செவ்வாய், 10 மே, 2016

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து: கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து: கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள்
ஆகியவற்றில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல்நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (9-5-2016) உத்தரவிட்டிருக்கிறது. வசதிகள் குறைவான கிராமப்புற மாணவர்களுக்கும், நவீன வசதிகள் மிகுந்த நகர்ப்புற மாணவர்களுக்குமிடையே நிலவி வரும் வேறுபாடுகளை நீக்கவும், அனைவர்க்கும் தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிடவும் சமூக நீதியை நிலைநாட்டவும், திமுக 2006-ம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் அனுமதி
பெறுவதற்குக் கட்டாயமாக அதுவரை திணிக்கப் பட்டிருந்த நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-3-2007 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்ந்து படிக்க முடிந்தது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நுழைவுத் தேர்வை ரத்து செய்து திமுகவால் அவசரச் சட்டம் பிறப் பிக்கப்பட்டது.
அந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த போதே, நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான சட்டம் அமலுக்கு வந்து விட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிஸ்ரா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் 27-4-2007 அன்று திமுக அரசு கொண்டு வந்த சட்டம் சரியானதே என்று ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தனர். உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பின் 17வது பத்தியில், திமுக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினை மத்திய அரசு மேற்கொண்டதைப் பற்றி குறிப்பிடும்போது, "மத்திய அரசின் கோப்பு பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் பல்வேறு துறைகள் பதிவு செய்த குறிப்புகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியிருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 254 (2) பிரிவின்படி மாநில
அரசு நிறைவேற்றியிருக்கும் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் சட்டமோ அல்லது ஒழுங்கு முறை
ஆணைகளோ கட்டுப்படுத்தாது . மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், தமிழக அரசின் சட்டத்தைக் கவனமாகப் பரிசீலனை செய்ததின் காரணமாக, அந்தச் சட்டம் வலிமை பெற்று, அரசமைப்புச் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் தன்மையைப் பெற்றிருக்கிறது" என்று மத்திய அரசின் கோப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அமைச்சகங்களின் குறிப்புரைகளின் அடிப்படையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்
பெற்றதற்குப் பிறகு, தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசின் வேறு எந்தச் சட்டமும் ஒழுங்கு முறை ஆணைகளும் கட்டுப்படுத்திட இயலாது. தமிழக அரசின் சட்டம் நடைமுறையில் இருந்தபோதே, 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தேசிய நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கைக்கு எதிராக
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், கழக அரசின் எதிர்வாதங்கiளை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நுழைவுத் தேர்வினை ரத்து செய்து கொண்டு வந்த சட்டத்தை வேறு எந்த அறிவிக்கைகளும் கட்டுப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் திமுக கோரியபடி இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிக்கைக்கு தடை உத்தரவையும் உயர் நீதிமன்றம் வழங்கியது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வு பற்றிய வழக்கு நடைபெற்ற நேரத்தில், அதிமுக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டம், திமுக அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்தாலோ, என்னவோ, திமுக கொண்டு வந்த சட்டத்தில் மேலே விவரிக்கப்பட்ட சட்ட ரீதியான நியாயங்களை எல்லாம் உச்ச நீதி மன்றத்தில் சரியாக எடுத்துச் சொல்லி வாதாடவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்து தனிச் சட்டம் இயற்றப்பட்டு, பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் அனுமதிப்பது கடந்த ஒன்பது ஆண்டு காலமாகவே நடைபெற்று வருகின்ற காரணத்தினால் தமிழகம் ஒரு பிரத்தியேகமான நிலையில் இருக்கிறது என்பதையும், பல மாநிலங்களில் அந்த மாநிலங்களிலேயே நடைபெறும் நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் அனுமதி நடைபெறுவதால் அத்தகைய மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வேறு பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே தங்களுடைய நிலைப்பாடுகளை விளக்கி கோரிக்கை
மனுக்களைத் தாக்கல் செய்திருக்கும்போது தமிழகம் மட்டும், தமிழகத்தின் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சுட்டிக்காட்டி, தன்னிலை விளக்க மனு எதையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யாது தவிர்த்திருப்பது ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் கையாண்டிருக்கும் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை தமிழக மாணவர்களும்,அவர்களின் பெற்றோரும் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள்.

மேலும் தமிழக மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் சமச்சீர் கல்வியை அடிப்படையாகக் கொண்டவர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் தேசிய நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படப் போகும் தேர்வாகும். எனவே,
மாநிலங்களுக்கிடையே தேசிய நுழைவுத் தேர்வின் காரணமாக பெரும் பாகுபாடு ஏற்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி தேசிய நுழைவுத் தேர்வு செல்லுபடியாகுமா என்பதைப் பற்றிய முடிவை உச்ச நீதி மன்றம் இன்னும் எடுக்கவில்லை. திமுக பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான
ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப்படும். தமிழக மாணவர்கள் தொடர்ந்து நுழைவுத் தேர்வு இல்லாமலே, மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தங்களுடைய உயர் கல்வியைத் தொடருவதற்கு அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக