காப்காவின் புகழ்பெற்ற நாவலான விசாரணையில் வரும் குட்டிக் கதை இது. சட்டத்தின் வாசலில் ஒரு வாயிற்காவலன் நிற்பான். நீதி பெற விரும்புபவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளே விடாமல் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டே இருப்பான். அவன் களைப்புறும்போது மட்டுமே ஒருவர் அந்த வாசலுக்குள் நுழைய முடியும்.
தமிழில் வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதுக்கு இந்தக் கதை முற்றிலும் பொருந்தும். தரமற்றவர்கள் தங்கள் செல்வாக்காலும் அரசியல் பலத்தாலும், வரிசையில் வரும் சிறந்த எழுத்தாளர்களை வருடம்தோறும் தள்ளிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள், களைத்து அமரும்போது எப்போதாவது தரமான எழுத்தாளருக்கு அந்த விருது செல்லும். எப்போதும் விளையாடத் தெரியாதவர்கள் மட்டுமே வெற்றிபெறும் அபூர்வமான தமிழ் விளையாட்டு இது. டிசம்பர் மாதம் வந்துவிட்டது. இந்த வருடம் சாகித்ய அகாதமியை வெல்லப்போவது எழுத்தாளரா? எழுத்தாளரைப் போன்றவரா?
சி.மோகன் எழுத்தாளர்
"தமிழைப் பொறுத்தவரை, சாகித்ய அகாதமி விருதுகள் அளிக்கும் முறை தொடங்கிய விதமே துரதிர்ஷ்டவசமானது. தொடக்க காலத்திலேயே நவீன இலக்கியத்தின் பரிச்சயம், அதன் வளம் பற்றி எதுவும் தெரியாத கல்வியாளர்களும் அறிஞர்களும்தான் பரிசுகளைத் தீர்மானித்தார்கள். நவீன படைப்பிலக்கியத்துடன் தொடர்பே அற்ற ரா.பி. சேதுப்பிள்ளை, ராஜாஜி தொடங்கி அ. சீனிவாச ராகவன் வரை பரிசுபெற்றனர். அந்தப் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பைக்கூட இன்றைய தமிழிலக்கிய மாணவர்கள் நினைவுகூரவே முடியாது. அடுத்த கட்டமாக நடந்தது மேலும் அபாயகரமானது. கம்யூனிஸமும் முழுமையாகத் தெரியாத, இலக்கிய ரசனையும் இல்லாத கம்யூனிஸ்ட்டுகள், வானம்பாடிகள், கல்வியாளர்கள் தமிழ் சாகித்ய அகாதமியின் அதிகார வட்டத்தை ஆக்கிரமித்து, பரிசுகளை நிர்ணயித்தார்கள். நவீனத் தமிழில் காத்திரமான பங்களித்த எழுத்தாளர்கள் மீது குரோதத்துடனும் வன்மத்துடனும் அவர்கள் நடந்துகொண்டனர். இன்றும் அந்தப் பாரம்பரியத்திலிருந்து அகாதமி முழுக்க வெளிவர முடியவில்லை. இடையிடையே விதிவிலக்குகளாக கு.அழகிரிசாமி, அ.மாதவன், நீல. பத்மநாபன், சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும் அது இலக்கியமல்லாத காரணங்களுக்காகவே வழங்கப்பட்டவை. அவை விதிவிலக்குகளே. நான் தேர்வுக் குழுவில் இருந்த ஆண்டில் என்னுடன் பேராசிரியர் தமிழண்ணல் இருந்தார். இன்னொரு உறுப்பினர் நவீன இலக்கியப் பரிச்சயம் ஏதுமில்லாத கோவையைச் சேர்ந்த ஒரு இளம் கவிஞர்!"
கி. நாச்சிமுத்து பேராசிரியர், சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளர்
"இந்தியாவில் 24 மொழிகளுக்கும் சாகித்ய அகாதமி தலா 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இந்த 10 பேரில் ஒருவர் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுவார். பதவிக்காலம் ஐந்தாண்டுகள். இப்போதைய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருப்பவன் எனும் வகையில் சொல்கிறேன், ஆண்டுதோறும் அந்தந்த மொழியில் வெளிவரும் சிறந்த படைப்பைத் தேர்வுசெய்வதற்கு 100 பேரிடம் 'கிரவுண்ட் லிஸ்ட்' என்று சொல்லப்படும் அடிப்படைப் பட்டியலைக் கோருகின்றனர். அந்தப் பட்டியலிலிருந்து முதல்நிலைப் பட்டியல் ஒன்று சலித்தெடுக்கப்படும். ஆலோசனைக் குழுவிலுள்ள 10 பேரும், இந்த இரண்டு பட்டியல்களிலும் இல்லாத படைப்புகளின் பெயரையும் சேர்க்கலாம். இவற்றிலிருந்து 15 முதல் 20 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த இறுதிப் பட்டியல், சாகித்ய அகாதமியின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நடுவர்கள் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப்படும். இந்த மூன்று பேர் யார் என்பது சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருக்கே தெரியாத ரகசியம். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, அந்தந்த மொழிகளுக்காகச் செயல்படும் சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழுவினர் ஒரு பட்டியல் கொடுப்பார்கள். படைப்பாளர்கள், முன்னாள் விருதாளர்கள், கல்வியாளர்கள், விமர்சகர்கள் ஆகியோர் கொண்ட பட்டியல் அது. அதிலிருந்துதான் மூன்று நடுவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளரைப் பொறுத்தவரை இந்த மூன்று பேர் தேர்விலும், அவர்கள் தேர்வு செய்யும் படைப்புகளிலும் எந்தத் தலையீடும் செய்ய முடியாது!"
ஜெயமோகன் எழுத்தாளர்
"சாகித்ய அகாதமி விருதுக்கான அடிப்படைப் பட்டியலைத் தயாரிக்கும் முறையிலேயே ஜனநாயகப் பங்கேற்பு என்ற பெயரில் சிறந்த படைப்பாளிகள் இல்லாமலாகிவிடுகிறார்கள். தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதால் கல்வியாளர்களை எளிதாக இடதுசாரிகள் தங்களுக்குச் சார்பாக வசப்படுத்திவிடுகிறார்கள். தமிழண்ணல் காலத்தில் சாகித்ய அகாதமி விருதுத் தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது. கவிஞர் பாலா, சிற்பி காலகட்டத்தில் நிலைமை மேலும் மோசமானது. சாகித்ய அகாதமி விருதுகள் தொடர்பாக முற்றிலும் கவுரவம் குலைந்து விமர்சனங்கள் பெருகும் போதெல்லாம், இடையிடையே நல்ல படைப்பாளிகள் சிலருக்கு விருதுகளை வழங்கித் தப்பித்துக் கொள்வது இவர்களுடைய உத்தி களில் ஒன்று. ஒரு எழுத்தாளனாக என்னுடைய எளிமையான கேள்வி இதுதான்: படைப்பாளிகள் அல்லா தோருக்கு சாகித்ய அகாதமியில் என்ன வேலை?"
ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர்
"ஒரு எழுத்தாளராகவும் தமுஎகச நிர்வாகியாகவும் இந்தத் தேர்வுகளை நான் தொடர்ந்து கவனித்துதான் வருகிறேன். விருதுக்காக அமைக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் வாசிப்பனுபவமும் அவர்களின் விருப்பு வெறுப்பும் விருதுத் தேர்வோடு பிரிக்க முடியாமல் இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன்."
கண்ணன் பதிப்பாளர்
"முன்பு படுமோச மாக இருந்தார் கள். இப்போது நிலைமை கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. ஆனால், சாகித்ய அகாதமி விருது தகுதி யானோரைப் போய்ச் சேர வேண்டும் என்றால், தேர்வுக்கான இறுதிப் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதில் மர்மம் நிலவத் தேவை என்ன? அதேபோல, சாகித்ய விருதோடு மட்டும் இந்த விமர்சனங்களை முடித்துக்கொள்வது தவறு. தமிழக அரசு, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் விருதுகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன? ஏன் நாம் அதை விமர்சனத்துக்குள்ளாக்குவதேயில்லை? ஒரு பதிப்பாளராக நான் உணர்வது இதைத்தான். உண்மையில் இங்கு விருதுத் தேர்வில் நிலவும் மோசமான கலாச்சாரம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது."
கம்யூனிஸ்ட்டுகள், வானம்பாடிகள், கல்வியாளர்கள் தமிழ் சாகித்ய அகாதமியின் அதிகார வட்டத்தை ஆக்கிரமித்து, பரிசுகளை நிர்ணயித்தார்கள். நவீனத் தமிழில் காத்திரமான பங்களித்த எழுத்தாளர்கள் மீது குரோதத்துடனும் வன்மத்துடனும் அவர்கள் நடந்துகொண்டனர். இன்றும் அந்தப் பாரம்பரியத்திலிருந்து அகாதமி முழுக்க வெளிவர முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக