சுப்ரமணிய பாரதியார்
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.
தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.
இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
பிறப்பு: தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி ஐயருக்கும் - இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக டிசம்பர்.11.1882 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன், எனினும் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். அவருடைய 5 வயதில் 1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அதனால் பாரதியார் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
இளமைப் பருவம்: சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்த இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'. அன்று முதல் இவர் "சுப்பிரமணிய பாரதியார்"என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.
திருமண வாழ்க்கை: பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு அதாவது 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி: 'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். 'கண்ணன்பாட்டு', 'குயில்பாட்டு', 'பாஞ்சாலி சபதம்',' புதிய ஆத்திச்சூடி' போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு: சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் "இந்திய பத்திரிக்கையின்" மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி "இந்தியா பத்திரிக்கைக்கு" தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி "தேசிய கவியாக" அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு: விடுதலைக்காக வீர தமிழ் முழக்கம் செய்து வந்த பாரதி 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி, தனது 39 ஆவது வயதில் வீர தமிழனின் நா ஓய்ந்தது. எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
பாரதியின் குரு: ஞானகுருவாக சாருநிவேதிதாவையும் (விவேகானந்தரின் சிஷ்யை), அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார். "மகாகவி' என்றும், "தேசியகவி' என்றும் மக்களால் போற்றப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ""பைந்தமிழ்த்தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனீ, சிந்துக்குத் தந்தை'' என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக, ""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக கண்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
பாரதியை மக்கள், 'கவி', 'மானுடம் பாடவந்த மாகவி', 'புது நெறி காட்டிய புலவன்', எ'ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்', 'பல்துறை அறிஞர்', 'புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்', 'தமிழின் கவிதை' மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
படைப்புகள்:
01. குயில் பாட்டு
02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
03. சுயசரிதை
04. தேசிய கீதங்கள்
05. பகவத் கீதை
06. பாரதி அறுபத்தாறு
07. ஞானப் பாடல்கள்
08. தோத்திரப் பாடல்கள்
09. விடுதலைப் பாடல்கள்
10. விநாயகர் நான்மணிமாலை
11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
12. பதஞ்சலியோக சூத்திரம்
13. நவதந்திரக்கதைகள்
14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
16. சின்னஞ்சிறு கிளியே
17. ஞான ரதம்
18. பகவத் கீதை
19. சந்திரிகையின் கதை
20. பாஞ்சாலி சபதம்
21. புதிய ஆத்திசூடி
22. பொன் வால் நரி
23. ஆறில் ஒரு பங்கு
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்: பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்டு 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட் 1905 முதல் - 1906 ஆகஸ்ட் வரை) பணியாற்றினார். இந்தியா என்ற வார இதழில் (மே 1905 முதல் - மார்ச் 1906, செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
தேசியக் கவி: விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்: பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (ஸ்ரீஹழ்ண்ஸ்ரீஹற்ன்ழ்ங்) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.
பெண்ணுரிமைப் போராளி: தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாரதியார் நினைவுச் சின்னங்கள்: தமிழக அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும் நினைவு இல்லமாகவும் பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்காக...
* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)
* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்
* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.
* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)
* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.
* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.
* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.
* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)
* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)
* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.
* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.
* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக