நவீன காலத்தின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று 'ஆப்பிள்'. அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் எழுதப்பட்டாலும் வால்டர் ஐசாக்சனின் நுட்பம் யாருக்குமே வாய்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய எழுத்தில் ஜாப்ஸின் வாழ்க்கை ஆங்கிலத்தில் வெளியாகி உலகெங்கும் வரவேற்பு பெற்றது. சமீபத்தில், உமா பாலுவின் சரளமான மொழிபெயர்ப்பில் அந்த நூலைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது அடையாளம் பதிப்பகம். நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே...
தத்துப்பிள்ளை ஜாப்ஸ்
தாம் ஒரு தத்துப்பிள்ளை என்பதை இளம்வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் அறிந்திருந்தார். 'என் பெற்றோரும் இந்த விஷயத்தில் என்னிடம் மிக வெளிப்படையாகவே இருந்தார்கள்' என்று அவர் நினைவுகூர்ந்தார். ஆறு அல்லது ஏழு வயதுள்ளபோது தமது வீட்டின் புல்தரையில் அமர்ந்தபடி தெருவின் எதிர்ப்புறம் வசித்துவந்த சிறுமியிடம் சொன்னவை அவருடைய மனத்திரையில் பசுமையாய் ஓடின.
'அப்படியென்றால் உன் உண்மையான பெற்றோர் உன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார்களா, என்ன?' என்று அச்சிறுமி கேட்டாள்… 'எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் வீட்டிற்குள் ஓடினேன் - அழுதுகொண்டே. என் பெற்றோர் இல்லை, நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்கள். அவர்கள் முகத்தில் தீவிரம் தெரிந்தது. என் கண்களை நேருக்குநேர் பார்த்தபடி, நாங்கள் குறிப்பாக உன்னைத்தான் தேர்ந்தெடுத்தோம் - என் பெற்றோர் இருவரும் தாங்கள் சேர்ந்து கூறிய அதே சொற்களை எனக்காக மீண்டும் ஒருமுறை நிறுத்தி, நிதானித்துச் சொன்னார்கள். ஒவ்வொரு சொல்லிலும் ஒருவித அழுத்தம் தெரிந்தது.'
கைவிடப்பட்டவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன், பிரத்யேகமானவன். இவை யாவும் ஜாப்ஸின் குணாதிசயங்களாயின. தம்மைப் பற்றி அவர் கொண்டிருந்த கருத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவே மாறின… 'தாம் உருவாக்கும் ஒவ்வொரு சாதனத்திலும் முழுக் கட்டுப்பாடு தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதன் பின்னணியில் அவருடைய குணாதிசயமும், பிறப்பிலேயே கைவிடப்பட்ட உண்மையும் நேரடித் தொடர்புடையவை. அவர் தமது சுற்றுச்சூழலைத் தம் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்; மேலும் தாம் உருவாக்கிய ஒவ்வொரு சாதனத்தையும் தமது விரிவடைந்த அங்கமாகவே காண்கிறார்' என்றார் ஒரு நீண்டநாள் சக ஊழியர் டெல் யோகாம்.
இந்தியாவில் ஜாப்ஸ்
கிழக்கத்திய ஆன்மிகம், இந்துமதம், ஜென் பௌத்தம், ஞானத்தேடல் (ப்ரக்ஞா) ஆகியவற்றில் ஜாப்ஸ் கொண்ட ஈடுபாடு ஒரு பத்தொன்பது வயது வாலிபனின் வாழ்வில் தற்காலிகமாக வந்து போகும் ஒரு கட்டமாக இருக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் கிழக்கத்திய மதங்களின் பல அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார்… இந்தியப் பயணத்தின் நிலையான தாக்கம் எப்படிப்பட்டது என்பதை அசை போட்டார்:
'அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தபோது இந்தியாவிற்குச் சென்றதை விட கலாச்சார பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் நம்மைப்போல் அறிவைப் பயன்படுத்துவதில்லை; உள்ளுணர்வைப் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்கள் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளனர் - உலகின் மற்ற எல்லா நாடுகளையும்விட. உள்ளுணர்வு என்பது அறிவைவிடவும் மிக வலிமையானது என்பது என் கருத்து. என் பணியில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது.
மேற்கத்திய நாடுகளின் அறிவுபூர்வமான சிந்தனை மனித குணாதிசயமல்ல. அது கற்றுக்கொள்ளப்படும் ஒன்று; மேற்கத்திய நாகரிகத்தின் மாபெரும் சாதனை. இந்திய கிராமங்களில், மக்கள் அறிவைக் கற்கவில்லை; அவர்கள் கற்றது வேறு. சில வகைகளில் அதற்கு அறிவிற்கு இணையான மதிப்பு உண்டு; சில வகைகளில் அப்படியில்லை. அதுதான் உள்ளுணர்வு மற்றும் அனுபவத்தின் மூலம் கிட்டும் அறிவு.
இந்தியக் கிராமங்களில் ஏழு மாதங்கள் வசித்துவிட்டு திரும்பி வந்தபோது, மேற்கத்திய உலகத்தின் கிறுக்குத்தனத்தை மட்டுமன்றி, பகுத்தறிவில் அதற்கிருந்த திறனையும் அறிந்துகொண்டேன். சற்றுநேரம் அமர்ந்து கவனித்தால் மனம் எவ்வளவு அமைதியின்றி இருக்கிறது என்பது புரியும். அதைச் சாந்தப்படுத்த முயன்றால் விளைவு இன்னும் மோசமாகத்தான் இருக்கும். ஆனால், காலப் போக்கில் அது அமைதியடையத்தான் செய்கிறது - அப்படி ஒரு நிலையில், மேலும் மென்மையான விஷயங்களை உணரலாம். அப்போதுதான் நம்முடைய உள்ளுணர்வு மலரத் தொடங்குகிறது… இது ஓர் ஒழுக்கம்; அதை நாம் பயிற்சி செய்தாக வேண்டும்…'
நான் மகின்டாஷ், என் தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ்
அசரவைப்பதில் ஆர்வம்காட்டிவந்த ஜாப்ஸ் இருண்ட மேடையின் குறுக்கே சென்று ஒரு துணிப்பை வைக்கப்பட்டிருந்த சிறு மேசையை அடைந்தார். 'இப்பொழுது மகின்டாஷை நேரில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்' என்றார் அவர். கணினி, விசைப்பலகை (கீபோர்ட்), மௌஸ் (சுட்டெலி) எல்லாவற்றையும் அந்தப் பையிலிருந்து வெளியே எடுத்து நேர்த்தியாகப் பொருத்தினார்… "MACINTOSH' என்ற வார்த்தை திரையில் படுக்கைவாட்டில் ஓட, அதன் கீழே 'கிறுக்குத்தனமான அற்புதம்' என்ற எழுத்துக்கள் தோன்றின - மெதுவாகக் கையால் எழுதுவது போல. இதுபோன்ற வரைகலை (க்ராஃபிக்) திரை ஜாலங்களுக்குப் பரிச்சயப்படாத அரங்கம் ஒருகணம் அமைதியாய் இருந்தது. சில விக்கல்கள் மட்டும் அவ்வப்போது கேட்டன.
…அது முடிந்ததும் ஜாப்ஸ் ஒரு ஆச்சரியத்தை வழங்கினார். 'சமீப காலமாக மகின்டாஷ் பற்றி நிறையப் பேசியிருக்கிறோம்' என்றார். 'ஆனால் இன்று மகின்டாஷ் முதன்முதலில் தனக்காகத் தானே பேசிக்கொள்ள வாய்ப்பளிக்க விரும்புகிறேன்.' அத்தோடு அவர் கணினியின் அருகில் சென்று மௌஸின் பொத்தானை அழுத்த, அதிர்வான ஆனால் அரவணைக்கும் ஆழமான மின்னணுக் குரலில் மகின்டாஷ் தன்னைத் தானே அறிமுகம் செய்துகொள்ளும் முதல் கணினியானது. 'நண்பர்களே, நான் மகின்டாஷ் பேசுகிறேன். அந்தப் பையிலிருந்து வெளியேறியதே ஒரு அற்புதமான அனுபவம்' என்று தொடங்கியது.
அதற்குத் தெரியாத ஒரே விஷயம் பலத்த கரகோஷமும் உற்சாகக் கூக்குரலும் ஓயும்வரையில் சற்று நிதானிப்பதுதான். அதற்குப் பதில் அது தொடர்ந்து பேசியது. 'பொது இடங்களில் பேசிய அனுபவம் எனக்கு இல்லை. ஒரு ஐபிஎம் மெய்ன்ஃப்ரேம் கம்ப்யூட்டரை (பெருமுகக் கணினியை) முதன்முதலாக நேரில் சந்தித்தபோது என் மனத்தில் தோன்றிய ஒரு வாசகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'உங்களால் தூக்க முடியாத கணினி மீது ஒருகாலும் நம்பிக்கை வைக்காதீர்கள்.' மீண்டும் எழுந்த குரலலைகள் அதன் கடைசி வரிகளை ஏறத்தாழ மூழ்கடித்தன. 'என்னால் பேச முடியும். ஆனால் இப்போது நான் அமர்ந்துகொண்டு கவனமாகக் கேட்க விரும்புகிறேன். எனக்குத் தந்தையாய் விளங்கும் ஒருவரை உங்களுக்கு மிகுந்த பெருமையோடு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் - ஸ்டீவ் ஜாப்ஸ்.'
அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. மக்கள் உற்சாகத்தில் தலைகால் புரியாமல் துள்ளி ஆடினர்; ஆவேசத்தில் முஷ்டிகளை மோதிக்கொண்டனர். ஜாப்ஸ் மெதுவாகத் தலையாட்டினார். இறுக்க மூடியிருந்த உதடுகளில் அகலமாய் ஒரு புன்னகை. கீழே நோக்கியபடி தொண்டையைக் கனைத்துக்கொண்டார். அதிர்வலைகள் ஓய ஐந்து நிமிடங்களாயின.
…அவர் மகின்டாஷைத் திரைவிலக்கி வெளியிட்டபோது பாப்புலர் சயன்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஜாப்ஸிடம் அவர் எந்த வகையில் சந்தை ஆய்வு செய்தார் என்று கேட்டார். ஜாப்ஸின் பதில் நொடிப்பாக வந்தது: 'அலெக்சாண்டர் க்ரஹாம் பெல் தொலைபேசியை உருவாக்குவதற்கு முன் சந்தையை ஆய்ந்துகொண்டு இருந்தாரா?'
திருடச் சென்ற பில் கேட்ஸும் ஸ்டீவ் ஜாப்ஸும்
தங்களுடைய முதல் ஒப்பந்தத்தில் மகின்டாஷ் வெளியாகும் 1983 இலிருந்து ஒருவருட காலத்திற்கு மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் தவிர வேறு யாருக்கும் மென்பொருள் தயாரிக்காது என்று ஜாப்ஸ் கேட்ஸிடம் உறுதிவாங்கியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மகின்டாஷ் வெளியீடு ஒரு வருடம் தள்ளிப்போகும் என்ற சாத்தியக்கூற்றை ஆப்பிள் கருத்தில் கொள்ளாமல் போய்விட்டது. ஆகையால் கேட்ஸ் 1983 நவம்பர் மாதம் மைக்ரோஸாஃப்ட் ஐபிஎம் பீசிக்காக… புதிய இயங்கு தளம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தபோது அவருக்கு அந்த உரிமை முழுவதுமாய் இருந்தது. அதற்கு வின்டோஸ் என்று பெயரும் சூட்ட இருந்தார்கள். மைக்ரோஸாஃப்ட் சரித்திரத்தில் மிக ஆடம்பரமான ஜாப்ஸ் பாணி வெளியீட்டு விழாவிற்கு கேட்ஸ் ஏற்பாடு செய்திருந்தார் - நியூயார்க்கிலுள்ள ஹெம்ஸ்லீ பாலஸ் ஹோட்டலில்.
ஜாப்ஸ் வெகுண்டெழுந்தார். அவர் இந்த விஷயத்தில் செய்யக் கூடியது அனேகமாக ஒன்றும் இருக்கவில்லை. ஆப்பிளுக்குப் போட்டியாக வரைகலை மென்பொருள் செய்வதில்லை என்ற மைக்ரோஸாஃப்டின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது - ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. 'கேட்ஸை உடனடியாக இங்கு வரவழையுங்கள்' என்று அவர் மைக் பாய்ச்சிற்கு உத்தரவிட்டார். மைக் பாய்ச் மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆப்பிள் சார்பாகக் கலந்துரையாடல்களுக்குச் செல்பவர். கேட்ஸ் வந்தார் - தனியாக, ஜாப்ஸுடன் கலந்துரையாடும் எண்ணத்தோடு. 'அவர் என்னிடம் தமது கோபத்தைக் காட்டுவதற்காக அழைத்தார்' என்று கேட்ஸ் நினைவுகூர்ந்தார். 'நான் க்யூபர்டினோ சென்றேன் - ஒரு ஆணையிடப்பட்ட அரங்கேற்றம் போல. அவரிடம் சொன்னேன்: நாங்கள் வின்டோஸ் தயாரிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் வரைகலை இடைமுகத் தயாரிப்பில் பந்தயம் கட்டுகிறோம்.'
அவர்கள் சந்தித்துக்கொண்டது ஜாப்ஸின் ஆலோசனைக் கூட்ட அறையில். அங்கு பத்து ஆப்பிள் ஊழியர்கள் கேட்ஸைச் சூழ்ந்து நின்றுகொண்டு தங்கள் தலைவர் அவரை எப்படியெல்லாம் தாக்கப்போகிறார் என்று பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஜாப்ஸ் தமது படைகளை ஏமாற்றவில்லை. 'நீங்கள் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள்!' என்று அவர் ஆவேசமாய்க் கத்தினார்.
'நான் உங்கள்மீது நம்பிக்கை வைத்தேன். இப்போது நீங்கள் எங்களிடமிருந்து திருடுகிறீர்கள்!' கேட்ஸ்… தமது கீச்சுக்குரலில் ஒரு விஷயத்தை முன்வைத்தார் - அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூற்றாகிப்போனது: 'ஸ்டீவ், இதை இப்படிக்கூடச் சொல்லலாம். நம் இருவருக்குமே பொதுவாக ஜெராக்ஸ் என்ற பணக்கார நண்பர் இருந்தார். நான் தொலைக்காட்சிப் பெட்டியைக் களவாட அவருடைய வீட்டிற்குள் புகுந்தேன்; அப்போதுதான் அதற்கு முன்னரே நீங்கள் அதைக் களவாடிவிட்டது தெரியவந்தது.'
…இருந்தாலும் ஜாப்ஸின் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆப்பிள் மிகவும் புதுமையானதாக, கற்பனை வளம் மிகுந்ததாக, செயல்பாட்டில் எடுப்பாக, அற்புதமான வடிவமைப்போடு விளங்கியது. மைக்ரோஸாஃப்ட் தரமற்ற முறையில் பிரதியெடுக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கினாலும், இயங்கு தளம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) தொடர்பான போரில் வெற்றியடைந்தது.
உலக நடப்பில் உள்ள பிழையை இது வெளிக்கொணர்ந்தது: அற்புதமான, சிறந்த, புதுமையான தயாரிப்புகள் எப்போதும் வெற்றியடைந்துவிடுவதில்லை. பத்து ஆண்டுகள் கழித்து ஜாப்ஸ் திமிராகவும் கோபமாகவும் பேசியதில் சற்று உண்மையும் இருக்கத்தான் செய்தது. 'மைக்ரோஸாஃப்டிலுள்ள ஒரே ஒரு பிரச்சினை - அவர்களுக்கு ரசனையில்லை; ரசனையே இல்லை' என்றார் அவர். 'இதை நான் சாதாரணமாகச் சொல்லவில்லை. பெரிய அளவில், தீவிரமாகவேதான் சொல்கிறேன். அவர்களுக்குத் தானாக எந்த யோசனைகளும் வருவதில்லை. அவர்களுடைய தயாரிப்புகளில் கலாச்சாரம் என்பது அவ்வளவாக இருப்பதும் இல்லை.'
ஐஃபோன், பில்லுக்கு ஆறு வேண்டுமாம்
2007 ஜனவரியில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடந்த மாக்வேள்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரைவிலக்கத்திற்கு ஆன்டி ஹெர்ட்ஸ் ஃபெல்ட், பில் அட்கின்ஸன், ஸ்டீவ் வாஸ்நியாக் மற்றும் 1984 மகின்டாஷ் குழுவினரை ஜாப்ஸ் வரவழைத்திருந்தார் - ஐமாக்கை வெளிடும்பொழுது செய்தது போலவே. அற்புதமான தயாரிப்புகளின் வெளியீடுகள் நிரம்பிய அவருடைய தொழில்வாழ்க்கையில் இதுதான் மிகச் சிறந்ததாக இருக்கும்.
'ஒவ்வொருமுறை ஒரு புரட்சிகரமான தயாரிப்பு வெளிவரும்பொழுதும், அது பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்றவாறு அவர் தொடங்கினார். இதற்கு முந்தைய இரண்டு உதாரணங்களைக் கூறினார்: 'கணினித் தொழில் துறையையே மாற்றிய' முதல் மகின்டாஷ்; 'இசைத் துறையையே மாற்றிய' முதல் ஐபாட். தொடர்ந்து அன்று வெளியிடப்போகும் புதிய தயாரிப்பை மெல்ல அறிமுகம் செய்துவைத்தார்: 'இன்று அதே வரிசையில் அகலத் திரையுள்ள ஐபாட், தொடுதல் கட்டுப்பாட்டுடன் (டச் கன்ட்ரோல்). இரண்டாவது, புரட்சிகரமான கைபேசி. மூன்றாவது, ஒரு முற்போக்கான இணையதளத் தொடர்புச் சாதனம்.' இந்தப் பட்டியலை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லி, அதன்பின் கேட்டார்: 'ஏதோ புரிவதுபோல உள்ளதா? இவை மூன்று தனித்தனிச் சாதனங்கள் அல்ல; ஒரே சாதனம் - அதனை ஐஃபோன் என்று அழைக்கிறோம்.'
ஐந்து மாதங்களுக்குப்பின் 2007 ஜூன் மாத இறுதியில் ஐஃபோன் விற்பனைக்கு இறங்கியதும், ஜாப்ஸும் அவருடைய மனைவியும் பாலோ ஆல்டோவிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வந்திருந்தனர் - அங்கு நிலவிய பூரிப்பான சூழலில் கலந்துகொள்ள. தமது புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு இறங்கும்பொழுதெல்லாம் அவர் இவ்வாறு செய்வது வழக்கம் என்பதால், அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்… விசுவாசிகளான ஹெர்ட்ஸ்ஃபெல்டும் அட்கின்ஸனும் கூட வந்திருந்தார்கள்.
'பில் இரவு முழுதும் வரிசையில் நின்றிருந்தார்' என்றார் ஹெர்ட்ஸ்ஃபெல்ட். ஜாப்ஸ் தமது கரங்களை வீசியவாறே உரக்கச் சிரித்தார். 'அவருக்கு ஒன்று அனுப்பிவைத்திருக்கிறேன்.' ஹெர்ட்ஸ்ஃபெல்ட் பதிலளித்தார்: 'அவருக்கு ஆறு வேண்டுமாம்.'
திரை அணையும் தருணம்
ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதிக் கணங்களில் ஆழ்ந்த அன்புகொண்ட குடும்பத்தினர் சூழ்ந்திருந்தனர். ஒரு சிறந்த குடும்பஸ்தராக அவர் எப்பொழுதும் நடந்துகொண்டார் என்று நமக்குத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் எந்தத் தீர்மானமும் பலன்களைக் கருத்தில் கொண்டே கூறப்படவேண்டும். ஒரு தொழிலதிபராக அவர் அழிச்சாட்டியங்களும் கோபதாபங்களும் மிகுந்தவராக இருந்திருக்கலாம்.
ஆனால் வெறித்தனமான விசுவாசம் கொண்ட, அவர்மீது அன்பு பொழியும் ஒரு சக ஊழியர்கள் குழுவை அவர் உருவாக்கிக் காட்டினார். அதேபோல, ஒரு குடும்பஸ்தர் என்ற நிலையில் சட்டென்று முடிவெடுப்பவராக, விலகி நிற்பவராக இருந்திருக்கலாம். ஆனால், நல்ல நிலை பெற்ற, இறுதியில் அவரை அன்போடு சூழ்ந்துகொண்ட நான்கு குழந்தைகளை அவர் வளர்த்து ஆளாக்கினார். அந்தச் செவ்வாயன்று மதியம் அவர் தம் குழந்தைகளின் கண்களுக்குள் ஊடுருவி நோக்கியவாறே இருந்தார்.
ஒரு கட்டத்தில் பாட்டியையும் தமது குழந்தைகளையும் நீண்ட நேரம் பார்த்தபடியே இருந்தவர், லாரீனை நோக்கித் திரும்பி, பின் அவர்களையெல்லாம் தாண்டி எங்கோ தூரத்தில் தமது பார்வையைப் பதித்தார். பிறகு கூறினார், 'ஓ வாவ். ஓ வாவ். ஓ வாவ்.'
இந்த வார்த்தைகளோடு அவர் மெல்ல நினைவிழந்தார். அப்போது ஏறத்தாழ மதியம் இரண்டு மணி இருக்கும். அவருடைய மூச்சில் ஆயாசம் தொனித்தது. 'இந்த நிலையிலும்கூட அவருடைய தோற்றத்தில் தீவிரமும் கம்பீரமும் தெரிந்தன - ஒரு கச்சிதமான, காதல் வயப்பட்ட மனிதனின் தோற்றம். மோனா நினைவுகூர்ந்தார்: 'ஒரு செங்குத்தான மலைச் சரிவின்மீது ஏறும் பயணத்தின் ஆயாசம் அவருடைய மூச்சில் தெரிந்தது.' அன்றிரவு முழுவதும் மோனாவும் லாரீனும் ஜாப்ஸின் அருகிலேயே இருந்தனர். மறுநாள் 2011 அக்டோபர் 5 - ஸ்டீவ் ஜாப்ஸ் மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார். அவருடைய குடும்பத்தினர் சூழ்ந்திருந்தனர் - அவரைத் தொட்டபடி...
ஸ்டீவ் ஜாப்ஸ்
வால்டர் ஐசாக்சன்
தமிழில்: உமா பாலு,
பக்கம்: 928, விலை: 660,
வெளியீடு: அடையாளம்,
1250/1 கருப்பூர் ரோடு, புத்தாநத்தம் 621 310,
திருச்சி மாவட்டம்,
பேசி: 04332 273 444, 9444 77 2686,
மின்னஞ்சல்: info@adaiyaalam.net
'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக