புதன், 14 டிசம்பர், 2016

புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்குவரத்து!


உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். சாலைகள், ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, தடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற வசதிகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

தொழில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் உற்பத்தி பெருகும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு புதிய தொழில்நுட்ப வசதி களை கொண்டுவரவும் திட்டமிடப் பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மும்பை அகமதாபாத்துக்கு இடையே புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

2-வது புல்லட் ரயில் சேவை டெல்லி வாரணசி இடையே அமைப்பதற்கு திட்டமிடலும் நடந்து வருகிறது. தொடர்ந்து புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்கு வரத்தும் வர இருக்கிறது. இதுதான் அடுத்த இருபது வருடங்களில் மிக முக்கிய போக்குவரத்து வசதியாக எதிர்கால உலகில் இருக்கப் போகிறது. 

ஹைப்பர்லூப்

2012-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் புதிய போக்குவரத்து முறையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். குறிப்பாக நிலம், நீர், விமானம், விண் வெளிப் பயணம் ஆகிய நான்கு போக்கு வரத்து இல்லாமல், ஐந்தாவதாக புதிய முறையிலான போக்குவரத்து குறித்து யோசனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

அது வானிலை மாற்றங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை எல்லாம் எளிதில் எதிர்கொள்ளும் வகை யிலும், மணிக்கு 1,200 கி.மீ வேகத்திலும் செல்லும் என்றும் கூறினார். ஐந்தாவது வகையான போக்குவரத்தை கண்டு பிடிப்பதற்கான விவாதம் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைப்பர்லூப் என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கினர்.

வெற்றிட மான குழாய்க்குள், ஒரு கேப்சூல் மூலம் பயணிப்பது. காந்த அலைகள் மூலம் இந்த கேப்சூலை நகர்த்தும் தொழில்நுட்பம்தான் ஹைப்பர்லூப். இது எப்படி செயல்படும் என்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழலாம். ரயில் பாலங்கள் போலவே, இதற்கென பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் குழாய்கள் நிறுவப்படும். அந்த குழாய்க்குள் பயணத்திற்கான கேப்சூல்கள் இருக்கும். கேப்சூலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருப்பர். காந்த அலைகள் மூலம் கேப்சூலை நகர்த்தும்போது, ரயில் தண்டவாளத்தில் செல்வதுபோல கேப்சூல் குழாய்குள் பயணிக்கும்.

இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் இதர போக்குவரத்து முறைகளை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பு. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சார மற்றும் எரிபொருள் செலவும் மிச்சம். சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்காது. இந்த தொழில்நுட்பம் பல தொழில்நுட்பங்களின் கலவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர் ஹாக்கி எனப்படும் விளையாட்டின் தத்துவம், கன்கார்ட் எனப்படும் விமானத்தின் வடிவமைப்பு, ரயில் கன் எனப்படும் மின் துப்பாக்கி ஆகியவற்றின் கலவை இது.

ரயில்களை போல தண்டவாளம், இன்ஜின்கள், எரிபொருள் என எதுவும் வேண்டாம். 100 மீட்டருக்கு ஒரு தூண் அமைத்தால் போதும். உதாரணமாக புல்லட் ரயில் அமைக்க, ஒரு கிலோ மீட்டருக்கு 140 கோடி ரூபாய் தேவைப் படும். ஆனால் ஹைப்பர்லூப்பிற்கு அதில் பாதி செலவு செய்தால் போதும். வேகமும் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு பலமுறை இயக்கப்படும். இதனால் நிறைய மக்கள் பயணிக்க முடியும்.

துபாய் - அபுதாபி இடையே உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதையை அமைக்க அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து நிறுவனத்துடன் துபாய் அரசு ஒப்பந்தம் செய்தது. இதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஹைப்பர்லூப் போக்கு வரத்தை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மும்பைக்கும்-புணேவுக்கும் இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதை அமைப்பதற்காக ஹைப்பர் லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னால ஜீஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக மத்திய சாலைப்போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிபோம் கிரெஸ்டா சந்தித்து பேசியுள்ளார்.

ஹைப்பர்லூப் போக்குவரத்து கொண்டுவரப்பட்டால் மும்பைக்கும் புணேவுக்கு இடையே செல்வதற்கான பயணநேரம் 90 நிமிடத்திலிருந்து 25 நிமிடம் குறைந்து 65 நிமிடத்தில் செல்லலாம். விரைவில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஹைப்பர்லூப்பில் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை! இதற்கான கட்டுமான செலவும், பயண செலவும் இதர போக்குவரத்து முறைகளை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பு. அத்துடன் இது சூரிய சக்தியில் இயங்குவதால், மின்சார மற்றும் எரிபொருள் செலவும் மிச்சம்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக