வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பின்நவினத்துவம்




முன்னுரை:

       அரசியல், சமூகம், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கயம் என எந்த ஒரு தளத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவை காலந்தோறும் மாறுபட்ட சிந்தனை முறைகளையும் கோட்பாடுகளையும் உள்வாங்கி புதிய தளமாற்றத்திற்கு ஆளாகின்றன. அந்த வகையில் தற்கால சூழ்நிலையில் புதிதாக பரவலை உண்டாக்கியுள்ள சிந்தனை முறைகளில் ஒன்றுதான் 'பின்நவீனத்துவம்' என்பது. இக்கோட்பாடு அல்லது சிந்தனைமுறை அரசியல் தொடங்கி இலக்கியம் வரை பல தளங்களிலும் தனது பரப்பை விரித்துக்கொண்டுள்ளது  எனலாம்.
     
         அது இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளப்பெரியது. மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்று அதன் கூறுகள் பற்பல. இங்ஙனம் மேலைநாடுகளில் கருக்கொண்ட இச்சிந்தனைமுறை இன்று பலதரப்பட்ட இலக்கிய மொழிகளிலும் தனது கிளையை நீட்டியுள்ளது. ஆகவே, அது தமிழ்ச் சூழலிலும் வந்து சேர்ந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழில் சில படைப்பாளர்கள் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கியுள்ளனர். எனினும் பின்நவீனத்துவத்தை அறியாமலே எழுதப்பட்ட பல படைப்புகளிலும் பின்நவீனத்துவக் கூறுகள் உள்ள பிரதிகள் காணக்கிடைக்கின்றன.  அவைகள் அடையாளம் காணப்படுதல் வேண்டும்.


பின்நவீனத்துவம் தோற்றமும் வளர்ச்சியும்:

       பின்நவீனத்துவத்தின் தோற்றுவாயையும் அதன் வளர்ச்சி நிலையினையும் அறிய நவீனத்துவக் காலம்தொட்டு இன்றளவும் ஏற்பட்டுவந்துள்ள வளர்ச்சி மாற்றத்தினை அரசியல், சமூக, பொருளாதார, அறிவியல் பின்புலத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கலை, இலக்கியத் தளங்களில் தனி இடம் பிடித்துள்ள 'நவீனத்துவம், பின்நவீனத்துவம்' போன்ற சிந்தனை முறைகளை, அதன் வளர்ச்சிப் போக்கினை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை உள்ள காலக்கட்டத்தை நவீனத்துவக் காலமாக வரையறுக்கலாம். இக்காலக் கட்டத்தில் தோன்றிய புதிய தத்துவங்களும், கோட்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் வாழ்வியல் முறைமைகளில் மாற்றங்களைக் கோரியது. அதன் விளைவாக முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்த பலதரப்பட்ட சிந்தனைப் போக்குகள் அடிக்கட்டுமானத்திலையே ஆட்டம் கண்டன. குறிப்பாக நிலப்பிரபுத்துவமும், மதமைய செயல்பாடுகளும் முற்றிலும் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வந்த காலனி ஆதிக்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிர்நிலைகள் தோன்றின. பெரும்பான்மை நாடுகளில் தேசிய சுயேட்சை விருப்பம் மேலோங்கியது. மேலும், தொழிற்புரட்சியால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம், சந்தைப் பங்கீட்டில் போட்டியை உருவாக்கியது. இந்த நாடு பிடிக்கும் நிகழ்வு இரண்டு (1914-1918, 1939-1945) உலகப்போர்களையும் நிகழ்த்திக் காட்டியது. இதனால் நிறுவப்பட்ட அதிகார மையங்கள் பல உருவாகின. இது பலரை விளிம்புக்குத் தள்ளி நிராகரிக்கவும், ஒடுக்கவும் செய்தது. இத்தகைய 'மையம் x விளிம்பு' எனும் கருதுகோள் இலக்கியத் துறைகளிலும் பிரதிப்பளித்தது. இவ்வாறான மையம் நோக்கிய செயல்பாட்டை சிதறடிக்கும் விதமாக அதிகாரத்தின் படிநிலைக் கட்டமைப்பை உடைத்துவிட்டு எல்லாவற்றையும் கிடைமட்டத்தில் வைத்துப்பார்க்கும் நோக்கில் உருவான இருபதாம் நூற்றாண்டு சிந்தனை முறைதான் 'பின்நவீனத்துவம்' ஆகும்.
         பின்நவீனத்துவத்தின் காலத்தை 1950 - களில் இருந்து இன்றளவும் நீளும் காலக்கட்டமாக வரையறுக்கலாம். நவீனத்துவக் காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி - தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் எல்லாவற்றையும் முழுமையாக புரிந்து கொள்ள முனைந்தது. அறிவியல் வளர்ச்சியில் உலகம் முழுவதும் சென்று வரவும்,தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்பட்டன. ஆகவே, எல்லா சிந்தனைகளையும் உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகளான தொழிற்சாலை, கல்வி நிலையம், போக்குவரத்து, தகவல்தொடர்பு, பொதுவூடகம் போன்றவை மூலம் நவீனத்துவத்தில் மையத்தை கட்டமைக்கும் பல போக்குகள் உருவாகின. அதில் முதலாளித்துவம் தலையாயது. முதலாளித்துவத்திற்கு எதிராக தோன்றிய மார்க்ஸியமும் இன்னொரு பாட்டாளி வர்க்க மையத்தையே கட்டமைக்க முயன்றதால் இதன் போதாமையைப் புரிந்து கொண்ட பின்நவீனத்துவ வாதிகள் விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவைகள் மீது கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, அனைவருக்கும் ஒத்த இடமுள்ள ஒரு சமூக கட்டுமானம், ஒரு சிந்தனை முறை தேவை என்பதை உணர்ந்து ரொலான் பார்த் (1915-1980), ழாக் லக்கான் (1901-1981), லியோதர்த் (1924-1998), ழாக் டெரிடா (1930-2004), மிகைல் பூக்கோ (1926-1984) போன்ற மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் - மையத்தைக் கலைத்தெறியும் புதிய, புதிய சிந்தனை முறைகளுக்கு வித்திட்டனர். இதன் பின்வந்த ஒவ்வொரு தொடர்புடைய சிந்தனைமுறைகளின் தொப்புத்தான் 'பின்நவீனத்துவம்' ஆகும். அது தற்போது நவீனத்துவத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு எல்லா தளங்களிலும் தனது ரேகையைப் பதித்துவருகிறது எனலாம்.
      பின்நவீனத்துவத்தின் வளர்ச்சிப் போக்கினை வரலாற்று நோக்கில் பார்ப்பின் அதன் தொடக்கம் 1931-ல் கருப்பெறுகிறது எனலாம். ஏனெனில் பின்நவீனத்துவம் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகத்தான் கொள்ளப்படுகிறது. மால்கம் பிராட்பரி கூற்றுப்படி, 'நவீனத்துவத்தின் காலம் 1890 முதல் 1930 வரை'1 என வரையறுக்கப்பட்டிருப்பதால் நவீனத்துவத்தின் முடிவில் இருந்து பின்நவீனத்துவம் தொடங்குகிறது எனலாம்.
    1957 -ல் வரலாற்றாசிரியரான பெர்னர்ட் ரோஸன்பர்க், 'தொழில் நுட்ப வளர்ச்சி, உலகம் முழுக்க உள்ள மக்களை ஒரே மாதிரியான தன்மை (Sameness) கொண்டவர்களாக மாற்றிவிட்டது. இது பின்நவீன வாழ்வியல் நிலமை'2 என்றார். அதேபோல் 1964 -ல் பீட்லரும் 1968 - ல் லியோ ஸ்டீன் பெர்க்கும், 'நவீன கலை இலக்கிய மதிப்பீடுகளைப் புறக்கணிக்கும் பின்நவீன கலாச்சாரம் ஒன்று தோன்றி இருக்கிறது.'3 என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும் உண்மையில் பின்நவீனத்துவம் ழாக் டெரிடா அவர்கள் 1966 ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நிர்நிர்மாணம் (Deconstruction) குறித்த கட்டுரை வாசித்தப்போதுதான் பிறந்தது எனலாம். ஏனெனில் அக்கட்டுரையின் வாயிலாகத்தான் மையங்களைச் சிதறடித்தல், பன்முகமாய் பார்த்தல் போன்ற பின்நவீனத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் புழக்கத்திற்கு வந்தன.   மேலும்,      ழாக் டெரிடாவின்   படைப்புகளான - 'மனித விஞ்ஞான உரையாடலில் அமைப்பு, குறி மற்றும் விளையாட்டு (Structure, sign and play in the Discourse of human science)' பேச்சும் நிகழ்வும் (Speech and phenomena)'' எழுதுவதும் வித்தியாசப்படுதலும் (writing diference)' ஆகியன பின்நவீனத்துவத்தின் பல கூறுகளை விரிவாக பேசிச் செல்கின்றன.
         மேலும் பின்நவீனத்துவத்தின் பிதாமகனாகக் கருதப்படும் லியோதார்த் 1974-ல் வெளியிட்ட 'பின்நவீனத்துவ நிலவரம்: அறிவின் மீதான அறிக்கை (the post modern condition: a Report on knowledge)' எனும் நூல் முதன்முதலாக பின்நவீனத்துவச் சிந்தனையை பெருமளவிற்கு தௌவுப்படுத்தியது எனலாம்.
இன்னும் ரொலான்பார்த், பெலிக்ஸ் கத்தாரி, ழீன் பொத்ரியார், இஹாப் ஹஸன், பிரெடரிக் ஜேம்சன் மிகைல் பூக்கோ, ழாக் லக்கான் போன்ற அறிஞர்கள் நவீனத்துவத்தை கேள்விக் குள்ளாக்கி பின்நவீனத்துவத்தின் வளர்ச்சிக்குப் பாதை செய்தனர். மேலும், பின்நவீனத்ததுவத்தின் முன் இயங்களான பொதுமைப்பாவியம் (Impressionism)இ அகத்திறப்பாங்கியம் (Expressionism), கனசதுரவியம் (Cubism), டாடாயியம் (Dadaism), மிகைநடப்பியம் (surrealism), இருத்தலியம் (Existentialism), அமைப்பியம் (Structuralism), பின்அமைப்பியம் (post-Structuralism) போன்றனவும் பின்நவீனத்துவத்திற்கு பல அடிப்படைக் கூறுகளை வழங்கியுள்ளன.
          
         இங்ஙனம் 1960 -களில் மேற்குலகில் தோற்றம் கண்ட பின்நவீனத்துவம் 1980 –களில் உச்சத்தை அடைந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது. எனினும் இன்று இக்கோட்பாடு மேற்குலகில் வலுவிழந்து விட்டது. ஆனால் தமிழ்ச் சூழலில் 2000 –க்கு பிறகுதான் பின்நவீனத்துவம் பெரிதும் தலைதூக்கி வளர்ச்சிக் கண்டு வருகிறது எனலாம்.


பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம்:

     மேற்குலக நாடுகளில் கலை, இலக்கியத்தளத்தில் இருபதாம் நூற்றாண்டில் அறுபது, எழுபதுகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சிந்தனை முறைகளில் ஒன்றுதான் post modernism. அது தமிழில் 'பின் நவீனத்துவம்', 'பின்னை நவீனத்துவம்' போன்ற சொற்களால் வழங்கப்படுகின்றது. பொதுவாக இப்புதுமைக் கோட்பாட்டை செல்லமாக pomo (போமோ) என்று அழைப்பர். (இதை தமிழில் 'பிந' என்று சுருக்கி குழப்பாமல் நாமும் 'போமோ' என்றே பயன்படுத்துவதில் பெருங்குற்றம் ஒன்றுமில்லை.)
     பின்நவீனத்துவம் என்பதை இன்னதுதான் என வரையறுத்துக் கூறுவது முடியாத ஒன்றாகும். ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய பல சிந்தனைக் கூறுகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. மேலும், வரையறைகளுக்கு உட்படாமல் மீறி நிற்பதும் பின்நவீனத்துவத்தின் ஒரு கூறே ஆகும். எனவே, இங்கு பின்நவீனத்துவம் குறித்த முழுமையான வரையறைகள் கிடைப்பது கடினம். எனினும் பின்நவீனத்துவம் குறித்த கருத்தாடல்களைப் படித்தறிவதன் மூலம் அதை புரிந்து கொள்ளமுடியும்.
அதற்கு முன் இஹாப் ஹஸன் அவர்கள் குறிப்பிடும் நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகவும் அதன் மறுப்பாகவும் தோன்றியதாகும். எனவே, நவீனத்துவத்தையும் பின்நவீனத்துவத்தையும் ஒப்புமை நோக்கில் வேறுபடுத்திக் காட்டும் போது, நவீனத்துவத்தைப் புரிந்துகொண்ட ஒருவனால் பின்நவீனத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

'நவீனத்துவம்                   -           பின்நவினத்துவம்

உருவம்                               -           எதிர் உருவம்
நோக்கம்                             -           விளையாட்டு
வடிவம்                                -           சந்தர்ப்பவசம்
படிநிலை அமைப்பு         -           ஒழுங்கற்ற அமைப்பு
படைப்பு                               -           நிகழ்வு
இருத்தல்                             -           இல்லாதிருத்தல்
மையப்படுத்தல்               -           சிதறடித்தல்
வகைமை பிரதி                -           ஊடிழைப்பிரதி
வேர்-ஆழம்                        -           மேலீடானத் தளம்'4
  -இனி பின்நவீனத்துவம் குறித்தப் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களைக் கீழே வரிசைப்படுத்திக் காண்போம். அவை;

லியோ தார்த்; 
     'பெருங்கதையாடல்களின் மீதான நம்பிக்கையின்மையே பின்நவீனத்துவம். அது நவீனத்துவத்தின் ஒரு பகுதியாகவும் அதே சமயத்தில் நவீனத்துவத்தைச் சந்தேகப் படுவதாகவும் உள்ளது'5

ஹேர்பர்ட் மார்க்யூஸ்;
   'சமூகத்தில் அதிகார மையத்தில் உள்ளவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் மற்றமைகளையும் அதாவது விளிம்பு நிலையினரான பெண்கள், மூன்றாம் பாலினர், தலித்துக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஏழ்நிலையினர் போன்று ஏதேனும் காரணம் கருதி புறக்கணிக்கப்பட்டவர்களையும் முன்னிலைப் படுத்திப் பேசுவது பின்நவீனத்துவம் ஆகும்.'6

மிகைல் பூக்கோ;
    'இது வரையிலான உலக வரலாறு என்பது தனிமனித மையம் தோன்றி வளர்ந்த வரலாறாகவே இருந்துவந்துள்ளது. இன்று அந்த தனிமனித மையத்தை தகர்த்துக் கொண்டிருப்பதே பின்நவீனத்துவம் ஆகும். ஏனெனில் சுயம் என்பது சுயாதினமானது அல்ல அது மொழி, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதே'7

காரத்திகேசு சிவத்தம்பி;
      'பின்நவீனத்துவம் என்பது கலையின் செல்நெறிகள் பற்றியது. நவீனத்துவக் கலைக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டது. அது ஒரு கலைப்பாணியாக (Artistic style) அமையும்'8

ந. முத்துமோகன்;
     'பின்னை நவீனத்துவச் சிந்தனை சில தீவிரமான நிலைபாடுகளை முன் வைக்கிறது. மரபுரீதியான பழைய சமூகங்கள் கொண்டிருந்த கருத்துநிலைகளையும், நவீன முதலாளிய சமூகம் அறிவித்திருந்த பல்வேறு சமூக இலக்குகளையும் அது அடிப்படையான மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. சிந்தனை வாழ்வில் ஒற்றைக் கோட்பாடுகளிலிருந்து துவங்கி உலகம் தழுவிய அளவிற்கு வளர்க்கப்படும் எல்லாவகை கருத்தியல்களையும் அது ஏற்க மறுக்கிறது. அவ்வகை கொள்கைகளை பின்நவீனத்துவம் ஒட்டுமொத்தப் படுத்துபவை (Totalising) மேலாதிக்கப் பண்பு கொண்டவை (Hegemonising) என்று மதிப்பிடுகிறது. இறைவன், தனிமனிதன், பிரக்ஞை, அறிவு, சமூகம், மானுட விடுதலை என்பது போன்ற புள்ளிகளை மையமாகக்கொண்டு, மொத்த உலக நோக்கும் கட்டி எழுப்பப்படுவதை அது மறுதலிக்கிறது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, நிலையற்றவை, நேர்கோட்டுத் தன்மையற்றவை, பன்மிய பாங்கு கொண்டவை, நேர்காட்சித் தளத்தவை போன்றன பின்நவீனத்துவமாகக் கொள்ளப்படுகின்றன'9

அ. மார்க்ஸ்;
   'பன்மைத் தன்மைக்கு (plurality) அழுத்தமளித்தல், எல்லாவிதமான அதிகார ஆதாரங்களையும் (Authority) கேள்விக்குள்ளாக்குதல், எல்லாவிதமான மொத்த தத்துவ முயற்சிகளையும் (Totality) மறுத்தல் - ஆகியவற்றை பின்னை நவீனத்துவக் கூறுகள் எனலாம்.'10

தி.சு. நடராசன்;
   'பின்நவீனத்துவ கருத்தியல் வழிமுறைகளையும் நிலைபாடுகளையும் பின்வருமாறு தொகுக்கலாம். அவை,
1.முதலாளித்துவத்தின் அடுத்த கட்டத்து வளர்ச்சியாகிய பின்னை முதலாளித்துவம், தொழில் குழும உற்பத்தி முறை, உலகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் இது வருகிறது.
2.மாற்றுவதல்ல மறுப்பது, தீர்ப்பது அல்ல சச்சரவு   செய்வது.
3.முழுமைக்கும் ஒட்டுமொத்தப் படுத்தலுக்கும் மறுப்பு பகுதிகளை தொடர்பற்றத் தன்மைகள் கொண்ட தீவுகளாக வருணிப்பது.
4.ஒற்றைத் தன்மைக்கும் எதிராக பன்முகத் தன்மைக் கொண்டது.
5.வரலாற்றைத் திரும்பப் பார்த்து பயணிக்கச் செய்வது.
6.பெருநெறி, பெருங்கதையாடல்களுக்கு மறுப்புச் சொல்லி சிறுகதையாடல்களை வலியுறுத்துவது.
7.பலராலும் அங்கீகரிக்கப்பட்ட புனிதம் என்பவற்றை மறுப்பது.
8.சுய முரண்பாடுகள் கொண்டது.
9.வம்போடு நகை முரண் நிரம்ப நிற்பது'11

டிசே தமிழன்; 
  'பின் நவீனத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது 'எதையும் சந்தேகித்தல்' ஆகும். அது உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதே இல்லை. மேலும், பிரதியை பார் பிரதி எழுதியவரை பார்க்காதே என்கிறது.'12

சாதிக் பாட்சா;
    'பின்நவீனத்துவச் சிந்தனை மேலோட்டமாக ஆறு வகையான கூறுகளைக் கொண்டுள்ளது. அவை,
1.பெருங்கதையாடல் தகர்வு
2.தன்னிலையை முன்னிலைப்படுத்தல்
3.ஒழுங்கவிழ்ப்பு
4.பகுத்தறிவைக் கேள்விக்குள்ளாக்குதல்
5.மொத்தத்துவத்தை மறுத்தல்
6.பன்மைத் தன்மைகளை வலியுறுத்தல்'13

ஜெயமோகன்;
      'நவீனத்துவம் என்றால் புதமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டதட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப்போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப் படுத்துகிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி அடைந்தது. எல்லாவற்றையும் தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியல் உருவாக்கிய தொழிற்புரட்சி மூலம் உலகம் முழுக்க போகவும் தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்பட்டது. ஆகவே, எல்லா சிந்தனைகளையும் உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. இந்த இரு விஷயங்களும் தான் நவீனத்துவத்தின் அடிப்படை; அதாவது, 1)அறிவியலை மையமாக்கிய நோக்கு  2)உலகளாவிய நோக்கு.
நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகளான;
1. தொழிற்சாலை
2. பள்ளி
3. பொதுப் போக்குவரத்து
4. பொதுச் செய்தி தொடர்பு
5. பொது ஊடகம்.
-இவை மூலம் நவீனத்துவச் சமூகத்தில் உறுதியான மையம் கொண்ட அமைப்பு உருவாகும் போது அதற்கு எதிரான தேவையில்லாத அமைப்புகள் ஒடுக்கப்படுகின்றன. நிராகரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக சிந்தனைகளிலும் சமூக அமைப்பகளிலும் பண்பாட்டிலும் ஏராளமான போக்குகள் உலகமெங்கும் உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக நவீனத்துவப் போக்கு என்பது வழக்கம்.
      இந்த நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டையைப்பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவாகியது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப்பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் வீழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம். ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.
இவ்வாறு நவீனத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன்பின் வந்த எல்லா சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக பின்நவீனத்துவம் என்கிறார்கள். பின்நவீனத்துவத்திற்குள் பலவகையான போக்குகள் உள்ளன. ஆனால் மையங்களையும் ஒட்டுமொத்த பெரும் அமைப்புகளையும் நிராகரிக்கும் போக்கு மட்டும் பொதுவாக இருக்கும்.
      பின்நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுப்போக்கு. இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூகத்தில் ஆண்மை மைய விழுமியாக போற்றப்ட்டது என்றால் அங்கே திருநங்கைகள் ஒடுக்கப் படுவார்கள் இல்லையா? பின்நவீனத்துவ சமூகம் அப்படி மைய விழுமியங்களை ரொம்பவும் சார்ந்திருக்காது. இருபாலினத்தவருக்கும் அதே இடத்தை அளிக்கும். தமிழ்ச் சமூகம் கூட இன்று இந்த இடம் நோக்கி வந்து விட்டிருக்கிறது அல்லவா? அதாவது மிகச்சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டுபிடித்து அதை நிரூபித்து, அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாளானவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கபட வேண்டும் என்கிறது. அப்படி மையப்படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.'14

அஸ்வத்தாமா;
    'மார்க்சியத்தின் போதாமைகளுக்குத் தீர்வு, ''மார்க்சியத்திலிருந்து விடுதலை' போன்ற கோஷங்களுடன் நவீனத்துவமும் அதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம் என்ற விதமான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளால் உலகெங்கும் பரப்பப்பட்டன. 'பகுத்தறிவே பயங்கரம், ''தருக்கமே வன்முறை, ''மொழியே ஆயுதம்,' 'ஒழுங்கமைவு கருத்தொருமிப்பு என்பது அடிமைத்தனம்' போன்ற கருத்துக்களைப் பின்நவீனத்துவம் முன்னிலைப்படுத்தியது. 'கோட்பாடு என்ற ஒன்றே இல்லை' என்றது. கவர்ச்சிகரமான சொல்லாடல்களுடன் வந்த பின்நவீனத்துவத்தைப் பலர் பின்பற்றத் தொடங்கினர். பின் கோட்பாட்டை மறுத்த பின்நவீனத்துவமே ஒரு கோட்பாடாகிவிட்டது.'15

மருதையன்;
       'பின்நவீனத்துவம் என்பது ஏகாதிப்பத்தியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு ஆளும் வர்க்கத் தத்துவம். இதன் சாராம்சம் வெறிகொண்ட கம்யூனிச எதிரப்பாகும். பெருங்கதையாடலை எதிர்ப்பது என்ற பெயரில் துரோகத்தையும், பிழைப்பு வாதத்தையும், சுயநலத்தையும், குழுநலனை முன்னிருத்துவதையும், யாரோடும் சமரசம் செய்து கொள்வதையும், பொறுக்கித் தின்பதையும் ஒரு கழக நடவடிக்கைப் போலச் சித்தரித்ததுதான் இதன் சாதனை'16

ZZZ (கவனிக்க- ஆசிரியன் அடையாள மறுப்பு );
    'முன் நவீனத்துவ காலத்தில், அதாவது பகுத்தறிவு வளராத காலத்தில், ராமன் காட்டுக்கு போனான் என்ற கதையை உண்மையாக நம்பினார்கள். இது மரபு.நவீனயுகத்தில் கதைவேறு, கட்டுரை வேறு அதாவது உண்மை என்று ஒன்று உள்ளது. அதைத்தவிர எல்லாம் பொய் என்று நம்பினார்கள். ராமன் காட்டுக்கு போனான் என்றால் அதற்கான சான்றுகள் என்னென்ன என்று கேட்டார்கள். பின்நவீனத்துவ வாதிகள் - இட்டுக்கட்டியக் காரணத்தினால், கதை, கட்டுரை எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ராமன் காட்டுக்கு போனானா? அதை கதை என்று சொன்னால், அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளதை மறக்க வேண்டாம். அதே போல் அதை உண்மை என்று நம்புகிறவர்கள் அதில் உள்ள கதையைக் கவனிக்காமல் விடக்கூடாது என்கிறார்கள்.

பின்நவீனத்துவத்தின் உட்கூறுகள்:
    பின்நவீனத்துவம் தன்னகத்துள்ளே புதமை வாய்ந்த பல உட்கூறுகளைக் கொண்டுள்ளது. அவற்றை மேற்கூறிய பின்நவீனத்துவம் குறித்த அறிஞர்களின் கருத்தாடல்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். எனினும் பின்நவீனத்துவ வாசிப்பு அணுகளுக்கு துணைசெய்யும் விதமாக, பின்நவீனத்துவத்தின் உட்கூறுகளைத் தொகுத்தளிக்கலாம். அவை,
1.    மையத்தை சிதறடித்தல்
2.    ஒழுங்கை குலைத்தல்
3.    புனிதங்களைப் பகடி செய்தல்
4.    நேர்கோடற்ற சிதறடிப்பாக எழுதுதல்
5.    அர்த்த சாத்தியப்பாடற்ற பிரதிகளை உருவாக்குதல்,
6.    முழமையை மறுத்து துண்டுகளை முன்வைத்தல்
7.    விளிம்புகளை முன்னிலைப்படுத்தல்
8.    எதிர்க  கலைத்துவத்தை (anti artistic) உருவாக்குதல்
9.     கேள்விகளால் துளைத்தல்
10.   சொல் சமிஞ்ஞையால் விளையாடுதல்
11.   அதிர்ச்சிகளைத் தருதல்
12.   இடக்கரடக்கலானவற்றை வெளிப்படுத்துதல்
13.   கனவு நிலையில் மொழிதல்
14.   காலத்தை முன் பின்னாக இணைத்தல்
15.   தன்னிலை தகர்த்தல்
16.   பிரதிகளை மீட்டுருவாக்கம் செய்தல்
17.  ஆழமான ஒற்றை கருத்தை மறுத்தல்
18.   பன்முகமாய் இருத்தல்
19.   அபத்தங்களைப் பிரசுரித்தல்
20.    பகுத்தறிவற்ற மாயத்தன்மையை(Mystic) ஏற்படுத்தல்
21.    பிரதிகள் தனக்குள்ளே சுழலுதல்
22.    கலைத்துப் போடுதல்
23.    உண்மையையும் புனைவையும் கலந்து மொழிதல்
24.    அறிதலின் மீதான அறிதல்
25.    கொண்டாட்டங்களை மறுத்தல்
26.    முரண்படுத்துதல்
27.    தொடர்ச்சியின்மையாக மொழிதல்
28.    மிகை நடப்பியத்தை புகுத்தல்
29.    முடிவின்றி விட்டுவிடுதல்
30.    ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தருதல்
31.    புதிய இலக்கிய வகைமைகளைக் கையாளுதல்
32.    பலகுரல் எடுத்துரைப்பைத் (polypony) தருதல்
33.    எல்லாவற்றையும் கேலி செய்தல்
34.    பிரதியைக் கட்டுடைத்தல்
35.    சந்தர்ப்ப வசங்களைக் கையாளுதல்
36.    வாசகனை படைப்பாளியாக்குதல்
37.    பிரதிக்குள்ளே முரண்படுதல்
38.   இருண்மையாக மொழிதல்
 -என பின்நவீனத்துவத்தின் உட்கூறுகள் இலக்கியத்தைப் பொறுத்தவரை பலவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.



தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம்:


     தமிழ்ச் சூழலில் காலத்துக்கு காலம் பல்வேறு இயங்கள் (isms) தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயிருக்கின்றன. மார்க்ஸியம், அமைப்பியம், இருத்தலியம், தலித்தியம், பெண்ணியம் போன்றன அவற்றில் சில. இவை போன்ற சிந்தனைப் போக்குகளின் நீட்சியாக தற்போது தமிழ்ச்சூழலில் புதிதாக வந்திருக்கும் இயம் - பின்நவீனத்துவம் ஆகும். இன்றைய காலத்தில் அது தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரர் ஏற்றுக்கொண்டும், இன்னொரு சாரர் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தப்படியும் இருக்கின்றனர்.
          1990 -களில் பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. காப்ரியல், லூயி போர்கே, இடாலோ, டொனால்ட் பார்தல்மே போன்ற அயல்நாட்டு பின்நவீன எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு பின்நவீனத்துவக் கதைகள் தமிழுக்கு பரிச்சயமாயின. அந்த பாதிப்பில் தமிழிலும் அதுபோல் எழுத தமிழ் எழுத்தாளர்கள் முயற்சி செய்தனர். சில்வியா, தி. கண்ணன், பிரேம் - ரமேஷ், சாருநிவேதிதா, போன்றோர் மையம் நீக்கிய, நேரற்ற எழுத்தில் பின்நவீன சிறுகதைகளை எழுதி ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார்கள். அந்தத் தொடக்கம் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி, யுவன் சந்திரசேகர் போன்றோரால் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், தமிழ்ச்சூழலில் 1980 -களில் இருந்து பேசப்பட்டு வரும் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த பல படைப்புகள், இங்கு அதுவரை நிலவி வந்த ஆதிக்க கதையாடல்களை, இலக்கிய கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டு வெளிவந்துள்ளன. அவைகளும் பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுவனவே தவிர பின்நவீனத்துவத்தை பேசியும், எழுதியும், திறனாய்வு செய்தும் அதனை வளர்ச்சி நிலைக்கு எடுத்து வந்தவர்களில் முக்கியமானவர்கள். தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகர்ஜீனன், பெ.வேல்சாமி, அ.மார்க்ஸ், எஸ்.ரவிக்குமார்,  க.பூர்ணசந்திரன், தி.சு.நடராசன், அ.ராமசாமி, காரத்திகேசு சிவம்தம்பி, ந.முத்துமோகன், ராஜ்கௌதமன், பா.செல்வகுமார், பிரம்மராஜன், கோவை.ஞானி, க.பஞ்சாங்கம் போன்றவர்கள் ஆவர். பிரேம்-ரமேஷ் அவர்கள் பின்நவீனத்துவம் குறித்தான நூல்களை படைத்தும், உரையாடல்களைப் பெருக்கியும் வருவதுடன், அதிகமான பின்நவீன கலைப் பிரதிகளையும் எழுதி வருகின்றனர்.
        மேற்கூறியவாறான பின்நவீனவாதிகளுக்கும் பின்நவீன பிரதிகளுக்கும் இடம்தந்து அதனைச் செல்வாக்கு பெறச்செய்தது எப்போதும் போல் புதிய கோட்பாடுகளுக்கு இடம்தரும் சிற்றிதழ்கள்தான். தமிழ்ச் சூழலில் அப்பணியைச் செய்த முக்கியச் சிற்றிதழ்களாக நிறப்பிரிகை, வித்தியாசம், மேலும், முழக்கம், வைகறை, களம்புதிது, கோடங்கி, சிதைவு, கிரணம், நிகழ், உன்னதம், காலச்சுவடு, கல்குதிரை, பன்முகம், லயம், சதுக்கப்பூதம், உண்மை, உயிர்மை, தமிழினி முதலியவற்றைக் குறிப்பிடலாம். இன்னும் பின்நவீனத்துவத்தை எடுத்துச் சென்றதில் பல்கலைக்கழகங்களி;ன் பணியும் முக்கியமானதாகும்.      தி.சு.நடராசன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோர்களின் முயற்சியால் 1997- ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழவன், அ.மார்க்ஸ், க.பூரணசந்திரன், ந.முத்துமோகன், எஸ்.ரவிக்குமார் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பின்நவீன வாதிகளைக் கூட்டி பின்நவீனத்துவம் குறித்த தேசிய கருத்தரங்கம் முதலில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு தமிழியல் துறையில் பின்நவீனத்துவம் ஒரு பாடமாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதே போல் சென்னை, மதுரை காமராசர், பாண்டிச்சேரி, தஞ்சைத்தமிழ் -பல்கலைக்கழகங்களும் பின்நவீனத்துவ படிப்பினையைத் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பின்நவீனத்துவம் குறித்த ஆய்வுகளும் பல நிகழ்ந்துள்ளன.
தமிழில் பின்நவீனத்துவப் படைப்புகள்;
       பின்நவீனத்துவம் எல்லா சமூகங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும், எல்லா மொழிகளுக்கும், எல்லா கலாச்சாரங்களுக்கும் ஒன்றாக இருக்காது. அந்தந்த சூழலில் அவ்வவற்றிற்கான பின்நவீனத்துவ நெகிழ்நிலை உண்டு. அமெரிக்க, பிரெஞ்சு, சூழலில் சொல்லப்படும் அதே தொடர்கள், அணுகல்கள் பின்நவீனத்துவம் எனும் பெயரில் இந்திய தமிழ்ச் சூழலில் இருக்க முடியாது. இந்திய – தமிழக தத்துவ மரபுகளுக்குள் பின்நவீனத்துவம் என்னவாக தனது வினையை, விலகலைச் செய்யும் என்பதை அதன் வரலாற்றுச் சொல்லாடல்கள் மற்றும் கலாச்சார சொல்லாடல்களைக் கவிழ்த்தும், கலைத்துமே நாம் அடையாளம் காண முடிகிறது. அதை விட்டுவிட்டு எதிர்கலைத்தன்மை, பகடித்தனம், தன்னிலைக் கவிழ்ப்பு, Celebration of Fragmentation, Contradiction, inner-Contradiction, pleasure of the text- என பட்டியல் போட்டு இதில் அடங்காதனவற்றை பின்நவீனத்துவ பிரதி இல்லை என மறுத்தல் கூடாது. ஏனெனில் நமக்கான பின்நவீனத்தன்மையை நம் தமிழ்ச் சூழலில் இருந்துதான் அனுகுதல் வேண்டும்.    
    அங்ஙனம் நோக்கின் தமிழ்ச் சூழலில் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த படைப்புகளில் இருந்தே பின்நவீனத்துவ பங்களிப்பு தொடர்ந்து வந்துள்ளதை அறிந்துகொள்ள முடியும். பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது, பின்நவீனத்துவம் கூறும் 'ஆசிரியர் இறந்து விட்டார் (Death of author)' என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு கொடுக்கின்றது. இன்றைய சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக் கதை என்று வைத்துக்கொண்டு கிழிகிழியென்று கிழித்து, கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண்படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும்பார், அதற்கு பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியைப் பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போல் தலித்தியச் சூழலில் நோக்கும்போது, தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்க நிலையினர் பெருங்கதையாடல்களின் மூலம் தங்கள் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இன்று தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம், கேள்விகள் எழுப்புவதன் மூலம் பெருங்கதையாடல்களை சிதைத்து வந்திருக்கிறார்கள். ஆதிக்கச் சக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தலித்துக்கள் தமக்கான அரசியலை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். எனவே, பெண்ணிய எழுத்துக்களை முன்வைக்கும் மாலதிமைத்ரி, சுகிர்தராணி, சல்மா, பெருந்தேவி, யவனிகா ஸ்ரீராம், வெண்ணிலா போன்றவர்களின் படைப்புகளிலும், தலித்தியத்தை முன்வைக்கும் ஆதவன் தீட்சண்யா, ஸ்ரீநேசன், பாலை நிலவன், ராஜ்கௌதமன் போன்றவர்களின் படைப்புகளிலும் பின்நவீனத் தன்மையைக் காணமுடியும்.
         மேலும், பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாகின. பிரேம் - ரமேஷ் அவர்களின் 'எரிக்கப்பட்ட பிரதிகளும்; புதைக்கப்பட்ட மனிதர்களும், 'சொல் என்றொரு சொல்' சாருநிவேதிதாவின் 'சீரோ டிகிரி', எக்ஸ்டன்ஸிலிசமும்- பேன்சிபனியனும்' போன்றவை இவ்வகை நாவல்கள். மீபுனைவுகளாக உள்ளுக்குள்ளே சுழலும் தன்மையுடையனவாக ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம், 'பின்தொடரும் நிழலின் குரல்', யுவன் சந்திரசேகரின் 'மணற்கேணி', 'வெளியேற்றம்' போன்றவை வெளிவந்துள்ளன. பழைய ஆக்கங்களின் மீட்டுருவாக்கமாக ஜெயமோகனின் 'கொற்றவை'யும் பா.விஜய்யின்  'காற்சிலம்பின் ஓசையிலே'வும் சிலப்பதிகாரத்தை எழுதிச் செல்கிறது. வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையாக பா.வெங்கடேசனின் 'தாண்டவராயன் கதை' முதலாக பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் பிரேம்-ரமேஷ் அவர்களின் 'கான்கீரிட் வனம்' யுவன் சந்திரசேகரின் 'ஒளிவிலகல்,' 'சோம்பேறியின் நாட்குறிப்பு' எம்.ஜி.சுரேஷின் '37', 'சிலந்தி','யுரேகா என்றொரு நகரம்', 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனிரும்' கோணங்கியின் 'பிதிரா', 'பொம்மைகள்', 'உடைபடும் நகரம்' போன்ற நாவல்களையும் பின்நவீனத்துவக் கூறுகள்       அடங்கியப் பிரதிகளாக எடுத்துக் கொள்ள முடியும்.
      சிறுகதைகளைப் பொறுத்தவரை பின்நவீனத்துவத்தின் முன்னோடியாக புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும். ஏனெனில் பின்நவீனத்துவத்தை உள்வாங்காமல் எழுதப்பட்டாலும் அவரது சிறுகதைகளில் பின்நவீனத் தன்மைகள் வெகுவாக காணக்கிடக்கின்றன. தற்போது மௌனியின் சிறுகதைகள் அதன் நீட்சியாக வந்து பின்நவீனத்துவ வாசிப்பைக் கோருகிறது எனலாம். இன்னும் தமிழவன், சுஜாதா, சுந்தரராமசாமி போன்றவர்களின் கதைகளிலும் பின்நவீனக் கூறுகளைக் காணலாம். இதில் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதுபவர்களில் முதன்மையாக பிரேம்-ரமேஷ் அவர்களையும் சாருநிவேதிதா போன்றவர்களையும் குறிப்பிடலாம்.
         தமிழ்ச் சூழலில் கவிதையில்தான் பின்நவீனத்துவக் கூறுகள் கொட்டிக் கிடக்கின்றன. பிரேம்-ரமேஷ் அவர்களின்    'பேரழகிகளின் தேசம்',   'கருப்பு     வெள்ளைக்கவிதைகள்',    'சக்கரவாளக்கோட்டம்', 'உப்பு' பாரதிநிவேதனின் 'ஏவாளின் அறிக்கை' யவனிகா ஸ்ரீராமின் 'கடவுளின் நிறுவனம்', 'சொற்கள் உறங்கும் நூலகம்' இசையின் 'சிவாஜிகணேசனின் முத்தங்கள்' இலக்ஷ்;மி மணிவண்ணனின் 'சங்கருக்கு கதவற்றவீடு' பெருந்தேவியின் 'தீயுறைத் தூக்கம்' போன்ற படைப்புகளில் பின்நவீனத்துவம் வெகுவாக உள்ளதைக் காணலாம். மேலும், பிரம்மராஜன், ஆத்மநாம், மாலதிமைத்ரி, அனார், சுகிர்தராணி, கண்டராதித்தன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், விக்ரமாதித்யன், கரிகாலன், ராணிதீலக், பழனிவேல், நாகதிசை, பா.தேவேந்திர பூபதி, சல்மா, ரசூல்  போன்றவர்களின் கவதைகளிலும் பின்நவீன முயற்சிகளைக் காண முடியும்.
      -இவ்வாறு தமிழ் படைப்புலகில் இன்றையச் சூழலில் பின்நவீனத்துவம் ஆழ வேரூன்றியுள்ளது எனலாம். இதில் ஈழத்துப் பிரதிகளும் தங்கள் பங்களிப்பை ஓரளவிற்கு தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


பின்நவீனத்துவம் –  பொருத்தப்பாடு:

    பின்நவீனச் சிந்தனைப்போக்கு அரசியல், சமூகம், சினிமா, கலை, இலக்கியம், பண்பாடு என எல்லா தளங்களிலும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிலும் அது ஒட்டுமொத்த மாற்றங்களைச் செய்துவிடாவிட்டாலும் பொருத்தப்பாடுடையச் சில விளைவுகளை உண்டுபண்ணியுள்ளதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பின்நவீனத்துவத்தை ஒரு வாசிப்பு முறையாக கொண்டு நோக்குவோமெனில் அதற்கான பொருத்தப்பாடுகளை, நாம் சங்க இலக்கியத்தில் கூட கண்டடைய முடியும். எனினும் இன்றைய நிலையில் பின்நவீனச் சிந்தனைக்குப் பொருந்தி வரும் சிலப்பதிவுகளைக் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்துக்காட்டலாம். அவை,


அரசியல் தளத்தில்...

    பெரியாரை தமிழ்ச் சூழலின் மிகச்சிறந்த பின்நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் மதம், மரபு, நம்பிக்கை போன்றவை மூலம் கட்டமைக்கப்பட்டிருந்த பல பெருங்கதையாடல்களை முதலில் கட்டுடைத்தவர் அவர்தான். பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச் சூழலில் ஆரம்பித்துவைத்துவரும் அவரே. சான்றாக டிசே தமிழன் கூறுவதுபோல், 'தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதை, தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக் கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்களையும் இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. எனவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் அவ்வாறு கூறினார்.'18  என்று அதனை பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.


சமூக தளத்தில்...

        சமூகத்தில் இன்றைய நவீனச் சூழல் பல வாழ்வியல் மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. அதில் ஒன்று எல்லோரும் கிடைமட்ட பரப்பிற்கு வந்து கொண்டிருப்பது. இதற்கு சான்றாக 'கையயேந்தி பவன்' உணவகச் சூழலைச் சொல்லலாம். இங்கு ஹோட்டல்களில் உள்ளதைப்போல் குளிர்விப்பான் அறை (AC room), குடும்ப அறை (family room) என்று பாகுபாடுகள் கிடையாது. தீண்டாமை ஒழியாத கிராமத்தின் டீக்கடைகளில் உள்ளதைப்போல் இரட்டைக் குவளைகள் கிடையாது. கையேந்தி பவனுக்கு சாப்பிட வந்துவிட்டால் உணவை கையில் ஏந்திக்கொண்டு சாலையோரம் நின்றுதான் சாப்பிட வேண்டும். வந்தவன் TATA SUMO-வில் வந்தாலும், நடந்து வந்தாலும் இங்கு ஒரே ஒழுங்குதான் கடைபிடிக்கப்படும். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என எந்த அதிகார மையமும் இங்கு தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. இங்ஙனம் அதிகார படிநிலைக் கட்டமைப்பை சமூக தளத்தில் உடைத்துவிட்ட கையேந்தி பவன் ஒரு பின்நவீன வரவுதான்.


சினிமா தளத்தில்...

  மேற்கத்தியச் சூழலில் பின்நவீனத்துவத்துடன் முழுமையாகப் பொருத்தப்பாடுடைய பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சான்றாக Avadar, Terminator, Titanic  போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் அது அரிது. இருப்பினும் ஒரு சில பின்நவீனத்துவக் கூறுகளுடன் பொருந்திவரும் திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

1.இரட்டை முடிவுகளைத் தரும் '12 B '
2.புனைவுகளின் மீதான புனைவாக வெளிவந்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' (எம்.ஜி. ஆர். படம் அல்ல, செல்வராகவன் இயக்கத்;தில் கார்த்தி நடித்து வெளிவந்தது.)
3.தமிழ் சினிமா உலகை (கோலிவுட்), அதன் படைப்பாக்க செயல்பாட்டை பகடி செய்யும்  'தமிழ்ப்படம்'.
4.கனவு உலகைச் சித்தரிக்கும் 'நியூ'
5.ஆண்களையே நாயகர்களாக பார்த்த தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிலைப்படுத்தி தலைகீழாக்கம் செய்த 'சிநேகிதி'
6.வார்த்தைகளே இல்லாமல் பேசிச்செல்லும் 'பேசும்படம்'
7.பின்நிகழ் வினையை வாழும்காலத்தில் பதிவு   செய்திருக்கும் 'எந்திரன்'
8.சமூகத்திலிருந்து முரண்படும் பிறழ்மனநிலையைக் காட்டும் 'நான்கடவுள்'
    -போன்றவைகள் ஆகும். மேலும், சினிமாவில் காட்டப்படும் சிறிய துண்டு நிகழ்வுகளில் பின்நவீனப் போக்கினைப் பல திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. 'கிரி' படத்தில் வீரபாகுவாக வரும் வடிவேல் தன் அக்காவை ' Super Figure ' எனும் இடத்தும், 'யாரடி நீ மோகினி' படத்தில் வாசுவாக வரும் தனுசிடம் 'ஆத்துல குளிக்கும் போது குண்டி கழுவிக்கலாம் இப்ப கல்ல வச்சி துடைச்சிக்கடா' என நண்பனின் குரல் ஒலிக்கும் இடத்தும் முறையே அபத்தத்தையும், இடக்கரடக்கலையும் முன்வைத்துச் செல்வதைக் காணலாம். (தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வுகள் நவீனம் கடந்த பின்நவீன நிகழ்வாக இருப்பதால் அதை பின்நவீனத்துவக் கூறாக எடுத்துக்கொள்வோம். வேற வழியில்ல)இங்ஙனம் தமிழ்ச்சூழலில் சினிமாதளத்தில் சிறு, சிறு நிகழ்வுகளாகவும் படத்தின் ஒரு கூறாகவும் பின்நவீனத்துவம் பதிவாகியுள்ளதைப் பல திரைப்படங்களில் காணலாம்.

கலை தளத்தில்...

   முதலில் சிற்பக்கலையை எடுத்துக்கொள்வோம். அதில் பின்நவீனச் சிந்தனையைத் தேடி ரொம்ப தூரம் அலைய வேண்டியதில்லை. பன்முக பார்வைக்கு இடம்தரும் பிள்ளையார் சிலைகூட அதற்கொரு சான்றுதான். அது யானையா? மனிதனா? அல்லது இரண்டுமா? அதே போல் யாழியை பார்ப்போமெனில் அதை ஒரு பின்நவீன கற்பனை என்றுதான் சொல்லவேண்டும். சிங்கம், முதலை, யானை என்று கலந்துகட்டி உருவாக்கப்பட்டிருக்கும் அது பார்வையாளனிடம் பல கேள்கிகளைத் தோற்றுவிக்கிறது.

   அடுத்து ஓவியக்கலையை எடுத்துக்கொண்டால் அதில் பின்நவீனத்துவம் குறித்து விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு ஓவியத்தில் பின்நவீனக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. பின்நவீனத்துவத்தின் முன் இயங்கள் பல ஓவியத்திலிருந்து இலக்கியத்திற்கு நகர்ந்தமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. 

இலக்கியத் தளத்தில்...

   இன்றைய சூழ்நிலையில் சிறுகதை, கவிதை, நாவல் என்று எல்லா இலக்கியக் கூறுகளிலும் பின்நவீனச் சிந்தனைகள் இடம்பெறுவதைக் காணலாம். வடிவம், உத்தி, கற்பனை, பாடுபொருள் என்று எல்லா இலக்கிய செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஒரு எடுத்துக்காட்டை மட்டும் ஞானக்கூத்தனின் கீழ்க்கண்ட கவிதையிலிருந்து பார்ப்போம். அது,


'கடற் கரையில் சில
மரங்க ளென்று நான் க
விதை எழுத நினைத்திருந்
தேன். எதையும் நி
னைத்ததும் மு
டிக்க வேண்
டும் மு
டிக்க வில்லை யென் றால் ஏ
தும் மாற்றம் ஆ
கி விடும்...'19

 -இக்கவிதை பேச வேண்டியக் கருத்தை வருணித்துச் செல்லாமல் வடிவத்திலையே சொல்லி விடுகிறது. இங்கு வார்த்தைகள் வெட்டி, வெட்டி துண்டாடப் பட்டிருப்பதிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு விட்டதைப் புரிந்து கொள்ள முடியும். அதையே இன்னுமொரு வாசிப்பாக, 'கடற்கரையில் சில மரங்கள்' எனும் தலைப்பில் கவிஞன் எழுதவிரும்பிய ஆசையும் துண்டாடப்பட்டுவிட்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, ஞானக்கூத்தனின் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள சொல்லுடைப்பும், பன்முக வாசிப்பும் பின்நவீனத்துவக் கூறுகளே எனலாம்.


பண்பாண்டுத் தளத்தில்...

   'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது பண்பாட்டு மரபு. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தது மரபு மீறல். பெண்களுக்கு சமஉரிமை கொடுத்தது நவீனம். பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொண்டு வாழ்வது பின்நவீனம். (இரண்டு பின்நவீன வாதிகள் ஒரு பெண்ணுடன் வாழ்வதாக கேள்வி)

   அப்பாவும் மகனும் சேர்ந்து மது அருந்துவது, சிறுசு முதல் பெருசு வரை குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சியில் அரைகுறை மஞ்சள் காட்சிகளைப் பார்ப்பது. எமகண்டத்தில் மணம் முடிப்பது - என்று தமிழ்ச்சூழலில் பல பண்பாட்டுக் கூறுகளும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை பின்நவீனச் சிந்தனையாக எடுத்துக்கொள்ளலாம்.

முடிவுரை:

  • மேலை நாடுகளில் ஒரு கோட்பாடாக உருவாகிய பின்நவீனத்துவம் இன்று எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் எல்லா பண்பாட்டுக்கும் ஏற்புடையதாக மாற்றம் கண்டுள்ளது.

  •  பின்நவீனத்துவம் என்பதை பெருங்கதையாடல்களின் மீதான தகர்வாக எடுத்துக் கொள்ளலாம். அது சிறுசிறு அங்ஙகங்களையும் மறுக்கப்பட்டவைகளையும் முன்னெடுக்கிறது. நவீனத்துவத்தின் நீட்சியாக உருவான இக்கோட்பாடு நவீனத்துவத்தின் பல நிறுவல்களை கேள்விக்குள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சாதாரணமாக நோக்கும் அது மையமற்ற ஒரு சுதந்திரநிலையை ஏற்படுத்தி தருகிறது.

  • இன்றைய நிலையில் தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் பெரும் செல்வாக்குடன் திகழ்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என்று அதன் பரப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில் பின்நவீன படைப்புகள் பல வெளிவந்த வண்ணம் உள்ளன. பின்நவீனத்துவத்தை ஒரு வாசிப்பு முறையாக கொண்டு அணுகுவோமெனில் பின்நவீனப் பிரதியை நாம் சங்க இலக்கியத்தில் கூட காணமுடியும்.



சான்றெண் விளக்கக் குறிப்பு:

1.எம்.ஜி.சுரேஷ்- இஸங்கள் ஆயிரம்  - பக். 187
2.மேலது. - பக். 189
3.மேலது. - பக். 189
4.எம்.ஜி. சுரேஷ்-  பின்நவீனத்துவம் என்றால் என்ன? - பக். 129
5.வெ.கிருஷ;ணமூர்த்தி(தொ.ஆ)  - பின்நவீனத்துவத்தின் அடிப்படைக்             கூறுகள் முதலிய கட்டுரைகள், - பக். 23
6.மேலது. - பக். 30
7.தி.சு.நடராசன், அ.ராமசாமி(தொ.ஆ) - பின்னை நவீனத்துவம்   கோட்பாடுகளும்  தமிழ்ச் சூழலும் - பக். 17
8.சிவத்தம்பி-  தமிழ் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - பக். 211
9.தி.சு.நடராசன், அ.ராமசாமி(தொ.ஆ) - பின்னை நவீனத்துவம்     கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் - பக். 11
10.அ.மார்க்ஸ்- பின்நவீனத்தும் இலக்கியம், அரசியல் -  பக். 104
11.தி.சு.நடராஜன்- திறனாய்வுக்கலை - பக். 163
12.டிஷே தமிழன்- என்னுடைய பின்நவீனத்துவப் புரிதல்கள் - கட்டுரை
13.சாதிக் பாட்சா- பின்நவீனத்துவம் ஒழுங்கவிழ்பின் கூறுகள் - கட்டுரை
14.ஜெயமோகன்- பின்நவீனத்துவம் ஓர் எளிய விளக்கம்  - கட்டுரை
15.அஸ்வத்தாமா- பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்  - கட்டுரை
16.மருதையன்- தமிழ் நாட்டில் பின்நவீனத்துவம் - நேர்காணல்
17.ZZZ said-  (இணையம்)  - கட்டுரை
18.அயன்ஆல்- பின்நவீனத்துவம் குறித்த என்தேடலில் கண்டவை- கட்டுரை
19.மு.சுந்திரமுத்து- படைப்புக்கலை,  - பக். 88



----------------------------------------------------------------------------- ம.மகேஷ்-------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக