அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,
"அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.
அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1) குடும்ப நல நிதி உயர்வு:
கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.
இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:
அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:
கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.
4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு
அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.
இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.
5) பணிக்கால தகுதி குறைப்பு:
ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.
6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:
பள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.
7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு
மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:
உயர்கல்வித் துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
9) அரசு அலுவலர்கள் வழக்கை விசாரிக்க தீர்ப்பாயம்:
தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர். தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.
10) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர்க் குழு:
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே, செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர்க் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.
11) ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்து ஊதியக் குழு பரிசீலிக்கும்:
ஊதிய விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.
எனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.
எனது இந்த அறிவிப்புகள் அரசு அலுவலர்கள் புதிய உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.