வியாழன், 17 டிசம்பர், 2015

ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது


தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

கேரளாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். பின்னர், செல்வி ஸ்டோர் என்று சொந்தமாக கடை நடத்தி வந்தார். 

இவரது சிறுகதைகள் முழு நூலாக வெளிவந்துள்ளது, கிருஷ்ண பருந்து உட்பட 3 நாவல்களையும் படைத்துள்ளார் ஆ.மாதவன். குறுநாவல்கள் சிலவும் இவரது படைப்புகளில் அடங்கும். 

திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவை பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் நவீன சிறுகதை இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தின் வணிக வீதியான சாலைத்தெருவில் அன்றாடம் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை தனக்கேயுரிய நடை மற்றும் வடிவத்தில் வழங்கினார். மானுட கதாபாத்திரங்களாயினும் விலங்காயினும் வாழ்க்கைப் போராட்டமே இவரது கதைக்கரு. வாழ்க்கைப் போராட்டத்தை அதன் தன்மையிலேயே நவிற்சி கொள்ளச் செய்யும் எழுத்து வகை இவருடையது.

குறிப்பாக தீபம் இதழில் இவர் எழுதிய 'பாச்சி' என்ற கதையை குறிப்பிடலாம். தெருவில் குற்றுயிராகக் கிடக்கும் நாய் ஒன்றினை எடுத்து வளர்க்கும் ஏழைத் தொழிலாளியின் மனநிலையைச் சித்தரிக்கும் கதை ஆழமானது.

இவர் தனது எழுத்து நடை திராவிட இயக்கத்திலிருந்து பெற்றதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ் மொழிவளர்ச்சியில் திராவிட இயக்கம் செய்த பங்களிப்பு மிக முக்கியமானது என்று கூறும் ஆ.மாதவன், அவர்களது அரசியல் வேறு என்று ஏற்கெனவே குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது. மேலும் தமிழின் சிறந்த படைப்பாளிகளான லா.ச.ராமாமிர்தம், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் ஆகியோரது படைப்புகளிலிருந்தும் தாக்கம் பெற்றார் அ.மாதவன். 

இவரது முதல் புத்தகம் மோகபல்லவி 1974-ல் வெளிவந்தது. ஆனால் தமிழில் இவரை அறிவித்தது 'கடைத்தெரு கதைகள்' என்ற தலைப்பில் வெளியான 16 சிறுகதைகள் கொண்ட தொகுதியே. இதுவும் 1974-ல் வெளிவந்தது. புனலும் மணலும் என்ற நாவலும் அதே ஆண்டு வெளியானது. 1980-ல் இவரது முக்கியமான நாவலாகக் கருதப்படும் 'கிருஷ்ணப் பருந்து' வெளிவந்தது. 

3-வது நாவல் தூவானம் 1987-ம் ஆண்டு வெளிவந்தது. எட்டாவது நாள் இவரது முதல் குறுநாவல், இதனைத் தொடர்ந்து காளை என்ற மற்றொரு குறுநாவல் வெளியானது. இவையிரண்டு கடைத்தெரு கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவரது நூல்களை இவ்வாறாக பட்டியலிடலாம்: கடைத்தெரு கதைகள், மோகபல்லவி, காமினி மூலம், ஆனைச்சத்தம், மாதவன் கதைகள், அரேபிய குதிரை (1995), ஆ.மாதவன் கதைகள் (2002), ஆ.மாதவன் முத்துக்கள் பத்து என 7 தொகுப்புகள் இவருக்கு சொந்தமானவை.

2013-ம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் என்ற தலைப்பில் இவரது திறனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தது. இந்தத் தொகுப்புக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளத்திலும் புலமை பெற்றவர் ஆ.மாதவன். மலையாளத்திலிருந்து சில நாவல் மொழிபெயர்ப்புகளையும் அவர் செய்துள்ளார். காரூர் நீலகண்டப்பிள்ளை எழுதிய மலையாள நாவலை 'சம்மானம்' என்றும் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்றும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாசிரியராக, இதழாசிரியராகவும் இவர் பணி மேற்கொண்டுள்ளார். சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ள 'இலக்கியச் சுவடுகள்' தொகுப்பைப் பற்றி ஆ.மாதவன் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்:

"என்னைப் பொருத்தவரை எனது இலக்கிய வாழ்க்கை உலகின் பெருமை போர்த்தி வரும் முதல் கட்டுரைத் தொகுப்பு- இந்த இலக்கியச் சுவடுகள். இன்று எனக்கே பிரமிப்பாக இருக்கிறது."

முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றவர் ஆ.மாதவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக