாரத தேவி கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்டுள்ள தமிழ் நாவல்களைத் தொகுத்து வாசிக்கும்போது, ஏதோ 'குறைவது' போலத் தோன்றுகின்றது. ஏழு கோடித் தமிழர்கள் உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், தமிழில் வெளியாகியுள்ள நாவல்களின் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை. பல்வேறு சோதனை முயற்சிகள் பல்கிப் பெருகியிருக்க வேண்டிய நிலையில், சில நாவல்கள் புதிய போக்கில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் படைப்பாளர்கள் மேலை இலக்கியப் படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தூக்கிக்கொண்டு 'சிந்துபாத் தூக்கிக்கொண்டு அலைந்த கடற்கிழவன்'போலத் திரிவதை நிறுத்திவிட்டு, இதுவரை தத்துவரீதியில் உருவாக்கப்பட்ட சொல்லாடல்களின் மூலம் தமிழ்த் தொன்மமும் மரபும் சார்ந்த புனைகதைகளை எழுத வேண்டும். 'வீட்டிற்கு வெளியே காகம் கரைந்தால் யாரோ விருந்தாளி வரப் போகிறார்' என்று நம்பும் தமிழ் மனோபாவத்திலிருந்து புதிய வகைப்பட்ட எழுத்து தோன்ற வேண்டும்.

சாதியக் கொலைகள், மேனாமினுக்கி அரசியல் போன்றவை பற்றி எழுத முடியாத தடைகளைத் தகர்த்துப் புதிய கதையாடல் தோன்றுவதற்கான தேவை இன்று உள்ளது. எல்லாவற்றையும் மறுவாசிப்பிற்குள்ளாக்கும் நிலையில், நவீனத் தமிழ் நாவல் குறித்தும் கட்டு டைத்துப் பார்க்கும்போது, நமது பலமும் பலவீனமும் வெளிப்படும்.

குறிப்பு

தமிழ் நாவல் பற்றிய என் மதிப்பீட்டில் மிகச் சிறந்த நாவல்கள் விடுபட்டிருக்கக்கூடும். என் வாசிப்பு அனுபவத்திற்கு ஏற்ற நிலையில் நாவல்கள் பற்றிய மதிப்பீடுகள் வரையறைக்குட்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக