தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016-க்கான வரைவுத் தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் 10 முக்கிய அம்சங்கள்:

கல்வி:

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும். தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

மருத்துவம்:

* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது. புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ தனி நிதியம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.

வேளாண்மை:

* வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது. நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம். தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மது ஒழிப்பு:

* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பாமக ஆட்சி அமைந்தபின் முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில்தான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், கள்ளச்சாரயத்தைத் தடுத்தல், குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

ஊழல் ஒழிப்பு:

* ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். முதல்வரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

காவல்துறை:

* காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சுதந்திரமான காவல் ஆணையம் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும். காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

தொழில்துறை:

* தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதல்வர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார். புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும். புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.

வேலைவாய்ப்பு:

* 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும். இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

ரூ.1 லட்சம் இலவசம்:

* அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம். குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும். சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரவில் தங்குவதற்கான வீடுகள் கட்டித் தரப்படும்.

சமூக நீதியும் இயற்கை வளப் பாதுகாப்பும்:

* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்; அனைத்து கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்படும். கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை