பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கல்விக்கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்துள்ளது. மாணவர்களிடம் இக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற உத்தரவும் உள்ளது. ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கல்விக் கட்டண வசூலில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்த கட்டண விவரத்தை, கையேடு வடிவில் அச்சிட்டு மக்களுக்கு வழங்கி நூதன விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளது இந்த அமைப்பு.
இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் அக்.15, 16 ஆகிய தேதிகளில் ஆனைமலை, நெகமம், கோட்டூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 21 மையங்களில் நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் கல்வி உரிமைக் கான கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகரன், மகாலிங்கம் ஆகியோர் கூறும்போது, 'தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் பெற்றோருக்கு தெரிவதில்லை. தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விதிமீறல்களுக்கு எதிராக பெற்றோர்களே கேள்வி எழுப்ப முடியும்.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுமார் 70 தனியார் பள்ளிகளுக்கு 2014 - 15, 2015- 16 என 2 கல்வியாண்டுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண விவரம் இந்தக் கையேட்டில் இருக்கும். அதிக கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சிங்காரவேலர் கமிட்டி தெரிவித்த விளக்கமும் அச்சிடப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இந்த கையேடுகள் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக