வாழ்க்கை பொய்யாய் பழங்கனவாய்க் கதையாய் மெல்லப் போனதுவே என்று சொன்ன மகாகவி பாரதியே கனவு மெய்ப்பட வேண்டும் என்றும் உலகமெல்லாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் என்றும் பாடினான். இளைஞர்களை நோக்கிக் கனவு காணுங்கள் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இப்படிக் கனவுகளைப் பற்றிப் பலர் பல விதமாய் பேசினாலும், பல கனவுகள் அறிவியல் உலகில் வரலாறு படைத்ததுண்டு என்றால் நம்ப முடியுமா?
பென்சீனின் (Benzene) அணுக்கூற்றின் வடிவத்தை (molecule structure) கண்டுபிடிக்க முடியாமல் பல நாள் திண்டாடினார் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் ப்ரெட்ரிச் கெகுலெ வான் ச்ட்ரானிச் (Fredrich Kekule). ஒரு நாள் குதிரை பூட்டிய வண்டியில் இதைப் பற்றிய சிந்தனையிலேயே அவர் தூங்கிவிட்டார். அந்தத் தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு பாம்பு தன் வாலைத் தானே கடிப்பதாக அவர் கண்டார். அப்படி கடிக்கும் போது ஏற்பட்ட ஒரு வளையம், அணுக்கூட்டச் சங்கிலியாக மாறி ஒரு சுற்றும் வளையமாக (Rotating ring) உருமாறியது. உடனே, அந்த விஞ்ஞானி தூக்கிவாரிப் போட்டு எழுந்தார். பென்சீனின் அணுக்கூற்றின் வடிவம் கார்பன் அணுக்களின் அறுகோணம் (Hexagonal Shape) என்பதை அவர் உணர்ந்தார்.
நரம்பு அதிர்வுகள் (Nerve impulses) எப்படி இரசாயன முறையில் பயணிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓட்டோ லூயி (Otto Loewi) என்னும் விஞ்ஞானி படாத பாடுபட்டார். ஒரு நாள் கனவில் அவருக்கு விடை கிடைத்தது. உடனே, தூக்கக் கலக்கத்திலேயே அவர் அதை எழுதிவிட்டு மறுபடியும் உறங்கி விட்டார். துரதிருஷ்டவசமாக அவர் எழுந்ததும், அவர் எழுதியதை அவராலேயே படிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் அவர் தூங்கப் போனார். தூக்கத்தில் கனவு தொடர்ந்தது. இம்முறை கவனமாக கனவில் கண்டதை அவர் தனது ஏட்டில் குறித்துக் கொண்டார். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மை, அந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை அவருக்கு பெற்றுத் தந்தது.
இன்றைய நவீன தையல் இயந்திரத்தை அறியாதவர் இருக்க முடியாது. ஆனால், அதை கண்டு பிடித்தவரையும், அவர் அதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு கனவே காரணம் என்பதையும் எத்தனை பேர் அறிவார்கள் 1846 இல் இலியாஸ் ஹோ (Elias howe) தையல் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதற்கு மிகப் பாடுபட்டார். அவர் உருவாக்கிய இயந்திரம் முழுமை அடையாமல் அவரைக் கவலைக்குள்ளாக்கியது. அப்போது ஒரு நாள் அவர் ஓர் கனவு கண்டார். அந்தக் கனவில் சில காட்டுமிராண்டிகள் அவரை அவர்களது அரசனிடம் கொண்டு செல்கின்றனர். அந்த நர மாமிசிகளின் அரசன் ஒரு உத்தரவு இடுகிறான் - இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு தையல் இயந்திரத்தை இவன் உருவாக்கவில்லையானால், இவனை ஈட்டிகளால் கொன்று விடுங்கள். 24 மணி நேரத்திற்குள் அவரால் தையல் இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. எனவே, அரசனுடைய ஆணைப்படி அவர் கொலைக் களத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே அவரை கீழே தள்ளிக் காட்டு மிராண்டிகள் ஈட்டிகளைத் தூக்கி அவரை குத்த வருகின்றனர். படுத்த நிலையிலிருந்து தன்னை நோக்கி பாய்ந்து வரும் ஈட்டிகளையும், அந்த ஈட்டிகளின் முனையில் கண் போன்ற ஓட்டை அமைந்திருப்பதையும் பார்த்த அந்த விஞ்ஞானிக்குத் தெளிவு பிறந்து விடுகிறது. அவருக்கு தெளிவு பிறந்ததும், கனவும் தூக்கமும் கலைந்து தன் சோதனைச் சாலையை நோக்கி ஓடுகிறார். ஈட்டியின் முனையில் உள்ள கண் போன்ற ஓட்டையின் வடிவத்தில், தையல் இயந்திரத்தின் ஊசியில் ஒரு கண் போன்ற ஓட்டை வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அப்படி வடிவமைக்கும் போது துணியை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கி வரும் ஊசி தையல் வேலையை அழகாகச் செய்யும் என்றும் கண்டுபிடித்தார் அவர்.
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் (James Watt) என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரே தான் துப்பாக்கி ரவைகளையும் எளிய முறையில் உருவாக்கினார். அது வரை துப்பாக்கி ரவைகளுக்கான ஈயக் குண்டுகள் வெட்டியும் தட்டியும் அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருந்தன. எளிய முறையில் குறைந்த பொருட்செலவில் இந்த ஈயக் குண்டுகளை எப்படி உருவாக்குவது என்று ஜேம்ஸ் வாட் கவலையில் இருந்த போது ஒரு நாள் தூக்கத்தில் அவர் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில், அவர் மழையில் நனைகிறார். திடீரென்று அவர் மேல் விழும் மழைத்துளிகள் ஈயக் குண்டுகளாக மாறுகின்றன. தன் மேல் தொடர்ச்சியாக வந்து விழும் ஈயக் குண்டு மழையில் நனைந்து கொண்டே வந்த ஜேம்ஸ் வாட் திடீரென்று கண் விழித்தார். உருக்கப் பட்ட ஈயம் மேலிருந்து கீழாக விழும் போது காற்றில் சூட்டை இழந்து இறுகிப் போய் குண்டுகளாக மாறும் என்று அவர் உணர்ந்தார். உடனடியாக அவர் அருகிலிருந்த சர்ச்சுக்குப் போய் உருக்கிய ஈயத்தை மணிக்கூண்டிலிருந்து கீழே ஊற்றினார். சர்ச்சை சுற்றி இருந்த அகழியில் உள்ள தண்ணீரில் சின்னஞ்சிறு துளிகளாக விழுந்த ஈயக் காய்ச்சல், இறுகிப் போய் குண்டுகளாக மாறின. இந்த கண்டுபிடிப்பு, துப்பாக்கி ரவைத் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
கனவுகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே உதவியிருக்கின்றனவா என்று பார்த்தால், கலை, இலக்கியம் மற்றும் இசை இவற்றுக்கும் கனவுகள் உதவியிருக்கின்றன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.
லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் எகிப்திய தொல்பொருள் கூடத்தின் காப்பாளரும், கீழை நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் வல்லுநராகவும் விளங்கிய சர் எர்னஸ்ட் வால்லிஸ் பட்ஜ் (Sir Ernest Wallis Budge) என்பவருடைய வாழ்க்கை திசை மாறியதும் அவர் உலகப் புகழ் பெறக் காரணமாக இருந்ததும், ஒரு கனவால் தான் என்றால் நம்ப முடியுமா?
கீழை நாட்டு மொழியியலில் (oriental languages) அடுத்த நாள் தேர்வு. அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் எர்னஸ்ட் வால்லிஸ் பட்ஜ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகலாம். ஆனால், கடுமையான உழைப்புக்குப் பின் மனச்சோர்வடைந்து போய் தன்னால் இது சாத்தியமில்லை என்று பட்ஜ் அயர்ந்து தூங்கி விடுகிறார். தூக்கத்தில் ஒரு கனவு. அக்கனவில், அவர் தனியாக ஒரு கொட்டகையில் குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது ஓர் ஆசிரியர் உள்ளே வந்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை எடுத்து பட்ஜ்ஜிடம் கொடுக்கிறார். அதில் சில கேள்வித் தாள்கள் இருக்கின்றன. இதே கனவு மூன்று முறை அவருக்கு வருகிறது. எனவே கண் விழித்து அவர் கனவில் வந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டும் படித்துக் கொள்கிறார். அடுத்த நாள் தேர்வு அறைக்குள் நுழைகிறார். அங்கு இடமில்லை என்று சொல்லி, ஆசிரியர் அவரை ஒரு கொட்டகையில் கொண்டு போய் அமரச் செய்கின்றார். மங்கிய ஒளியில் அமைந்த அந்தக் கொட்டகை, கனவில் வந்த கொட்டகையைப் போலவே இருக்கிறது. ஆச்சரியப்பட்டுப் போய் அவர் கேள்வித்தாளைப் பிரிக்கிறார். கனவில் கண்ட அதே கேள்வித்தாள் தான் நனவிலும். தேர்வில் தேர்ச்சி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகி, பின்னர் எகிப்தியர்களின் அமரர் நூல் (Egyptian Book of the Dead) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், ஹீரோக்ளிபிகல் சொல்லகராதி (Hieroglyphical Dictionary) என்னும் நூலை எழுதியும் உலகப் புகழ் பெற்றார்.
கனவுகளால் தூக்கம் கெட்டுப் போவதை நாம் அறிவோம். ஆனால், கனவுகளால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததையும், வாழ்க்கையின் போக்கு திசை மாறிப் போனதையும் நாம் என்னவென்பது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக