சனி, 1 ஆகஸ்ட், 2015

தொல்காப்பியரின் நன்நயப் பொருள்கோள்


 இலக்கியப் படைப்புச் செயல்பாடு என்பது மூவர் கூட்டுழைப்பினால் உருவாக்கப்படுவது. அதாவது படைப்பாளி, படைப்பு, படிப்பாளி - இந்த மூவர் இல்லாமல் இலக்கியச் செயல்பாடு என்பது இல்லை. இவற்றுள் தொல்காப்பியர் படைப்பாளி குறித்தும் படிப்பாளி குறித்தும் குறைவாகத்தான் சொல்கிறார். படைப்பு குறித்துதான் விரிவாகப் பேசுகிறார். ஒரு படைப்பு அகம், புறம் என்ற பொருளை எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்பதை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொதுவியல் ஆகிய ஐந்து இயல்களிலும் தொடர்ந்து எப்படி இந்தப் பொருளை வடிவமைக்க வேண்டும் என்று மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களிலும் விளக்கமாகப் பேசுகிறார். இந்தப் பேச்சில் பிரதி குறித்து 1930-களில் நவீனத்துவம் மேற்கொண்ட ஒரு முயற்சி போன்ற முயற்சி புலப்படுகின்றது. இந்தக் கட்டுரையில் இருபதாம் நூற்றாண்டில் அமைப்பியல், பின்அமைப்பியல் ஆகிய கோட்பாடுகள் உருவாகிய சூழலில் படிப்பாளி எனப்படும் வாசகர் படைப்புச் செயல்பாட்டில் பெரிதும் முக்கியத்துவம் பெற்ற நிலையில், தொல்காப்பியரின் பார்வை இந்த வாசகர் குறித்து எவ்வாறு அமைந்தது என்பதை விளக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் இப்படி ஒரு நூற்பாவை இறுதியாக எழுதிச் செல்கிறார். 
 கண்ணினும் செவ்வினும் திண்ணிதின் உணரும்
 உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் 
 நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

இவ்வாறு ஒரு பிரதிக்குள் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது என்பது வாசகரைச் சார்ந்ததாக இருக்கிறது. கண்ணாலும் செவியாலும் மிக நுட்பமாக உள்வாங்கும் உணர்வுக் கூர்மையுடைய வாசகர்கள் தங்களின் அறிவுத் திறத்திற்கு ஏற்பப் பிரதியின் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று மிக இன்றியமையாத ஒரு கருத்தை முன்மொழிகிறார். இவ்வாறு ஒரு பிரதியின் அர்த்தம் வாசகர்களால்தான் வடிவமைக்கப்படுகிறது என்றால் படைப்பாளி சொல்லக் கருதிய அர்த்தம் என்ன ஆயிற்று? என்ற வினா எழுகிறது. இந்த இடத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் பின்அமைப்பியல்வாதியான ரோலண்ட் பர்த் கூறிய மிக ஆழமான ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. அவர் "படைப்பாளி இறந்துவிட்டார்" என அறிவித்தார். அதாவது படைப்பாளிக்கும் படைப்பிற்குமான தொடர்பு எழுதிய கணத்தோடு முடிந்து விடுகிறது. வாசகனுக்கும் படைப்புக்குமான தொடர்புதான் காலந்தோறும் தொடர்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும் புதுப்புது வாசகர்கள் இருக்கின்ற பிரதிகளுக்குத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்றவாறு புதுப்புது அர்த்தங்களை எழுதிக் கொள்கிறார்கள். இப்படி வாசகர்களே பிரதியின் படைப்பாளர்களாகத் தொடர்ந்து வருவதால் படைத்த படைப்பாளி இறந்துவிட்டான் என அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. தொல்காப்பியரும் இத்தகைய சிந்தனை கொண்டிருந்தார் என்பதைத்தான் மேற்கண்ட நூற்பா மூலம் நாம் அறிய நேர்கிறது.

 இதேபோல் சொல்லதிகாரத்தின் எச்சவியலில் செய்யுளுக்குள் மொழிகள் தம்முள் புணர்கின்ற வகைகளைப் பலவாறு விரித்துக் கூறுகிறார். ஒரு செய்யுளுக்குள் இருந்து நான்கு வகையாகப் பல்வேறு அர்த்தங்களை வாசகர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும் என முன்மொழிகின்றார். அதாவது உரைநடை போல வார்த்தைகளை இலக்கண நெறிப்படி முறையாக வாசித்துதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. நிரல்நிறையாகவும் சுண்ணம் என்கிற முறையிலும் அடிமறி என்கிற முறையிலும் மொழிமாற்று என்கிற முறையிலும் வாசகர்கள் வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளலாம் என விளக்குகிறார்.

 நிரனிறை கண்ண மடியறி மொழிமாற்
 றiவாநன் கென்ப மொழிபுண ரியல்பே. (சொல். எச்சவியல். 8)

என்கிறது நூற்பா. அதாவது நிரனிறை என்பது வினைச்சொற்களும் பெயர்ச் சொற்களும் செய்யுளில் சொற்களாக வேறுவேறு இடங்களில் நிற்கும் வாசகர்கள்தான் அச்சொற்களைத் தாங்கள் கொள்கின்ற பொருளுக்கேற்றவாறு மாற்றி ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

 நிரனிறை தானே
 வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
 சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். (சொல். எச்சவியல்.9)

சான்றாக 'மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் - கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு' என்று வரும் செய்யுள் அடியில் மாசு போக என்ற வினையைக் கடிபுனன் என்ற பெயரோடும் காய்பசி நீங்க என்ற வினையை யடிசில் என்கின்ற பெயரோடும் இணைத்துப் பொருள் கொள்ளத் தெரிய வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

 சுண்ணம் என்பது செய்யுளுக்குள் அர்த்தங்கள் சுண்ணம் போலச் சிதறிப் பரந்து கிடக்கும் என்கிறார். சான்றாக,

 சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
 யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
 கானக நாடன் சுனை

என்ற செய்யுள் அடிகளை நேரடியாக உரைநடை போல வாசித்தால் அர்த்தம் மேற்கொள்ள முடியாது. எனவே வாசகர் அறிவுக் கூர்மையுடையவராகச் செயல்பட்டு சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயலுக்கு நீத்து என்று சிதறிக் கிடக்கும் அர்த்தங்களை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கேயும் அர்த்தங்களை வாசகர்கள்தான் கண்டெடுக்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

அடிமறி என்பது செய்யுளில் சீர்கள் நின்றாங்கு நிற்ப, அடிகள் பொருளுக்கு ஏற்றவாறு தத்தம் நிலையில் திரிந்து பொருள் கொள்ளும் முறையாகும். சான்றாக,

மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
வேறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே.

இந்தச் செய்யுளில் அடிகளை மாற்றி மாற்றி வாசித்தாலும் அர்த்தங்கள் எதுவும் சிதைவதில்லை. இதன் பொருள் என்னவென்றால் செய்யுளில் அர்த்தங்கள் வரிசையாக அமைந்திருக்க வேண்டும் என்பது இல்லை என்பதுதான்.

 மொழி மாற்று என்பது செய்யுளினுடைய பொருள் இயைபு ஏற்படும்படிச் சொற்களை முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்கிற முறையாகும். 
 மொழிமாற் றியற்கை
 சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைப
 முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். (சொல்.எச்சவியல்.13)

இங்கேயும் செய்யுளுக்குள் பயின்று வரும் சொற்களைத் தாங்கள் அர்த்தம் கொள்ளும் தன்மைக்கேற்ப முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளலாம் என வாசகர்களையும் முன்னிறுத்திப் பொருள் கொள்ளுதலில் வாசகர்களுக்கு இருக்கும் முதன்மை இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார் தொல்காப்பியர் எனலாம்.

 தொல்காப்பியர் இவ்வாறு நான்கு வகை பொருள்கோள் உண்டு எனச் சொல்வதைத் தான் பின்னால் நன்னூல் ஆசிரியர் விரித்து ஆற்று நீர் பொருள்கோள், மொழிமாற்று பொருள்கோள், நிரல்நிறை பொருள்கோள், ப+ட்டுவில் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறி யாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறி மாற்றிப் பொருள்கோள் என எட்டாக விரித்துப் பொருள் கொள்கிறார். இவ்வாறு பொருள்கோள் குறித்த தொல்காப்பியர் மற்றும் நன்னூலாரின் கருத்துக்கள் வழியாக இங்கே புரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி, பிரதிக்கு அர்த்தம் எழுதுவதில் வாசகர்களின் பங்கை அவர்கள் வலியுறுத்துகிற தன்மையைத்தான்.

 பொதுவாகவே தொல்காப்பியர் பல்வேறு இடங்களில் இந்தப் பொருள் கொள்ளுதலில் வாசகர்களின் பங்கு குறித்துப் பலவாறு சுட்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

 கிளந்து அல்ல வேறுபிற தோன்றினும்
 கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே (சொல்.வேற்.மயங்.35)

என்ற இடத்திலும் சொல்லப்பட்டதற்கு வேறாக வந்தாலும் வாசகர்கள் உணர்ந்து பொருள் கொள்ள முயல வேண்டும் என வலியுறுத்துவதைப் பார்க்கிறோம். இதுபோலவே

 'சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' (எச்ச.6) 
என்றும்

'முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
இன்ன என்னும் சொல் முறையானே' (எச்ச.63)
என்றும்

 செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி
 இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
 வருவ உள எனினும் வந்தவற்று இயலான்
 திரிபு இன்றி முடித்தல் தௌ;ளியோர் கடனே (செய்யுளியல்.235)
என்றும்

 சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற
 இன்றியமையாது இயைபவை எல்லாம்
 ஒன்றி உரைப்பது உரை எனப்படுமே (மரபியல்.105)
என்றும்

 உவம பொருளி னுற்ற துணருங்
 தெளிமருங் குளவே திறத்தியலான (உவம.20)
என்றும்

 சுட்டிக்கூறா வுவம மாயிற்
 பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தனர் கொளலே (உவம.7)
என்றும் முப்பத்து இரண்டு உத்திகளில்

 மொழியாததனை முட்டின்றி முடித்தல்
 வாரததனான் வந்தது முடித்தல்
 வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்
என்று கூறும் போதும் பிரதிக்கு அர்த்தம் கொள்ளும் முறையியலில் வாசிப்பவனின் இன்றியமையாத இடத்தைத் தொல்காப்பியர் வலியுறுத்திக் கொண்டே போவதைப் பார்க்கிறோம்.

 வாசிப்பவருக்கு இத்தகைய வாய்ப்பினைத் தொல்காப்பியர் கொடுப்பதனாலேதான் இடைக்காலத்து உரையாசிரியர்களும் பிரதிக்குத் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு அர்த்தங்களைப் புதிது புதிதாக எழுதிக் கொண்டு போகின்றனர். சான்றாக ஒன்றை மட்டும் இங்கே எடுத்துக்காட்டலாம்.

 ஏவன் மரபி னேனோரு முரிய
 ருhகிய நிலைமை யவரு மன்னர். (அகத்.24)

இந்நூற்பாவின் சொற்களை நச்சினார்க்கினியர் பல்வேறு இடத்தில் மாற்றித் தனக்கேற்றவாறு அர்த்தம் கொள்கிறார். அவர் மாற்றிய படி இந்த நூற்பா இப்படி அமைகிறது.

மரபின் ஏவல் ஆகிய நிலைமை அவரும்
அன்னர் ஆகிய அவரும் ஏனோரும் உரியர்.

இப்படி மாற்றுகிற உரிமை அவருக்கு யார் கொடுத்தது? வாசகர்களுக்கு இந்த உரிமை இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இவ்வாறு மாற்றியதோடு மட்டுமல்லாமல் பொருள் கொள்ளும் பொழுதும் இடைக்காலச் சமூகத்தின் தேவைக்கேற்றவாறு 'மரபின்' என்பதற்கு 'வேத நூலுட் கூறிய இலக்கணத் தானே' என்றும் 'ஏவலாகிய நிலைமை அவரும்' என்பதற்குப் 'பிறரை ஏவிக் கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையுடைய அந்தணர், அரசர் வணிகரும்' என்றும் 'ஏனோரும்' என்பதற்கு 'நால்வகை வருணம் என்று எண்ணிய வகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும்' என்றும் திணை மரபிற்கு மாறாக எழுதிச் செல்கிறார் நச்சினார்க்கினியர். இவ்வாறு தமிழ் மரபிலும் 'எழுத்தாளர் இறந்துவிட்டார், வாசகர்கள்தான் அர்த்தங்களை எழுதிக் கொள்கிறார்கள்' என்று சொல்வதற்கான தளங்கள் இருக்கின்றன என்பதுதான் இந்தக் கட்டுரை வழியாக அறிய வரும் செய்தியாகும்.

 வாழ்க்கையை போலவே மொழியும் எந்தவொரு புரிதலுக்குள்ளும் வரையறைக்குள்ளும் அடங்காத ஒன்றாகக் கணந்தோறும் திமிறிக் கொண்டே ஓடிக் கொண்டிருப்பதால் இலக்கிய அழகியலிலும் இப்படியெல்லாம் உரையாடல் நிகழ்த்துவதற்கான வாய்ப்புக்கள் வந்து வாய்க்கின்றன.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக