சனி, 20 ஜூன், 2015

பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்!


கோவை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதோடு, அப்படிச் செலுத்தாத குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிச் செல்லுமாறு கட்டாயப் படுத்துவதாகவும் பல பகுதிகளில் புகார்கள் எழுந்துள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்றும், அரசு ஆணையை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், காலணி, சீருடைகளை கட்டாயம் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு மாணவனை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டதையடுத்து, அந்த மாணவருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பெற்றோர் வந்து, அதே பள்ளியில் தனது மகன் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றொரு பள்ளி மீது புகார்

மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இரண்டு குழந்தைகள், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அந்தப் பள்ளியில் கட்டணம் வசூலிப்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதால், மாணவர்கள் இருவரையும் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்ததாம். இதைக் கண்டித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவரது குழந்தை, நல்லப்பா வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணப்படி, ரூ. 7,700 மட்டுமே கட்ட முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்ததோடு, ரூ. 23 ஆயிரம் முதல் தவணை யிலும், 2-வது மற்றும் 3-வது தவணைகளில் தலா ரூ. 4,500 வீதம் பணம் கட்ட வேண்டும் எனக் கூறினார்களாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் கட்ட முடியும் என்று கூறியதால், மாற்றுச்சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறதாம். இது குறித்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

இப்புகார் குறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கீதாவிடம் கேட்டபோது, "புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புகார்தாரரை, வரும் 22-ம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளோம். அன்று, எங்களது அலுவலக ஊழியரும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் செல்ல உள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தினால் போதும் என அறிவுdறுத்தல் வழங்கியுள்ளோம்" என்றார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக