சொல்லித்தரும் கல்வி, வெறும் ஏட்டெழுத்துகளாக இல்லாமல், அனுபவக் கல்வியாக இருக்க வேண்டும். அவை மாணவர்களால் விரும்பப்படுவதாக இருக்க வேண்டும்.

மாநில இராதாகிருஷ்ணன் விருது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 'சிகரம் தொட்ட ஆசிரியர்' விருது, ஈரோடு பெண் மருத்துவர் சங்கத்தின் 'சிறந்த ஆசிரியர்' விருது, ராஜாஜி அறக்கட்டளையின் 'காமராசர் நல்லிணக்க விருது' உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆசிரியை வாசுகியின் வார்த்தைகள் இவை. யார் இந்த ஆசிரியர்? என்ன செய்தார் இவர்?

"20 வயதில் எனக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. 1989-ல் மொடக்குறிச்சி வட்டம், ஊஞ்சப்பாளையம் என்னும் ஊரில் என்னுடைய பணியை ஆரம்பித்தேன். அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தார்கள். ஒரு நாள் காலையில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். மாணவன் ஒருவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். என்ன ஆனதென்று அருகில் போய்ப் பார்த்தால், அவனை நாய் கடித்திருந்தது.

வீட்டில் யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா என்று கேட்டேன்.

''அம்மாவும், அப்பாவும் செங்கல் வேலைக்குப் போயிருக்கறாங்க டீச்சர்; சாயந்தரம் வந்து கூலிக்காசுல கூட்டிட்டு போறதா சொல்லிருக்காங்க" என்றான்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடனடியாகத் தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அடிப்படை மருத்துவம்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்த சிறுவனின் நிலை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில மாதங்களிலேயே, தாராபுரம் அருகிலுள்ள முண்டுவேலம்பட்டி என்னும் ஊருக்கு மாற்றலானேன். அங்கிருந்த பள்ளிக்குச் செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து வசதியே இல்லை. தினமும் காலையிலும், மாலையிலும் 5 கி.மீ. நடந்தே செல்வேன். ஒரு முறை அங்கிருந்த டீக்கடை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அங்கிருந்த ஆறு வயதுச் சிறுவன் தினமும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஸ்கூலுக்குப் போகவில்லையா என்று கேட்டதற்கு, அவனின் பெற்றோர், ''பக்கத்துல ஸ்கூல் இல்லை; நேரமிருந்தால் தொலைவில் இருக்கும் பள்ளியில் கொண்டுபோய் விடுவோம்'' என்றனர்.

நான் தினமும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். என்னுடன் வா என்று அச்சிறுவனை அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். சிறுவன் என்பதால் இடுப்பில் வைத்துக்கொண்டு தினமும் காலையிலும், மாலையிலும் கரும்புக்காடு வழியாக செல்வேன். அந்த அனுபவமும், தைரியமும்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்".

செயல்வழிக் கற்றலின் தொடக்கம்

முண்டுவேலம்பட்டியில் ஐந்து வருடம் வேலை பார்த்த ஆசிரியை வாசுகி, அடுத்ததாக சலங்கபாளையும் என்னும் ஊருக்கு மாற்றலானார். அங்கு சமூக அறிவியல் சொல்லிக்கொடுத்தவர் வரலாறு, குடிமையியலில் மாணவர்களுக்கு குறைவான ஆர்வமே இருந்ததை உணர்ந்தார். பாடம் தொடர்பான செயல்பாடுகளை செய்துவரச் சொன்னவர், அதற்கெனத் தனியாக மதிப்பெண்கள் கொடுத்தார். இது படிக்காமல் இருந்தவர்களையும் செயல்பாடுகளில் ஈடுபடத் தூண்டியிருக்கிறது. அரசால் தொடங்கப்பட்ட செயல்வழிக் கற்றலின் முன்னோட்டமாகவும் இருந்திருக்கிறது.

2009-ல் பவானி ஒன்றியத்தில் உள்ள கே.ராமநாதபுரம் என்னும் ஊருக்கு மாற்றல் கிடைத்தது. தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என்று இரண்டு பேர் மட்டுமே கொண்ட பள்ளி அது. நிறைய மாற்றங்களும் வசதிகளும், தேவைப்படும் நிலையில் இருந்தது. எதுவும் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று சுத்தம் உள்ளிட்ட எல்லா வேலைகளிலும் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினேன். என்னைப்பார்த்து மாணவர்கள் பின்பற்ற, சிறிய வகுப்புக் குழந்தைகள் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். நாளாக நாளாக பள்ளி, சுத்தமாக இருக்கத் தொடங்கியது. நீங்கள் சல்லடை போட்டுத் தேடினாலும், எங்கள் பள்ளியில் ஒரு காகித உருண்டை கூடக் கிடைக்காது.

என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்

மாணவர்களிடம் படிப்பும், ஒழுக்கமும் வந்துவிட்டது. இனி உதவும் மனப்பான்மையும் வளர வேண்டும் என்று தோன்றியது. வகுப்பில் சிறுமியொருத்தி, ''நாம உண்டியல் வெக்கலாமா டீச்சர், அதுல தினசரி பணம் சேர்த்து இல்லாதவங்களுக்குக் கொடுக்கலாம்'' என்றாள். நல்ல யோசனை என்பதால் உடனடியாக செயல்படுத்த ஆரம்பித்தோம். தினமும் பிரேயர் முடிந்ததும் வகுப்பு தலைவன், 'உதவி செய்ய வாருங்கள் தோழர்களே!' என்று கூப்பிடுவான். விருப்பப்பட்டு வீட்டிலிருந்து பணம் கொண்டு வரும் குழந்தைகள் முன்னால் வந்து, ''என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்'' என்று சொல்லி உண்டியலில் காசு போடுவார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அனைவரும் கைதட்டுவோம்.

அடுத்ததாக, 'நான் செய்த உதவி!'. ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பு மாணவர் வந்து, 'நான் செய்த உதவி!' என்று சொல்லி அவர் செய்த உதவியைச் சொல்ல வேண்டும். அது என்ன மாதிரியான உதவியாக வேண்டுமானாலும் இருக்கலாம். தன் அப்பாவுக்கு கண் கண்ணாடியை எடுத்துத் தந்திருக்கலாம். பக்கத்து வீட்டு பாட்டிக்கு, ஒரு மாத்திரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். உதவியின் அளவை நாங்கள் பார்ப்பதில்லை. அதைச் செய்வதற்கான மனதைத்தான் வளர்க்க ஆசைப்படுகிறோம்.

ஆண்டுக்கு ஒரு முறை, உண்டியலில் ஓரளவுக்கு நிதி சேர்ந்த பிறகு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குழந்தையை அழைத்துச் சென்று, இல்லத்தில் கேட்பதை வாங்கிக் கொடுக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாநகராட்சிப் பள்ளி மாணவன் அருண், கணினி வாங்குவதற்குப் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக அறிந்து, உண்டியல் பணத்தோடு கொஞ்சம் பணத்தைச் சேர்த்து, சென்னைக்கு வந்து அருணிடம் கொடுத்தார் ஆசிரியை வாசுகி.

"இது சாதாரண காசில்லை; ஏழை மாணவர்களால் சேர்க்கப்பட்ட பணம். இது ஏழை மாணவனுக்குத்தான் போய்ச்சேரணும்" என்ற வார்த்தைகளைக் கேட்ட சிறுவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருக்கிறது. "கண்டிப்பா நல்லவிதமா பயன்படுத்துவேன் டீச்சர்" என்று கூறிய அருண், இன்று அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக கணினி கற்றுக் கொடுக்கிறான் என்கிறார் ஆசிரியை வாசுகி.

எதிர்கால ஆசைகள்

''அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும். இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், அவர்களுக்கு என்ன வருகிறதோ, அதை வளர்த்துகொள்ளக் கற்றுக்கொடுக்கிறேன்.

இருபத்தைந்து ஆண்டுப் பணிக்குப் பின்னரும், மாணவர்களின் மீதான என்னுடைய செயலாராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நகரத்துக்கு இணையாக, கிராமக் குழந்தைகளுக்கும் புதுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். சொல்ல மறந்துவிட்டேனே,

முண்டுவேலம்பட்டி பள்ளியில் நான் தூக்கிக்கொண்டு நடந்த மாணவர் இன்று சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் தவறாமல் என்னிடம் போன் பேசுவது அவரின் வழக்கம். என் வீட்டில் இருப்பவர்களிடமும் பேசுபவர், அவர்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ''எங்க டீச்சர பத்திரமா பாத்துக்குங்க!".