சுட்டி பற… பற…
ஆகாயத்தில் விமானம் பறந்துபோனாலே அண்ணாந்து ஆச்சரியத்தோடு பார்க்கும் சுட்டிகளுக்கு அது எப்படி தயாரிக்கப்படுகின்றது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது… ஒசூர் அருகில் உள்ள பேகண்டபள்ளியில் அமைந்துள்ள ‘தனேஜா ஏரோ ஸ்பேஸ் அண்ட் ஏவியேஸன் லிமிட்டெட்’ எனும் குட்டி விமானங்கள் தயரிக்கப்படும் நிறுவனத்துக்கு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பரம்வீர் மெட்ரிக் பள்ளி சுட்டிகளுடன் ‘லேண்டிங்’ ஆனோம்…..
சுஜாதா |
சுட்டிகளை அன்புடன் வரவேற்ற நிறுவனத்தின் எச்ஆர் பிரிவு மேனேஜர் சுஜாதா… “1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்துக்கு இந்தியாவில் விமானம் தயாரிக்கத் தொடங்கிய முதல் தனியார் துறை நிறுவனம் என்ற பெருமை உண்டு.. .பார்ட்னோவியா P68C எனப்படும் 6 பேர் அமரக்கூடிய விமானம்தான் எங்கள் முதல் தயாரிப்பு…. இதுவரை 2 ,4 ,6 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 27 சிறிய ரக விமானங்கள் இங்கே தயாரிக்கப்பட்டுள்ளன” என்று கூறியபடி எங்களை ஏர்கிராப்ட் தயாரிக்கும் காம்ப்ளக்ஸ்சுக்கு அழைத்துச்சென்றார்.…
சுட்டிகள் முதன் முதலில் சென்றது டூல்ஸ் பகுதி....அங்கு எலக்ட்ரிக் ஆட்டோமேஷன் ஜூனியர் எக்ஸிகுட்டிவ் சிவக்குமார் மற்றும் ராஜ சேகர் சுட்டிகளுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றனர்…
”விமானம் தயாரிக்க பல்வேறுபாகங்கள் தேவைப்படுகின்றன அந்தபாகங்களின் மோல்டுகள்தான் இந்த அறை முழுதும் இருப்பவை இவை லேசான ஆனால் உறுதியான மரத்தால் செய்யப்பட்டுள்ளன” என சில டூல்ஸ் மாதிரிகளை சுட்டிளுக்கு காட்டினார் ராஜசேகர்.
”ஓ இவ்வளவு பாகங்களா தேவைப்படுது..” என அதிசயித்த கவிமதி “அங்க்கிள் எதுக்கு இவ்வளவு மோல்டுகள்” என்றாள்
“ஒவ்வொரு ரக விமானத்துக்கும் வெவ்வேறு விதமான பாகங்கள் தேவைப்படுகின்றன… ஒவ்வொரு முறையும் புதுசா செய்துட்டு இருக்கமுடியாதில்லையா… அதனால இப்படி டூல்ஸ் தயாரித்து அது எந்தரக விமானத்தின் உதிரிபாகம் அப்படின்னு மார்க் செய்து வைத்திடுவோம்..
அதனால எளிமையாகவும் வேகமாகவும் உற்பத்தி செய்யமுடிகின்றது” என்று விளக்கமளித்தார் சிவக்குமார்
அடுத்து விமானம் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களான ட்யுரலுமின் தகடுகள்..பைபர் ,போன்றவை ஸ்டாக் ரூமிலிருந்து எடுத்துவரப்பட்டு தேவையான வடிவங்களில் வெட்டப்பட்டு பர்ன்ஸ்சுக்கு எடுத்து செல்லப்படுவதை பார்த்தனர்
சுட்டிகள் ஃபர்னஸ் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் “இங்கு இரண்டு விதமான பர்னஸ் உள்ளன ஒன்று ஏர் சர்குலேஸன் பர்னஸ் இதில் அலுமினியம் சுமார் 600 செண்டிகிரேட் வரை சுடேற்றப்படுகின்றது..அடுத்து உள்ளது Muffle Furnace இதில் ஸ்டீல் 1000 செண்ட்ரிகிரேட் வரை சூடுபடுத்த முடியும்.. இதில் நம் தேவைக்கேற்ப டெம்ப்ரச்சரை முன்கூட்டியே ப்ரொக்ராம் செய்து கொள்ள முடியும்” என்ற ராஜசேகர் “அவை சூடுபடுத்தப்பட்டபின் உடனே வேதிப்பொருள் கலந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கவைக்கப்பட்டு குளிர்விக்கப்படுகின்றன” என்றார். டெம்ப்ரச்சர் ப்ரோக்கிராமை சுட்டிகளுக்கு செய்து காட்டினார் .
“எதுக்காக அப்படி செய்யறிங்க அங்க்கிள்?” என்றான் ராகுல் அரவிந்த்
“லேசாக இருக்கும் அப்பொருட்களைக் கொண்டு வளைத்தும் தட்டியும் பல வடிவங்களில் பாகங்கள் செய்யப்படுகின்றன அவ்வாறு செய்யும்போது அவை எளிதில் உடையாத உறுதியுடையதாகவும் அதே சமயத்தில் நெகிழும் தன்மை உடையதாகவும் மாற்றுவதற்குதான் இந்த ஹீட் ட்ரிட்மண்ட்” என்றார் அவர்
சுட்டிகள் ஹீட் ட்ரிட்மெண்டுக்கு பின் வெளிவந்த அலுமினியத் தகடுகளை தூக்கிப்பார்த்து அது மிக லேசாகவும் உறுதியாகவும் இருந்ததைக்கண்டு அதிசயித்தனர்..
ஸீட் மெட்டல் பிரிவுக்கு சென்றனர் இங்கு அலுமினியம், ஸ்டீல், டைட்டனியம் ஆகியவற்றைக்கொண்டு பல்வேறு உதிரிபாகங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன அதற்காக Rubber Pad Press, Rubber Die Press, Hydraulic Press போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன..
சுட்டிகள் இங்க ஜாக்கிரதையா வரனும் என்று எச்சரித்தபடி கெமிக்கல் ட்ரீட்மண்ட் பகுதிக்குள் நுழைந்தார் சிவக்குமார். சுட்டிகளும் பின் தொடர்ந்தனர்...அங்கு நுழையும்போதே அமில நெடி சுட்டிகளை வரவேற்றது..பெரிய பெரிய தொட்டிகளில் பலவிதமான அமிலங்கள் காணப்பட்டன…
“இந்த தொட்டிகள் எதுக்காக?” என்று கேட்டாள் கீர்த்தனா
. Chromic Acid Anodizing , Chromate Treatment , Cadmium Plating , Chrome Passivation போன்ற கெமிக்கல் ட்ரீட்மண்ட் இங்குதான் நடக்குது.. வானத்தில் சுமார் நான்காயிரம் ஐந்தாயிரம் அடியில் விமானங்கள் பறக்கும்போது அங்குள்ள ஈரப்பதம் போன்றவற்றால் அதன் பாகங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் துருப்பிடிக்காமல் இருக்கவும் அதன் மேல்பகுதிக்கு கெமிக்கல் ட்ரீட்மண்ட் செய்யப்படுகின்றது…..குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் கெமிக்கல் ட்ரிட்மண்ட் செய்யனும்னா மற்ற பகுதிகளை ப்ளாஸ்டிக் பெய்ண்ட் என்ற ஒரு வகையான பொருளால் கவர் செய்திடுவோம்” என்று சுட்டிகளுக்கு ப்ளாஸ்டிக் பெயிண்ட்டையும் காட்டினார். ராஜசேகர்
அடுத்த பகுதியில் விமானத்தின் பாகங்களுக்கு பெயிண்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது.. “முதலில் ப்ரைமர் எனும் பெயிண்ட் அடிப்போம்…அப்புறம் எல்லாவிதமான கால நிலையையும் தாங்கக்கூடிய பாலியூரித்தின் எனப்படும் உயர்ரக பெயிண்ட் கோட்டிங் கொடுக்கின்றோம்..” என்றார் அங்கிருந்த பணியாளர்.
அங்கிருந்து சுட்டிகள் விமான பாகங்களை ஒருங்கிணைக்கும் அசெம்ப்ளி பகுதிக்கு சென்றனர். ”இந்த பகுதியில்தான் விமானத்தின் பல பாகங்கள் முதலில் அசெம்பல் செய்யப்படுகின்றன.. பின் அவையெல்லம் ஒருங்கிணைக்கப்பட்டு எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன… ஆண்டனாக்கள் கம்யுனிக்கேஷன் சிஸ்டம்ஸ்,ப்ளைட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் அத்தனையும் பொருத்தப்பட்டு விமானம் முழு வடிவம் பெறுவது இங்குதான்” என்ற சிவக்குமார் ”இப்போ நீங்க இங்கே பார்க்கின்றது விமானத்தின் பாகங்கள் ஒருங்கிணைக்கும் பணிதான்” என்றுகூறி ஒவ்வொரு பகுதியும் உருவாக்கப்படுவதை சுட்டிகளுக்கு காட்டியதுடன் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்…
அங்கிருந்த பலவற்றைப் பார்த்துக்கொண்டே வந்த தேவிப்ரியா, “அங்கிள் இது வித்தியாசமா இருக்கே!” என ஒரு கூம்பு வடிவப்பொருளை சுட்டிக் காட்டினாள்..’வெரிகுட்…. இது விமானத்தின் உதிரி பாகமல்ல… ரக்கெட்டின் பகுதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்குத் தேவையான பூஸ்டர் ராக்கெட்டுகளின் பல பகுதிகளும் இங்கு தயாரிக்கபடுகின்றன… அதில் ஒன்றுதான் இது” என்றார்.
“அங்க்கிள் இன்னும் வேறு என்னவெல்லம் இங்கு தயாராயிருக்கு?” என்று கேட்டான் அஸ்வின்.
அரசுத்துறையைச் சர்ந்த National Aerospace Laboratories (NAL]ன் சரஸ் மற்றும் ,ஹன்ஷா விமானத்தின் சில பாகங்கள் தயாரிப்பு… Aeronautical Defense Establishment (ADE)ன் ஆளில்லா விமானமான நிஷாந்த்தின் ஹேர் பிரேம் தயாரிப்பு. Hindustan Aeronautics Limited ( HAL] விமானங்களின் சில பாகங்கள் உருவாக்கம்…. இந்திய கடற்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் மாற்றங்கள் செய்தது….விமானப்படை விமானங்களுக்கான உள் அலங்காரப் பணிகள் ஆகியவற்றிலும் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு உள்ளது” என்றார்..
தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குட்டி விமானத்துக்கருகில் சுட்டிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்… அதனைச் சுற்றி வந்து கும்மாளமிட்டனர் சுட்டிகள். “ இது விமானி உட்பட ஆறு பேர் அமர்ந்து செல்லக்கூடிய P68C வகை விமானம் ஆகும் விமானி அமரும் முன் பகுதிக்கு ’காக்பிட்’ என்று பெயர் நடுவில் பயணம் செய்வோர் அமர சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன… பின் பகுதியில் லக்கேஜ் வைத்துக்கொள்ளலாம்” என்றார் சிவக்குமார்
விமானத்தின் முன் பகுதியில் இருந்த ஆண்டனா போன்ற கருவியைக்காட்டி “இது எதுக்கு அங்க்கிள்?” என்றாள் கோவர்த்தினி..
விமானத்தின் மேலே இருந்த
VT-TLD என்ற எழுத்துக்களை பார்த்த ரமா இந்த லெட்டர்ஸ் எதைக் குறிக்கின்றது என்று கேட்க “நம்ம கார் பைக் போன்றவற்றை அடையாளம் காண பதிவு எண் இருப்பது போல விமானங்களை அடையாளம் காண்பதற்கு International Civil Aviation Organization அளித்துள்ள குறியீடு இது VT இந்தியாவைச் சேர்ந்த விமானம் என்பதை குறிக்கின்றது…. அடுத்த மூன்று எழுத்துக்கள் விமனத்தின் உரிமையாளரின் சுருக்கெழுத்தைக் குறிக்கின்றது என்றார்
”இந்த விமானம் எவ்வளவு ஸ்பீட்ல பறக்கும்?” இது புவனேஸ்வரனின் வினா. “விமானம் பறக்கும் வேகத்தை நாட்டிக்கல் மைலில் குறிப்பிடுவாங்க இது மணிக்கு 200 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பறக்கும்’ என்றார்.
வைஷ்ணவி ”அங்கிள் எங்க அப்பாகிட்ட சொல்லி இந்தமாதிரி ஒரு குட்டி விமானம் வாங்கனும்னு ஆசையா இருக்கு… இதனோட விலை எவ்வளவு?” என்றாள் ஆசையோடு…
“வெறும் 160 கோடிதான் இதனோட விலை…” என்றதும் ”160 கோடியா..” என்று வாயைப் பிளந்த சுட்டிகள். விமானம் பறக்கவும் தரையிறங்கவும் உதவும் ’ரன்வே’ யை பார்க்க ஓட்டம் எடுத்தனர்..
“இந்த ரன்வேயில் குட்டி விமானங்கள் முதல் Airbus A 320 , Boeing 737 Series ரக விமானங்கள் வரை தரையிறங்க முடியும். .ஆளில்லாத ரிமோட் விமானங்கள் சோதனை ஓட்டம் கூட இங்கு நடைபெற்றுள்ளது” என்றார் சிவக்குமார். சிவப்பு நிறத்தில் பலூன் வடிவில் பறந்துகொண்டிருந்ததைப் பார்த்த வாசுகி “எதுக்காக இங்கே பலூன் பறக்குது?” என்று கேட்க…. சுட்டிகள் அனைவரும் “ஆமாம்… எதுக்கு?....” என கோரஸ் போட்டனர்
“அது பலூன் இல்லை.’ஏர் சாக்ஸ்’ காற்று எந்தப்பக்கமாக இருந்து வீசுகின்றது என்பதை அறிவதற்கான அமைப்பு.. இதனைப்பார்த்து விமானி காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் விமானத்தை டேக் ஆப் அல்லது லேண்டிங் செய்வார்..” என்று கூறிய சிவக்குமார் இந்த ரன்வேவுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு சமீபத்தில் வெளியான ‘ஒஸ்தி’ படம் முதற்கொண்டு பல தமிழ், கன்னட படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன”. என்றார்
”ஆஹா இப்ப ஒரு சூட்டிங் இருந்தா…இன்னும் சூப்பராயில்ல இருந்திருக்கும்” என எண்ணியபடி அங்கிருந்து ‘டேக் ஆப்’ ஆன சுட்டிகள் இல்லம் நோக்கி பறந்தனர்….
சி.தாமரை,சுட்டி ஸ்டார்
நன்றி சுட்டி விகடன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக