புதன், 23 செப்டம்பர், 2015

உலகின் இளம் வயது தலைமை ஆசிரியர் பாபர் அலி

நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அடங்கிய குழுவொன்று, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஆசிரியர்களின் நிலையை உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர், சாதாரண சட்டை அணிந்து அங்கிருந்த சூழ்நிலையில் இருந்து சற்றே விலகி அமர்ந்திருக்கிறார்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே, மேடைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகின் இளம் வயது தலைமை ஆசிரியர் என்று அறியப்படும் 22 வயதான பாபர் அலி, அங்கிருக்கும் கல்வியாளர்களால் சூழப்படுகிறார். பாபருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் முண்டியடிக்கின்றனர். யார் அந்த பாபர் அலி?

மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத் நகரில் பாப்தா என்னும் பின்தங்கிய கிராமத்தில், எட்டு மாணவர்களுடன் ஒரு பள்ளியை ஆரம்பித்தபோது பாபருக்கு வயது ஒன்பது. இப்போது அதே பள்ளி 10 ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்களுடன், வெற்றி நடைபோடுகிறது. ஆனந்த சிக்‌ஷா நிகேதன் என்ற பெயரின் மேற்கு வங்க அரசின் ஆதரவோடு பள்ளி செயல்பட்டு வருகிறது.

காலையில் மாணவராக பெர்காம்பூர் கிருஷானத் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் பாபர் அலி, மதியம் ஆசிரியராய் பள்ளியில் பாடம் எடுக்கிறார். கல்வியின் தரம் குறித்த தேசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாபர், கற்பித்தலை உன்னதமான தொழிலாகவும், ஈடுபாடாகவும் பார்க்கிறார். விழாவில் அவர் பேசியது

"பள்ளியை ஆரம்பித்தது ஏதோ ஒரு விளையாட்டு போலத்தான் இருக்கிறது. அப்போது எனது சகோதரிக்குக் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து என்னுடைய கிராமத்தில் இருக்கும் சில குழந்தைகளும் கற்றுக்கொள்ள வந்தனர். அப்படித்தான் பள்ளி தொடங்கப்பட்டது.

இப்போது என்னிடம் படித்த ஆறு மாணவர்கள், தங்கள் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு எங்கள் பள்ளியிலேயே வகுப்பெடுக்கின்றனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு பெரிதும் உதவிவருகின்றனர். நன்கொடையாளர்களின் உதவியால், எங்கள் பள்ளிக்கான கனவுக் கட்டிடம் நனவாகப் போகிறது.

கர்நாடக அரசின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பாடப்புத்தகத்தில், என்னைப் பற்றிய பாடம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 90 சதவீதம், கர்நாடகத்தில் இருந்து எனக்கு ஈமெயிலில் வந்த பாராட்டுக் கடிதங்களே" என்றார்.

மாநாட்டில், எல்லோரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றாலும், பாபர் திருப்தி கொள்ளவில்லை. குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் பலர் அவரின் கிராமத்திலேயே இருப்பதாகவும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்னும் இலக்குக்கு தான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்கிறார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக