ஆண்டு முழுவதும் பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால், பல்வேறு நோய்கள் தலைதூக்கி மக்களை அச்சுறுத்துகின்றன. மழைக்காலத்தில் அபரிமிதமாகப் பெருகும் கொசுக்களால் உண்டாகும் `டெங்கு' காய்ச்சல், இப்போது பரபரத்துக் கிடக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முறைகளையும், நோய் ஏற்பட்டால் அதைப் போக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம்.

தற்காப்பு முறைகள்

"பகல் நேரத்துல கொசு கடிச்சா, கண்டிப்பா அது டெங்குதான்" என அலறுவதும், உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்தாலே, "டெங்கு ஜுரமா இருக்குமோ?" என்று சிலர் பீதியைக் கிளப்பிவிடுவதும், அதிக அசதி காரணமாகக் கை, கால்களில் வலி ஏற்பட்டாலும்கூட, "டெங்கு காய்ச்சலின் அறிகுறியோ?" என மக்கள் மனதுக்குள் புலம்புவதையும் அநேக இடங்களில் பார்க்க முடிகிறது.

டெங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைத்தான் முதலில் தள்ளிவைக்க வேண்டும். டெங்கு ஒன்றும் தீர்க்க முடியாத நோயல்ல. நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு முறைகளாக, நிலவேம்புக் குடிநீரை 30-50 மி.லி. அளவு தினசரி குடித்துவரலாம். நம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது, கொசுக்களை ஒழிக்கத் துளசி, நொச்சிச் செடிகளை வளர்ப்பது, மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவு உண்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சரி, தற்காப்பு முறைகளைத் தாண்டி, டெங்கு, சிக்குன் குனியாவை உண்டாக்கும் 'Aedes aegypti' கொசு கடித்துக் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்? முதல் விஷயம் பயமும் பதற்றமும் வேண்டாம்! ஜுரத்தின் தன்மையைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனையோடு, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலவேம்புக் குடிநீரை, 30-50 மி.லி., குடிக்க வேண்டும். கசப்புச் சுவையைக் குறைக்கச் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்). நிலவேம்புடன், டெங்கு காய்ச்சலைக் கட்டுப் படுத்தப் பப்பாளி , மலை வேம்பு இலைச் சாறுகள் பயன்படுகின்றன.

பப்பாளி இலை சாறு

மருத்துவக் குணங்கள் நிறைந்த பப்பாளிப் பழங்களைப் போலவே, பப்பாளி இலைகளும் மகத்துவம் நிரம்பியவைதான். டெங்கு நோயில் விரைவாகக் குறையும் ரத்தத் தட்டுகள் (Platelets), ரத்த வெள்ளை அணுக்களின் (White blood cells) எண்ணிக்கையை அதிகரிக்கிறது பப்பாளி இலை. அது மட்டுமன்றி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பும் பப்பாளி இலைச் சாற்றுக்கு உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது ஈரல் தேற்றியாகச் செயல்பட்டு, கல்லீரலில் தங்கிய நஞ்சை வெளிப்படுத்தவும் செய்கிறது.

தயாரிக்கும் முறை

பப்பாளி இலைகளை நன்றாகக் கழுவி, மைபோல அரைத்து, சாறு பிழிந்து வடிகட்டி, சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. அளவு கொடுக்கலாம்.

மலைவேம்பு

வேப்பிலையைப் போலவே பல நோய்களை விரட்டும் தன்மை மலை வேம்புக்கும் உண்டு. வேப்பிலை குடும்பத்தை (Meliaceae) சார்ந்த மலைவேப்பிலைக்கு ஜுரம் அகற்றி (Anti-pyretic), புழுக்கொல்லி, சிறுநீர் பெருக்கும் தன்மை உண்டு. குருதியைத் தூய்மை செய்து, உடலில் உள்ள அசுத்தங்களையும் வெளியேற்றும். பப்பாளி இலைச் சாறு தயாரிப்பதைப் போலவே மலை வேப்பிலைச் சாற்றையும் தயாரித்துக் கொள்ளலாம்.

மேலும் சில மருந்துகள்

அத்துடன், ஆடாதொடை இலைச் சாறு 10 துளியெடுத்துத் தேன் கலந்து கொடுத்தால் கோடி ஜுரங்கள், இருமல் அகலும் என்கிறது அகத்தியரின் ஆராய்ச்சி! கை, கால் மூட்டுகளின் வலியைப் போக்க அமுக்கரா சூரணம், வாதகேசரி தைலம் (வெளிப்பிரயோகம்), பிரமானந்த பைரவ மாத்திரை, ஆடாதொடை குடிநீர், தாளிசாதி சூரணம், திரிகடுகு சூரணம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, முதலில் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சிப்போம். `டெங்கு' எனும் பயங்கரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு தனி மனிதனின் கையில்தான் இருக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்குச் சித்த மருந்தின் அளவு

# 12 வயதுக்கு மேல்:

நிலவேம்பு குடிநீர் (30-50 மி.லி.), இரண்டு வேளை

பப்பாளி இலைச் சாறு (10 மி.லி.), இரண்டு வேளை

மலை வேப்பிலைச் சாறு (10 மி.லி.), இரண்டு வேளை

# 12 வயதுக்குக் கீழ்:

12 வயதுக்குக் கீழ் உள்ள குழந் தைகள் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாமா என்பது பலருடைய சந்தேகம். மருத்துவரின் அறிவுரைப்படி வயதுக்கேற்ற அளவு நிச்சயம் அருந்தலாம்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com