வியாழன், 25 பிப்ரவரி, 2016

தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி?

''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும்,தேர்வின் போதும் உடலும், மனதும்தளர்வாக இருக்க வேண்டும். அதற்குதளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக்
கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி
கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கூறியதாவது:கோடையில் வியர்வை அதிகமாகும்.
காலை, மாலையில் குளிப்பது நல்லது. தடிமனான ஆடைகளை தவிர்த்து இலகுவான காட்டன் ஆடைகள்
அணியவேண்டும். வெயில் காலத்தில் தோல்வெடிப்பு, வியர்க்குரு, கழுத்துப்பகுதி, அக்குளில் வியர்க்குருவால் புண்ணாகலாம். சருமத்தை நன்றாகபராமரிக்க வேண்டும்.தலைக்கு குளித்தால் உடனடியாக முடியை உலரவிட வேண்டும்.வெயில் காலம் என்பதால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது. தேர்வு நேரத்தில் நாம் நோய்க்குள் சிக்கி விடக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, தொண்டைப்புண் ஏற்படும். டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. எளிதில் நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளதால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். எண்ணெய் கலந்த உணவுகளை குறைத்துக் கொண்டு பழம், காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் துாக்கம் வரும் என நினைத்து சாப்பிடாமல் படிப்பர். அது தவறு. சரியான அளவில், எளிதில் செரிக்கக்கூடிய, தண்ணீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கடையில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. வயிறு நிறைய சாப்பிடுவதை விட, அளவோடு அடிக்கடி சாப்பிடுவது நல்லது. வயிறு நிறைந்தால் சோம்பல் வரும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களை சுத்தமாக கழுவி வைத்து, படித்து கொண்டு இருக்கும் போது சாப்பிடலாம். பழங்களில் உள்ள குளுகோஸ் மூளைக்கு உடனடியாக கிடைப்பதால், அனைத்து வகை பழங்களும் சாப்பிடலாம்.மலச்சிக்கல் வராமல் பார்க்க வேண்டும். இதற்கு தண்ணீர்
நிறைய குடிக்க வேண்டும். கேரட், கீரை, பீன்ஸ் ஆகியவை ஞாபகசக்தி அதிகரிப்பதோடு கண் சார்ந்த
பிரச்னைகளை குறைக்கும். சத்துள்ள காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். பிள்ளைகள் நல்ல உடல் நிலையில் இருக்கின்றனரா என பெற்றோர்கண்காணிக்க வேண்டும்.
பல்வலி வருவதை தவிர்க்க காலை மற்றும் இரவில் பல் துலக்க வேண்டும்.படிக்கும்
நிலை(பொசிஷன்) முக்கியம். படுத்துக் கொண்டோ, மல்லாந்து படிக்கவோ கூடாது. வசதியான சேரில்
கால்களை தளர்வாக வைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் படிக்கலாம். படிப்பதற்கு காற்றோட்டமும்,
வெளிச்சமும் அவசியம். கண்ணாடி அணிபவர்களாக இருந்தால் படிக்கும் போது கண்ணாடி அவசியம்.
இல்லாவிட்டால் தலைவலி வரும். வியர்வையால் சளி பிடித்தாலும் தலைவலி வரும். ஷூ, செருப்பு அதிக இறுக்கமாக இருக்கக்கூடாது. பழைய சாக்ஸ், ஈரமான சாக்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக