வெள்ளி, 17 ஜூன், 2016

பல நடப்புகளை முன் கூட்டியே மிகச் சரியாகக் கணித்த ஜீன் டிக்சன்

1952-ல் ஒரு நாள் சர்ச்சில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது ஜீன் டிக்சன்  என்ற பெண்மணிக்கு ஒரு காட்சி தோன்றுகிறது. அக்காட்சியில் 1960-இல் அமெரிக்காவின்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உயரமான, நீல நிறக் கண்களை உடைய ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே கொல்லப்படுவதாகத் தோன்றுகிறது.

1960-இல் ஜான் கென்னடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஜீன் டிக்சன் தன் கையிலுள்ள கண்ணாடி உருண்டையை (Crystal Ball) நோக்கும் போதெல்லாம், அதில் ஜனாதிபதியின்  வெள்ளை மாளிகையைக் கரு மேகங்கள் சூழ்வதாகக் கண்டார்.

1963-ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையைச் சூழ்ந்த கரு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்குவதைக் கவனித்து ஜீன் டிக்சன் கவலை கொண்டார். ஜான் கென்னடியின் நண்பரான சாமுவேல்  ஹேல் என்னும் க்ளீவ்லேண்ட் மாநில தனவந்தரின் மகள் கே ஹேல் என்பவரிடம் ஜீன் டிக்சன் மெதுவாகத் தன் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி ஜனாதிபதி தற்போது தென் மாவட்டங்களுக்குச்  செல்லவிருப்பதாக நான் அறிகிறேன். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். ஆனால், ஜான் கென்னடியின் குடும்பத்திற்கு இப்படிப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை  இல்லை என்பது கே ஹேலுக்குத் தெரியும். எனவே, அவரால் இவ்விஷயத்தை ஜனாதிபதியிடம் சொல்ல முடியவில்லை.

1963, நவம்பர் 22-ஆம் தேதி ஜனாதிபதியும், அவர் மனைவியும் டல்லாஸ் மாநிலத்திற்குப் போகின்றனர். அன்று வாஷிங்டனில் ஜீன் டிக்சன் ஒரு நண்பரோடு மதிய உணவுக்கு ஒரு ஓட்டலுக்குச்  செல்கிறார். சாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டு உணவு மேசையில் வைக்கப்படுகிறது. ஆனால், சாப்பிட முடியாமல், ஜீன் டிக்சன் காரணமே இல்லாத ஒரு வேதனைக்கு உள்ளாகிறார். அப்போது ஜான் கென்னடி  சுடப்பட்டார் என்ற செய்தி அந்த ஓட்டலில் காட்டுத் தீயாகப் பரவுகிறது. கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு ஜீன் டிக்சன் ஜனாதிபதி இறந்து விட்டார் என்று சொன்னதும் அங்கிருந்த அனைவரும்  அதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். ஜனாதிபதி சுடப்பட்டாரே தவிர அவர் இன்னும் இறக்கவில்லை என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே ஜனாதிபதியின் மரணச்  செய்தி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜான் கென்னடி இறந்த 3 மாதங்களுக்குள்ளாகவே அவர் குடும்பத்தை இன்னொரு சோகம் தாக்கவிருப்பதை ஜீன் டிக்சன் உணர்கிறார். தனி விமானங்களைத் தவிர்க்குமாறு செனட்டர் எட்வர்டு  கென்னடியைஅறிவுறுத்துமாறு அவர் பலரிடம் கெஞ்சுகிறார். ஆனால், அச்செய்தி அவரைச் சென்று அடையும் முன்பே எட்வர்டு கென்னடி விமான விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு ஆளாகிறார்.

அதே போல் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் அம்பாசடர் ஓட்டலில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு ஜீன் டிக்சன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு பார்வையாளர் ராபர்ட் கென்னடி அமெரிக்க  ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார். அப்போது ஒரு கருப்புத் திரை தனக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் திடீரென்று விழுவதைப் போல் உணர்ந்த அவர், தன் உள்ளுணர்வால்  உந்தப்பட்டு, பார்வையாளர்களை நோக்கிக் கூறினார் இல்லை, ராபர்ட் கென்னடியால் ஜனாதிபதியாக முடியாது. இங்கே இதே இடத்தில் நடைபெறும் ஒரு கோரச் சம்பவத்தால் அவர் ஜனாதிபதியாகும்  வாய்ப்பு இல்லாமல் போகும் என்றார். ஒரு வாரம் கழித்து அதே ஓட்டலில் ராபர்ட் கென்னடி ஒரு கொலையாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த ஜீன் டிக்சனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 1945-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தியாவின் ஏஜென்ட் ஜெனரல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஜீன் டிக்சன் கலந்து கொண்ட போது  நவாப் ஜாஃபா ஷெர் அலி என்பவர் ஜீன் டிக்சனிடம் தனிமையில் பேச விரும்பி ஒரு நாள் குறித்துக் கொண்டு அவரைச் சென்று பார்க்கிறார். அப்போது அவரிடம் ஜீன் டிக்சன் இந்தியா  பிரிவினைக்குள்ளாகும் என்று கூறினார். அதை ஷெர் அலி நம்ப மறுத்தபோது ஜீன் டிக்சன் பிப்ரவரி 20, 1947-இல் பிரிவினை நடக்கும் என்றார்.

1945-இல் வின்ச்டன் சர்ச்சிலை அவர் வாஷிங்டனில் சந்தித்தார். அப்போது அவரிடம் உலகப் போருக்குப்பின் நீங்கள் பதவியிலிருந்து வெளியேறி மீண்டும் 1952-இல் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்றார். அதை  நம்ப மறுத்த சர்ச்சில் நீங்கள் சொல்வது தவறு. பிரிட்டன் என்னை ஒரு போதும் கைவிடாது என்று கேலி செய்தார். ஆனால், ஜீன் டிக்சன் சொன்னது பலித்தது.

1948-இல் மகாத்மா காந்தியின் கொலை, அதன் பின்னர் எகிப்தில் அன்வர் சதத்தின் படுகொலை ஆகியவற்றையும் அவர் முன்கூட்டியே கணித்தார்.

இப்படிப் பல நடப்புகளை முன் கூட்டியே மிகச் சரியாகக் கணித்த ஜீன் டிக்சனின் கணிப்புகளில் பல நடக்காமல் போனதும் உண்டு. ஆனால், அவரால் கணிக்கப்பட்டு மெய்யாகிப் போன பல நிகழ்வுகளால்  அவர் 1960களில் உலகப் புகழ் பெற்றார். ஆனால் இன்றுவரை ஜீன் டிக்சனின் முன்னறியும் திறனின் இரகசியம் அறிவியலுக்கு அப்பாலேயே நிற்கிறது. அது ஏன்?

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக