பின்னர் வரும் உயிர்மயங்கியல் (பாடம் 8) புள்ளிமயங்கியல் (பாடம் 9) குற்றியலுகரப் புணரியல் (பாடம் 10) ஆகியவற்றில் நிலைமொழி ஈறுகள் எல்லாவற்றிற்கும் தனித்தனியே புணர்ச்சிவிதி கூறும் தொல்காப்பியர் அவற்றுள் அடங்காத வருமொழித் திரிபுகளைச் சொல்ல ஓர் இயல் தேவை என்று உணர்ந்ததன் விளைவே தொகைமரபாகும். இந்த இயல் இல்லை எனில் வருமொழித் திரிபுகளைப் பற்றி அறிந்துகொள்ள இயலாது. அவ்வகையில் தொகைமரபு இன்றியமையாததாகின்றது. 6.2 பொது விதிகளும் சிறப்பு விதிகளும் | ஒன்றுக்கு மேற்பட்ட ஈறுகளுக்குப் பொதுவான புணர்ச்சி விதி கூறுவதையே பொதுவிதி என்பர். பின்னர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சிறப்பு விதி கூறுவதைச் சிறப்பு விதி என்பர். இந்த இயலில் முதலில் பொதுவிதியைக் கூறிப் பின்னர்ச் சிறப்புவிதி கூறும் முறையிலேயே புணர்ச்சி விதிகளை விளக்கிச் செல்கிறார் தொல்காப்பியர். அவற்றைத் தனித்தனியே விரிவாகக் காணலாம். | 6.2.1 உயிர், மெய் ஈறுகளின் முன் கசதப வரும் புணர்ச்சி | உயிர் அல்லது மெய்யீற்றுச் சொற்கள் நிலைமொழியாக நிற்கும்போது க,ச,த,ப என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் வருமொழி முதலில் வரும் எனில், அவற்றின் இன மெல்லெழுத்துகள் இடையே தோன்றும். அதாவது க,ச,த,ப என்பனவற்றின் இன மெல்லெழுத்துகளாகிய ங,ஞ,ந,ம, என்பவை தோன்றும். இது ஒரு பொது விதி. அல்வழி வேற்றுமை எனும் இருவகைப் புணர்ச்சிக்கும் இவ்விதி பொதுவானது ஆகும். இப்புணர்ச்சி எந்தச் சொற்களுக்கு மரபாக உரியதோ அச்சொற்களில் மட்டுமே அமையும். | (எ-டு)
விள + கோடு > விளங்கோடு பூ + சோலை > பூஞ்சோலை விள + தோடு > விளந்தோடு விள + பூ > விளம்பூ | இவை எல்லாம் வேற்றுமைப் புணர்ச்சிகள். | நிலைமொழியீற்றில் மெல்லெழுத்து இருந்தாலும் அது வருமொழியின் இனமாகத் திரியும். | (எ-டு) மரம் + குறிது > மரங்குறிது மரம் + சிறியது > மரஞ்சிறியது மரம் + பெரியது > மரம்பெரியது மரம் + தீய்ந்தது > மரந்தீய்ந்தது | இங்குப் பகரத்தின் இனமெல்லினம் மகரமே. ஆதலால் திரியாமல் அப்படியே வந்தது. இவை எல்லாம் அல்வழிப் புணர்ச்சிகள். (பின்னர்ப் புள்ளிமயங்கியலில் (நூற்பா, 19) இந்த இலக்கணம் கூறப்படும்.) | க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ங ஞ ந ம என்னும் ஒற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான. | (தொல். எழுத்து. தொகை. 1) | மரபாக இவ்வகைப் புணர்ச்சிக்கு உரியதல்லாத புணர்ச்சிகளில் மெல்லின மெய்கள் தோன்றா. | (எ-டு) விள + குறுமை > விளக்குறுமை | நிலைமொழி உயிராகவும் மெய்யாகவும் இருக்கலாம் என்பதனால் இந்த நூற்பாக் கருத்து, பின்வரவிருக்கின்ற உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும். 6.2.2 உயிர், மெய் ஈறுகளின் முன் ஞநமயவ மெய்களும் உயிரெழுத்துகளும் வரும் புணர்ச்சி | உயிர், மெய் ஈறுகளை உடைய நிலைமொழியை அடுத்து ஞ,ந,ம,ய,வ என்னும் மெய்யெழுத்துகளையோ, உயிர் எழுத்துகளையோ முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து புணரும்போது வேற்றுமையிலும் அல்வழியிலும் அவை இயல்பாகவே புணரும். திரிபுகள் இரா. இதுவும் ஒரு பொதுவிதியே யாகும். பின் வரும் இயல்களில் 48 நூற்பாக்களில் விரித்துச் சொல்லப்படுபவை இங்குத் தொகுத்துச் சொல்லப்படுகின்றன. |
(எ-டு) | விள + ஞான்றது > விள ஞான்றது பலா + நல்லது > பலா நல்லது கை + முறிந்தது > கை முறிந்தது சோ + வலிது > சோ வலிது கிளி + யாது > கிளி யாது | | உயிர்முன் மெய் |
தாழ் + ஞான்றது > தாழ் ஞான்றது தாழ் + நீண்டது > தாழ் நீண்டது போர் + முடிந்தது > போர் முடிந்தது தாழ் + யாது > தாழ் யாது கால் + வலிது > கால் வலிது | | மெய்முன் மெய் |
பூ + அழகியது > பூவழகியது - உயிர் முன் உயிர் | (இங்கு இடையே தோன்றும் வகர உடம்படுமெய் திரிபு ஆகாது) | வேர் + அறுந்தது > வேரறுந்தது - மெய் முன் உயிர் | (இங்கு ரகரமெய்மேல் அகரம் ஏறி 'ர' என வருவது திரிபு அன்று) | இதுவரை கண்ட எடுத்துக் காட்டுகள் அல்வழிப்புணர்ச்சி. வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சில சான்றுகள் காண்போம். | கிளி + மொழி > கிளிமொழி - உயிர்முன்மெய் தமிழ் + நலம் > தமிழ்நலம் - மெய்முன் மெய் அணி + அழகு > அணியழகு - உயிர்முன் உயிர் நூல் + இனிமை > நூலினிமை - மெய்முன் உயிர் | (இங்கு யகர உடம்படுமெய் வருவதும், லகரமெய்மேல் இகர உயிர் ஏறி வருவதும் திரிபுகள் அல்ல) | ஞ ந ம ய வ எனும் முதலாகு மொழியும் உயிர் முதலாகிய மொழியும் உளப்பட அன்றி அனைத்தும் எல்லா வழியும் நின்ற சொல்முன் இயல்பா கும்மே. | (தொல். எழுத்து. தொகை. 2) | உயிர், மெய் ஈறுகளின் முன் மெல்லின எழுத்துகள் உறழ்ந்தும் வருதல் | மேலே உள்ள விதியில் சொல்லப்பட்டவற்றுள் மெல்லெழுத்துகள் (ஞநம) வருமொழி முதலில் வரும்போது உறழ்ந்தும் வரும். உறழ்தல் என்பது இருவகையாகவும் வருவதைக் குறிக்கும். அதாவது இயல்பாக வருவதும், அம்மெய்யே மிகுதலும் என இருவகையாகவும் வரும். | | முதல் எடுத்துக்காட்டு வேற்றுமைப் புணர்ச்சி. இரண்டாவது எடுத்துக்காட்டு அல்வழிப்புணர்ச்சி. | இவ்வெடுத்துக்காட்டுகளில் இயல்பாகவும், மெல்லெழுத்து மிகுந்தும் உறழ்ந்தும் வந்திருப்பதைக் காணமுடிகிறது. இவ்விதி குறிப்பிட்ட சில புணர்ச்சிகளுக்கு மட்டுமே பொருந்துவது. நிலைமொழியாக ஓரெழுத்தொருமொழியோ சில ஈரெழுத்தொருமொழிகளோ வரும்போது மட்டுமே இது பொருந்தும். | அவற்றுள் மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி இறுதி யான. | (தொல். எழுத்து. தொகை. 3) |
6.2.3 ணகர னகர ஈறுகளின் முன் யகரம், ஞகரம் வரும் புணர்ச்சி | ணகர னகர ஈறுகொண்ட நிலைமொழிகளின் முன்னர் வருமொழி முதலில் யகரம், ஞகரம் கொண்ட வினைச்சொல் வருமாயின் அவை ஒரே பொருள் தருவனவாகவே அமையும். அதாவது யகரத்திற்குப் பதில் ஞகரம் இடம்பெற்றாலும் பொருள் வேறுபடாது. | | வினைச் சொற்களில் மட்டுமே இந்தப்பொருள் ஒற்றுமை காணப்படுகிறது. பெயர்ச்சொற்களாயின் இவ்வாறு ஒற்றுமை காணப்படாது. | (எ-டு) மண் + யாமை = மண்யாமை | என்று மட்டுமே வரும், மண்ஞாமை என்று மாறுவதில்லை. மேலும் 'யா' வந்த இடத்தில் 'ஞா' வருமேயன்றி 'ஞா' வரும் இடத்தில் 'யா' வராது என்பதையும் உணரவேண்டும். மண் ஞான்றது என்பது மண்யான்றது என வராது. | ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். | (தொல். எழுத்து. தொகை. 4) | 6.2.4 ணகர னகர ஈறுகள் அல்வழிப் புணர்ச்சியில் திரியாமை
| மேற்குறிப்பிட்ட ணகர, னகர மெய்யீறுகள் வருமொழி முதலில் எந்த எழுத்து வரினும் அல்வழிப்புணர்ச்சியில் இயல்பாகவே புணரும். அதாவது அவ்வீறுகள் திரிபு அடைவதில்லை. | (எ-டு) மண் + கடிது > மண்கடிது மண் + சிறிது > மண்சிறிது மண் + பெரிது > மண்பெரிது மண் + வலிது > மண்வலிது மண் + நீண்டது > மண்ணீண்டது மண் + அழகியது > மண்ணழகியது பொன் + கடிது > பொன்கடிது பொன் + சிறிது > பொன்சிறிது பொன் + பெரிது > பொன்பெரிது பொன் + வலிது > பொன்வலிது பொன் + நல்லது > பொன்னல்லது பொன் + அழகியது > பொன்னழகியது | மொழி முதலாகும் எல்லா எழுத்தும் வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் வேற்றுமை அல்வழித் திரிபிடன் இலவே. | (தொல். எழுத்து. தொகை. 5) | ணகர னகர ஈறுகள் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்தல்லாத வருமொழி வரும்போது இயல்பாதல் | மேற்குறிப்பிட்ட விதியில் கூறப்பட்டுள்ள ண்,ன் ஆகிய மெய் ஈறுகள் வேற்றுமைப் புணர்ச்சியிலும், வல்லெழுத்து அல்லாத எழுத்துகள் வருமொழி முதலில் வரும் போது இயல்பாகவே புணரும். | (எ-டு) மண் + வெட்டி > மண்வெட்டி மண் + யானை > மண்யானை மண் + மேடு > மண்மேடு பொன் + மலர் > பொன்மலர் பொன் + வளையல் > பொன்வளையல் | வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து அல்வழி மேற்கூ றியற்கை ஆவயி னான. | (தொல். எழுத்து. தொகை. 6) |
6.2.5 லகர னகர ஈறுகளின் முன் தகர நகர மெய்கள் திரிதல் | லகரம் னகரம் ஆகிய மெய்களின்முன் வருமொழி முதலில் தகரமும் நகரமும் வந்தால் அவை முறையே ற்,ன் எனும் மெய்களாகத் திரியும். | (எ-டு) கல் + தரை > கற்றரை நல் + நிலம் > நன்னிலம் பொன் + தொடி > பொற்றொடி பொன் + நகை > பொன்னகை | இவை வேற்றுமைப் புணர்ச்சிகள். | (எ-டு) கல் + தீது > கற்றீது கல் + நன்று > கன்னன்று பொன் + தீது > பொன்றீது பொன் + நன்று > பொன்னன்று | இவை அல்வழிப் புணர்ச்சிகள். இப்புணர்ச்சிகளில் நிலைமொழி ஈறுகளும் திரிபடைந்துள்ளன. இத்திரிபுகள் பற்றிப் புள்ளிமயங்கியலில் கூறப்படும். | லனஎன வரூஉம் புள்ளி முன்னர்த் தந எனவரிற் றனவா கும்மே. | (தொல். எழுத்து. தொகை. 7) | 6.2.6 ணகர ளகர ஈறுகளின் முன் தகர நகர மெய்கள் திரிதல் | ணகர, ளகர மெய்களின்முன் வருமொழி முதலில் தகர, நகர மெய்கள் வரின் அவை முறையே டகர ணகர மெய்களாகத் திரியும். | (எ-டு) வெண் + தளை > வெண்டளை கண் + நீர் > கண்ணீர் முள் + தாள் > முட்டாள் முள் + நுனி > முண்ணுனி | இவை வேற்றுமைப் புணர்ச்சிகள். அல்வழிப் புணர்ச்சியிலும் இத்திரிபுகளைத் காணலாம். | (எ-டு) மண் + தீது > மண்டீது மண் + நன்று > மண்ணன்று முள் + தீது > முட்டீது முள் + நன்று > முண்ணன்று | இவை அல்வழிப் புணர்ச்சிகள். நிலைமொழி ளகரம் திரிவது பற்றிப் புள்ளிமயங்கியலில் காணலாம். | ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். | (தொல். எழுத்து. தொகை. 8) |
6.2.7 முன்னிலை ஒருமை ஏவல்வினை முன் வல்லினம் வரும்போது புணரும் முறை | உயிர், மெய் ஈற்று முன்னிலை வினைச் சொற்களின் முன் வருமொழி முதலில் வல்லெழுத்து வரும்போது அப்புணர்ச்சி இயல்பாகவும் வரும்; உறழ்ந்தும் வரும் (உறழ்ந்து வருதல் = வருமொழி வல்லெழுத்து மிகுந்தும், மிகாமலும் வருதல்). |
(எ-டு) | | | எறி + தம்பி > எறிதம்பி கேள் + தம்பி > கேள்தம்பி | | இயல்பாகப் புணர்ந்தன | | | உயிரீறு ஆகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குநவும் உறழ்பா குநவும் என்று ஆயீ ரியல வல்லெழுத்து வரினே. | (தொல். எழுத்து. தொகை. 9) | விதி விலக்கு | மேற்கண்ட விதிக்கு விலக்காகச் சில புணர்ச்சிகள் உள்ளன. ஒள என்ற உயிரீறும், ஞ,ந,ம,வ என்னும் மெய்யீறும் குற்றியலுகர ஈறும் உடைய முன்னிலை வினைச் சொற்களின்முன் வருமொழியில் வல்லெழுத்து வந்தால் கீழ்க்காணுமாறு புணரும். | | மேற்கண்ட உயிர், மெய் ஈற்று ஏவல் வினைச் சொற்கள் உகரம் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகுந்தும் மிகாமலும் உறழ்ந்து வந்தன. குற்றியலுகர ஈற்று வினைச்சொல் வருமொழி வல்லெழுத்து மிகுந்தும் மிகாமலும் உறழ்ந்து வந்தது. | ஒளவென வரூஉம் உயிரிறு சொல்லும் ஞநமவ என்னும் புள்ளி யிறுதியும் குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. | (தொல். எழுத்து. தொகை. 10) |
6.2.8 உயர்திணைப் பெயர்களின் அல்வழி, வேற்றுமைப் புணர்ச்சி | இப்பகுதியில் உயர்திணைப் பெயர்களுக்குரிய பொதுப்புணர்ச்சி விதியைக் காணலாம். உயிர்ஈறும், மெய்யீறும் கொண்ட உயர்திணைப் பெயர்கள் வேற்றுமை, அல்வழி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் இயல்பாகவே புணரும். வருமொழியில், உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் எனும் நான்கு கணமும் வரும்போதும் இதுவே புணர்ச்சி முறை ஆகும். |
(எ-டு) | பாரி + சிரித்தான் > பாரி சிரித்தான் கபிலர் + மகிழ்ந்தார் > கபிலர் மகிழ்ந்தார் அடியேன் + வருவேன் > அடியேன் வருவேன் அவள் + அழகி > அவளழகி | | அல்வழி | கண்ணன் + கடை > கண்ணன் கடை அவன் + வலிமை >அவன் வலிமை அடியேன் + மனம் > அடியேன் மனம் அவன் + அறிவு > அவனறிவு | | வேற்றுமை |
குறிப்பு: தொல்காப்பியர் காலத்தில் தன்மைச் சொற்கள் உயர்திணைச் சொற்களே. பின்னர் வந்த நன்னூலார் தன்மைச் சொற்களை இருதிணைக்கும் பொதுவானவை என வரையறுத்தார். இது நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். | உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும் புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பு என மொழிப. | (தொல். எழுத்து. தொகை. 11) | விதிவிலக்கு | உயர்ணைப் பெயருக்குரிய பொதுவிதியைக் கூறிய தொல்காப்பியர் அதற்கு ஒரு விதி விலக்காகச் சிறப்பு விதி ஒன்றையும் கூறுகின்றார். | உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்கள் இயல்பாகப் புணரும் என மேலே கண்டோம். அவற்றுள் இகர ஈற்று உயர்திணைப் பெயர்களின் புணர்ச்சியில், திரிந்து வரும் இடமும் உண்டு. இத்திரிபு வருமொழி வல்லெழுத்து மிகுவது ஆகும். இது அல்வழி வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வரும். | (எ-டு) நம்பி + கொல்லன் > நம்பிக்கொல்லன் - அல்வழி (நம்பியாகிய கொல்லன் என்பது பொருள்) நம்பி + பேறு > நம்பிப்பேறு - வேற்றுமை (நம்பியினது பேறு என்பது பொருள்) | அவற்றுள் இகர ஈற்றுப் பெயர் திரிபிடன் உடைத்தே. | (தொல். எழுத்து. தொகை. 12) | அல்வழியில் இகர ஈறு அல்லாத வேறு சில ஈறுகளும் வருமொழி வல்லெழுத்து மிகுந்து வரப்பெறும். | (எ-டு) நங்கை + பெண் > நங்கைப்பெண் (நங்கையாகிய பெண்) |
6.2.9 விரவுப் பெயர்களின் புணர்ச்சி | உயர்திணை அஃறிணை இவ்விரண்டு திணையிலும் விரவி வரும் பெயரை விரவுப் பெயர் என்பர். அதாவது இருதிணைக்கும் பொதுவான பெயர். 'மணி' என மனிதனுக்கும் பெயரிடுகிறோம். நாய்க்கும் பெயரிடுகிறோம். மணி வந்தான் எனவும், மணி குரைக்கிறது எனவும் சொல்கிறோம். இவ்வாறு வருவது விரவுப் பெயர். | இத்தகைய விரவுப் பெயர்கள் புணர்ச்சியில் உயர்திணைப் பெயர்கள் போல இயல்பாகப் புணர்வதும் உண்டு; இயல்பின்றித் திரிபு புணர்ச்சியாக வருதலும் உண்டு. | (எ-டு) |
சாத்தன் + கத்தினான் > சாத்தன் கத்தினான் | | இவை அல்வழியில் இயல்பாகப் புணர்ந்தன. | சாத்தன் + கத்திற்று > சாத்தன் கத்திற்று | | (சாத்தன் - ஓர் ஆண்மகனுக்கும் காளைக்கும் இட்ட பெயர்) | (எ-டு) |
சாத்தி + கூந்தல் > சாத்தி கூந்தல் | | இவை வேற்றுமையில் இயல்பாகப் புணர்ந்தன. | சாத்தி + கொம்பு > சாத்தி கொம்பு | (சாத்தி - பெண்ணுக்கும் பசுவுக்கும் இட்டபெயர்) | இயல்பின்றி வரும் புணர்ச்சி புள்ளிமயங்கியலில் விரிவாகக் கூறப்படும். | (எ-டு) சாத்தன் + தந்தை > சாத்தந்தை அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. | (தொல். எழுத்து. தொகை. 13) |
கீழ்க்காணும் தன்மதிப்பீடு வினாக்களுக்கான விடைகளை எழுதிப் பாருங்கள். உங்கள் விடைகளை விடை இணைப்புப் பகுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். |
தன்மதிப்பீடு - 1 : வினாக்கள் | பின்வரும் கூற்றுகள் சரியா தவறா என்று கூறுக. | 1. | தொகைமரபு என்னும் இயல் நிலைமொழியை அடிப்படையாகக் கொண்டே புணர்ச்சியை விளக்குகிறது. | விடை | 2. | மரம் + குறிது > மரங்குறிது - இது அல்வழிப் புணர்ச்சி. | விடை | 3. | நட + கண்ணா > நடகண்ணா, நடக்கண்ணா என இருவகையாகவும் புணரும். | விடை | 4. | மரம் + பெரியது என்பதில் ம் என்பது திரிந்தே புணரும். | விடை | 5. | செய் + நன்றி என்பது செய்ந்நன்றி என்று மட்டும் தான் புணரும். | விடை | 6. | மண் + யாமை என்பது மண்ஞாமை என்று மாறும். | விடை | ஒரு பத்தியளவில் விடை தருக. | 7. | தொகைமரபின் தேவை குறித்து எழுதுக. | விடை | 8. | லகர னகர ஈறுகளின் முன் தகர நகர மெய்கள் வந்து புணர்வது எவ்வாறு? | விடை | 9. | முன்னிலை ஒருமை ஏவல் வினைச்சொற்கள் வருமொழி வல்லெழுத்தாய் வரின் எவ்வாறு புணரும்? | விடை | 10. | உயர்திணைப் பெயர்கள் புணரும் முறையை விளக்கி எழுதுக. | விடை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|