வியாழன், 25 பிப்ரவரி, 2016

போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால்,பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி தாமதமாகி உள்ளது

பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுகள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
ஆனால், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால், வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி
தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க இன்னும், சில நாட்களே உள்ளது. இந்த தேர்வை, ஒன்பது லட்சம்மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும், 2,400 தேர்வு மையங்கள் உள்ளன. சென்னையில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு, முதன்மை விடைத்தாள், மாணவர் விவரம் அடங்கிய முகப்புதாள் மற்றும் வினாத்தாள், கடந்த வார இறுதியில் அனுப்பப்பட்டன. அதில், வினாத்தாள் கட்டுகள் சீலிட்ட கவரில்,தாலுகா மற்றும் கல்வி மாவட்ட வாரியாக உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மையங்களில், பகலில், ஒருவர்; இரவில், மூன்று பேர் என, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மட்டும் பல மையங்களுக்கு இன்னும் வினாத்தாள் அனுப்பப்படவில்லை.
தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், இப்பொறுப்பு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு மையங்களுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தேவை. இது தொடர்பாக, போலீசுக்குமுறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை யில் பல இடங்களில் போராட்டம், கட்சி கூட்டங்கள், அமைச்சர் நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசார்காரணம் கூறுகின்றனர்.
அதனால், சில இடங்களுக்கு மட்டும் வினாத்தாள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும்,
விரைந்து நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக