தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.க.சி.யின் மகன்
கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழில் காத்திரமான படைப்புகளை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் வண்ணதாசன். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்ட இவர், கவிதைகளை கல்யாண்ஜி எனும் பெயரில் எழுதி வருகிறார். கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.
இவரது 15 சிறுகதைகள் அடங்கிய 'ஒரு சிறு இசை' என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளி யிட்டது. இந்த சிறுகதை தொகுப் புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. வங்கிப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற வண்ணதாசன், தமிழின் மூத்த மார்க்சிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
24 எழுத்தாளர்களுக்கு விருது
இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.
8 பேர் கவிஞர்கள்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 படைப்பாளிகளில் 8 பேர் கவிஞர்கள் ஆவர். ஜனன் பூஜாரி (அசாமி), அஞ்சு (போடோ), கமல் வோரா (குஜராத்தி), பிரபா வர்மா (மலையாளம்), சீதாநாத் ஆச்சார்யா (சமஸ்கிருதம்), கோவிந்த சந்திரா மாஜி (சந்தாலி), நந்த் ஜவேரி (சிந்தி) மற்றும் பப்பினேனி சிவசங்கர் (தெலுங்கு) ஆகிய கவிஞர்கள் கவிதைகளுக்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சத்திரப்பால் (தோக்ரி), ஷியாம் தாரிஹர் (மைதிலி), மொய்ரந்தம் ராஜன் (மணிப்புரி), ஆசாராம் லோமதே (மராத்தி), பரமிதா சத்பதி (ஒடியா), புலாகி சர்மா (ராஜஸ் தானி) மற்றும் வண்ணதாசன் (தமிழ்) ஆகிய 7 பேர் சிறுகதைகளுக்காக விருது பெற்றுள்ளனர்.
சிறந்த நாவல்களுக்காக ஜெர்ரி பிண்டோ (ஆங்கிலம்), நசிரா சர்மா (இந்தி), பொலுவாரு முகமது குன்ஹி (கன்னடம்), எட்வின் ஜே.எப்.டி. ஜவுஷா (கொங்கனி) மற்றும் கீதா உபாத்யாய் (நேபாளி) ஆகிய 5 எழுத்தாளர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த விமர்சன நூல்களுக்காக ஆசிஷ் ஹஜினி (காஷ்மீரி), நிஜாம் சித்திக் (உருது), சிறந்த கட்டுரை நூலுக்காக பதுரி (பெங்காலி), சிறந்த நாடக நூலுக்காக சுவராஜ்பிர் (பஞ்சாபி) ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
தேர்வுக் குழு
ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூலைத் தேர்வு செய்ய தனித்தனி தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தமிழ் மொழியில் விருதுக்கான நூலைத் தேர்வு செய்யும் குழுவில் முனைவர் டி.செல்வராஜ், முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன், முனைவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பிப்ரவரி 22-ல் விழா
தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை மற்றும் செப்பு பட்டயம் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக