வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி


அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் மூலம் தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்நில் 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் மூலம் 4லட்சத்து 36 ஆயிரத்து 352 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையை பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்கள் புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை 10 ரூபாய் செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக