சனி, 27 ஜூன், 2015

TRB PG TAMIL: பாரதியார்

சுப்ரமணிய பாரதியார்
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.

இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

பிறப்பு: தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி ஐயருக்கும் - இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக டிசம்பர்.11.1882 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன், எனினும் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். அவருடைய 5 வயதில் 1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அதனால் பாரதியார் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

இளமைப் பருவம்: சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்த இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'. அன்று முதல் இவர் "சுப்பிரமணிய பாரதியார்"என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.

திருமண வாழ்க்கை: பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு அதாவது 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி: 'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். 'கண்ணன்பாட்டு', 'குயில்பாட்டு', 'பாஞ்சாலி சபதம்',' புதிய ஆத்திச்சூடி' போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு: சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் "இந்திய பத்திரிக்கையின்" மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி "இந்தியா பத்திரிக்கைக்கு" தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி "தேசிய கவியாக" அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு: விடுதலைக்காக வீர தமிழ் முழக்கம் செய்து வந்த பாரதி 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி, தனது 39 ஆவது வயதில் வீர தமிழனின் நா ஓய்ந்தது. எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

பாரதியின் குரு: ஞானகுருவாக சாருநிவேதிதாவையும் (விவேகானந்தரின் சிஷ்யை), அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார். "மகாகவி' என்றும், "தேசியகவி' என்றும் மக்களால் போற்றப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ""பைந்தமிழ்த்தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனீ, சிந்துக்குத் தந்தை'' என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக, ""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக கண்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பாரதியை மக்கள், 'கவி', 'மானுடம் பாடவந்த மாகவி', 'புது நெறி காட்டிய புலவன்', எ'ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்', 'பல்துறை அறிஞர்', 'புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்', 'தமிழின் கவிதை' மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்: பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்டு 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட் 1905 முதல் - 1906 ஆகஸ்ட் வரை) பணியாற்றினார். இந்தியா என்ற வார இதழில் (மே 1905 முதல் - மார்ச் 1906, செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தேசியக் கவி: விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்: பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (ஸ்ரீஹழ்ண்ஸ்ரீஹற்ன்ழ்ங்) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.

பெண்ணுரிமைப் போராளி: தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்: தமிழக அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும் நினைவு இல்லமாகவும் பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்காக...

* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

செவ்வாய், 23 ஜூன், 2015

அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு விருது!v


கூடுவாஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவச மாக கணினிப் பயிற்சி அளித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு விருது கிடைத்துள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் சிறந்த சமுதாய தொண்டுக்கான விருதை பெற்ற 5 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் அழைத்து கவுரவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் பரத்குமார், பாலாஜி, அபுதாகீர், அருண்குமார், மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் ஆகிய மாணவர்கள் கணினி அறிவில் சிறந்து விளங்குகின்றனர். இந் நிலையில், இந்த 5 மாணவர்களும் கூடுவாஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வீடு, வீடாக சென்று இலவசமாக கணினி பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள DHFL Pramerica Life Insurance Co. Ltd. என்ற நிறுவனம் சிறந்த சமுதாய தொண்டுக்கான விருதை இந்த மாணவர்களுக்கு வழங்கியது. 5 மாணவர்களும், கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்று விருதை பெற்றுக் கொண்டனர். இந்த அரசுப் பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியை சித்ரா கூறியதாவது: மாணவர்கள் 5 பேரும் இயற்கையாகவே கணினிக் கல்வி கற்பதில் ஆர்வமாக இருந் தனர். இதனால், மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளி சார்பில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கணினிக் கல்வியில் சிறந்தத் தேர்ச்சி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, கிராமப்புற மாணவர்களுக்கு கணினிக் கற்பிக்க ஐந்து பேரும் விருப்பம் தெரிவித்தனர். கிராமப்புறங்க ளுக்கே சென்று ஏழை குழந்தை கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக கணினிப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த சமுதாய தொண்டு குறித்து டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாணவர்களின் சார்பில் பதிவு செய்யப்பட்டது. சிறந்த சமுதாய தொண்டு புரிந்ததற்காக 2-ம் இடம் வழங்கி அந்நிறுவனம் விருது வழங்கியது. விருது பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியதால், உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிய வில்லை என்றார்.

 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு?

பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளனஅதேபோல, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 1,600-க்கும் மேல் காலியாக உள்ளன. வழக்கமாக,மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பதவி உயர்வு, பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை ஜூன் மாதத்தில் நடைபெறும்.இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இதுதொடர்பான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
இதையடுத்து, கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற தலைமைஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிடமாறுதல்கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரியுள்ளது. எந்தவிதப்புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே 100 உயர்நிலைப் பள்ளிகளைமேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்
தலைவர் கோரினார்.முதல்கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர்இடைத்தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களைப் பொருத்தவரை பல பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள்உள்ளதால் பணி நிரவலுக்குப் பிறகு கடைசியாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 22 ஜூன், 2015

செவ்வியல் போக்கு(Classicism)


உணர்ச்சிமையவாத இலக்கியப் போக்கு என்பதைப்போல் இலக்கியப் படைப்பின் தன்மைகளின் அடிப்படையில் இனம் காணப்படும் இலக்கியப் போக்கு. "வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கிச்செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப் படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் எல்லாவகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னுதாரணங்களைத் தன்னுள் கொண்டிருத்தல்" என செவ்வியல் இலக்கியங்களின் பொதுப்பண்புகளை ஜெயமோகன் தொகுத்துக் கூறியுள்ளார். செவ்வியல் இலக்கியப் பண்புகள் அனைத்தும் பழமையானச் செவ்வியல் இலக்கியங்களிலிருந்துப் பெறப்பட்டவையே. இப்பண்புகள் பழமையானச் செவ்வியல் படைப்புக்கள் செலுத்தியத் தாக்கத்தின் காரணமாகப் பிற்கால இலக்கியப் படைப்புகளை வந்தடைந்தவை. எடுத்துக்காட்டாக ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியப் பண்புகள் கிரேக்க இலக்கியத் தாக்கத்தின் காரணமாகத் தோற்றம் கொண்டவை. ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியங்கள் கிரேக்க ரோம செவ்வியல் இலக்கியங்களின் தாக்கத்தின் காரணமாகத் தோற்றம் கொண்டன. ஐரோப்பியர்கள் கிரேக்க ரோம செவ்வியல் இலக்கியங்களை நகல்செய்யவும் செய்தனர். அரிஸ்டாடில், ஹோராஸ் கவிதைக் கோட்பாடுகள் 15,16ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கிரேக்க நாடகங்கள் ஐரோப்பிய நாடகங்களின் பாதையைத் தீர்மானித்தன. டிரேடன், போப், ஜாண்சன் ஆகியோரிடம் செவ்வியல் இலக்கியத் தாக்கத்தைத் தெளிவாகவே இனம் காணமுடிகிறது. ஐரோப்பாவில் புதுச்செவ்வியல் இலக்கியப்போக்கும் தோற்றம் கொண்டது. ஆங்கில இலக்கியத்தில் 17,18ஆம் நூற்றாண்டுகளைப் புதுச்செவ்வியல் இலக்கியப் போக்கின் காலகட்டமாகச் சுட்டவேண்டும். ரோம செவ்வியல் இலக்கியங்கள் ஆங்கில இலக்கியத்தின்மீது இக்காலகட்டத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. உணர்ச்சிமையவாதக் கவிஞர்கள் செவ்வியல் இலக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். ஆங்கில இலக்கிய மரபின் மூலமாக கிரேக்க இலக்கியத்தைக் கொண்டனர். வடமொழிகுறித்த அறிமுகம் ஐரோப்பாவை அடைந்தபோது, செவ்வியல் இலக்கியமாக வடமொழி இலக்கியத்தையும் கொண்டனர்.

செவ்வியல் இலக்கியத்திற்கென வகுக்கப்பட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய இலக்கியமாகச் சங்க இலக்கியத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழ் இலக்கிய மரபின் துவக்கப் புள்ளியாகச் சங்க இலக்கியம் அமைகிறது. சங்க இலக்கியத்தின் அழகியல் கூறுகளே பிற்கால மரபின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதன் அகம், புறம் பாகுபாடு சமகால இலக்கியத்திற்கும் பொருந்துவதாக அமைகிறது. 17,18ஆம் நூற்றாண்டுகளில் செவ்வியல் இலக்கியங்கள் சமய அடிப்படையிலானப் புறக்கணிப்பைப் பெற்றன. "சங்க நூல்கள் எல்லாம் புத்த சமண சமயச் சார்புடையன; அவைகளைப் பயிலுதல் கூடாது என்று எனது இளமைப் பருவத்திற் சில சிவனடியார்கள் கூறியதுண்டு." 1940ல் வெளியான சங்க இலக்கியங்களின் சமாஜப் பதிப்பின் முன்னுரையில் இடம்பெறும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பிய புதுச்செவ்வியல் போக்கிற்கு நிகரான ஒருபோக்குத் தமிழில் எழாததற்கு இது காரணமாக அமைந்தது. திருமுருகாற்றுப்படைக்கு மட்டுமே அதிக எண்ணிக்கையிலான ஏட்டுப் பிரதிகள் கிடைத்துள்ளன. பெரும்பான்மையான சங்க இலக்கிய ஏட்டுப்பிரதிகள் ஒரே மூலத்திலிருந்து நகல் செய்யப்பட்டவை எனக் கருத இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சங்க இலக்கியங்கள் அச்சிடப்பட்டு, பரவலான வாசிப்பினைப் பெறத்துவங்கின. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் அரசியல் கிளர்ச்சி வலுபெற்றபோது, வடமொழியும் தமிழும் முரண் இணையாக முன்நிறுத்தப்பட்டன. பழமைக் காரணமாக சங்கச் செவ்வியல் இலக்கியமும் கவனம் பெற்றது. ஆனால் சங்க இலக்கியத்திலிருந்து அறியலாகும் பழந்தமிழர் வாழ்வே மிகுதியாகப் பேசப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆங்கிலச் செவ்வியல் நாடக வடிவைத் தழுவித் தன் நாடகத்தை எழுதியுள்ளார். ஒருவகையில் இதனைச் செவ்வியல் போலியாகக் குறிப்பிட வேண்டும். சமகாலத்தில் இலட்சுமணப்பிள்ளை சொபாக்ளிசின் கிரேக்கச் செவ்வியல் நாடகம் ஒன்றை வீலநாடகம் என தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுந்தரம்பிள்ளை உரையாசிரியர் மொழிநடையை அடியொற்றி தன் நாடகத்திற்கான மொழிநடையை அமைத்துக்கொண்டபோது, இலட்சுமணப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் எளிமையான மொழியில் செவ்வியல் இலக்கியப்பண்பை எழுப்பமுயன்று வெற்றியும் பெற்றுள்ளார். 'அன்னிமிஞிலி' போன்ற நாடகங்கள் சங்க இலக்கியத்திலிருந்து அறியலாகும் கதைகளை நாடக வடிவில் முன்வைத்தாலும், சுந்தரம் பிள்ளையின் நாடக வடிவைத் தழுவி செவ்வியல் போலிகளாக அமைந்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலப் பேராசிரியரும் மலையாளக் கவிஞருமான ஐயப்ப பணிக்கர் சங்க இலக்கியத்தின் திணைக்கோட்பாட்டினைச் சமகாலத்தின் மாற்று அழகியலாக ஆங்கிலத்தில் முன்வைத்துள்ளார். க.நா. சுப்பிரமணியம் போன்ற தமிழ் விமர்சகர்கள் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் சமகால இலக்கியத்தை எதிர்கொள்ள முடியும் எனக் கூறிவந்தாலும், சமகால விமர்சனம் அதைப் புறக்கணித்துள்ளது என்றே கூறவேண்டும்.

தமிழில் நவீனத்துவத்தின் தேக்கநிலைக்குப்பின் இளம்படைப்பாளிகள் மரபை மறுபார்வைக்கு உட்படுத்தினர். செவ்வியல் இலக்கியங்கள் புதிய கவனிப்பைப் பெற்றன. சங்கச் செவ்வியல் இலக்கியத்தினுடனான தொப்பிள்கொடி உறவை வலுப்படுத்தினர். ஜெயமோகனின் காடு, கொற்றவை எனும் நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.


 

TRB PG TAMIL:உரையாசிரியர்கள்

உரையாசிரியர்கள் பெரும்பாலும்u பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர்கள். சமகால இலக்கியங்களுக்கு இவர்கள் உரை வகுக்கவில்லை. காலத்தால் முற்பட்ட இலக்கிய இலக்கணங்களுக்கு மட்டுமே உரை வகுத்துள்ளனர். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்கும் மரபு உள்ளது. கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்களும், தமிழ் சமகால படைப்பாளிகளுள் ஜெயமோகனும் தமிழ் விமர்சன மரபின் துவக்கப் புள்ளியாக உரையாசிரியர் களைக் காண்கின்றனர். சிற்றிதழ் சூழலைச் சார்ந்த படைப்பாளிகளும், விமர்சகர்களும் இதற்கு முரணான கருத்தினைக் கொண்டுள்ளனர். உரையாசிரியர்கள் நூற்களைப் போற்றும் மரபினைக் கொண்டவர்கள். தேர்வு இவர்களுக்கில்லை என்பது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்களின் நிலைபாடு. இக்காரணத்தினால் விமர்சகர்களாக இவர்களை ஏற்க மறுக்கின்றனர். பேராசிரிய மரபின் முன்னோடிகளாகக் கருதுகின்றனர். ஜெயமோகன் இவர்கள் உரைவகுத்த நூற்களின் தெரிவு ஒருவகையிலான மதிப்பீடு குறித்த உணர்வு இவர்களிடம் இயங்கி உள்ளதற்கு சான்றுகளாக அமைவதைச் சுட்டுகிறார். தமிழ்ச் சூழலில் உரையாசிரியர்கள் மீதான புறக்கணிப்பு, உரைகளின் மீதான வாசிப்பின் அடிப்படையில் நிகழ்ந்திராததையும் குறிப்பிடுகிறார்.

உரையாசிரியர்கள் மிகப்பெரிய அறிஞர்கள் என்பதில் முரண்பாடான கருத்துகளுக்கு இடமில்லை. உரையாசிரியர்களின் தனித்தன்மைகளை அவர்கள் உரைகளிலிருந்து உணரமுடிவதைக் குறிப்பிட வேண்டும். உரையாசிரியர்களின் நூலறிவு வியப்பிற்குரியது. எண்ணற்ற நூற்களை மேற்கோள்களாகச் சுட்டி சென்றுள்ளனர். சொற்களுக்குப் பொருளளிப்பது மட்டுமே அவர்கள் நோக்கமல்ல; கவிதையின் ஆழ்நிலைப் பொருளை உணர்வைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளனர். இலக்கண உரைகள் தங்கள் நிலைபாடுகளை உணர்த்துவதோடு, பிறநிலைபாடுகள் மீது தாக்குதலையும் நிகழ்த்துகின்றன. இலக்கிய உரைகளில் தங்களுக்கு முரணான பார்வையைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. எனினும் நக்சினார்க்கினியர் புறநானூற்றின் பாடல்களில் வரலாற்று கொளுக்கள் காலத்தால் பிற்பட்டவையாக மதிப்பிடுவதைக் குறிப்பிட வேண்டும்.

எல்லா நூற்களும் உரைபெறவில்லை. சிலப்பதிகாரம் இரு உரைகளைப் பெற்றபோது மணிமேகலை உரையாசிரியர்களின் கவனிப்பைப் பெறவில்லை. உரைகூறுவதற்கான நூற்களை சமய அடிப்படையில் தேர்வு செய்ததற்கான சான்றுகள் இல்லை. சைவரான நச்சினார்க்கினியர் சமணக்காப்பியமான சிந்தாமணிக்கு உரைசெய்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். சிந்தாமணியில் துலங்கும் சமணக் கோட்பாடுகளைச் சுட்ட தயங்கவும் இல்லை. உரையாசிரியர்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வந்த நூற்களை சமகால வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒருவகையில் இலக்கியக் கல்வி, தமிழ்ச்சூழலில் இயங்கி வந்துள்ளதை உணர முடிகிறது. அதில் கற்பிக்கப்பட்ட நூல்களுக்கு காலம் சார்ந்த பொருளை உரையாசிரியர்கள் தருகின்றனர். இலக்கண உரைகளிலிருந்துதான் புதிய இலக்கண நூற்கள் தோற்றம் கொண்டுள்ளன. உரைகளின் உதவியோடுதான் மூலநூற்களை அழிவிலிருந்து மீட்க முடிந்துள்ளது.

இளம்பூரணம், பேராசிரியர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலியவர்களைப் புகழ்பெற்ற உரையாசிரியர்களாகக் குறிப்பிடவேண்டும். இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்தவர்களுள் முன்னோடியாகத் திகழ்கிறார். பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் சமண சமயத்தினர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரைவகுத்தவர். இசைத்துறையைப் பற்றிய இவர் அறிவு குறிப்பிடத்தக்கது. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த நச்சினார்க்கினியர் இலக்கண இலக்கியங்களுக்கு உரைவகுத்தவர். தொல்காப்பியம், சிந்தாமணி, கலித்தொகை, குறுந்தொகை என இவர் உரையின் பரப்பு மிக விரிவானது. தன் உரை நூல்களில் எண்பத்தி இரண்டு நூற்களிலிருந்து மேற்கோள்கள் சுட்டியுள்ளார்.

தொல்காப்பியத்திற்கு உரைவகுத்த சேனாவரையர் வடமொழி வல்லுநரும்கூட. பரிமேலழகர் திருக்குறளுக்கும், பரிபாடலுக்கும் உரைவகுத்துள்ளார். தெய்வச்சிலையார், கல்லாடர் சங்கரநமச்சிவாயர், மயிலைநாதர் முதலிய உரையாசிரியர்களையும் குறப்பிட வேண்டும். ஆசிரியர் பெயர் தெரியாத உரைகளும் உண்டு. அகநானூற்றின் முதல் 90 பாடல்களுக்கும் ஆசிரியர் பெயர் கண்டறியப்படாத உரை உள்ளது.

திருக்குறள் பன்னிரு உரைகளைப் பெற்றுள்ளது. வேறுபட்ட சமயத்தைச் சார்ந்தவர்களால் உரைகள் வகுக்கப்பட்டுள்ளன. சமய நூற்களுக்குக் குறிப்பிட்ட அச்சமயத்தவர்களால் உரை வகுக்கப்பட்டுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்த உரைகள் குறிப்பிடத்தக்கன. மணிப்பிரவாள நடை சமகால வாசிப்பிற்கு இடையூறாக அமைகிறது.

உரையாசிரியர்கள் தங்களுக்கென்று ஒரு நடையை வகுத்துள்ளனர். செந்தமிழ் நடையாக இதனைக் குறிப்பிட வேண்டும். வீரமாமுனிவர் சமகாலத்திற்கு இதனைக் கொணர்ந்தார். உரையாசிரியர்களின் நடையிலிருந்தே உநைடை தோன்றியது.

உரையாசிரியர்களால் உரைவகுக்கப்பட்ட நூற்கள் இருபதாம் நூற்றாண்டில் புதிய உரைகளைப் பெற்றுள்ளன. ஆனால், இவ்வுரைகள் உரையாசிரியர்களின் உரைகளை மலினப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

உரையாசிரியர்களை விமர்சகர்களாகக் கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆனால் தலை சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ள வேண்டும்.

1.அ. தாமோதரன், சங்கரநமச்சிவாயர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
2.சத்தீஸ், சங்கஇலக்கிய உரைகள், அடையாளம் (2008)




 

TRB PG TAMIL :தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாறு(History of Tamil Critism)


தமிழ் இரண்டாயிரம் வருட இலக்கிய மரபினைக் கொண்டது. இலக்கியம் குறித்த தமிழ்ச்சிந்தனை மரபும் இதற்கிணையானது. தமிழ் இலக்கிய மரபின் துவக்கப் புள்ளியான தொல்காப்பியத்திலேயே இலக்கியம் குறித்த தெளிவான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியம் மொழிக்கு மட்டுமன்று இலக்கிய வடிவங்களுக்கும், இலக்கிய உள்ளடக்கத்திற்கும் விதிகளைக் குறித்துள்ளது. ஏற்கப்பட்ட ஒழுங்கிலிருந்தே விதிகள் தோன்றக் கூடும். இவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கிய மரபும், இலக்கிய சிந்தனை மரபும் இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்திற்குப்பின் தமிழ் இலக்கிய சிந்தனை மரபு காலத்திற்கேற்ற வளர்ச்சியையும் மாறுதல்களையும் பெற்று வந்துள்ளது. வடமொழி இலக்கிய சிந்தனை மரபு தமிழ் மரபில் பெரும் பாதிப்பை நிகழ்த்தியுள்ளது. யாப்பு குறித்த சிந்தனையும் முறையான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. யாப்பில் இனங்காண முடிகிற மாறுதல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. மாறி வந்த இலக்கிய வடிவங்கள் குறித்த சிந்தனையைப் பிற்காலப் பாட்டியல் நூல்கள் முன்னெடுத்துச் சென்றுள்ளன.


தமிழ் இலக்கிய சிந்தனையை ஆராய்ந்து சமகால மொழியில் தொகுக்கும் முயற்சியில் தமிழ் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை யென்றே குறிப்பிட வேண்டும். தமிழ் யாப்பின் வளர்ச்சி குறித்து சோ.ந. கந்தசாமி விரிவாக ஆராய்ந்துள்ளார். அதுபோல் திராவிட யாப்புக்குறித்து எஸ்.எஸ். சுப்ரமணியம் தன் ஆய்வை முன்வைத்துள்ளார். இந்த ஆய்வுகளுக்கு நிகரான ஆய்வைத் தமிழ் இலக்கிய சிந்தனை மரபின் பிற துறைகளில் காண இயலவில்லை.

உரையாசிரியர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தங்கள் காலத்திற்கு எடுத்து வந்துள்ளனர். வாசகர்களை முன்னிறுத்தி விளக்கியுள்ளனர். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்கக்கூடுமா என்ற விவாதம் தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. தமிழ்ப் படைப்புச்சூழலில் உரையாசிரியர் களைக் குறித்து எதிர்மறையான மதிப்பீடுகளே இருந்து வந்துள்ளன. புதுமைப்பித்தன் 'அன்றிரவு' சிறுகதையில் தமக்குள் முரண்பட்டுத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பவர்களாகவே உரையாசிரியர்களைக் கதைஉலக மனிதர்களாகச் சித்திரித்துள்ளார். தமிழ்ப் படைப்பாளிகளில் தமிழ் இலக்கிய மரபு குறித்து விரிவும், தெளிவும் ஒருங்கே கொண்டப் புரிதலையுடையவர் புதுமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர ராமாசாமியும், வெங்கட் சாமிநாதனும் இலக்கியச் சிந்தனை மரபில் உரையாசிரியர்களின் இடம் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். வெங்கட் சாமிநாதன் தமிழரின் இலக்கியச் சிந்தனையைக் குறித்தே ஐயம் கொண்டுள்ளார். உரையாசிரியர்களை விமர்சகர்களாக ஏற்க மறுக்கிறார். ஜெயமோகன் மட்டுமே உரையாசிரியர்களை, இலக்கியச் சிந்தனை யாளர்களாக இனம்காண்கிறார். "உரை என்பது நம் மண்ணுக்கு உரிய ஒருவகை விமரிசன வாசிப்பு என்று கொள்ளுதலே சரியானது" என தன் மதிப்பீட்டை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அதற்கானக் காரணங்களையும் விளக்கியுள்ளார். உரையாசிரியர்கள் மேற்கோள்களாக முன்வைத்துள்ளக் கவிதை வரிகளின் இலக்கியத் தரத்தைச் சுட்டியுள்ளார். 'தமிழ் விமர்சன முதல்வர்'களாக மதிப்பிடவும் செய்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் பெரும்பான்மையோர் உரையாசிரியர்களை விமர்சகர் களாகவே இனம்கண்டுள்ளனர்.

உரையாசிரியர்கள் பெரும்பாலும் பத்தாம் நூற்றாண்டையும் அதனைத்தொடர்ந்து வரும் நான்கு நூற்றாண்டுகளையும் சார்ந்தவர்கள். உரைகள் தோன்றுவதற்கானக் காலச்சூழலும், தேவையும் இருந்தது. உரையாசிரியர்கள் ஓர் இலக்கியச் சிந்தனை மரபின் தொடர்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். இலக்கியச் சிந்தனையே இவர்களிடமிருந்துதான் தோற்றம் கொண்டது என்பதல்ல. சங்கப்புலவர்களில் முதல்தலைமுறையைச் சார்ந்த சாதனையாளர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறைகளைச் சார்ந்த சங்கப் புலவர்கள் தங்கள் பாடல்களில் புகழ்ந்துள்ளனர். அவர்கள் சுட்டிய சாதனையாளர்களை, சாதனையாளர்களாக சமகாலத்திலும் ஏற்க முடிகிறது. இலக்கியத்தர அடிப்படையிலானத் தெரிவு அவர்களிடம் இருந்துள்ளது. இத்தேர்விற்கான காரணங்களைக் குறித்த வெளிப் படையான விவாதங்கள் மொழியில் பதிவுப் பெறவில்லை. மொழியில் பதிவு பெறாதக் காரணத்தினால் சிந்தனை மரபே இல்லை என்றாகி விடாது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான இலக்கியத்தரம் கொண்ட படைப்புகளே உரைகளைப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட உரைகள் உள்ளன. மணிமேகலை, உரையைப் பெறவில்லை. இதற்கு சமய உணர்வை மட்டுமே காரணமாகச் சுட்டமுடியாது. நச்சினார்க்கினியர் பதிமூன்றாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணிக்கு உரை செய்துள்ளார். அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் அல்ல. சிந்தாமணி சமண சமயக்காப்பியமே.

உரையாசிரியர்களின் சமகால இலக்கியம் மரபாலும், மொழி நடையாலும் அவர்கள் உரை செய்த இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. சமகால வாசகருக்கு இந்த இடைவெளிகளைக் கடந்து, நூற்களை அணுகுவதில் சிக்கல்கள் இருந்திருக்க வேண்டும். உரையாசிரியர்கள் சிக்கல்களுக்கானத் தீர்வை முன்வைத்துள்ளனர். சங்க இலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் இனம்கண்டு வாசிக்கும் வாசகர்கள் உரையாசிரியர்களின் காலத்திலும் இருந்துள்ளனர். இவர்களிடம் தர உணர்வு செயல்பட்டுள்ளதை உறுதியாகக் கூறமுடியும். உரையாசிரியர்கள் தேர்ந்த நூல்களை இனம்கண்டு சமூகத்திற்கு உணர்த்தும் பணியை ஆற்றவில்லை. இலக்கியத்தரத்தின் அடிப்படையில் ஒரு சமூகம் பாதுகாத்த இலக்கியச் செல்வங்களை சமகால வாசகர் வாசிக்க உரையாசிரியர்கள் துணைசெய்கின்றனர். உரையாசிரியர்களை இலக்கிய ஆசிரிய மரபின் முன்னோடிகளாகக் குறிப்பிட வேண்டும். சமகால இலக்கிய ஆசிரியர் களிலிருந்து வேறானவர்கள், இவர்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மைகள் உண்டு. பிரதிகளின் பொருள் உற்பத்தியில் கவனம் கொள்கின்றனர். தாங்கள் கண்டுபிடித்த வழிமுறைகளையும் கையாள்கின்றனர். நூல்களின் சிறப்பை மட்டுமே புலப்படுத்தும் நோக்கம் இவர்களுடையது. இலக்கியத்தரமானதாக சமூகம் தேர்வு செய்த நூல்களைச் சமகால வாசகர் வாசிக்க வழிவகைகள் செய்வது மட்டுமே இவர்கள் பொறுப்பு. இளம்பூரணர் காலத்தால் முன்னோடி. பிற்கால உரையாசிரியர் களின் பாராட்டுதலைப் பெற்றவர். அடியார்க்கு நல்லார் பலதுறை அறிஞர். சேனாவரையர் வடமொழிப் புலமைமிக்கவர். நச்சினார்க்கினியர் எண்பத்தி இரண்டு நூற்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியுள்ளார். இவர்களைப் பேரறிஞர்களாக இனம் காண்பதில் தடையேதுமில்லை.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியச் சிந்தனை மரபின் தொடர்ச்சி குறித்து ஐயம் எழுகின்றது. ஆனால் கம்பராமாயணத்தின் மேன்மையை உணர்ந்துகொண்டுள்ளனர். பிற்காலக் காப்பியங்கள் அனைத்தும் இதன் தாக்கத்தைப் பெற்றுள்ளன. சைவம் செழித்திருந்தாலும், கந்தபுராணம் தாக்கத்தைச் செலுத்தவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உ.வே. சாமிநாதய்யர் ஏடுகளில் மூலம் ஏது? உரை எது? எனப் பிரித்தறிந்து இனம்காண இயலாதவாறு கலந்திருந்ததாகப் பதிவு செய்துள்ளார். உரைகளே மூலத்தைப் புதிய காலத்திற்கு எடுத்து வந்துள்ளன. உரையாசிரியர்கள் துணையின்றிச் சொற்களின் பொருள் பரிமாணங்களை அறிய இயலலாது. மரபு குறித்த அறிவினையும் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டாக வேண்டும். அவர்கள் முக்கியத் துவத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் இயங்கிய விமர்சகர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதேசமயம் அவர்களைத் தமிழ் இலக்கிய விமர்சன மரபின் முன்னோடிகளாக வலிந்து ஏற்க வேண்டும் என்பதும் இல்லை. தற்காலத் தமிழ் விமர்சனத்தின் துவக்கத்தை, கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலிருந்துதான் இனங்காண முடிகிறது. ஒப்பிலக்கணத்தின் முதற்பதிப்பு 1857ல் வெளியானது. 1875ல் அதன் இரண்டாவது பதிப்பு வெளியானது. இவ்விருபதிப்புகளிலும் இடம்பெற்ற தமிழ் இலக்கியம் தொடர்பான பகுதிகள் பின்வந்த பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளன. இந்த விடுபடல் கால்டுவெல்லின் மரணத்திற்குப்பின் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதால் கால்டுவெல்லின் தமிழ் இலக்கியம் தொடர்பான பதிவுகளைக் கணக்கில் கொண்டாக வேண்டும். தமிழில் இலக்கிய விமர்சனத்தின் அடிப்படையான மதிப்பீடு கால்டுவெல்லின் பதிவுகளில்தான் முதன்முதலாக இடம்பெறுகிறது.

தமிழ் ஒட்டுமொத்த இலக்கிய மரபை விமர்சனக் கண்ணோட்டத்தோடு கால்டுவெல் அணுகியுள்ளார். தொல்காப்பியத்திற்கு எவ்வளவு பழமையைக் கற்பித்தாலும், பல நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிக்குப் பின்னரே அது தோற்றம் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், விதி என்பது ஏற்பினைப் பெற்ற வழக்கமே. திருக்குறளிலும் சிந்தாமணியிலும்தான் தமிழ் இலக்கிய மரபு அதன் உச்சத்தை எட்டியுள்ளது. கால்டுவெல் தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தோடு மரபினை அணுகியுள்ளதை இது உறுதிப் படுத்துகிறது. இங்கு, மதிப்பீடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு மதிப்பீடு தமிழ் இலக்கியத்திற்கு கால்டுவெல்லுக்கு முன் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சட்டகத்தை உருவாக்கியவரும் கால்டுவெல்லே. தமிழ் இலக்கிய பரப்பைச் சமண வட்டம், இராமாயண வட்டம், சைவ மறுமலர்ச்சி வட்டம், வைணவ வட்டம், இலக்கிய மறுமலர்ச்சி வட்டம், எதிர்ப்பார்ப்பனிய வட்டம், தற்காலப் படைப்பாளிகள் என அவர் வகைபடுத்துவது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் ஆங்கில இலக்கிய விமர்சகரான டி.எஸ். எலியட் இத்தகைய வட்டக் கோட்பாட்டினைக் கொண்டு ஆங்கில இலக்கிய மரபை வகைப்படுத்தியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பிறமொழி இலக்கியப் படைப்புகளோடு ஒப்பிட்டு மதிப்பிடும் ஒப்பிலக்கிய மரபும் கால்டுவெல்லில் தான் வேர்கொண்டுள்ளது. சமணர்களால்தான் சமஸ்கிருதத்திலிருந்து வேறான இலக்கியப் பண்பாட்டினைத் தமிழில் வளர்த்தெடுக்க முடிந்தது என்ற முடிவுக்குவரும் கால்டுவெல், நீதி இலக்கியத்தில் தமிழ், வடமொழியை விட வளம்பெற்றுள்ளது என்னும் மதிப்பீட்டை முன்வைத்துள்ளார். வடமொழி இராமாயணத்தோடு கம்பராமாயணத்தை ஒப்பிடும் கால்டுவெல் கம்பராமாயணம் எவ்வித சந்தேகமுமின்றி உயர்ந்த கவிதை என்ற முடிவிற்கு வருகிறார். சிந்தாமணி மட்டுமே இராமாயணத்தின் சிறப்பைக் கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்கிறார். தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தை இங்கு எதிர்கொள்ள முடிகிறது. சித்தர் பாடல்களை எதிர்ப்பார்ப்பனிய வட்டத்தினைச் சார்ந்த கவிதைகளாகக் கால்டுவெல் கணக்கிடுகிறார். சித்தர் பாடல்கள் சாதாரண மக்களை முன்வைத்து எழுதப்பட்ட பாடல்களாகக் கால்டுவெல் மதிப்பிடுகிறார். தற்காலத் தமிழ் - வங்காள இலக்கியங்களை ஒப்பிட்டு எண்ணிக்கையில் அதிகமாகத் தமிழ் இலக்கியப் படைப்புகளும் தரத்தில் உயர்ந்தனவாக வங்காள இலக்கியப் படைப்புகளும் திகழ்வதாக மதிப்பிடுகிறார்.

சமகாலத்தில் கால்டுவெல்தான் விமர்சனக் கண்ணோட்டத்தோடு தமிழ் இலக்கியத்தை முதல்முதலாக அணுகியுள்ளார். எனவே, சமகாலத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றைக் கால்டுவெல்லில் இருந்துதான் துவங்கவேண்டும்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் சி.வை. தாமோதரம்பிள்ளையும் தொடர்ந்து உ.வே. சாமிநாதய்யரும் தொன்மையான இலக்கியங்களைச் சுவடியிலிருந்து அச்சுவடிவில் பதிப்பிக்கத் துவங்கினர். இவர்களுக்கு முன்னமே திருக்குறள் போன்ற மரபில் சிறப்பிடம் பெற்ற இலக்கியப் படைப்புகள் அச்சு வடிவம் கண்டிருந்தாலும் ஆய்வு அடிப்படையிலான பதிப்பு முயற்சி இவர்களால்தான் துவக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. கூடவே, நூல்களுக்குச் சமகாலத் தமிழில் உரையும் செய்தனர். நூல் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தருவதில் இவர்கள் பணி குறிப்பிடத்தக்கது. பல நூல்களில் இருந்து ஒப்புமைக் கூறத்தக்கப் பகுதிகளைத் தொகுத்தும் தந்துள்ளனர். இது எதிர்காலத் தமிழ் ஆய்வின் வளர்ச்சிக்குச் சிறந்த அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய மரபு என்றும் இவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. ஆனால், விமர்சனக் கண்ணோட்டம் இவர்களுக்கு அறவே இல்லாதிருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். சிலப்பதிகாரம், குறுந்தொகை போன்ற தமிழ்ச் செவ்வியல் படைப்புகளைப் பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் இவற்றிற்கு இணையாகவே கோவில் தலபுராணங்களையும் கருதியிருந்தார் என்று கூறமுடிகிறது. நூலாசிரியர்கள் மீது இவர்கள் கொண்டிருந்த பக்தி உணர்வு விமர்சனக் கண்ணோட்டத்திற்குத் தடையாக அமைந்தது எனக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களுக்குச் சமகாலத்தில் உரை செய்த சோமசுந்தரனார், துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் உ.வே.சா. வகுத்த பாதையில்தான் பயணம் செய்துள்ளனர்.

20ம் நூற்றாண்டின் தமிழ்க்கல்விச் சூழல் விரிவடைந்தது. மதுரைத் தமிழ்ச்சங்கம் தோற்றங்கொண்டது. இலக்கிய ஆய்விற்கென்றே மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாகச் செந்தமிழ் இதழ் வெளிவரத் துவங்கியது. தொன்மையான இலக்கியங்களின் காலத்தைத் தீர்மானிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கும் முயற்சி செயல்வடிவங் கொண்டது. இச்சூழலில் இலக்கியப் புலமையாளர்களின் மரபு தோற்றங்கொண்டது. பூரணலிங்கம் பிள்ளை, மறைமலையடிகள், வேங்கடசாமி நாட்டார், பரிதிமாற் கலைஞர், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், மா. இராசமாணிக்கனார், செல்வகேசவராய முதலியார், கே.என். சிவராஜ பிள்ளை என இம்மரபு தொடர்ந்தது. இவர்கள் விமர்சனக் கண்ணோட்டம், அதற்கு அடிப்படைத் தேவையான அழகியல் உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் எனக் கூற இயலாது. ஆனால், இம்மரபில் விமர்சனக் கண்ணோட்டத்தை இயல்பாகப் பெற்றவர்களும் இருந்தனர்.

தற்காலத் தமிழ் விமர்சனத்தின் தொடர் இயக்கத்தினை 20ம் நூற்றாண்டின் முதல் 20 வருடங்களில்தான் தேடிக் கண்டடைய வேண்டும். வ.வே.சு. ஐயரைப் பலரும் முன்னோடியாகக் குறிப்பிட்டுள்ளனர். இலக்கியத்தரம் குறித்த விழிப்புணர்வு இக்காலக் கட்டத்தில்தான் தமிழில் அழுத்தம் பெற்றுள்ளது. விமர்சனக் கோட்பாடுகளின் அடிப்படையில் தெளிவான பாதைகளை வகுத்து இலக்கியத் தரத்தைத் தீர்மானிக்கும் முயற்சியும் இக்காலக்கட்டத்தில் நிகழ்வடிவம் பெற்றுள்ளது. வ.வே.சு. ஐயர், கம்பராமாயணத்தைக் கிரேக்க வடமொழிக் காவியங்களோடு ஒப்பிட்டு, கம்பனின் கலை மேதைமையை நிறுவ முயன்றுள்ளார். அதுபோல், பாரதியின் கண்ணன் பாட்டைத் தெளிவான விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகியுள்ளார். வ.வே.சு. ஐயரைப் போல் பாரதி விமர்சனக் கட்டுரைகளை எழுதியிராவிடினும், ஆங்காங்கே அவர் விட்டுச் சென்றுள்ள பதிவுகள் அவருடைய விமர்சனக் கண்ணோட்டத்தைத் துலக்கவே செய்கின்றன. வள்ளுவன், கம்பன், இளங்கோ என்ற தரவரிசை அவரால்தான் தமிழில் முதன்முதலில் முன்வைக்கப்பட்டுள்ளது. விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளுக்கு, பாரதியே முன்னோடியாக விளங்குகின்றார்.

இவர்கள் இருவரோடு ஒப்பிடும்போது அ. மாதவையரே விமர்சகராக முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால், சமகாலத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றை ஆராய்ந்த பலரும் மாதவையரை விமர்சகராகப் பொருட்படுத்தவில்லை. வாழுங்காலத்தில் இதழ்களில் வெளிவந்த மாதவையரின் கட்டுரைகள் சமகாலத்தின் பார்வைக்குக் கிடைக்காதது இதன் காரணமாகலாம். 1920 மார்கழி தமிழர் நேசன் இதழில் மாதவையர் எழுதிய 'தமிழ் இலக்கிய அபிவிருத்தி' என்னும் கட்டுரையை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரைக்கு நிகராகக் கால்டுவெல்லின் தமிழ் இலக்கியம் குறித்தப் பதிவுகளைச் சுட்டலாம். இருவரும் சமகாலம் வரையிலான தமிழ் இலக்கிய மரபை ஒட்டுமொத்தமாக விமர்சனக் கண்ணோட்டத்துடன் தங்கள் மதிப்பீட்டிற்கு உள்ளாக்கியுள்ளனர். தங்கள் பார்வைக்கேற்றதான முடிவுகளுக்கும் வந்துள்ளனர்.

மாதவையர் சொல்லப்படும் விஷயத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை வெளியிடும் வல்லமைக்கும் தரவேண்டும் என்கிறார். இப்பார்வை, தமிழ் விமர்சன மரபிற்கு முற்றிலும் புதுமையானது. தமிழின் பிற்கால இலக்கியங்களை அரேபிய பாலைவனத்திற்கு ஒப்பிடும் மாதவையர், தலபுராணங்களையும் அந்தாதிகளையும் இலக்கியச் சிறப்பின்றி, வறண்ட பாலை நிலத்திற்கு உவமையாக்குகின்றார். இவைகளைக் குறித்து, 'போலி இலக்கிய நூல்கள்' என்ற மதிப்பீட்டினையும் முன் வைக்கின்றார். கம்பன் சீவகசிந்தாமணிக்குக் கடன்பட்டுள்ளதைத் துலக்கும் மாதவையர், கம்பனுக்கு நிகரான கவிவன்மை இல்லாதவர்களால்தான், எதுகை, மோனை, சிலேடை, யமகம், நீரோட்டகம், ஏகபாதம், திரிபு, மடக்கு ஆகிய வித்தைகள் தமிழுக்கு வந்தன என்ற முடிவிற்கு வருகிறார். மாதவையரைப் பொறுத்தவரையில் மரபு என்பது மேதைகளின் பங்களிப்பின் தொடர்ச்சி. "காலஞ் செல்லச் செல்லத் தமிழ்க்காவியங்கள் இலக்கியச் சிறப்புகளும் அழகுகளும், எளிய நடையும், வலிய கருத்தும் குன்றித் தலைகீழாக, இலக்கணத்திற்கு இயைய ஒழுகலாகி, சொல் ஆடம்பரங்களும், படாடோபங்களும், வாக்கு ஜாலங்களுமே மலிந்து வெளிவரலாயின." தமிழ் இலக்கிய மரபின் வீழ்ச்சிக் குறித்து முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட மதிப்பீடாக இதனைக் கருத வேண்டும். தமிழின் 17,18ம் நூற்றாண்டு இலக்கியங்களை 'இருண்ட முட்செறிந்து உள்நுழைவதே சிரம சாத்தியமாய் அச்சத்தை விளைவிக்கும் அடவிகளாக' மாதவையர் மதிப்பிடுவது புதிய விமர்சன மரபின் தோற்றத்தைக் குறிக்கின்றது. வாசகர் பார்வையில் தமிழ்ப் புலமையாளர்களின் வலிந்து பொருள்கொள்ளும் போக்கினைக் கடுமையான மொழியில் விமர்சிக்கின்றார். தமிழ் மரபின் வீழ்ச்சியை விமர்சிக்கும் மாதவையர், எதிர்கால வளர்ச்சிக்கான வழிவகைகள் குறித்தும் சிந்தித்துள்ளார். பிறமொழி இலக்கிய நயங்களை நமக்கேற்றவாறு மாற்றி ஏற்க வேண்டும் என்கிறார். ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வசனகவிதையைத் தமிழிற்கு அவர் வரவேற்பது வியப்பூட்டுவது. மொழித்தூய்மை, நடையழகை சிதைப்பதை ஏற்க மறுக்கிறார்.

வ.வே.சு. ஐயரின் விமர்சனப் பார்வை ஐரோப்பிய மரபு சார்ந்தது. அப்பார்வையில் தமிழ் இலக்கிய மரபின் உச்சத்தை மதிப்பிடுகிறார். மாதவையரோ தமிழ் இலக்கியமரபை ஒட்டுமொத்தமாக உள்வாங்கிக் கொண்டு ஒரு விமர்சனப் பார்வையைத் தன்னுள் துலக்கித் தமிழ் இலக்கியம் குறித்ததான மதிப்பீடுகளை முன்வைக்கின்றார். இலக்கியப் புலமையாளர்களுள் பெரும்பான்மையோர் ரசனை உணர்வு கொண்டவர்களல்லர். இலக்கியப் படைப்புகள் அவை எக்காலத்தைச் சார்ந்தனவாக இருப்பினும் சுவைப் பதற்குரியன என்ற உண்மையை அவர்கள் சற்றேனும் எதிர்கொள்ளவில்லை. இவர்களுள் சைவச் சார்புடையவர்களே எண்ணிக்கையில் அதிகம். சைவச் சார்புடைய இலக்கியங்களை மட்டுமே முதன்மைப்படுத்தினர். சைவச் சார்புடைய எதுவும் உயர்ந்ததாகவே இவர்களுக்குப் பட்டது. இலக்கியப் படைப்புகளின் அழகுகளை அல்ல, தங்கள் புலமையை வெளிப்படுத்தவே எழுத்தைக் கையாண்டனர். பண்டிதப்போக்கு எனப் பின்னால் விமர்சகர்கள் வெறுத்தொதுக்கிய போக்கு, இவர்கள் எழுத்துக்களின் மூலம்தான் தமிழில் தோற்றங்கொண்டது. புதுமைப்பித்தன் போன்ற தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்கள் தங்கள் கதைகளில் இவர்களைக் கேலிச் சித்திரமாக்கினர்.

இப்போக்கின் எதிர்வினையாக ரசனைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ரசனைமுறை விமர்சனம் தமிழில் தோற்றம் கொண்டது. டி.கே.சி. எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியாரைக் கவனத்தில்கொள்ள வேண்டும். க.நா.சுப்ரமணியம் "தமிழில் இரண்டாயிரம் வருஷத்து இலக்கியத்தில் முதல் முறையாக விமரிசனம் பிறக்கிறது டி.கே.சியுடன் தான்" என தமிழ் இலக்கிய விமர்சனத்தையே டி.கே. சியிடமிருந்துதான் துவக்குகிறார். டி.கே.சி. தன் புலமையை அல்ல கவிதையின் அழகையே முதன்மைப்படுத்தினார். கவிதைக்கும் வாசகனுக்கு மிடையில் குறுக்கீட்டினை நிகழ்த்தாமல் வாசகன் கவிதையை நெருங்கும் படித் தூண்டினார். இவர் எளிமை உருவம், சந்தம், வேகம் இவற்றையே அளவுகோலாகக் கொண்டார். கவிதையின் ஆழத்தைச் சற்றேனும் பொருட்படுத்தவில்லை. கம்பராமாயணப் பாடல்களையும், நந்திக்கலம்பகப் பாடல்களையும் ஒரேதளத்தில் அவரால் எதிர்கொள்ள முடிந்தது. அதேசமயம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை அவரால் அணுக இயலவில்லை. தரமதிப்பீடுக் குறித்த உணர்வு அவருக்கிருந்தது. "தமிழ் இலக்கியத்தில் முதல்முறையாக நல்ல கவிதையுடன் பெரும்பாலான கவிதைகள் மட்டமான வைகளாகவும் இருக்கின்றன என்று சொன்னவர் டி.கே.சி. தான்." க.நா. சுப்ரமண்யத்தின் டி.கே.சி குறித்ததான இம்மதிப்பீடு மிகையானது. மாதவைய்யரின் எழுத்துக்களைப் பார்வையிடும் வாய்ப்பு, க.நா. சுப்ரமண்யத்திற்கு இல்லாதிருந்திருக்க வேண்டும். டி.கே.சி சுவைத்த பிற்காலத் தனிப் பாடல்களைத் தமிழ் மரபின் வீழ்ச்சியென்றே மாதவையர் கணித்துள்ளார். கவிதையின் ஆழங்குறித்த தேடல் மாதவையருக்கிருந்தது. இக்காரணத்தால் தான் வசனகவிதையின் வருகையை மாதவையர் எதிர்நோக்கினார், வரவேற்றார். டி.கே.சியின் பார்வையில் வசனக்கவிதை கவிதையாக முடியாது. இலக்கியத்தரம் குறித்த உணர்வு டி.கே.சி.யிடமிருந்தது. ஆனால் உரைநடை இலக்கியத்தில் டி.கே.சி., பொழுதுபோக்குக் கதை ஆசிரியர்களையே முதன்மைப்படுத்தினார். அதுபோல், தன் ரசனைக்குப் பொருந்தாதவற்றைப் படைப்பாளி எழுதியிருக்க முடியாதென்றும் வாதித்தார். ஒரு பெருங்காப்பியத்தில் அதன் பாடல்கள் ஒவ்வொன்றும் உச்சத்தை எட்டிவிடவேண்டும் என்பதல்ல. உச்சத்தை எட்டுவதற்கான படிகளாகவும் அமையக்கூடும் என்ற உணர்வு அவருக்கில்லாதிருந்தது. டி.கே.சி.யின் ரசனை அணுகுமுறை தமிழ் விமர்சன மரபில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது. ஆனால், டி.கே.சி.யின் மரபில் வந்த மகராசன், பாஸ்கரத் தொண்டைமான் போன்றோர் கவிதையை, மேடையில் நிகழ்த்துபவர்களாகவே இனங்காணப்பட்டனர்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை என்ற அரசியல் இயக்கம் பின்னடைவை நேரிட்டபோது, அதன் எதிர்வினையாகத் தமிழ் இலக் கியத்தில் 'இரண்டாவது மறுமலர்ச்சி' தோற்றங்கொண்டது. மணிக்கொடி, இம்மறுமலர்ச்சி படைப்பாளிகளின் தளமாக அமைந்தது. இது தனது தெளிவான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தது. இலக்கியத்தையும் அதனோடு தொடர்புடைய நாடக அரங்கினையும் இசை மேடையையும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாக்கியது. தமிழில் முதன்முதலாக விமர்சனத்திற்கான சூழல் தோற்றுவிக்கப்பட்டது. கு.ப. ராஜகோபாலன் தாகூர் கவிதைகள் மீதான தன் விமர்சனத்தின் மூலமாகவே படைப்புலகிற்கு அறிமுகமானார். புதுமைப்பித்தன் தமிழ் மரபிலக்கியக் கவிதைகளை விமர்சனத்திற்குள்ளாக்கினார். டி.கே.சி.யின் பார்வையின் பாதிப்பு அவரிடமிருந்தது எனினும் ஆழம் குறித்த உணர்வும் இருந்தது. இலக்கியத்தின் அடிப்படைகள் தமிழில் முதன்முதலாக விவாதிக்கப்பட்டன. கு.ப. ராஜகோபாலனும், புதுமைப்பித்தனும் துருவங்களில் நின்று விவாதித்தனர். இலக்கிய வடிவங்கள் குறித்த சிந்தனையும் எழுந்தது. 'இரண்டாவது மறுமலர்ச்சி' என்ற காலக்கணிப்பு கு.ப. ராஜகோபாலனுடையது. பாரதியின் கவிதைகளைக்கூட ஆழ்ந்த விமர்சனங்களுக்கு உட்படுத்தியே மதிப்பிட வேண்டும் என்ற நிலைபாடு புதுமைப்பித்தனுடையது. இவர்கள் இருவரும் சில பொதுமைகளையும் கொண்டிருந்தனர். ஐரோப்பிய இலக்கியத்தையும் அதனின்று பிறந்த விமர்சன மரபையும் அறிந்திருந்தனர். மணிக்கொடியின் இறுதிக் காலக்கட்டத்தில் க.நா. சுப்ரமண்யம் கால் தடம் பதித்தார். தமிழ் விமர்சன மரபை முன்னெடுத்துச் சென்ற பெருமை இவருடையது.

நாற்பதுக்களின் துவக்கத்தில் மணிக்கொடி நின்றுவிடினும், மணிக்கொடி மரபினோடு தொடர்புடைய இளம்படைப்பாளிகளான ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் இலக்கிய விமர்சனத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 1948ல் ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் வெளியானது. இலக்கிய விமர்சனத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட முதல்நூலாக இதனைக் குறிப்பிட வேண்டும். கறாரான அணுகுமுறையும் ஆளுமையைத் துலக்கும் இதன் நடையும் மணிக்கொடி மரபிற்குப் பின்வந்த விமர்சகர்களை மிகவும் பாதித்தது. ஆனால், ரகுநாதன் வளர்ச்சிப் பாதையில் மார்க்சியக் கோட்பாடு அடிப்படையிலான விமர்சனத்தை முன்னெடுத்துச் சென்றார். இவ்வகையாலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். மற்றொரு இளம்படைப்பாளியான கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தனைப் போலவே தமிழ் மரபுக் கவிதைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தினார். டி.கே.சி.யின் பாதிப்பு இவரிடமிருந்தது. கவிதையின் ஆழம்குறித்த உணர்வு டி.கே.சி.யைப் போலவே இவரிடமும் இல்லாதிருந்தது. அழகிரிசாமியும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புறக்கணித்தார். ஆனால் ரகுநாதனிடம் செவ்வியல் இலக்கியங்கள் மீதான ஈடுபாடு இருந்தது.

விடுதலையைத் தொடர்ந்த காலக்கட்டத்தில் வணிக இதழ்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டன. மத்தியத் தர மக்களின் பொழுதுபோக்குத் தேவை, உற்பத்திப் பெருக்கத்தின் விளைவாகத் தோற்றங் கொண்ட நுகர்பொருளுக்கான சந்தைக் குறித்த தேடல், நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பர யுகத்தின் தோற்றம், இவை இணைந்து வணிக இதழ்களைப் பெரும் நிறுவனங்களாக வளர்ச்சியடையச் செய்தன. பொழுதுபோக்குக் கதைமரபு வளர்ச்சி கண்டது. கல்கி, அகிலன் என்று இம்மரபு தொடர்ந்தது. பொழுதுபோக்குக் கதைகள் இக்காலக் கட்டத்தில் இலக்கியப் படைப்புகளாகத் தமிழ்க்கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்களின் ஏற்பினைப் பெற்றன. பொழுதுபோக்குக் கதையாசிரியர்கள் இலக்கியப் படைப்பாளிகளால் அங்கீகரிக்கவும் பட்டனர். வாசகர் எண்ணிக்கை அங்கீகாரத்தின் அளவுகோலாக ஏற்கப்பட்டது. இந்நிலையில், மணிக்கொடி மரபினைச் சார்ந்த படைப்பாளிகள் விமர்சன அங்கீகாரம் என்பதனை முன்னிலைப்படுத்தத் துவங்கினர். பொழுதுபோக்குக் கதைகள் மீதான எதிர்ப்புணர்வு, தரமான வாசகர் குறித்த தேடல், விமர்சன அங்கீகாரத்தின் அவசியம் குறித்த உணர்வு, இவை இணைந்து ஓர் இதழியல் மரபைத் தோற்றுவித்தன. தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் இக்காலக் கட்டத்தில் வேர்கொண்டது. இலக்கிய விமர்சனம் முதன்மைப் பெற்றது. தமிழ் விமர்சன மரபின் வளர்ச்சி இச்சிற்றிதழ் மரபினையே சார்ந்துள்ளது.

தமிழ்ச்சிற்றிதழ் மரபின் முன்னோடிகளான எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் 50களின் இரண்டாவது பகுதியில் தோற்றங்கொண்டன. இவ்விதழ்கள் இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் இடம் தந்தாலும் விமர்சனத்தை முன்னிலைப்படுத்தின. எழுத்து இதழில் மணிக்கொடி மரபினைச் சார்ந்த க.நா. சுப்ரமணியமும், சி.சு. செல்லப்பாவும் இணைந்து இயங்கினர். பொழுதுபோக்குக் கதைகளின் போலி அங்கீகாரத்தினைக் கடுமையான சொற்களில் கேள்விக்குள்ளாக்கினர். ஐரோப்பிய விமர்சன அடிப்படைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தனர். எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட், எஃப்.ஆர். லூயிஸ் போன்ற ஐரோப்பிய விமர்சன சிகரங்கள் தமிழில் விவாதிக்கப்பட்டனர். இம்மேதைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான ஐரோப்பிய விமர்சன மரபினைத் தீர்மானித்தவர்களுங்கூட, க.நா. சுப்ரமண்யம் தன் இலக்கிய அனுபவத்தை அடித்தளமாகக் கொண்ட அனுபவமுறை விமர்சனத்தை முன்வைத்தபோது, சி.சு. செல்லப்பா வடிவவியல் விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இருதுருவங்களில் நின்று விவாதித்துக் கொண்டனர். மணிக்கொடிக்குப் பின் விமர்சன அடிப்படைகள் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாயின. ஆனால், கலைச்சாதனைகளின் அடிப்படையில் படைப்பாளிகளைத் தேர்வதில் கருத்தொற்றுமை கொண்டிருந்தனர். க.நா.சு. அனுபவப் பதிவு முறை விமர்சனத்தின் மூலம் மௌனியைத் தலைசிறந்த படைப்பாளியாக இனங்கண்ட போது, சி.சு. செல்லப்பா வடிவவியல் விமர்சனத்தின் மூலம் மௌனியின் விமர்சன அங்கீகாரத்தினை உறுதிப்படுத்தினார்.

சி.சு. செல்லப்பா தன் விமர்சனப் பார்வையை நூல் வடிவம் பெறச் செய்வதில் முனைப்புக் கொண்டு வெற்றியும் கண்டார். க.நா.சு. இலக்கிய வட்டம் சிற்றிதழை வெளிக்கொணர்ந்தார். க.நா.சு.வின் விமர்சனக் கட்டுரைகள் மிக அண்மையில்தான் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. க.நா. சுப்ரமணியத்தையே தமிழ் விமர்சன மரபின் முதல் சிகரமாகக் கொள்ள வேண்டும். ஆரம்ப நாள்களில் தமிழ் மரபிலக்கியத்தைப் புறக்கணித்து வந்திருந்தாலும் பிற்காலத்தில் தமிழ் மரபிலக்கியம் குறித்த தன் விமர்சனப்பதிவுகளை முன்வைத்துள்ளார். தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். பட்டியலில் அவ்வப்போது இணங்கான முடிகிற முரண்பாடுகள் அவர் பார்வையைத் துலக்குவனவாக அமையவில்லை. ஆனால், அவர் இனங்காட்டிய இலக்கியப் படைப்புகள் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாக ஏற்கப்பட்டன.

விடுதலை பெற்ற இந்தியாவில் உயர்கல்வி வேகமாக வளர்ச்சிக் கண்டது. தமிழ்க்கல்வியாளர்கள் வட்டம் தோற்றங் கொண்டது. இலக்கியப் புலமையாளர்கள் தற்கால இலக்கியத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், கல்வி வட்ட ஆய்வாளர்கள் தற்கால இலக்கியத்தையும் ஆய்வுப் பொருளாகக் கொண்டனர். உரையாசிரியர் மரபினைச் சார்ந்தவர்களாக இவர்களைக் கொள்ள இயலாது. பொழுதுபோக்கு எழுத்துக்களுக்கு இவர்கள் தந்த விமர்சன அடிப்படையில்லாத அங்கீகாரம் சிற்றிதழ் சூழலில் இயங்கிய விமர்சகர்களிடம் எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. இவர்களை விமர்சகர்களாக ஏற்கக் கூடுமா? என்ற விவாதம் தமிழில் முடிவற்று நிகழ்ந்து வரும் விவாதங்களில் ஒன்று. இவர்களில் பெரும்பான்மையோர் இலக்கியம் குறித்த செய்திகளைத் திரட்டித் தருபவர்கள். இலக்கியப் பிரதிகளை வாசித்ததற்கான அடையாளங்களை இவர்கள் எழுத்தில் காண இயலாது. தன் முன்னோரின் பதிவுகளை விருப்பு வெறுப்பின்றி மீண்டும் மொழிவது இவர்களுடைய போக்கு. 19ம் நூற்றாண்டு ஆங்கில விமர்சகர்களின் மேற்கோள்களை எவ்விதப் பொருத்தமின்றி தங்கள் எழுத்துக்களில் கையாண்டு, தங்கள் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்திக் கொள்வர். மு.வ.வின் இலக்கிய மரபு, அ.சா. ஞான சம்பந்தனின் இலக்கியக் கலை போன்ற நூல்கள் ஹட்சனின் ஆங்கில நூலின் தழுவல்கள். ஹட்சன் ஆங்கில மரபில் விமர்சன சிகரமாக ஒருபோதும் ஏற்கப்பட்டதில்லை. சிற்றிதழில் இயங்கிய விமர்சகர்கள் சமகால ஆங்கில விமர்சன மரபைத் தமிழுக்கு அறிமுகம் செய்ய முனைந்து கொண்டிருந்தபோது, கல்வியாளர்கள் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப நிலை இலக்கிய மாணவர்களுக்கு விமர்சனம் கற்பித்தவர்களின் மேற்கோள்களைக் கையாண்டு கொண்டிருந்தனர். இலக்கியப் புலமையாளர்களைப் போலவே எண்ணற்ற நூற்களை இவர்கள் இலக்கியம் தொடர்பாக வெளியிட்டுள்ளனர். 1955ல் 'பற்றி இலக்கியமும் இலக்கிய விமர்சனமும்' என இவர்களை விமர்சகர்களாக க.நா. சுப்ரமண்யம் அங்கீகரிக்க மறுத்தபோது, 2005ல் பேராசிரியர் மருதநாயகம் "படைப்பிலக்கியம் பற்றி எழுதப்பட்ட எத்தகைய நூலையும் விமர்சன நூலாக அங்கீகரிக்க வேண்டும்" என்கிறார். ஆனால், பேராசிரியர் மருதநாயகம், "அரைத்த மாவையே அரைப்பார் போல் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர். அவர்தம் அணுகுமுறைகளில் புரட்சியோ புதுமையோ ஏதுமில்லை, மறுமதிப்பீடுகளில் அவர் ஈடுபட்டாரிலர், பொருளுள்ள புதிய இலக்கியச் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாரிலர்; புதிய உள்ளொளிகளை அவர்கள் நூல்களில் காண்பதும் அரிதாம்" என எதிர்மறையாக மதிப்பிடவும் செய்கின்றார்.

தமிழ் விமர்சன மரபில் தமிழ்க்கல்வியாளர்களின் பங்கு மிகக் குறைவானது. எனினும், தெளிவான விமர்சனப் பார்வை கொண்ட கல்வியாளர்களும் இல்லாமலில்லை. வையாபுரிப்பிள்ளை, ஏ.வி. சுப்பிரமண்ய ஐயர், தெ.பொ.மீ., ஜேசுதாசன் போன்றவர்களின் பங்களிப்பினை ஒருபோதும் மறுக்க இயலாது. தமிழ்க் கல்வியாளர்களுள் விமர்சகர்களாக இயங்கியவர்களைத் தேர்ந்துகொண்டு தமிழ்விமர்சன மரபின் வளர்ச்சிக்குக் கல்வியாளர்களின் பங்களிப்பினைத் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் உயர்கல்வி வட்டம் தன்னுடையதான விமர்சனப் போக்கு ஒன்றை உருவாக்குவதில் தோல்வி கண்டிருந்தாலும், சில இதழ்கள் அந்த இடத்தினை நிரப்ப முயன்றன. குறிப்பாக சக்தி இதழைக் குறிப்பிட வேண்டும். 1939ல் வை. கோவிந்தனால் சக்தி இதழ் தோற்றுவிக்கப்பட்டது. சக்தி இதழ் தமிழ்க் கல்வியாளர்களுக்குத் தாராளமாக இடம் தந்தது. வி.ஆர்.எம். செட்டியார், வையாபுரிப்பிள்ளை, சீனிவாச ராகவன், மு. அருணாசலம், சபரிராஜன், சந்திரசேகரன் போன்ற கல்வியாளர்களின் விமர்சனக் கட்டுரைகள் தொடர்ந்து சக்தி இதழில் வெளிவந்து கொண்டிருந்தன. சுத்தானந்த பாரதி போன்ற இலக்கியப் புலமையாளர்களும் டி.கே.சியும் சக்தி இதழில் எழுதி வந்தனர். இவர்களுடைய விமர்சனப் போக்கு சிற்றிதழ் விமர்சகர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது. கல்விவட்டத்தின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் இவர்கள் எழுத்துக்களில் இனங்காண முடிகிறது. தமிழ்க்கல்வியாளர்களின் விமர்சனப் பங்களிப்பை இவர்களின் எழுத்துக்களைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். ஒருவகையில் சக்தி இதழ் ஒரு கல்வி நிலையமாகவே செயல்பட்டது.

விடுதலைக்குப்பின் கோட்பாடு சார்ந்த விமர்சனப் போக்கும் தமிழுக்கு அறிமுகமானது. மார்க்சியர்களை இதற்கு முன்னோடிகளாகச் சுட்ட வேண்டும். விஜயபாஸ்கரனின் சரஸ்வதி இதழ் இதற்குக் களம் அமைத்துத் தந்தது. மார்க்சியக் கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த விஜயபாஸ்கரன் சக்தி இதழிலிருந்து இதற்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டார். 'இலக்கியத்தை வளர்ப்பதற்குப் பரந்த விசாலமான மனப்பான்மையும், சுதந்திரமான, சுயசிந்தனையும், சிருஷ்டி ஆர்வமும் தேவை என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற சிற்றிதழ் விமர்சகர்களுக்கும் சரஸ்வதி இடம் தந்தது. அதேசமயம் சிதம்பர ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் கா. சிவத்தம்பி, கைலாசபதி, ஆர்.கே. கண்ணன், தி.க. சிவசங்கரன் போன்ற மார்க்சியக் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்ட படைப்பாளிகளை ஒருங்கிணைத்தது. மார்க்சியப் பார்வையின் அடிப்படையிலமைந்த விமர்சன மரபு சரஸ்வதி மூலமாகத்தான் தமிழில் தோற்றங் கொண்டது. மார்க்சிய அரசியல், இலக்கியத்தையும் கட்டுப்படுத்த முனைந்தபோது சரஸ்வதியின் இயக்கம் தடைப்பட்டது. பிற மொழிகளோடு ஒப்பிடும்போது மார்க்சிய விமர்சன மரபு தமிழில் போதிய வளம் பெறாததற்கு இதுவே காரணமாக அமைந்தது. ஆனால் இலக்கியத்தைத் தத்துவ நோக்கில் அணுகும் அணுகுமுறை இவர்களால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முதல் தலைமுறை மார்க்சிய விமர்சகர்கள் தமிழ் விமர்சன மரபிற்கு ஒரு புது பரிமாணத்தைச் சேர்த்தனர்.

எழுத்து இதழில் அறிமுகமான இளம் விமர்சகர்களான வெங்கட் சாமிநாதன். தருமு சிவராமு போன்றவர்கள் மணிக்கொடி முன்னோடிகளை உள்வாங்கிக் கொண்டு மரபை முன்னெடுத்துச் செல்ல முயன்றனர். விடுதலைக்குப் பின் மணிக்கொடி முன்னோடிகள் அரசியலுக்கும் இலக்கியத்திற்குமான தொடர்பினைத் துண்டித்துக் கொண்டனர். அதுபோல் இலக்கியத்திற்கும் பிறகலைகளுக்குமான தொடர்பினையும் புறக்கணித்தனர். இப்போக்கினோடு முரண்பட்ட இளம்விமர்சகர்கள் தங்களுடையதான பாதையைத் தீர்மானித்துக் கொண்டனர். இச்சூழலில் தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் வேகம் பெறத் துவங்கியது.

சிற்றிதழ் விமர்சகர்கள் இலக்கியத்தின் மகிழ்வூட்டல் பண்பை வெறுத்தனர். தேர்ந்த வாசகர்களை முன்னிறுத்தி, படைப்பாளி இயங்க வேண்டியதின் அவசியத்தைத் தங்கள் விமர்சனங்களில் வலியுறுத்தினர். சிற்றிதழ் விமர்சனப் போக்கு அதற்கான அடையாளங்களோடு வளர்ச்சிக் கண்டது. இப்போக்கை சிறு வட்டத்திற்கான இலக்கியமாக மார்க்சிய முதல் தலைமுறை விமர்சகர்கள் தவறாக இனங்கண்டதால் விமர்சன மோதல்களும், அதன் அடிப்படையிலான இலக்கிய அரசியலும் தமிழில் வேர் கொண்டன. மார்க்சிய விமர்சகரான கைலாசபதி கடுமையான மொழியில் விமர்சிக்கப்பட்டார். கைலாசபதி மணிக்கொடி முன்னோடிகளின் இலக்கியப் பங்களிப்பினை மறுதலித்தார். சிற்றிதழின் இலக்கிய அரசியல் மணிக் கொடியிலேயே தோற்றங்கொண்டிருந்தாலும் இக்காலக் கட்டத்தில்தான் அது வேகம் பெற்றது.

ஒத்த சிந்தனையாளர்கள் தங்களுடையதான இதழைத் தோற்றுவித்துக் கொண்டனர். சிந்தனைகளில் கருத்து வேறுபாடு தோற்றங்கொண்டபோது, வேறு இதழைத் தோற்றுவித்தனர். இச்சூழலில் சிற்றிதழ்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எழுத்து இதழிலிருந்து தோற்றங்கொண்ட இளம் படைப்பாளிகளின் இதழான நடை, எழுத்து இதழின் ஆயுளுக்கு நிகரான ஆயுளைப் பெறவில்லை. இலக்கியச் சிற்றிதழ்கள் நிலையற்ற ஆயுளைக் கொண்டிருந்தாலும் விமர்சன மரபில் தங்களுடையதான பதிவை நிகழ்த்தியுள்ளன. தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் தோற்றங்கொண்ட இரு முக்கிய விமர்சகர்களாக வெங்கட் சாமிநாதனையும், தருமு சிவராமையும் குறிப்பிட வேண்டும். வெங்கட் சாமிநாதன் தன்னுடையதான தனித்த பார்வையினைக் கொண்டுள்ளார். தன் பார்வைக்கு நேர்மையாக இயங்கவும் செய்தார். இலக்கியத்தைக் கலையின் ஒரு உட்பிரிவாக இனங்கண்ட சாமிநாதன் கலையின் ஒட்டுமொத்த எழுச்சியே இலக்கிய வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றார். தமிழ்ச்சூழலில் கலை வளர்ச்சிக்கான உந்து சக்தியின் வீழ்ச்சியே இலக்கியத்திலும் பின்னடைவிற்குக் காரணம் என்றார். தமிழ்விமர்சன மரபு வெங்கட் சாமிநாதனின் விமர்சனப் பதிவுகளினூடாக விரிவான தளத்தினைப் பெற்றுக் கொண்டது. வெங்கட் சாமிநாதனின் சமகால விமர்சகரான தருமு சிவராம் இலக்கியப் படைப்புக்களின் ஆழங்களைத் துலக்குவதையே தன் விமர்சன செயல்பாடாகக் கொண்டியங்கினார். கலையின் பிறவடிவங்களைச் சார்ந்திராத இலக்கியத்தின் தனித்த இருப்பின் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார். இந்த இரு விமர்சகர்களுக்கிடையில் சிந்தனை ரீதியாகத் தோற்றங்கொண்ட விவாதம் ஆளுமைகளின் மோதலாகச் சிற்றிதழ்ச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அறுபதுக்களில் நவீனத்துவம் ஓர் இலக்கியப் போக்காக வலுப்பெற்றபோது கசடதபற சிற்றிதழ் வரிசையில் தன்னையும் சேர்த்துக் கொண்டது. படிமம், குறிப்புணர்த்தும் பாங்கு, துல்லியமான மொழி ஆகியன விமர்சன மதிப்பீடுகளின் அடிப்படைகளாக அமைந்தன. சிற்றிதழ் இயக்கம் யாத்ரா, கொல்லிப்பாவை என விரிவு கண்டபோது சுந்தர ராமசாமி போன்ற விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளும் விமர்சனத்தில் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கிய விமர்சன மரபின் வளர்ச்சியில் விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளிகளின் பங்களிப்பு மகத்தானது. இலக்கியம் குறித்ததான தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிராமல் தீவிரமான விமர்சன செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சுந்தர ராமசாமி விமர்சனத்திற்கென்றே காலச்சுவடு இதழையும் தோற்றுவித்தார். ஆரம்ப நாள்களில் சிற்றிதழாக இயங்கிய காலச்சுவடு பின் நடுநிலையிதழாக உருமாறியது. இது தமிழ்ச் சிற்றிதழ் மரபின் வீழ்ச்சியினை அடையாளப் படுத்தியது.

தமிழ்ச் சிற்றிதழ் மரபையும் விமர்சன மரபையும் இணையாகவே காணவேண்டும். ஒன்றில்லாமல் இன்னொன்றின் வளர்ச்சியை மதிப்பிடவும் இயலாது. அறுபதுகளின் பிற்பகுதியில் மார்க்சிய விமர்சகரின் இரண்டாம் தலைமுறையினர் சிற்றிதழ் இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். படிகள், பரிணாமம், பிரக்ஞை, இலக்கு, நிகழ் போன்ற இதழ்களை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். கோ. கேசவன், எஸ்.வி. ராஜதுரை, ஞானி போன்ற இரண்டாம் தலைமுறையினர் மார்க்சியத்தை ஒரு மெய்யியலாக இனங்கண்டு அதன் அடிப்படையில் இயங்கினர். மார்க்சிய விமர்சன மரபு புதுப்பரிமாணம் பெற்றது.

எண்பதுக்களில் அமைப்பியல் தமிழிற்கு அறிமுகமானது. அமைப்பியல் குறித்த தமிழவனின் நூல் இந்திய மொழிகளுள் முன்னோடியானது. பூரணச்சந்திரன், நோயல் இருதயராஜ் போன்றவர்கள் தமிழ் விமர்சன மரபின் இப்புதிய வளர்ச்சியில் பங்குகொண்டனர். 90களில் பின்னமைப்பியலும், பின் நவீனத்துவமும் புதிய வரவாக அமைந்தன. ரமேஷ்-பிரேம், அ. மார்க்ஸ் போன்ற விமர்சகர்களை இதில் குறிப்பிட வேண்டும். அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கியப் போக்கினைச் சார்ந்த படைப்புக்கள் பெருவாரியாக வெளிவராத காரணத்தினால் இப்போக்கில் அமைந்த விமர்சனம் தமிழில் போதுமான அளவிற்கு வேர் கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

90களில் இலக்கிய விமர்சன உணர்வு கொண்ட படைப்பாளியான ஜெயமோகன் தமிழ் விமர்சன மரபைப் புதிய வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளார். புதிய விமர்சனக்கோட்பாடுகளை முழுமையாகச் சார்ந்திராது அனைத்து இலக்கியப் போக்குகளின் நற்கூறுகளைத் தன்னகத்தே கொண்டு தன்னுடையதான பாதையை வகுத்துக் கொண்ட விமர்சகர் ஜெயமோகன்.

சமகாலத்தில் விமர்சன மரபில் இயங்கும் தமிழவன், வேதசகாயகுமார், ராஜ்கௌதமன், அரசு போன்றோர் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்களே. ஆனால் இவர்களுடைய விமர்சன செயல்பாடு சிற்றிதழ் சார்ந்ததாகவே அமைகின்றது.

ஈழத்தில் தமிழ்நாட்டினைச் சார்ந்திராத தனித்தன்மைக் கொண்ட ஒரு விமர்சன மரபு வளர்ந்து வளம் பெற்றுள்ளது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தில் இலக்கியப் புலமையாளர்களே செல்வாக்குப் பெற்றிருந்தனர். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவச்சார்புடைய தமிழ்க்கல்வியாளர்களே இலக்கியச் சூழலைச் தீர்மானித்திருந்தனர். ஆனால் உயர்கல்வி விரிவடைந்தபோது கல்வி வட்டம் சார்ந்த விமர்சன மரபு தோற்றங் கொண்டது. கைலாசபதி, கனகரத்தினா, கா. சிவத்தம்பி போன்ற விமர்சகர் களைக் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவரும் மார்க்சிய சிந்தனைச் சார்புடையவர்களே. இவர்கள் தோற்றுவித்த இலக்கிய அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி மு. தளையசிங்கம் விமர்சனக் குரலை எழுப்பியபோது ஈழத்தமிழ் விமர்சன மரபு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது. தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி தமிழில் மிகச்சிறந்த இலக்கிய விமர்சன நூலாக அமைகிறது. நுஃமான் போன்ற அடுத்த தலைமுறை விமர்சகர்கள் மார்க்சிய விமர்சன மரபை அடுத்தக் காலக்கட்டத்திற்குச் செலுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஈழத்தமிழர்கள் உள்நாட்டுக் கலகத்தின் காரணமாக ஐரோப்பாவில் புகலிடம் தேடியபோது ஐரோப்பிய நகரங்களிலிருந்தும் இலக்கிய இதழ்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. தமிழ் இலக்கியமும், விமர்சனமும் உலகளாவிய பார்வையைப் பெறத் துவங்கியுள்ளன. சமகாலத்தில் இணையத்தளத்தின் ஊடாகவும் இலக்கிய விமர்சனம் இயங்கிவருகிறது.

தமிழ் விமர்சனத்தின் வரலாற்றினை எழுதும் முயற்சிகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனால் இம்முயற்சிகள் போதிய ஆவணங்களைத் திரட்டியிராததின் காரணத்தினால் இடைவெளிகள் கொண்டனவாகவே அமைகின்றன. திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழ் விமர்சன வரலாற்றினை மறுவரைவு செய்வதின் கட்டாயம் இங்கு எழுகிறது.

 

ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்:அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கருவூலத்துறை அறிவிப்பால் விருதுநகர்மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுஊழியர்கள், தங்களதுஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஜூலை மாதசம்பளப் பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.

இதனால், அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும்முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் முத்துராஜ் கூறுகையில், ''அரசு திட்டங்களுக்கு ஆதார்எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிராக விருதுநகர் மாவட்டத்தில் அரசு
ஊழியர்கள் தங்களுடைய ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால்தான் ஜூலை மாத சம்பள பட்டியல் ஏற்கப்படும் எனகருவூலத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கருவூலத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், பதில் அளிக்கமறுக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட கருவூலஅதிகாரியை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 24)மாவட்ட கருவூலம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றார்

சனி, 20 ஜூன், 2015

பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்!


கோவை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதோடு, அப்படிச் செலுத்தாத குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிச் செல்லுமாறு கட்டாயப் படுத்துவதாகவும் பல பகுதிகளில் புகார்கள் எழுந்துள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்றும், அரசு ஆணையை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், காலணி, சீருடைகளை கட்டாயம் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு மாணவனை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டதையடுத்து, அந்த மாணவருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பெற்றோர் வந்து, அதே பள்ளியில் தனது மகன் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றொரு பள்ளி மீது புகார்

மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இரண்டு குழந்தைகள், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அந்தப் பள்ளியில் கட்டணம் வசூலிப்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதால், மாணவர்கள் இருவரையும் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்ததாம். இதைக் கண்டித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவரது குழந்தை, நல்லப்பா வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணப்படி, ரூ. 7,700 மட்டுமே கட்ட முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்ததோடு, ரூ. 23 ஆயிரம் முதல் தவணை யிலும், 2-வது மற்றும் 3-வது தவணைகளில் தலா ரூ. 4,500 வீதம் பணம் கட்ட வேண்டும் எனக் கூறினார்களாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் கட்ட முடியும் என்று கூறியதால், மாற்றுச்சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறதாம். இது குறித்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

இப்புகார் குறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கீதாவிடம் கேட்டபோது, "புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புகார்தாரரை, வரும் 22-ம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளோம். அன்று, எங்களது அலுவலக ஊழியரும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் செல்ல உள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தினால் போதும் என அறிவுdறுத்தல் வழங்கியுள்ளோம்" என்றார்.


 

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்


ஐஐடி போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி தமிழக மாணவர்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம் போலவே, இந்த ஆண்டும் ஐஐடி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 18 ஐஐடிக்களில் உள்ள 10,066 மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் மொத்தம் 26,456 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 33 மட்டுமே. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 65 ஆக இருந்தது. இது மிகவும் குறைவு என கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் அதில் பாதியளவு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 57 விழுக்காட்டினர், அதாவது 15,311 பேர் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 2938 பேரும் (11.10%), மராட்டிய மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் 1,787 பேரும் (6.76%), ராஜஸ்தான் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேரும் (6.08%) ஐஐடிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

கல்வியில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் பிகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் கூட குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் தான் இந்தப் பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தேசிய அளவில் பார்க்காமல் மாநில அளவில் பார்த்தாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2815 பேர். இவர்களில் 451 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களில் 1045 பேர் இத்தேர்வை எழுதி அவர்களில் 418 பேர் அதாவது 40% தேர்ச்சி எழுதினர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 1770 பேர் இத்தேர்வில் பங்கேற்று 33 பேர் அதாவது 1.66% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் எவ்வளவு மோசமான நிலைமையில் உள்ளது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்களே விளக்கும்.

நடப்பாண்டில் மட்டும் தான் இந்த நிலைமை என்று இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த அக்கறையும் இல்லாத தமிழக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மாணவர்களுக்கு ஏட்டு சுரைக்காயை விற்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தகுதிப் படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ்நாடு பாடத்திட்டமோ மனப்பாட கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உயர் தொழில்நுட்பக் கல்வி பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதற்கு தமிழக அரசின் தொலைநோக்கற்ற கல்வித் திட்டம் தான் முதன்மைக் காரணம் என்றாலும், இந்த அவலநிலைக்கு தமிழகத்தைத் தள்ளியதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பங்கு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆந்திரா மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்களை விட தமிழக மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், இப்பந்தயக் குதிரைகள் கண் மறைப்பு கட்டப்பட்டு மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு ஆகிய இலக்குகளை நோக்கி ஓட வைக்கப்படுவதால் இதைவிட சிறந்த இலக்குகள் எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. ஐஐடி கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்களும் விளக்குவதில்லை. நடப்பாண்டில் 9 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 1770 பேர் (0.20%) மட்டுமே ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மாணவர்களின் நலன் கருதி அத்திப் பூத்தாற்போல் செயல்படுத்தப்படும் சில நல்லத் திட்டங்களும் தொடர்வதில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை இத்தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு FIIT- JEE நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இத்திட்டம் கடந்த ஆண்டுடன் கைவிடப்பட்டு விட்டது. இப்போதைய நிலையில், ஐஐடி போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி தமிழக மாணவர்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை சிறந்த நிறுவனங்கள் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


 

இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு!

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் குறிப் பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப் பதுடன் பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற வேண்டும். இதுவரையில் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அமைப்பானது பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த் தப்படும் என்று அண்மையில் அறிவித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.

பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் சூழல் உருவான நிலை யில், அதற்குரிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மேற்கொண்டது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் என்சிடிஇ உத்தரவின்படி பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? அல்லது தொடர்ந்து ஓராண்டாகவே நீடிக்குமா? என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இதற்கிடையே, ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் தயாரித்த 2 ஆண்டு கால பாடத்திட்டத்துக்கு அதன் சிண்டிகேட் குழு கடந்த மே மாதம் 20-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலை யில், என்சிடிஇ வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் விதிமுறைகளை (பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதி கரிப்பு) 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரி களிலும் நடை முறைப்படுத்துமாறு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசா ணையை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா நேற்று முன் தினம் (18-ம் தேதி) வெளியிட்டார்.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழக கல்விக்குழு வின் கூட்டம் பல்கலைக்கழக அலுவல கத்தில் நேற்று நடந்தது. கல்விக்குழு தலைவரான துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்களான கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன் உள்பட 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பி.எட். படிப்பு காலத்தை 2015-16 கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டதாக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் 'தி இந்து' விடம் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பி.எட். படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி காலம் 40 நாட்களாக இருந்தது. இனி மேல் அது 20 வாரங்களாக இருக்கும். முதல் ஆண்டில் 6 வாரங் களும், 2-ம் ஆண்டில் 14 வாரங்களும் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏதாவது ஒரு பள்ளியில் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவர். கற்பித்தல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அத்துடன் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன் படுத்தி பாடம் நடத்துதல், விளையாட்டு, யோகா, கலை மற்றும் கைவினை போன்றவற்றுக்கும் அதிக முக்கியத் துவம் தரப்படும். 2015-16-ம் கல்வி ஆண் டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.



 

நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது!


பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல் நடந்த நுழைவுத் தேர்வில் 'அறிவியல் புனைகதை'களில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையான முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

கேள்வித் தாளில் அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, யாரோ ஒருவர் பதில்களை ஒவ்வொன்றாகப் படிக்க, வெவ்வேறு தேர்வு மையங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்போன் வாயிலாக அதைக் கேட்டு எழுதியிருக்கிறார்கள். இதற்காக சிறப்பான மேல்சட்டை அணிந்து அதற்குள் செல்போனை மறைத்து வைத்திருக் கிறார்கள். 'இந்த சேவைக்காக' ஒவ்வொரு மாணவரும் 15 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறார்கள்.

3,000 இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த நுழைவுத் தேர்வு நேர்மையற்றவர்களின் செயலால் சீர்குலைந்து விட்டது. கடந்த ஆண்டும் இதே போன்ற மோசடி நடந்திருக்கிறது என்று பிடிபட்டவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

பணம் கொடுத்த மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு, ஒரே இடத்திலிருந்து பதில்களை அளிப்பது என்றால் துணிச்சல், திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அதிகார வர்க்கத்தின் ஆசி இல்லாமல் நிச்சயம் நடந்திருக்கவே முடியாது. பிஹாரில் பள்ளியிறுதித் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு ஜன்னல் வழியாக 'பிட்'டுகளைத் தூக்கி வீசியதைப் போல அல்ல இது. கல்வி, நேர்மை குறித்து கவலைப் படாத பணக்காரர்கள் சிலர் செய்திருக்கும் உயர் மட்ட ஊழல்.

அலைபேசியில் பதிலைக் கேட்டு வாங்கியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுடைய தேர்வை ரத்து செய்யலாம் என்று சி.பி.எஸ்.இ. கூறிய யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்திருப்பது சரிதான். செல்போனில் தொடர்புகொண்டவர்கள் போக, வேறு யார் யார், எந்தெந்த வகையில் அந்தக் கும்பலிடம் உதவி பெற்று எழுதியிருப்பார்களோ, யாருக்குத் தெரியும்?

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் (ஜூலை 15-க்குள்) மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்துமாறு உத்தர விட்டிருந்தது. எனினும், ஏற்கெனவே பல தேர்வுகளை நடத்தியி ருந்ததால் பணிச்சுமை அதிகம் என்றும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. கோரியிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 17-க்குள் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ-க்கும் இது கூடுதல் சுமைதான். ஆனால், நடந்திருக்கும் விஷயத்துக்கு விரைவில் தீர்வு காணவில்லை என்றால், அது பல மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.

பல்கலைக்கழகங்களும் சுயாட்சிக் கல்லூரிகளும் நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை இல்லாததால்தான் இந்த நுழைவுத் தேர்வு வந்தது. நம்முடைய கல்வியின் தரம் மட்டுமல்ல, கல்வித் துறையைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஏன் மாணவர்களின் நேர்மைகூட சந்தேகத்துக்குள்ளாகிவிட்டது. இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் துளிகூடத் தாமதிக்காமல் உடனே செய்துமுடிக்க வேண்டும்.


 

வெள்ளி, 19 ஜூன், 2015

TRB PG TAMIL: உரைநடை வளர்ச்சி

அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.

5.1.1 உரைநடை முன்னோடிகள்

அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

• வ.உ.சிதம்பரம் பிள்ளை

தேச விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்,மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி நூல்களைத் திருக்குறள் கருத்துக்களை ஒட்டி விளக்கி எழுதியுள்ளார். மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும், மேடைப்பேச்சுப் பயிற்சியும் இருந்தபடியால் வ.உ.சி.யின் நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது என்கிறார் மு.வரதராசனார்.

பழைய நாரதர் என்ற புனைபெயர் கொண்டு நகைச்சுவையும் வீரச்சுவையும் மிகுந்த கட்டுரைகள் பல எழுதினார் சுப்பிரமணிய சிவா.

• மறைமலையடிகள்

மறைமலையடிகளால் இயற்றப் பெற்ற பல்வகை உரைநடை நூல்கள் பின்வருமாறு:

1) அறிவியல் நூல்கள்

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி.

2) நாவல்

குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

3) ஆராய்ச்சி நூல்கள்

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப் பாட்டு ஆராய்ச்சி,மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், சிவஞான போத ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி.

4) கட்டுரை நூல்கள்

தொலைவில் உணர்தல், மரணத்தின்பின் மனிதர் நிலை, சிந்தனைக் கட்டுரைகள், இளைஞர்க்கான இன்றமிழ், சிறுவர்க்கான செந்தமிழ், உரைமணிக்கோவை, அறிவுரைக் கோவை, வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர், தமிழர் மதம், சைவ சித்தாந்த ஞானபோதம், பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்ற நூல்களுடன், இந்தி பொது மொழியா?, சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூல்களும் திருவாசக விரிவுரையும் எழுதி உள்ளார். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததால் தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று போற்றப்படுகிறார்.

• திரு.வி.கலியாண சுந்தரனார்

தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும் விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை எளியது; இனியது. இவரது பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்தி என்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம். மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

• பிறர்

க.ப.சந்தோஷம், மகிழ்நன் என்ற புனை பெயரில் வடக்கும் தெற்கும் என்ற நூலை எழுதியுள்ளார். பா.வே.மாணிக்க நாயக்கர் கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும், அஞ்ஞானம் என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவ்விருவரும் தமிழில் நகைச்சுவை இலக்கியத்தை வளர்த்தவர்கள்.

செல்வக்கேசவராய முதலியார் திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ், தமிழ் வியாசங்கள், வியாச மஞ்சரி, கண்ணகி கதை, அவிநவக் கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப் பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும் மெருகும் தந்தார்.

பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரைநடைக் கோவை என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது இவர் நடை.

சோமசுந்தர பாரதியார் தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாயமுறை என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

• பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை

அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியவர் ரா.பி.சேதுப்பிள்ளை. ஊரும் பேரும், வேலும் வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும், தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.

• பேராசிரியர். அ.சிதம்பரநாத செட்டியார்

அ.சிதம்பரநாத செட்டியார் பழந்தமிழ்ச் சொற்களை இடையிடையே கலந்து மெருகு ஊட்டி எழுதுவதில் வல்லவர். முன்பனிக்காலம், தமிழோசை, தமிழ்காட்டும் உலகு என்பன அவர் எழுதிய சில நூல்கள். ஏ.சி.செட்டியார் என்று அன்புடன் அழைக்கப் பெற்றவரும் இவரே!

• உ.வே.சாமிநாத அய்யர்.


தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச்சுருக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

• பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை

வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம் முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

5.1.2 சிறுகதை

பாரதியார், வ.வே.சு. ஐயர், புதுமைப்பித்தன் போன்ற சிறந்த எழுத்தாளர்களால் வளர்க்கப் பெற்ற சிறுகதை இலக்கியம் அதற்கென ஆரம்பிக்கப் பெற்ற மணிக்கொடி பத்திரிகையால் மேலும் உரம் பெற்றது.

• பாரதியார்


பாரதி பரம்பரை என்றொரு பரம்பரையே படைத்திட்ட பாரதி சிறுகதைத் துறையில் மட்டுமன்றி கவிதை, பத்திரிகை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனப் பல்துறையிலும் சிறந்து விளங்கியவர். இவரது சிறுகதைகள் பல சொந்தக் கதைகள் கட்டுக்கதைகள், நிகழ்வுக் கோவைகளாகவே நின்று விடுகின்றன. உயர்ந்த கலைவடிவம் இல்லை. கதைக்கொத்து, நவதந்திரக் கதைகள்-தொகுதிகள், ஆறில் ஒரு பங்கு, பூலோக ரம்பை, திண்டிம சாஸ்திரி, ஸ்வர்ணகுமாரி என்பன குறிப்பிடத்தக்கன. சின்ன சங்கரன் கதை, சந்திரிகையின் கதை என்ற இரண்டும் நாவலைப் போல் அமைந்தவை. புதுவையில் வசித்த போது 11 தாகூரின் கதைகளை மொழி பெயர்த்து இருக்கிறார். அதன் நடை உள்ளத்தைக் கவர்வது, இதுவே சிறுகதைத் துறைக்குப் பாரதி புரிந்த தொண்டு.

• வ.வே.சு ஐயர்


தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் சிறுகதை இலக்கணத்திற்கு ஏற்ற கதைகளை அந்தக் காலத்திலேயே எழுதியவர். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற நூல் எட்டுக் கதைகளைக் கொண்டது. குளத்தங்கரை அரசமரம் என்பது தமிழில் தோன்றிய முதல் சிறுகதை. குழந்தை மணத்தைக் கருவாகக் கொண்டது இக்கதை. ஒரு குளக்கரையில் நிற்கும் அரசமரமே கதை கூறுவதாகக் கொண்டு அமைகிறது. மொத்தம் 8 கதைகளே படைத்திருந்தாலும் வடிவம் பற்றிய விழிப்பைத் தொட்டுக் காட்டியவர். சிறுகதையில் சில சோதனைகள் செய்து சாதனை புரிந்தவர். குளத்தங்கரை அரசமரம் தவிரப் பிற கதைகள் ஆசிரியர் கூற்றாகவே அமைந்தாலும் உயிரோட்டம் மிக்கநடை, காவியச் சாயல், நாடகப்பாணி என்பன இவர் கதைகளில் அமைந்துள்ளன.

• புதுமைப்பித்தன்


1933இல் சிறுகதை வளர்த்த இதழான மணிக்கொடியில் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்தவர் சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். அவருடைய சிறுகதைகளில் வறுமையின் விளைவுகள், சமூகச் சிக்கல்கள், மக்களின் மூட நம்பிக்கைகள் ஆகியன அடிப்படையாக அமையும். அவரது கதைகளில் கேலியும் கிண்டலும் நையாண்டியும் நிறைந்து இருக்கும்.

தாம் காணும் காட்சிகளையும் கருதும் கருத்துகளையும் சிறுகதைகள் வாயிலாகவே தமிழர்க்கு உணர்த்திவிட முடியும் என நம்பியவர் புதுமைப்பித்தன்.

புதிய கருக்கள், அதற்கேற்ற புதிய வடிவங்கள், அவற்றை வெளிப்படுத்தும் புதிய உத்திகள், புதுவகையான நடை, சமுதாய சுகவாசிகளைக் கண்டு ஏங்கிக் கலங்கும் இரக்க நெஞ்சம் இவை எல்லாம் அவரது கதைக்குப் புத்துயிர் ஊட்டின.

சிறுகதை மன்னன் என்று பாராட்டப் பெறும் இவர், உலகத்துச் சிறந்த சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். 1941க்கு முன்அகலிகை என்ற கதை எழுதிப் புரட்சி செய்த இவரே சாப விமோசனம் என்ற மற்றொரு கதையையும் எழுதிப் புரட்சி செய்கிறார். அகல்யை கதையில் கௌதமர் அகலிகையையும் இந்திரனையும் மன்னித்து விடுகிறார். ஆனால் சாப விமோசனம் கதையில் கௌதமர் விரக்தியினால் துறவியாகிறார். அகலிகை சாபவிமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடைக்காதா என்று ஏங்குகிறாள். மனதளவில் கல்லாகிப் போகிறாள் என்பது கதை.

ஆண்மை, கல்யாணி, பொன்னகரம் போன்ற கதைகளில் வாழ்க்கைச் சித்திரத்தை வடிக்கிறார் புதுமைப்பித்தன். வேதாளம் சொன்ன கதை, கட்டில் பேசுகிறது, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்பன கற்பனைக் கதைகள். காஞ்சனை என்பது மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே உள்ள கதை. துன்பக்கேணி கதை இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண் பற்றியது. தன்னைக் கெடுத்த மானேஜர் தன் மகள் கற்பையும் அழித்தான் என அறிந்து அவனைக் கொலை செய்து விடுகிறாள் அந்தத் தாய். இவ்வாறு கொடுமையை எதிர்க்கும் பாத்திரங்களையும் புதுமைப்பித்தன் படைத்துள்ளார்.

• இராஜாஜி

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சமுதாய முன்னேற்றம் குறித்த சில கதைகளை எழுதியுள்ளார். அன்னையும் பிதாவும், தேவானை, முகுந்தன் பறையனான கதை என்பன அவற்றுள் சில.

• கு.ப. இராஜகோபாலன்

ஆண்-பெண் உறவுகளைக் கதைக்கருவாகப் படைப்பதில் நிகரற்றவர் கு.ப.இராஜகோபாலன். அவரது கதைகளுள் விடியுமா என்ற சிறுகதை, சிறுகதை இலக்கணத்திற்குரிய கூறுகள் அனைத்தும் கொண்டது. காணாமலே காதல், புனர்ஜன்மம், கனகாம்பரம் முதலியன அவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும்.

• பி.எஸ். இராமையா

மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய பி.எஸ்.இராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி உள்ளார். நட்சத்திர குழந்தைகள் என்பது இவர் புகழ் பெற்ற கதை.மணிக்கொடி காலம் என்ற இவரது நூல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

• கல்கி


கல்கி அவர்களின் கேதாரியின் தாயார், வீணை பவானி, கணையாழியின் கனவு, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, மயிலைக்காளை முதலிய கதைகள் நம் நெஞ்சம் கவர்பவை.

• மௌனி

சிறுகதை எழுதுவதில் புதுப்போக்கு உடையவர் மௌனி. ஒருமுறை படித்தவுடன் அவரது கதைகள் புரிந்து விடுவதில்லை. அழியாச்சுடர், மனக்கோலம், சாவில் பிறந்த சிருஷ்டி, பிரபஞ்ச கானம்போன்ற பல சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று இவர் போற்றப்படுகிறார்.

• ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தியின் ஒருநாள், நல்ல வீடு, திருடி, கலையும் பெண்ணும், முள்ளும் ரோஜாவும், கொலுபொம்மை போன்ற சிறுகதைகள் மனதில் நிற்பவை. மணிக்கொடி எழுத்தாளர். சிறுகதை இலக்கணம் பயில ஏற்புடையன இவர் கதைகள்.

• தி. ஜானகிராமன்

தஞ்சாவூர்ப் பகுதியை நம் கண்முன் கொண்டு வரும் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர் தி. ஜானகிராமன். சிவப்பு ரிக்ஷா, தேவர் குதிரை, அக்பர் சாஸ்திரி என்பன குறிப்பிடத்தகுந்த கதைகள்.

• தி.ஜ. ரங்கநாதன்

பல்துறை வல்லுநரான தி.ஜ.ரங்கநாதன் சிறப்புப் பெறுவது தம் சிறுகதைகளால் தான்.சந்தனக் காவடி என்பது 1938இல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி. நொண்டிக்கிளி, சமத்து மைனா, வீடும் வண்டியும், காளிதரிசனம், விசை வாத்து, மஞ்சள் துணி என்பன முக்கியமான கதைகள்.

• துமிலன்

துமிலன் என்ற புனைபெயர் கொண்ட ந.ராமசாமி விந்தையான புத்தகங்கள், ஸ்ரீமதி கண்டக்டர் போன்ற 11 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• க.நா. சுப்ரமணியம்

க.நா. சுப்ரமணியம் ஹைதர் காலம், காட்டுமல்லிகை, வாடாமலர், தோட்டியை மணந்த அரசகுமாரி போன்ற கதைகளை எழுதியுள்ளார். கருவால் சிறந்த வரலாற்றுச் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

• கி.வா. ஜகந்நாதன்

கலைமகள் பத்திரிகை வாயிலாகச் சிறந்த கதையாசிரியர்களை அறிமுகப்படுத்தியவர் கி.வா.ஜகந்நாதன் கலைமகளில் பல தரமான கதைகள் எழுதி உள்ளார். அறுந்த தந்தி, வளைச் செட்டி, பவள மல்லிகை, கலைஞன் தியாகம், அசையா விளக்கு, கோவில்மணி, கலைச்செல்விஎன்பன இவரது சிறுகதைத் தொகுதிகள்.

• சிட்டி

சிட்டி என்ற பெயருடைய பெ.கோ.சுந்தர்ராஜன் மணிக்கொடி எழுத்தாளர். மதுவிலக்கு மங்கை, அந்தி மந்தாரை, என்ற 2 சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவர்.

• சி.சு. செல்லப்பா

மணிக்கொடி எழுத்தாளரான சி.சு,செல்லப்பா புதுமை இலக்கியப் போராளி. சரஸாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, சத்யாக்ரகி, வெள்ளை என்ற 5 தொகுதிகள் இவருடையது.

• கரிச்சான் குஞ்சு

கலைமகள் இதழில் கதைகளைப் படைத்தவர்.

• லா.ச. ராமாமிருதம்

தனக்கென்று தனிச் சிந்தனைப் போக்கும் தனிநடையும் உடையவர் லா.ச.ரா எனப்படும் லா.ச. ராமாமிருதம். அவருடைய கதைகளில் ஒரே விதமான தத்துவம் அடிக்கடி படைக்கப்படுகிறது. அது பலர்க்கும் எளிதில் புரிவதில்லை. ஜனனி, இதழ்கள் என்பன அவரது சிறந்த கதைகள். 5 சிறுகதைத் தொகுப்புகளை அவர் படைத்துள்ளார்.

• வல்லிக்கண்ணன்

500 சிறுகதைகளுக்கு மேல் எழுதிப் புகழ்பெற்றவர் வல்லிக்கண்ணன். சந்திர காந்தக்கல்என்பது இவருடைய முதல் சிறுகதை. கல்யாணி முதலிய கதைகள், நாட்டியக்காரி, ஆண் சிங்கம், வாழ விரும்பியவன் முதலியன இவரது கதைத் தொகுதிகள்.

• சிதம்பர இரகுநாதன்

பொதுவுடமைக் கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதியவர்களில் சிதம்பர இரகுநாதனும் ஒருவர். ஞானோதயம், ஆனைத்தீ, சேற்றில் மலர்ந்த செந்தாமரை, அபாய அறிவிப்பு மனைவி, ஞானமணிப் பதிப்பகம் போன்ற கதைகள் பல எழுதி உள்ளார். பிற மொழிகளிலிருந்து கதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்ப்புச் செய்து தந்துள்ளார்.

• கி.ராஜ நாராயணன்


கரிசல் காட்டு வாழ்வைக் கண்முன்னே நிறுத்துபவர் கி. ராஜ நாராயணன். கதவு, கன்னிமை, வேட்டி, கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், கரிசல் கதைகள், கொத்தைப் பருத்தி, தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்பன இவர் படைப்புகள்.

• பிறர்

இவர்களைத் தவிர டாக்டர் மு.வரதராசனார், விந்தன், அகிலன், டி.கே.சீனிவாசன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன் போன்றவர்களுடன் அநுத்தமா, லட்சுமி, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கோமகள், சரஸ்வதி ராம்நாத் போன்ற பெண் எழுத்தாளர்களும் தோன்றிச் சிறுகதை உலகைச் செழிக்கச் செய்திருக்கின்றனர்.

5.1.3 நாவல்

வேதநாயகம் பிள்ளையும் இராஜம் ஐயரும் மாதவையாவும் தொடங்கி வைத்த நாவல் இலக்கியம் வரலாற்று நாவல், துப்பறியும் நாவல், மொழிபெயர்ப்பு நாவல் எனப் பல கிளைகளாக வளர்ந்தது.

• துப்பறியும் நாவல்கள்

மேலைநாட்டு நாடகங்களில் வரும் பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் தமிழ் நாவல்களில் உலவவிட்டு வெற்றி கண்டவர் ஆரணி குப்புசாமி முதலியார். வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஜே.ஆர். ரங்கராஜூ, தி.ம.பொன்னுச்சாமி, பி.டி.சாமி என்போர் அக்காலத்தில் துப்பறியும் நாவல்களையும் மர்ம நாவல்களையும் 'ரெயினால்ட்ஸ்' என்பவரை அடியொற்றி எழுதிப் புகழ் பெற்றவர்கள்.

எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு தாம் நடத்திய பிரஜானுகூலன் என்ற திங்கள் இதழில் துப்பறியும் மர்மத் தொடர்களையும் வெளியிட்டுள்ளார். வடமொழி விரவிய நடையில் ஆனந்த கதாகல்பம்,பரிமளா என்ற 2 நாவல்களை எழுதியுள்ளார்.

• வரலாற்று நாவல்கள்

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று போற்றப்பெறும் கல்கி அவர்கள் தொடர்கதை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தியவர். அலையோசை, தியாகபூமி, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற சிறந்த வரலாற்று நாவல்களைப் படைத்தவர். இவரது இறுதி நாவலான அமரதாராவை இவர் மகள் ஆனந்தி முடித்தார்.

1865இல் தி.த.சரவண முத்துப்பிள்ளை என்பவரால் எழுதப் பெற்ற மோகனாங்கி என்ற நாவலே தமிழில் தோன்றிய முதல் சரித்திர நாவலாகும். நாயக்கர் மன்னர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்ற நூல் இது.

• விடுதலை இயக்க நாவல்கள்

1926இல் தேசிய விடுதலை உணர்வினை நேரடியாகப் பேசிய நாவல் பனையப்ப செட்டியாரின் காந்திமதி. மாணிக்கவாசகன், அமிர்தம், சண்முக நாதன், சந்திரசேகரன் என்பன இவர் படைத்த பிற நாவல்கள்.

1930இல் தேசிய இயக்க நாவலாக வெளிவந்தது கே.எஸ்.வேங்கட ரமணியின் தேசபக்தன் கந்தன். ஆசிரியரின் அடுத்த நாவல் முருகன் ஓர் உழவன்.

சத்யாக்கிரகம் பற்றிய முதல் நாவல் சாண்டில்யன் எழுதிய பலாத்காரம் என்பதாகும்.

• பெண் பிரச்சனை நாவல்கள்

பாரதியின் தலைமைச் சீடரான வ.ரா, சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு, சின்னச்சாம்பு,கோதைத்தீவு, விஜயம் என்ற 4 புதினங்கள் படைத்தார். நான்கிலுமே பெண்முன்னேற்றச் சிந்தனைகள் தான் உள்ளன. அக்காலத்திலேயே விதவைத் திருமணம், சமுதாயச் சீர்திருத்த சிந்தனைகள் பற்றி எழுதியவர் இவரே.

• கிராமிய நாவல்கள்

மண்மணம் கமழும் நாவல் படைத்தவர்களுள் முன்னோடி சங்கரராம் என்ற டி.எல்.நடேசன்.மண்ணாசை என்ற இவரது நாவல் முதல் முழுகிராமிய நாவல். இன்ப உலகம், வீர சிற்பி, நீலா, பானா பரமசிவம், பெண் இனம், பார்வதி, தீயும் வெடியும், நாட்டாண்மைக்காரன், காரியதரிசி, அருள்பண்ணைஎன்ற நாவல்களையும் படைத்துள்ளார்.

• சமூகச் சீர்திருத்த நாவல்கள்

நாகை கோபால கிருஷ்ணப் பிள்ளை, பத்மரேகை அல்லது கற்பகச் சோலை ரகசியம்,தனபாலன், சந்திரோதயம், அலைகடல் அரசி என்ற சமுதாயச் சீர்திருத்த நாவல்களை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதி எதிர்ப்புகள் பல சம்பாதித்தவர்.

சுதந்திரம் பெற்ற பிறகு நாவல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடியது. அவர்கள் எடுத்துக் கொண்ட கருத்துகளும் பல்வேறு வகையானவை.

5.1.4 மொழிபெயர்ப்பு

ஆங்கிலக் கல்வி பெற்றுப் பல்வேறு பதவி வகித்த சான்றோர் பலர் வடமொழியில் இருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் தாமறிந்த பிரெஞ்ச், ஸ்வீடிஷ் போன்ற மொழிகளில் இருந்தும் மொழிபெயர்ப்புச் செய்து தமிழை வளப்படுத்தினர்.

பண்டிதமணி என்று போற்றப் பெற்ற கதிரேசன் செட்டியார் மண்ணியல் சிறுதேர், மாலதி மாதவம், கௌடிலீயம், சுக்கிர நீதி, பிரதாப ருத்திரீயம் போன்றவற்றை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார். இவரது உரைநடை தனித்தன்மை வாய்ந்தது.

அண்ணல் காந்தியின் ஆங்கிலத்தைத் தமது ஏடுகளில் சின்னச் சின்ன வாக்கியங்களாக மொழிபெயர்த்து எழுதியவர் திரு.வி.கலியாண சுந்தரனார்.

ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கில அறிஞருடைய கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி வ.உ.சி அவர்கள் மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என்ற 3 நூல்களாகத் தந்துள்ளார்.

செந்தமிழ் இதழின் முதல் ஆசிரியரான ரா.ராகவ ஐயங்கார், பகவத் கீதையையும் சாகுந்தல நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார்.

முத்தமிழிலும் வல்ல இலக்குமணப் பிள்ளை ஆங்கில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் மில்டனின் சுவர்க்க நீக்கம், ஸ்பென்சர் எழுதிய கல்விஎன்ற இரண்டையும் மொழிபெயர்த்தார்.

தமிழ் மக்களுக்குத் தாகூரின் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர்கள் வி.ஆர்.எம்.செட்டியார், அரங்க.சீனிவாசன், இளங்கம்பன் ஆகியோர்.

ஜமதக்னி என்பவர் இந்தி மொழியிலிருந்து காமன் மகள் என்ற காப்பியத்தை மொழிபெயர்த்தார். காளிதாசரின் மேக சந்தேசம் என்ற நூலும் செய்யுள் வடிவில் இவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

சேக்ஸ்பியர் நாடகங்கள் ஒன்பதைத் தமிழ்க் கவிதையாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் அ.கு. ஆதித்தர், கபீர்தாசர் பாடல்கள், காளிதாசர் உவமைகள் என்ற நூலையும் எழுதினார்.

ச.து.சு.யோகியார் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும், வுட்ரோ வில்சனின் வாழ்க்கை வரலாறு, தாஸ்தாவஸ்கியின் கார்மேஸாவ் சகோதரர்கள், இதுதான் ரஷ்யா என்ற நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

உலகத்துச் சிறந்த சிறுகதைகள். தெய்வம் கொடுத்த வரம் என்ற 2 மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் உலகத்திலுள்ள சிறந்த சிறுகதைகளை எல்லாம் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து தந்துள்ளார்.

இந்திய மொழிகளுள்ளேயே மொழிபெயர்ப்புச் செய்வதும் நம் இந்திய விடுதலைக்கு முன்பே துவங்கி விட்டது. வங்கமொழியில் இருந்து ஏராளமான கதை, கட்டுரை, கவிதை, நாவல் என்பன தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. அன்னிய மொழிகளில் ரஷ்ய மொழியில் இருந்து ஏராளமாக மொழி பெயர்க்கப்பட்டன. இந்தி, மராத்திய மொழியிலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டன. பிரெஞ்சு, ஜெர்மன், மொழிகளிலிருந்தும் சிலர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

5.1.5 திறனாய்வு

விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று ஒரு நூலை ஆராய்ந்து கூறுதல் திறனாய்வு ஆகும். இவ்வாறு கூறும் திறனாய்வு பல வகைப்படும். பாராட்டி மட்டும் செல்வது, குறை மட்டும் கூறுவது, ஒப்பிட்டு மட்டும் கூறுவது, விளக்கி மட்டும் கூறுவது என்பன அவற்றுள் சில. விடுதலைக்கு முந்திய நம் தமிழறிஞர்கள் எதையெல்லாம் பற்றித் திறனாய்வு செய்துள்ளனர் என இனிக் காண்போம்.

திருவள்ளுவர், சேரர் தாயமுறை, சேரர் பேரூர், தசரதன் குறையும் கைகேயியின் நிறையும், நற்றமிழ் ஆராய்ச்சிகள் என்ற நூல்களில் தனது வாதத்திறமையை நிரூபித்தவர் சோமசுந்தர பாரதியார்.

தமிழிலக்கியங்களைப் பற்றிய கால ஆராய்ச்சியில் இறங்கி முதன் முதலில் அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சி முடிவுகளை அளித்தவர் வையாபுரிப் பிள்ளை. தமிழ்ச்சுடர் மணிகள், இலக்கிய தீபம், இலக்கிய உதயம், இலக்கியச் சிந்தனைகள், சொற்கலை விருந்து, காவிய காலம், தமிழின் மறுமலர்ச்சி, தமிழர் பண்பாடு, உலக இலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை உரை, கம்பன் காவியம், இலக்கணச் சிந்தனைகள் என்ற 12 நூல்கள் படைத்தவர். இலக்கியங்களில் அறிவாராய்ச்சி அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர். திறனாய்வுக் கலையின் திறப்பாளர்.

சொல்லின் செல்வர் என்று புகழப் பெறும் ரா.பி.சேதுப்பிள்ளை சொல்லாராய்ச்சியில் வல்லவர். Tamil words and their significance என்பது இவரது நூல்.

தமிழ் ஆய்விற்குத் தடம் போட்டுத் தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் மு.இராகவையங்கார். தம் கல்வெட்டறிவின் துணையால் ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க் கவிசரிதம், இலக்கியச் சாசன வழக்குகள் என்ற நூல்களைப் படைத்துள்ளார்.

வேங்கடராஜூலு ரெட்டியார் வடமொழியும் திராவிட மொழிகளும் அறிந்தவர். அந்த மொழிகளின் இலக்கணங்களையும், சொல் அமைப்பையும் ஒப்பிடும் ஆராய்ச்சியில் தேர்ந்தவர். பழைய இலக்கண நடையில் பல கட்டுரைகளும் சில ஆராய்ச்சி நூல்களும் எழுதியுள்ளார்.

ஒழுங்காகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர் மயிலை.சீனி.வேங்கடசாமி. கிறித்தவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூல்கள் அவரது நுண்ணறிவைக் காட்டும்.

இந்திய அரசால், National Professor of Humanities என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற தெ.பொ.மீ அவர்கள் தமிழ் மொழியியலின் தந்தையாவார். வள்ளுவரும் மகளிரும், அன்புமுடி, பிறந்தது எப்படியோ? கானல்வரி, குடிமக்கள் காப்பியம், தமிழும் பிற பண்பாடும், பாட்டிலே புரட்சி, சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, வாழும் கலை, தேனிப்பு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்.

தனியொரு நூலைப் பலர் பலகோணங்களில் இருந்து திறனாய்வு செய்து புகழ் பெற்றுள்ளனர். சிலம்பைப் பற்றித் திறனாய்வு செய்தவர்களில் மார்க்கபந்து சர்மா, மா.பொ.சி, மு.வ, ந.சஞ்சீவி, வ.சுப.மாணிக்கம் என்போர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கம்பராமாயணத் திறனாய்வு என்றவுடன் டி.கே.சி. பி.ஸ்ரீ, அ.சீனிவாச ராகவன், அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன், மகாராசன், ராமகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் நினைவிற்கு வருவர்.

திருக்குறள் திறனாய்வு என்றாலே திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், தெ.பொ.மீ, மு.வ., கோதண்டபாணி பிள்ளை என்போருடைய நூல்கள் நினைவிற்கு வரும்.

சங்க இலக்கியங்களைப் பற்றிய திறனாய்வில் கி.வா.ஜ. தெ.பொ.மீ, இலக்குவனார், வேங்கடராம செட்டியார், கு.ராஜவேலு, அ.ச.ஞான சம்பந்தன், மு.வ., ந.சஞ்சீவி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

5.1.6 உரையாசிரியர்கள்

ராபர்ட்-டி.நொபிலி, அருளானந்த அடிகள், வீரமா முனிவர், கால்டுவெல், போப் ஐயர் என்பவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில் நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின. கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும் போட்டிபோட்டுக் கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச் சங்கமும் சென்னைப் புத்தகக் கழகமும் பாட நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல நிலையை அடைந்தது.

கற்ற பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக் கூற ஒரு நடை என மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும் இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய, தெளிந்த நடையைத் தோற்றுவித்ததால் இவரை தமிழ்க் காவலர் என்றும்தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தை என்றும் கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர் உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு உயிர் ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல உரைநடையில் அவரால் புகழ்பெற இயலவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதத் தயங்கவில்லை.

தொடக்கத்தில் பண்டிதர் நடையில் எழுதி வந்த உ.வே.சா அவர்களும் காலப் போக்குணர்ந்த பின் மாறி எளிய நடையில் எழுதினார். இவரது பதிப்புரைகளே அதற்குச் சான்று.

கற்றோர்க்கே விளங்கும் தமிழில் எழுதியவர் பரிதிமாற்கலைஞர். (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்) உரையாசிரியர்களையும் மிஞ்சும் படி செறிவான நடையில் இவர் எழுதினார்.

தனித்தமிழ் நடையின் தந்தை என்று போற்றப் பெறும் மறைமலையடிகள் வடமொழிச் சொற்கள் கலக்காமல் தனித் தமிழில் எழுதும் முறையினைத் தொடங்கி வைத்தார். சங்கத் தமிழின் சாயல் கொண்ட ஏற்றமான நடை இவரது நடை எனலாம். இளவழகனார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், டாக்டர்.வ.சுப. மாணிக்கம் போன்றோர் அடிகளின் போக்கைப் பின்பற்றினர் எனினும் இயக்கம் வந்த வேகம் குறைந்து காலப் போக்கில் கைவிடப்பட்டது எனலாம்

சமூகம், பொருளியல், அரசியல் என எத்துறையாயினும் தமிழில் எளிய நடையில் எழுத முடியும் எனக் காட்டியவர். மென்றமிழ் உரைநடையின் முதல்வர் என்று போற்றப்படும் திரு.வி.க. ஆவார்.

பண்டைய புலவர்களின் செந்தமிழ் நடையினைப் பின்பற்றி இக்காலத்தில் பண்டிதமணி, நாட்டார், செல்வக்கேசவராயர், விபுலானந்தர் போன்றவர்கள் எழுதினர்.

சொல்லின்பம் மிக்க, ஓசைச் சிறப்புடைய நடைக்குச் சொந்தக்காரர் ரா.பி.சேதுப்பிள்ளை. தெளிந்த, வெள்ளோட்டமான நடையில் எழுதியவர்கள் கா.சு.பிள்ளை, ஜெகவீரபாண்டியனார், ஒளவை துரைசாமி என்பவர்கள்.

சிந்தனையும் செறிவும் கொண்ட நடை எழுதியவர்கள் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களும் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அவர்களும். மு.வ அவர்களின் நடை தெளிவு எளிமை ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.

சான்றோர் உரை செய்த நூல்கள் பின்வருமாறு:

ஆறுமுக நாவலர்-பெரிய புராணம், திருவிளையாடல்புராணம்
உ.வே.சா.-குறுந்தொகை உரை, புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கான உரைக்குறிப்புகள்
பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்-நற்றிணை
வி.கோ.சூ (பரிதிமாற்கலைஞர்)-நாடகவியல்
மறைமலையடிகள்-முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை
திரு.வி.க-பெரியபுராணக் குறிப்புரை, திருக்குறள்
பண்டிதமணி கதிரேசன் செட்டியார்-திருவாசகம்
சி.கே.சுப்பிரமணிய முதலியார்-பெரிய புராணம்
கா.சு. பிள்ளை-திருவாசகம்
வேங்கடசாமி நாட்டார்-காரிகையுரைத் திருத்தம், திருவிளையாடற் புராணம், சிலம்பு, மேகலை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது
ரா. ராகவ ஐயங்கார்-குறுந்தொகை
சோமசுந்தர பாரதியார்-தொல்காப்பியத்தின் சில பகுதிகள்
ஒளவை துரைசாமிப் பிள்ளை-நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு
வை.மு.கோ-கம்ப ராமாயணம் முழுவதும்
சே.கிருஷ்ணமாச்சாரியார்-வில்லிபாரதம்
மு. வரதராசனார்-திருக்குறள் தெளிவுரை

உரையாசிரியர்களால் உரைநடை வளர்ந்தது; செய்யுளைச் சுவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் தமிழ் மேலும் பல துறைகளில் வளர உதவியது.