தமிழகத்தின் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி (இன்று) வியாழக்கிழமை சென்னை வந்தார்.
டெல்லியில் இருந்து மோடி தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமானத் தளத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து அடையாறு ஐஎன்எஸ் விமான தளத்துக்கு வந்தார்.
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான அடையாறு ஐஎன்எஸ் விமான ஏவுதளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்.
பிரதமரிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வெள்ள பாதிப்புகளை விளக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டபின் முதல்வரைச் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் நிலையை ஆய்வு செய்வதற்காக சென்னை புறப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுடன் மோடி ஆய்வு
முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "தமிழகத்தின் வெள்ளச்சேதம் குறித்து இன்று பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் நான், உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ள சேதம் பற்றிய தகவல்களை தெரிவித்தோம். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நேற்று தொலைபேசியில் பேசிய பிரதமர் வெள்ளசேதம் குறித்து விவர மாகக் கேட்டறிந்தார்.
அப்போது மத்திய அரசால் இயன்ற அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். தமிழக வெள்ள சேதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நிவாரண நடவடிக்கைகளுக்காக, மத்திய அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பேச உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படை, தரைப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக உதவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக