அரிய பல பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விளங்குகிறது விருத்தாசலத்தில் உள்ள 'தமிழ் நூல் காப்பகம்'. தம் வாழ்நாள் பணியாக இந்த காப்பகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.
விருத்தாசலத்தில் இயற்கைச் சூழலில் 8,000 சதுரஅடி பரப் பளவில் கலை நயத்துடன் கூடிய கட்டிடத்தில் அறிவுத் திருக்கோயிலாக உயர்ந்தோங்கி நிற்கிறது தமிழ்நூல் காப்பகம். இதில் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் பயன்படக் கூடிய தமிழ்க் கலைக் களஞ் சியங்கள், பல்கலைக்கழகங்களின் வெளியீடுகள், பல் சமய நூல் கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், இந்திய பேரிதிகாசங்களான வால்மீகி ராமாயணம், மகாபாரதம் மற்றும் கம்பன், இளங்கோவடிகள், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகள், பல்வேறு பதிப்புகள், ஆய்வு நூல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
250 ஆண்டுகளுக்கு முன் 1756-ம் ஆண்டு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம், பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிப்பு, பல்வேறு கிடைப்பதற்கரிய பதிப்புகள், கம்பராமாயணத்தின் 10-க்கும் மேற்பட்ட பதிப்புகள் என பல முதல் பதிப்பு நூல்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இங்கு உள்ளன.
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கூழங்கை தம்பிரான் எழுதிய நன்னூல் உரையை ஜெர்மனியில் கண்ட தாமோதரன் என்பவர், அந்த நூலை அச்சுப் பிரதிகள் இல்லாத காரணத்தினால் அதை கைப்பட எழுதி வெளியிட்ட புத்தகமும் இந்த காப்பகத்தில் உள்ளது.
நூல்கள் எப்படிப் பாது காக்கப்பட வேண்டும் என்பதற்கும் எவ்வாறு தொகுக்க வேண்டும் என்பதற்கும் இந்த காப்பகம் நல்ல சான்றாக விளங்குவதாக பல்வேறு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். புலவர் பல்லடம் மாணிக்கத்தின் இந்த முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச் செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அற வாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்களிடம் உள்ள பல நூல்களை வழங்கியுள்ளனர்.
இவரது காப்பகத்தில் உள்ள தமிழ் நூல்களைக் கொண்டு ஹரி என்பவர் தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வு எழுதி, தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ் ஆய்வாளர்கள் இந்த காப்பகத்துக்கு வந்து தமிழாய்வு மேற்கொள்கின்றனர். குறிப்பாக கனடா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ் ஆய்வாளர்கள் இந்த காப்பகத்துக்கு வந்து, தங்கி யிருந்து, தங்களது ஆய்வுக்கான தகவல்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.
காப்பகத்தை பேணிகாத்து வரும் தமிழாசிரியர் பல்லடம் மாணிக்கம் கூறும்போது, "பழமையானதும், தொன்மையானதும், உலக மொழி களிலேயே மூத்த மொழியாகவும் விளங்குவது நம் தமிழ் மொழி. மூச்சுக் காற்று எனும் உயிர் இருந்தால் தான் உடல் இயங்கும். அது போன்று தான் உயிர் எழுத்து, மெய் எழுத்துடன் கலந்தால் தான் தமிழ் சொற்களை, வார்த்தைகளை, உச்சரிப்புகளை நாம் பயன்படுத்த முடியும். உயிரினத்தோடு நம் மொழி எந்த அளவுக்கு கலந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இந்த அருமை வேறு மொழிகளுக்கு கிடையாது.
உயர்வானது மட்டுமல்ல கம்பீரமானது நமது தமிழ். அந்த தமிழ் ஒரு கம்பீரமான கட்டிடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் ரூ.50 லட்சம் செலவில் கட்டிடத்தைக் கட்டி பாதுகாத்து வருகிறேன். தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பதற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன்.
அவ்வாறு காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடனே இந்தத் தமிழ்நூல் காப்பகம் படிப்படியாக உருவாக் கப்பட்டது. இருப்பினும் தற்போது வயது முதிர்ந்த காரணத்தினால் காப்பகத்தில் உள்ள நூல்களை பாதுகாக்க நம்பிக்கையானவர் களைக் கொண்டு அறக்கட்டளை தொடங்க முடிவெடுத்துள்ளேன்" என்றார்.
தங்களிடம் உள்ள அரிய நூல்களை கால காலத்துக்குக் காக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். பல்லடம் மாணிக்கம், தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, விருத்தாசலம் - 606001: செல்பேசி: 9443042344.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக