சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இப்போதே தொடங்க வேண்டும் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய தொழில்நுட்பக்
கல்வி நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(NITs)
உள்ளிட்ட மத்திய உயர் கல்வி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, வரும் 1ஆம் தேதி
முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே
இந்த முறையும் தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள 22 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரம் இடங்களில் சேர்ப்பதற்காக 31 ஆயிரம்
மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஐ.ஐ.டிக்களில்
சேர்க்கப்படும் 10,000 பேர் தவிர மீதமுள்ளவர்கள் என்.ஐ.டி.க்கள்,
இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) உள்ளிட்ட உயர்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள்.
ஐ.ஐ.டி.க்களில் சேர்ப்பதற்காக முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
31,000 மாணவர்களில் வெறும் 60 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு மாநிலப்
பாடத்திட்டத்தைப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட 12 மாநிலப் பாடத் திட்டங்களில்
தமிழகப் பாடத்திட்டம் தான் 0.2% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப்
பிடித்திருக்கிறது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 60 மாணவர்களில்
எத்தனை பேருக்கு ஐ.ஐ.டிக்களில் சேர இடம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 33 பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் சேர
முடிந்தது. இம்முறை கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ள போதிலும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கடந்த
ஆண்டை விட குறைந்த மாணவர்கள் தான் ஐ.ஐ.டியில் சேரமுடியும். தமிழ்நாடு
மாநிலப்பாடத்திட்டத்தின் தகுதி அந்த அளவில் தான் உள்ளது.
அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்ட (சி.பி.எஸ்.இ)
மாணவர்கள் 53% அளவுக்கு, அதாவது 16,430 பேர் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி
பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 2293
பேரும்(7.7%), மராட்டியப் பாடத்திட்ட மாணவர்களில் 2077(6.7%) பேரும்,
ராஜஸ்தான் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களில் 2015(6.5) பேரும், ஆந்திர மாநில
பாடத்திட்ட மாணவர்களில் 1307 (4.21%) பேரும் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி
பெற்றுள்ளனர்.
மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் பிஹார் மாநிலப்
பாடத் திட்டத்திலிருந்து கூட 900 மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், பிஹார் மாநிலப் பாடத்திட்டத்தை விட 15
மடங்கு குறைவானத் தேர்ச்சியையே தமிழகப் பாடத்திட்டம் பெற்றிருக்கிறது
என்பதிலிருந்தே அப்பாடத் திட்டம் எந்த அளவுக்கு தகுதி குறைவானதாக
இருக்கும் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு மாநிலப்
பாடத்திட்டத்தில் படித்து ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுக்கு தேர்ச்சி
பெற்றவர்களை விட அதிக எண்ணிக்கையில் மத்திய இடைநிலை கல்வி வாரியப்
பாடத்திட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால், ஆந்திரம்,
தெலுங்கானாவில் மட்டும் சி.பி.எஸ்.இ. மாணவர்களை விட, மாநிலப்பாடத்திட்ட
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு மாநிலங்களிலும்
சேர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் 130 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள
நிலையில், 3600 மாநிலப்பாடத்திட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ள
நிலையில், அவர்களில் சுமார் 10% மாணவர்கள் மட்டுமே தமிழகப்
பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றிருப்பது பெருமைக்குரியதல்ல.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில்
போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போவதற்கு ஏராளமான காரணங்களைக் கூற
முடியும் என்றாலும், மாநிலப் பாடத்திட்டம் சிந்திக்கும் திறனை தூண்டுவதாக
இல்லாமல் மனப்பாடத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது தான் முதன்மையான
காரணம் ஆகும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கப்பட்டால்
அதிலிருந்து எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வினாக்கள் எழுப்பப்படும்;
அந்த வினாக்களுக்கு மாணவர்களும் சளைக்காமல் பதில் எழுதுவார்கள். ஆனால்,
மாநிலப் பாடத்திட்டத்தில் புத்தகத்தில் ஒரு வினா எப்படித்
தரப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து ஒரு வார்த்தையை மாற்றி கேட்டால் கூட
அதற்கு மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இப்படி ஒரு பாடத்திட்டத்தை
வைத்துக்கொண்டு இன்னும் நூறு ஆண்டுகள் ஆனால் கூட தேசிய அளவிலான
நுழைவுத்தேர்வுகளில் வெல்லமுடியாது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி
பெறும் வகையில் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க
வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக அரசு
அதை கண்டுகொள்வதில்லை.
அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அனைத்து கல்வி
நிறுவனங்களிலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET)
கட்டாயமாக்கப் படுவது உறுதியாகிவிட்டது. பொறியியல் படிப்புகளுக்கும் பொது
நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படலாம் என்று கூறப்படுவதால், அதை எதிர்கொள்ள
வசதியாக சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்கி
அறிமுகப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். எனவே, அதற்காக ஏற்பாடுகளை
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இப்போதே தொடங்க வேண்டும்'' என்று
ராமதாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக