இது நடந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருக்கும். சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் கொஞ்சம் மக்கள் ஏறினார்கள். மத்திய வயதுடைய ஒரு பெண் எனது இருக்கை அருகே வந்து நின்றார். பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துனர் இவர் அருகே வந்தார்.
'எங்க போகணும்?'
'உளுந்தூர்பேட்டை'
'எத்தன?'
'வெறும் ஆயிரத்தி நூத்திப் பத்துதாம்பா'
'என்னம்மா, என்ன பேசற நீ. பிரவேட்காரன் திட்டுற அளவுக்கு ஏத்தினாலும் 110 டிக்கட் கூட ஏத்த முடியாது. அவ்ளோ ஏன், உங்க ஊருக்கான காசுக்கு ஏங்கிட்ட 200 டிக்கட்கூட தேறாது. நான் எப்படி ஆயிரத்தி நூத்திப் பத்து டிக்கட் தருவேன்.'
'அய்யோ, ஒரு டிக்கட்தாம்பா. அத்தனைய வாங்கிட்டு போய் நான் வென்ன வறுத்தா தின்னப் போறேன்,' என்று நிதானத்துக்கு வந்தார். 'லட்ச லட்சமா கொட்டி படிக்க வச்சா இந்த எடுபட்ட பயப்புள்ள ஒன்னுத்துக்கும் ஒதவாத ஆயிரத்தி நூத்தி பத்து மார்க்கு எடுத்திருக்கு' என்றவாறே கிட்டத்தட்ட உளுந்தூர்பேட்டை வரும்வரைக்கும் பிள்ளையை வறுத்துக் கொண்டே வந்தார்.
லட்ச லட்சமாய் செலவு செய்து ஏதோ ஒரு பெரிய பள்ளியில் தனது மகனை சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். அவன் அப்போது நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண் பெற்றிருக்கிறான். இந்தத் தாய் ஆயிரத்தி நூற்றி தொண்ணூறு மதிப்பெண்ணாவது தனது பிள்ளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பைவிட குறைந்து போகவே இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டாது என்பதை கேட்டறிந்திருக்கிறார். அதுதான் பேருந்தில் நடத்துனர் பயணச்சீட்டு எத்தனை என்று கேட்டாலும் பிள்ளை பெற்ற மதிப்பெண்ணை உளறுகிற நிலைக்கு வந்திருக்கிறார்.
இப்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.
முதலில் ஆயிரத்தி நூற்றி பத்து என்பது அந்தத் தாய் இந்த அளவிற்கு புலம்புமளவிற்கு குறைந்த மதிப்பெண்தானா?
காசக் கொட்டி ஏதோ ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால் பிள்ளை தான் விரும்பும் மதிப்பெண் எடுத்துவிட வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு நியாயம்தானா?
ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணே குறைவு என்பதாக ஏற்பட்டிருக்கக்கூடிய பொதுப்புத்தி எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண். ஆக, அந்தக் குழந்தை ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறான். ஆயிரத்தி நூற்றி பத்து என்பது 92.5 விழுக்காடு வருகிறது. அதுவும் கட் ஆஃப் பாடங்களில் அந்தக் குழந்தையின் மதிப்பெண் சதவிகிதம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.
நிச்சயமாக இது அந்தப் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டிய அளவிற்கு உரிய மதிப்பெண்தான். இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கும் பிள்ளையைக் கொண்டாட மறுப்பதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் இதை குறை சொல்லுவதை கண்டிப்பாக குற்றமாகக் கொள்ள வேண்டும். தொண்ணூற்றி மூன்று விழுக்காடு மதிப்பெண்ணை அவ்வளவாக படிக்காத ஒரு தாய் குறைவென்று பொதுவெளியில் சொல்லுமளவிற்கு பொதுநிலை வந்திருப்பது கல்வி சிறந்து செழித்து வளர்ந்திருப்பதன் அடையாளம் அல்ல.
பொதுவாகவே தனது குழந்தையை எந்தத் தாயும் இது விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் தனது மகன் பெற்ற மதிப்பெண்ணோடு கொஞ்சம் சேர்த்து சொல்வார். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்தான் பெற்றேன். ஆனால் என் அம்மா எங்கள் தெருவில் உள்ளவர்களிடம் நான் எழுநூற்றி ஐம்பது பெற்றதாக சொல்லி பெருமை பட்டுக் கொண்டார். அப்படியே சொல்ல வேண்டும் என்று என்னிடமும் அப்பாவிடமும் கூறினார். அப்பாவிற்கு அதில் எல்லாம் உடன்பாடில்லை. அதில் எனக்குத்தான் பெரிய சிக்கல். யாரேனும் என்னப்பா மார்க்கு என்றால் எதை சொல்வது என்று குழம்புவேன். அறுநூற்றி எழுபத்தி ஐந்து என்று உண்மையை சொன்னால் 'ஏம்பா அம்மா ஏதோ எழுநூற்றி ஐம்பதுன்னு சொல்லுது நீ அறுநூத்தி எழுபத்தஞ்சுங்கற' என்பார்கள். எழுநூற்றி ஐம்பது என்றால் சிலர் ,'ஏம்பா உங்கப்பா அறுநூத்தி எழுபத்தி அஞ்சுங்கறாரு, நீ என்னடான்னா எழுநூத்தி ஐம்பதுங்கற' என்பார்கள். ஒருகட்டத்தில் என் மதிப்பெண் எது என்பதில் எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
ஆனால் அறுநூத்தி எழுபத்தி ஐந்தே மிகக் கௌரவமான மதிப்பெண்ணாகவே கொள்ளப்பட்டது. ஏன் இந்தத் தாய் இப்படிப் புலம்புகிறார். நான் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்ணிற்கு அந்தக் காலத்தில் எளிதாக கல்லூரியில் இடம் கிடைத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆயிரத்து முப்பது மதிப்பெண் பெற்ற எனது மனைவியின் அக்கா பெண்ணிற்கு இளங்கலை ஆங்கில இலக்கியம் கிடைப்பதில் பெருமளவு சிரமம் இருந்தது.
இதை இப்படிப் பார்ப்போம். அந்தக் காலத்தில் 175 மதிப்பெண் கட் ஆஃப் இருந்தால் மருத்துவம் கிடைத்தது. இப்போது 198 ற்கு கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. ஆக, 175 கட் ஆஃப்பிற்கு கிடைத்த மருத்துவ படிப்பு இப்போது 199 ற்கு கிடைக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்த தங்கம் இப்போது இருபத்தி ஆறாயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலையும் ஏறியிருக்கிறது கல்லூரிக்கான கட் ஆஃப் கூடியிருக்கிறது. இதை இப்படியாக பொருத்திப் பார்க்கிற அளவிற்கு போயிருப்பதே கூட கல்வி சந்தை பட்டிருப்பதன் அடையாளம்தான்.
'லட்ச லட்சமா காசக் கொட்டி நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டோம்' என்கிற பொதுப் புலம்பல் 'எது இவர்கள் பள்ளியில் நல்ல பள்ளி?' என்ற ஒரு கேள்வியை நம் முன்னே வைக்கிறது.
'என் பள்ளி ஒருபோதும் என் கல்வியில் தலையிடாதவாறு நான் பார்த்துக் கொண்டேன்' என்று ஒரு முறை மார்க் ட்வைன் கூறினார். இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு அபத்தமான கூற்றாகத் தெரியும். கல்வியைக் கொடுப்பதே பள்ளிதானே? அது எப்படி ஒரு குழந்தையின் கல்வியில் தலையிடாமல் இருக்க முடியும்? என்று தோன்றும். உண்மையில் ஒரு நல்ல பள்ளி என்பது கல்வியைக் கொடுக்கக் கூடாது. மாறாக குழந்தை தனது கல்வியை எடுத்துக் கொள்வதற்குரிய சூழலை வாய்ப்புகளை அது அந்தக் குழந்தைக்கு கொடுக்கும்.
இந்த மோசமான மாற்றம் எப்படி தொடங்கியது எனில் பாடத் திட்டம்தான் கல்வி. அந்தப் பாடத் திட்டத்தில் தேறுவதான் தேர்ச்சி. இதை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்று எந்தப் புள்ளியில் தொடங்கியதோ அந்தப் புள்ளியில் மத்திப்பெண்ணே கல்வியின் அளவுகோளாக மாறியது.
நான் துவக்கப் பள்ளியில் படிக்கிறபோது பாடப் புத்தகங்கள் ஒரே மாதிரி இல்லை. தனியார் தயாரித்த பாடப் புத்தகங்கள் இருந்தன. அப்போது மாவட்டத்திற்கு மாவட்டம் புத்தகம் மாறும். உள்ளூர் குறித்த பாடங்கள் அவற்றில் நிறைந்திருந்தன. என் கிராமம் பற்றிய வரலாறு மற்றும் புவியியல் சார்ந்து என்னால் படிக்க முடிந்தது.
அந்தக் காலத்தில் கல்வியின் விளைவாக ஒழுக்கமும் பண்பாடும் எதிர்பார்க்கப்பட்டது. 'படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோன்னு போவான்' என்று பாரதி சொன்னான். பாவம் செய்யாமை படித்தவன் அடையாளமாக இருந்த காலம் மாறி காரும், நகையும், ஏசியோடு கூடிய பங்களாவும், மின்ணனு சாதனங்களுமே படித்தவனின் அடையாளமாகிப் போயின.
'சமச்சீர் கல்வி' என்பதுகூட ஒரே பாடப்புத்தகத்தை படிப்பது என்று சுருங்கிப் போனது. கல்வி பொதுப் படவேண்டும். அது சமப்பட வேண்டும். ஆனால் அது மண் சார்ந்தும் (NATIVITY) படைப்புத் திறன் (CREATIVITI) சார்ந்தும் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவிற்கான சமச்சீருக்கே இந்த அளவிற்கு போராட வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் எந்தப் பள்ளி பொதுத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறதோ அந்தப் பள்ளி நல்ல பள்ளியாக கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியை நோக்கி பெற்ரோர்கள் குவியத் தொடங்கினார்கள். இது ஒருவிதமான போட்டியை பள்ளிகளுக்கிடையே ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போட்டியானது நல்லதை சொல்லித் தருவதில் ஏற்படவில்லை. எதை சொல்லிக் கொடுத்தால் எல்லோரையும் தேர்ச்சிபெற வைக்க முடியும் என்று பள்ளிகள் யோசிக்க ஆரம்பித்தன. போட்டி அதிகரித்த பொழுது எதைமட்டும் சொல்லிக் கொடுத்தால் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் கல்வி தனது மேன்மையான சுயத்தை இழக்க ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் ஏறத்தாழ எல்லாப் பள்ளிகளும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி விழுக்காடு கொடுக்க ஆரம்பித்தவுடன், அவர்களது கவனம் மதிப்பெண்ணில் விழுந்தது. இங்கும் அவர்களது சூத்திரம் ஒன்றாகவே இருந்தது. எவற்றை மட்டும் நடத்தினால் நூறு விழுக்காடு தேர்ச்சி சதவிகிதம் என்பது மாறி, எதை மட்டும் நடத்தினால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள்.
இப்போதுதான் ப்ளூப்ரிண்ட் (BLUE PRINT) மாணவர்களிடம் புழக்கத்திற்கு வந்தது. இப்போது அதை வகுப்பறை சுவர்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவே போடுகிறார்கள். இப்போது மதிப்பெண் இல்லாத பாடத்தை படிக்கிற மாணவர்களை 'ஏண்டா தேவையில்லாதத்யெல்லாம் படிக்கிற' என்று கோவைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதற்காக பிள்ளைகளை கடிந்து கொள்கிறார்கள். சிலர் தண்டனையே தருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் 'எங்கள் பள்ளியில் இருந்து இத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும், பொரியியல் படிப்பிற்கும் சேர்ந்திருக்கிறார்கள்' என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தினார்கள். இத்தகைய விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண் மீதிருந்த கவர்ச்சியை மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அப்புறப்படுத்தின. மருத்துவம் படிக்க ஆசைப்படுபவனுக்கு ஏன் கணிதத்தை படிக்க வைத்துக் கொண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் எண்பது மதிப்பெண் அளவிற்கு தயார் செய்துவிட்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் இருநூறுக்கு இருநூறு எடுக்குமாறு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ 900 மதிப்பெண்களுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற ஒரு குழந்தை முதல் கட்ட நேர்காணலிலேயே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க முடிந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவள் 600 மதிப்பெண் எடுத்திருந்தாள். மற்ற மூன்று பாடங்களிலும் அவள் 300 கும் குறைவாகவே எடுத்திருந்தாள்.
புத்திசாலித்தனமாகப் பார்க்கப்படும் இந்தப் போக்கு கல்வியை வெகுவாக சீரழிக்கும். கல்வியை வெகுவானதொரு சூதாட்டமாக கொண்டு சேர்க்கும். இது எதிர்கால சமூகத்தை பாழ்படுத்தும்.
அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தன. இப்போது அவர்களும் இந்த சூத்திரத்தை முடிந்த அளவு கைகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர்30 என்கிற பள்ளிகளை மாவட்ட ஆட்சியர்களே பல மாவட்டங்களில் ஆரம்பித்து விட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களுக்கு தனியாக வசதிகள் செய்து தந்து அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களிலிருந்து மதிப்பெண் பெருவதை மட்டுமே சொல்லித் தருகிறார்கள்.
ஒரு தவறுக்கு தீர்வாக அதே தவறு என்பது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.
ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணை குறைவென்று ஏசத் தொடங்கியிருக்கிறார்கள் பெற்றோர். இந்த நிலை தொடர்ந்தால் இந்த மதிப்பெண்ணிற்காக மாணவர்களை தண்டிக்கத் தொடங்குவார்கள்.
இப்போது வியப்பாகக் கூட இருக்கலாம். நடக்காது என்று சொல்வதிற்கில்லை. இதே சூழல் நீடிக்குமானால் ஒரு காலத்தில் ஆயிரத்தி நூற்றி எழுபது மதிப்பெண் எடுத்த தனது குழந்தையை மதிப்பெண் குறைவென்று அவனது தாயே கொலை செய்யக்கூடும்.
அதற்குள் விழிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக