திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வாழ்க்கை வாழ்வதற்கே...

அன்பு மிகுந்த நண்பர்களே! வாழ்வில் எண்ணற்ற சாதனைகள் புரிய இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.ஒவ்வொரு நபரும் எப்போதும் வென்று கொண்டே இருக்க முடியாது.ஆனால் நிச்சயம் வெற்றி யாருக்கும் சொத்து கிடையாது .தோல்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் நீ துவண்டு விடாதே,அவை நீ தோல்விகளை கடந்து வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கிறாய் என்பதற்கு சான்று .எடிசனை தெரியும் அல்லவா உங்களுக்கு? 'மென்லோ பார்க் மேதை' என போற்றப்பட்ட அவர் சந்திக்காத தோல்வியே கிடையாது.அவர் கண்டு பிடித்த மின்சார பல்பு இன்று உலகத்தை ஒளி  வெள்ளத்தில் மிதக்க வைப்பது உங்களுக்குத்  தெரியும் ஆனால் அதை  கண்டுபிடிக்க 10,000 ௦௦௦ முறை முயல வேண்டி இருந்தது.தோல்வி விடாமல் துரத்திய பொழுது துவண்டு விடாமல் போராடிய அந்த வீரரிடம் ஒரு கேள்வி வைக்கப்படது,'எடிசன்,இந்த 10,000 தோல்விகளினால் தாங்கள் என்ன பயன் கண்டீர்கள்?'என கேட்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?'நான் தோல்விகளை தவிர்க்கும் 10,000  வழிகளை கண்டு கொண்டேன் !!!" என்றாராம். இதுவன்றோ தன்னம்பிக்கை.

             வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் வெல்வதற்கு சூழ்நிலை,திறமை,வாய்ப்பு என்கிற ரீதியில் பல தடைகள் வரலாம்.அவற்றை வென்றவர்களின் அற்புத கதைகள் உங்களை ஊக்கபடுத்தும் என்கிற அரிய நம்பிக்கை கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது .தீபிகா குமாரி என்கிற அற்புத சகோதரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் .காமன் வெல்த் போட்டியில் வில் வித்தையில் தங்க பதக்கத்தை வென்ற அந்த வெற்றி நங்கையின் அப்பா ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர் .உண்ண உணவே கிடைக்காத குடும்பத்தில் எங்கே பயிற்சிக்கு வழி ?வெற்றி என்கிற அரிய பசி அந்த அற்புத நங்கையை ஆடி படைக்க மாங்காய்களை குறிவைத்து அடித்து பயிற்சி எடுத்து  ,எடுத்து வறுமையை மீறி வென்ற அந்த அற்புத மங்கையின் வாழ்க்கை,நமக்கெல்லாம் ஒரு உற்சாக டானிக்.
          பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்  என்னும் ஈடு இணை அற்ற தலைவனின் தலைமையின் கீழ் அமெரிக்கா  உலகப்  போரை வென்றது நமக்கு தெரியும் ஆனால் அவரின் வாழ்வு வேதனையும்,வலியும் நிறைந்தது என்பது தெரியுமா உங்களுக்கு ?அவர் பக்கவாதத்தால் சுயமாய் கால்களால் நடக்க முடியாத நிலையால் பாதிக்கபட்டு  சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டியது கசப்பான உண்மை .ஆனால், அவர் காட்டிய தீரம் மெய் சிலிர்க்க வைப்பது .அமெரிக்காவை பொருளாதார தேக்க நிலையில் இருந்து மீட்டு எடுத்து அவர் சாதனை புரிந்தார் ,ஜப்பான் பியர்ல் ஹார்பரில் அமெரிக்காவை நாசம் செய்த பொழுது ,'ஜனாதிபதியே,நாடு இனி மேல் எழவே முடியாது !" என  தளபதிகள் கண்ணீர் மல்க நின்ற பொழுது ,அவர் நிமிர்ந்து பார்த்து தடால் என்று முப்பது வருட முடக்கு வாதத்தை மீறி எழுந்து  நின்று தைரியம் பொங்க  சொன்ன வார்த்தைகள் மிக பிரபலம் 'நானே எழுந்து நிற்க முடியுமாயின் ஏன் நம்  நாட்டால் முடியாது ?"   சொன்னபடியே தன் நாட்டையே தலை நிமிர செய்தார் அவர் .ஆக, சூழ்நிலை ,இன்மை i உடல்குறைபாடு இவை எல்லாம் சாதிப்பதற்கு தடங்கல்  இல்லை அவை அற்புதமான தடங்கள்
                 உங்களை உலகம் எப்படி எடுத்து கொள்கிறது என கவலைக்  கொள்ளாதீர்கள் .நம்பக்  கடினமாக கூட இருக்கலாம்,மஹா கவி பாரதி உயிருடன்  இருந்த பொழுது அவர் எழுதிய 'செந்தமிழ் நாடெனும் போதினிலே ' எனும் கவிதை காரைக்குடி தமிழ் சங்கப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதாம்!!!முதல் பரிசு பெற்ற கவிதை  போன இடம் எங்கே?அந்த முண்டாசு கவி வாழ்ந்த காலம் அவனை நிராகரித்தாலும் ,வரலாறு அவனை வாரி அணைத்து கொண்டது எதைக் காட்டுகிறது?   இதை இன்னும் மிக அழகாய் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் சொன்னால் "முயலும் வரை வீண் முயற்சி என்பார்கள் ,வென்ற பின் விடா முயற்சி என்பார்கள் ".
                 எப்பொழுதும் தேவை நம் மீது நம்பிக்கை .'உன்னையே அறிவாய்என சாக்ரடீஸ் சொன்னது இதைத்தான். அசாதாரணமான சூழ்நிலைகள் சாதாரணம் ஆனவர்கள் என கருத பட்டவர்களை மாபெரும் வீரர்களாக ஆக்கி இருக்கிறது  அப்படி பட்ட ஒரு இளைஞனின் கதை இதோ  
அவன் தினமும் கால் பந்து விளையாட மைதானத்திற்கு தன் தந்தை உடன் வருவான் .அவர் ஒரு ஓரமாய் உட்கார்ந்து இருக்கும் பொழுது அவன் பள்ளி போட்டிகளில் விளையாடுவான் ."அவன் ஒன்றும் குறிப்பிட தகுந்த விளையாட்டு திறன் உள்ளவன் இல்லை "எனவே, அவனின் பயிற்சியாளர் நம்பினார் அவன் substitute ஆகவே விளையாடி வந்தான் முக்கியமான போட்டிகளில் அவனை அவர் விளையாட விட மாட்டார் .அங்கே அவன் பள்ளியில் ஒருமுக்கியமான கோப்பைக்கான போட்டி வந்தது அந்த இளைஞனின் அணி அரை இறுதி  வரை கலக்கோ கலக்குவென கலக்கி இறுதி போட்டிக்கும்  முன்னேறி விட்டது .ஆனால்,அந்த போட்டியின் முதல் பாதியில் ௦-0-3 என பின் தங்கி இருந்த பொழுது ,நம் நாயகன் பயிற்சியாளரை நோக்கி போனான் ,'மாஸ்டர் நான் விளையாடட்டுமா? 'என  கேட்ட பொழுது ,'"முடியாது தம்பி நீ இது வரை சரியாக ஆடியது கிடையாது !"என்ற பொழுதுஇளைஞனின்  கண்களில் கண்ணீர்க் கண்ணாடி போல கோடிட்டது." மாஸ்டர்! ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் மறுத்து விடாதீர்கள்!" என்று எப்போதும் கெஞ்சாத அவன் கெஞ்சிய பொழுது , முகத்தை சற்றே இறுக்கமாய் வைத்து கொண்டு "சரி! சொதப்பாமல் விளையாடு!"என மட்டும் சொல்லி ஆடு களத்திற்குள் அவனை அனுப்பினார் .போர் களத்திற்குள் நுழையும் வீரன் போல சென்ற அவன் ஆடிய ஆட்டம்................அப்பப்பா சொல்லி மாளாது அன்று அவன் அணி 5-3என  வென்றது .அதில் அவன் அடித்த கோல்கள் 4,நம்புவதற்கு கஷ்டம் ஆனால் அது தான் உண்மை ,அவனை ஆறத் தழுவி மாஸ்டர் கேட்ட ஒரே கேள்வி ,"எப்படி மகனே இது உன்னால் முடிந்தது?" அதற்கு அவன் சொன்ன பதில்," இன்று தான் மாஸ்டர் நான் ஆடுவதை என் தந்தை பார்த்துக்கொண்டு இருந்தார் ."அவர் அவன் தந்தை எப்பொழுதும் அமரும்  இடத்தை பார்த்தால் அது வெறுமையாய் கிடந்தது ,"எங்கே உன் அப்பா ?" என்ன அவர் கேட்ட பொழுது அந்த வெற்றி நாயகனின் குரல் நடுங்கி,நா வறண்டு ,இதயம் வலிக்க ,"மாஸ்டர் என் தந்தைக்கு இரு கண்களும் தெரியாது அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது ..இன்று தன் அவர் என்னை சொர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்.அதனால் நான் இன்று நன்றாக விளையாடினேன் "எனக்  கூறி விட்டு அவன் கோப்பையை தன் தந்தையின் கல்லறையின் முன் பக்குவமாய் வைத்தான் . அவன் தன் தந்தைக்கு வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?

              "எவன் தெரியுமா நாத்திகன் ?கடவுளை நம்பாதவன் அல்ல நாத்திகன். தன்னை  நம்பாதவனே நாத்திகன்." என விவேகனந்தர் சொன்னது எவ்வளவு  உண்மை .?    நண்பர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாயின்  மற்றும் தந்தையின் கண்ணீரிலும் ,வியர்வையிலும் குளித்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு  அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைக்க நீங்கள்  பயிலும் கல்வியில்  மாபெரும் வெற்றிகளை பெறுவிர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றைக்கும் உண்டு.உங்கள்  மீது நம்பிக்கை வையுங்கள்  ,தாய் தந்தையின் உழைப்பை ஊக்க உரமாக்கி தடங்கலை தடங்களாக மாற்றி வெல்ல வாழ்த்துகள்.விடியும் என விண்ணை நம்பும் நீ, முடியும் என்று உன்னை நம்பு 

கனவு மெய்ப்பட  வேண்டும் .  வானம் வசப்பட வேண்டும்  

                                     
 கட்டுரையாளர் பூ.கோ.சரவணன் ஆனந்த விகடன் மாணவப்பத்திரிகையாளராக சிறப்பானமுறையில் செயல்பட்டு விருதுபெற்றவர்
அவருக்கு பாராட்டும்.... நன்றியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக